Published:Updated:

“ஐ.நா. சபையில் நான் ரசித்ததும்... அவர்கள் என் இசையில் ரசித்ததும்!” - சுதா ரகுநாதன்

“ஐ.நா. சபையில் நான் ரசித்ததும்... அவர்கள் என் இசையில் ரசித்ததும்!” - சுதா ரகுநாதன்
“ஐ.நா. சபையில் நான் ரசித்ததும்... அவர்கள் என் இசையில் ரசித்ததும்!” - சுதா ரகுநாதன்

ந்த ஆண்டு உலக மகளிர் தினத்தில், ஐ.நா. சபையில் தனது நடன நிகழ்ச்சியை  அரங்கேற்றி, அனைவரின் கவனத்தையும் பெற்றார், ஐஸ்வர்யா தனுஷ். இதற்கு முன்பாக, 1966-ம் ஆண்டு அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள ஐ.நா. சபையில் இசைக் கச்சேரியை அரங்கேற்றியதன் வாயிலாக, அந்தச் சாதனையைச் செய்த முதல் இந்திய இசைக் கலைஞர் என்ற பெருமையைப் பெற்றார், இசை மேதை எம்.எஸ்.சுப்புலட்சுமி. 50 ஆண்டுகளுக்குப் பிறகு, கடந்த ஆண்டு ஐ.நா. சபையில் இசைக் கச்சேரி செய்து சாதனைப் படைத்தவர், பிரபல கர்நாடக இசைப் பாடகி சுதா ரகுநாதன். இவர், ஐ.நா. சபையில் கச்சேரி செய்யும் வாய்ப்பு, கச்சேரி செய்த தனது அனுபவத்தை நெகிழ்வுடன் பகிர்ந்துகொண்டார்.

"ஐ.நா. சபையில் கச்சேரி செய்த தருணம் என் வாழ்நாளில் மறக்க முடியாத பசுமையான நினைவுகள். என்னைப் போன்ற இசைக் கலைஞர்கள் குருவாகவும், தெய்வமாகவும் மதிக்கும் எம்.எஸ்.சுப்புலட்சுமி அம்மாவின் நூற்றாண்டு பிறந்த நாளை முன்னிட்டு நடந்த நிகழ்வு அது. சங்கர நேத்திராலயா கண் மருத்துவமனை நிர்வாகத்தினர், அமெரிக்காவின் ஆறு நகரங்களில் இசைக் கச்சேரி, புகைப்படக் கண்காட்சி உள்ளிட்ட நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்திருந்தாங்க. இதில் ஓர் அங்கமாக எம்.எஸ்.எஸ் அம்மாவின் நூறாண்டு விழாவையும், அக்டோபர் 2-ம் தேதியான காந்தி ஜெயந்தி மற்றும் 'நான் வயலன்ஸ் டே'வை நினைவுக்கூறும் விதமாகவும் ஐ.நா. சபையில் கச்சேரி செய்யும் நிகழ்வுக்கு என்னை அழைச்சாங்க.

தமிழ்நாட்டுல இருந்து ஒரு மாசத்துக்கு முன்னாடியே அமெரிக்காவுக்குப் போயிட்டேன். திட்டமிட்டப்படி ஆறு நகரங்களில் எம்.எஸ்.எஸ் அம்மாவின் நினைவைப் போற்றும் இசைக் கச்சேரிகளை சிறப்பாகச் செய்திருந்தோம். இதற்கிடையே அக்டோபர் முதல் தேதி, ஐ.நா. சபையின் அம்பாசிட்டரை மீட் பண்ணறது, பிரஸ் மீட் போன்ற நிகழ்வுகள் நடந்துச்சு. எங்களுக்கான தேவைகளைப் பூர்த்திசெய்ய ஒரு நபரை நியமிச்சாங்க. அக்டோபர் 2-ம் தேதியான காந்தி ஜெயந்தி அன்றைக்கு, ஐநா சபை நிர்வாகத்தினரால் ஏற்பாடு செய்யப்பட்ட காரில் என்னையும் சக இசைக் கலைஞர்களையும் அழைச்சுட்டுப்போய் சிறப்பான முறையில் கெளரவப்படுத்தினாங்க. ஐ.நா. சபையின் நுழைவுப் பகுதியில் பல கட்ட பாதுகாப்புச் சோதனைக்குப் பிறகுதான் உள்ளே விடுவாங்க. எங்களைப் பெரிய பாதுகாப்பு கெடுபிடிகள் இல்லாம உடனே உள்ளே அழைச்சுட்டுப் போய்ட்டாங்க" என்ற சுதா ரகுநாதன், ஐ.நா. சபையினுள் சென்றதும் பிரமித்த தருணத்தை நெகிழ்ச்சியுடன் கூறுகிறார்.

"ஐ.நா. சபையின் உள்ளே நுழைந்ததுமே அந்தப் பிரம்மாண்டமான கட்டடங்களைப் பார்த்து சிலையாகிவிட்டோம். நம்ம பள்ளிப் பருவத்தில் ஐ.நா. சபையைப்

பற்றி படிச்சு இருப்போம். அந்தச் சபையைப் பற்றி  சொன்னாலே, கம்பீரமான மதிப்பு வரும். இப்போ, அந்தச் சபைக்குள்ளேயே இருக்கிறோமே என சிலிர்ப்பாயிருந்துச்சு. 1966-ம் ஆண்டின் அக்டோபர் மாதத்தில்தான் சுப்புலட்சுமி அம்மாவும் அங்கே கச்சேரி செய்தாங்க. அவங்களுக்குப் பிறகு ஒரு பாடகியா எனக்கு கச்சேரி செய்யும் பாக்கியம் கிடைச்சுது. பொது அரங்கத்துக்குள் ஏராளமான அரசுப் பிரதிநிதிகள், ரசிகர்கள் இருந்தாங்க. தமிழ், கன்னடம், வங்காளம் எனப் பல மொழிகளில் பாடல்களைப் பாடினேன். இசைக் கச்சேரிக்கு நடுவில், பாடும் பாடல் பற்றிய சுவாரஸ்யமான தகவல்கள், காந்திக்குப் பிடித்த பாடல், சுவாரஸ்யமான வரிகள், அந்தப் பாடலை எழுதியவர்கள், எம்.எஸ்.சுப்புலட்சுமி அம்மாவைப் பற்றி பல விஷயங்களையும் பேசினேன். சபைக்குள் எல்லோரின் பார்வையும் என் மேலேயும், சக இசைக் கலைஞர்கள் மேலேயும்தான் இருந்துச்சு.

நான் பாடின பாடல்களின் மொழிகள், அங்கே இருந்த பெரும்பாலானவங்களுக்குப் புரியாதுன்னாலும், இசையை அவ்வளவு ஆனந்தமா ரசிச்சாங்க. மொழிகளுக்கு அப்பாற்பட்டது சங்கீதம் என்பதற்கான கண்கூடான நிகழ்வாக இருந்துச்சு. கிட்டத்தட்ட ஒன்றரை மணி நேர கச்சேரியை முடிஞ்சதும், 'இசை நிகழ்ச்சியை ரொம்பவே ரசிச்சோம். பக்திபூர்வமாக இருந்துச்சு'னு பலரும் மனதாரப் பாராட்டினாங்க. கச்சேரியைத் தவிர, எம்.எஸ்.சுப்புலட்சுமி அம்மாவின் நூற்றாண்டு நினைவைப் போற்றி, அம்மாவின் புகைப்படம் அடங்கிய சிறப்புத் தபால்தலை வெளியிட்டு, அதன் முதல் பிரதியை நான் பெற்றுக்கொள்ளும் நிகழ்வும் நடந்துச்சு.

ஐ.நா. சபையில் கச்சேரி செய்யும் முன்னும் பின்னும் ஏராளமான நாடுகளில் கச்சேரிகள் செய்திருக்கேன். அதற்கெல்லாம் மணிமகுடமாக இருந்தது, எம்.எஸ்.சுப்புலட்சுமி அம்மா பாடின ஐ.நா. சபையில் நானும் செய்த கச்சேரிதான். பெருமை வாய்ந்த அந்தத் தருணத்தை என் வாழ்நாள் பாக்கியமா நினைக்கிறேன். அதை நினைச்சு பல நேரங்களில் சிலாக்கிக்கிறேன். ஐ.நா. சபையில் நம்ம தமிழர்களின் கலை நிகழ்வுகள் நிறைய நடக்கணும். தமிழர்களின் திறமை உலகம் முழுக்கப் பரவணும் என்பது என்னோட ஆசை" என்று புன்னகையுடன் கூறுகிறார் சுதா ரகுநாதன்.

- கு.ஆனந்தராஜ்