Published:Updated:

நான் பிரதமராக ஆசைப்படுகிறேன்...!

கல் உடைக்கும் அம்மா... கணக்குப் போடும் மகள் !

பிரீமியம் ஸ்டோரி

 இரா.வினோத்

'குவாரியில் கல் உடைக்கும் ஏழைத் தாயின் மகள் கார்த்திகா, இந்தியாவின் மூன்றாவது பெரிய, சிறந்த சட்டக் கல்லூரியில் படிக்கப் போகிறார்!’

- ஆச்சர்யமாகவும், ஆனந்தமாகவும் இருக்கிறது அந்தச் செய்தி!

நான் பிரதமராக ஆசைப்படுகிறேன்...!
##~##

கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூர் வட்டம், பாலிகானபள்ளி... செல்போன் சிக்னல்கூட கிடைக்காத வனாந்திர கிராமம். இங்கிருக்கும் சாந்திபவன் உறைவிட (ரெஸிடென்ஷியல்) பள்ளிதான், இன்று சாதனைப் பெண்ணாக கார்த்திகா நிமிர்ந்திருக்கக் காரணமான களம்! நான்கு வயதிலிருந்து இங்குதான் இலவசக் கல்வி கற்று, வாழ்ந்து, இன்று தேசத்தின் வாழ்த்து வாங்கியிருக்கிறார் கார்த்திகா. சி.என்.என், ஐ.பி.என்., என்.டி.டி.வி. என நாட்டின் முக்கிய மீடியாக்களின் வெளிச்சத்தில் திளைத்திருந்த கார்த்திகாவுக்கு, 'அவள் விகடன்’ சார்பாக வாழ்த்துக்களையும் சேர்த்தோம்!

கடந்தகால கஷ்டங்கள், நிகழ்கால சந்தோஷங்கள், எதிர்கால இலக்குகள் பகிர்ந்த கார்த்திகாவின் குரலில், அத்தனை திடம்!

''சொந்த ஊர்... தர்மபுரி பக்கத்துல ஈச்சம்பட்டி. மூணு வயசு இருக்கும்போது காசுக்காக எங்க அப்பாவை யாரோ கொன்னுட்டாங்களாம். அக்கா, அண்ணாவோட என்னையும் கூட்டிட்டு பிழைப்புத் தேடி பெங்களூருல செட்டில் ஆனாங்க அம்மா. கிட்டத்தட்ட 16 வருஷமா வெயில்லயும், மழையிலயும் அங்கதான் பாறை உடைச்சுட்டே இருக்காங்க... இப்பவரைக்கும்''

- வேதனையில் வதங்குகிறது கார்த்திகாவின் குரல்.

''இந்திய அளவில சிறந்த சட்டக் கல்லூரிகளுக்கான மாணவர் சேர்க்கைக்காக நடத்தப்படும் கிளாட் (CLAT - Common Law Admission Test) எக்ஸாம்ல நான் 55-வது ரேங்க் வாங்கி, 'நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆஃப் ஜுடீஷியல் சயின்ஸ்-கொல்கத்தா'ல சேரப்போறதுக்கும், படா மீடியாவெல்லாம் என்னை இப்போ கொண்டாடறதுக்கும் காரணம்... இந்த சாந்தி பவன்தான்!'' என்ற கார்த்திகா, அந்தப் பள்ளிக்கும் தமக்குமான உறவு பற்றித் தொடர்ந்தார்...

''தினமும் குவாரியில கல் உடைக்கப் போகும்போது, மூன்றரை வயசு குழந்தையான என்னை பக்கத்தில்இருந்த சர்சுச்ல விட்டுட்டுப் போவாங்க. சாந்தி பவன்ல இருந்து அங்க வந்திருந்த ஒருத்தவங்க, என் குடும்பத்தோட ஏழ்மையை நிலையைக் கேள்விப்பட்டு, 'உங்க மகள இலவசமா படிக்க வைக்கிறோம். எங்ககூட அனுப்புங்க’னு கூட்டிட்டு போனாங்க. மூணாவது வகுப்பு லீவுல முதல் முறையா வீட்டுக்குப் போனப்போ, என்னைப் பார்த்து அழுதாங்க அம்மா. நான் அவ்வளவு சரளமா ஆங்கிலத்துல பேசறதைப் பார்த்து வந்த ஆனந்தக் கண்ணீர் அது.

எனக்கு ஒரு பிடிமானம் கிடைச்சுட்டாலும், படிக்க வேண்டிய வயசுல கல் உடைக்கற வேலைக்குப் போயிட்டிருந்த அக்கா, அண்ணனைஎல்லாம் நினைச்சு அம்மாவுக்கு அத்தனை ரணம் மனசுல. ஒருமுறை எங்கம்மாகூட கல் குவாரிக்குப் போயிருந்தேன். கல் தெறிச்சு என் நெத்தியில காயமானப்போதான் அந்த வேலையோட வலியை நேரடியா உணர்ந்தேன். 'வேற ஏதாச்சும் வேலைக்குப் போகலாமேம்மா..?’னு கேட்டப்போ, 'கல் உடைக்கற வேலைக்குப் போறவங்கள... வீட்டு வேலைகளுக்குச் சேர்த்துக்க மாட்டேங்கறாங்க. திருட்டுத்தனம் உள்ளவங்க மாதிரிதான் பார்க்கறாங்க'னு சொல்லி அம்மா அழுதப்போ, பொறுக்க முடியல எனக்கு. அதுக்குப் அப்புறம்தான் 'நம்மள மாதிரி குடும்பங்களோட அவல நிலையை மாத்த, படிப்பு ஒண்ணுதான் வழி’னு உணர்ந்து படிக்க ஆரம்பிச்சேன்'' எனும் கார்த்திகா, வேகம் எடுத்திருக்கிறார்.

