Published:Updated:

நமக்குள்ளே...

நமக்குள்ளே...

நமக்குள்ளே...

'உங்கள் மகன் நன்னடத்தை தவறிவிட்டான். எங்கள் பள்ளியில் தொடர்ந்து படிக்க அனுமதிக்க முடியாது. டி.சி-யை வாங்கிக் கொண்டு கிளம்புங்கள்’ - இப்படி சில மாணவர்களின் வீட்டுக்கு மிரட்டல் ஓலையை அனுப்பியிருக்கிறது சென்னையைச் சேர்ந்த பிரபல பள்ளி ஒன்று. அந்த மாணவர்கள்... 'பள்ளிக்கூடம்' என்பதையே முழுசாக இன்னும் புரிந்துகொள்ள முடியாத எல்.கே.ஜி. குழந்தைகள்! 'வீட்டுப்பாடம் எழுதவில்லை' என்பதுதான் நன்னடத்தை பிசகாம்!

அழுவதா... சிரிப்பதா!

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

ஏற்கெனவே, 'குருவித் தலையில் பனங்காயாக குழந்தைகளுக்கு மாளாத பளுவை சுமத்துவதாக' நம் கல்வி முறை மீது குற்றச்சாட்டு இருக்கிறது. இப்போது, பிஞ்சு மனங்களில் மாறாத வடுக்களை கீறி வைக்கும் வேலையையும் சில பள்ளிகள் 'திறம்பட' செய்கின்றன!

பள்ளிக்கூடத்தில் மட்டுமல்ல... வீட்டுக்கு வந்தபிறகும் ஓடியாடி விளையாட நேரமில்லாதபடி படிப்புச் சுமை திணிக்கப்படும் இந்தக் காலத்தில், 'கல்விக் கைதி'களாகவே குழந்தைகள் மாறிப்போய் இருக்கிறார்கள். பல நேரங்களில் அவர்கள் வெறுமையாக வெறித்துப் பார்ப்பதையும், பள்ளிக்கூடம் பற்றி பேச்செடுத்தாலே தெறித்து ஓடுவதையும் காணும்போது... சூடு கண்ட தெனாலி ராமன் பூனைக் கதைதான் நினைவுக்கு வருகிறது.

காசைக் கொட்டுவதோடு மட்டுமல்லாமல், பெற்றோரின் பொன்னான நேரத்தையும் சேர்த்தே அர்ப்பணித்து... குழந்தைகளின் எதிர்காலத்துக்காக குடும்பமே தன்னைக் கரைத்துக் கொள்கிற போட்டி யுகம் இது. இந்த நேரத்தில் கல்வியின் மீது வெறுப்பு ஏற்படுத்தும் விதமான நடவடிக்கை களை பள்ளி நிர்வாகங்கள் கைவிட வேண்டும். பெரிய பெரிய வார்த்தைகளைச் சொல்லி 'பச்சை மண்'ணை தண்டிக்கும் கொடுமை கூடாது!

'பெற்றோரின் கவனத்தில் குழந்தைகள் இருக்கும் நேரத்தைவிட, உங்கள் பராமரிப்பில் இருக்கும் நேரம்தான் இப்போதெல்லாம் அதிகம். நன்னடத்தை என்கிற வார்த்தைக்கு முதலில் உங்களைத்தான் நீங்கள் தகுதியாக்கிக் கொள்ள வேண்டும். பூஞ்செடிகளை வளர்க்கும் பூந்தோட்டக் காவல்காரர்களாக இருங்கள்... கைதிகளைக் கண்காணிக்கும் ஜெயில் அதிகாரிகளாக மாறிவிடாதீர்கள்' என்றுதான் கல்விக் கூடங்களை நோக்கி கதறத் தோன்றுகிறது.

உங்களுக்கும் அப்படித்தானே தோழிகளே..?

உரிமையுடன்

நமக்குள்ளே...

ஆசிரியர்