நான் பிரதமராக ஆசைப்படுகிறேன்...!

''எங்க ஸ்கூலுக்கு வந்திருந்த ஹுயூமன் ரைட்ஸ் அட்வகேட் ஒருத்தர், 'தன் உழைப்புக்கான சம்பளம் கேட்டதுக்காக ஒரு தொழிலாளியோட கையை வெட்டிட்டார், அவரோட முதலாளி’னு ஒரு கோர சம்பவத்தை சொல்லி, அந்த தொழிலாளிக்காக தான் போராடிக்கிட்டிருக்கற விஷயங்கள சொன்னார். அப்போதான் முடிவு பண்ணினேன்... நான் ஒரு 'ஹுயூமன் ரைட்ஸ் அட்வகேட்' ஆகணும்னு!'' எனும் கார்த்திகாவுக்கு, பாதை காட்டியிருக்கிறது 'சாந்தி பவன்'.

''சட்டப் படிப்புல ஆர்வம் இருக்கற ஸ்டூடன்ட்ஸ், 'கிளாட்' எக்ஸாம் எழுதறதுக்கான பயிற்சி வகுப்புகள ஒரு இன்ஸ்டிடியூட் மூலமா எங்க கேம்பஸ்லயே ஏற்பாடு செய்து கொடுத்தாங்க. ப்ளஸ் டூ முடிச்ச கையோட 'கிளாட்’ எழுதினேன். ரிசல்ட், ஜெயம்!''

- கண்கள் விரிய சொன்ன கார்த்திகா, பேஸ்கட் பால், சைக்கிளிங், ஸ்கேட்டிங், ஓவியம் என்று பல தளங்களிலும் பரிசுகள் குவித்துள்ளார். தலைவர்களின் பயோகிராஃபி புத்தகங்களைத் தேடிப் படிப்பதில் அத்தனை ஆர்வம் அவருக்கு. அதுமட்டுமல்லாமல், 'கார்த்திகா இஸ் எ கிரேட் ஸ்பீக்கர்!’ என்று சாந்தி பவனே சொல்கிறது.

''கடைசி வரைக்கும் என் சம்பளத்தில் இருந்து 30 பர்சென்ட் பணத்தை சாந்தி பவனுக்கு கொடுப்பேன்!’' என்று சொல்லும் கார்த்திகா, தன் எதிர்காலம் பற்றி வைத்திருக்கும் திட்டங்கள் வியக்க வைக்கின்றன.

''சமூகத்துல மாற்றத்தை கொண்டு வரணும்னா... நம்ம கையில பவர் வேணும். அதனால, பிரதமராகணும்னு ஆசைப்படறேன். திறமை, தன்னம்பிக்கை, போராட்ட குணம் எல்லாம் டன் டன்னா எங்கிட்ட இருக்குனு நான் நம்பறேன். அதுக்காக என்னை தயார்படுத்தற வே¬லையை நான் ஏற்கெனவே தொடங்கிட்டேன். அடுத்த ஆறு வருஷத்துக்கான என்னோட இலக்கு... ஐ.நா. சபையில வாலன்டியராகி, ஆப்பிரிக்க குழந்தைகளோட முன்னேற்றத்துக்கு உதவறதுதான்!''

வருங்காலம் காத்திருக்கிறது கார்த்திகாவுக்காக !

சாந்தி பவன்... சூப்பர்!

 திருவனந்தபுரத்தைச் சேர்ந்தவர் ஜார்ஜ். எம்.ஏ., எகனாமிக்ஸ் முடித்து, இரண்டு வருடங்கள் ராணுவத்தில் பணியாற்றி, பின் அமெரிக்கா சென்று சாஃப்ட்வேர் துறையில் நாற்பது ஆண்டுகளாக சம்பாதித்துள்ளார். பிறகு, வறுமைக் கோட்டின் கீழ் உள்ள குழந்தைகளுக்கு தரமான கல்வி வழங்க வேண்டும் என்ற நோக்கத்துடன் நாடு திரும்பியவர். 97-ம் ஆண்டில் 'சாந்தி பவன்' பள்ளியைத் தொடங்கியிருக்கிறார். சென்ட்ரல் போர்ட் சிலபஸ், அமெரிக்க வாலன்டியர் ஆசிரியர்கள், சப்ஜெக்ட்ஸ் லேப் என்று அப்டேட்டட் வசதிகளுடன் இயங்கும் இப்பள்ளியில் 212 மாணவர்கள் படிக்கிறார்கள். அனைவருமே... அப்பாவை இழந்தவர்கள், அம்மாவை இழந்தவர்கள், உறவற்றவர்கள் என பல வகைகளில் ஆதரவற்று நிற்கும் குழந்தைகள்தான்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு