Published:Updated:

பூஜ்யத்திலிருந்து ராஜ்ஜியத்துக்கு...

வறுமை தந்த நெருக்கடி... உயர வைத்த உழைப்பு !

பிரீமியம் ஸ்டோரி

கு.ராமகிருஷ்ணன்

சாமான்ய பெண்களின் சாதனை கதை

சாதனைச் செல்வி...

''சில தொழில்கள் ரொம்பவே கடினமானதா, மிரள வைக்கும். பயந்து ஒதுங்காம... அதுல முழு மூச்சா இறங்கிட்டோம்னா, கூடிய சீக்கிரமே நமக்கு அது கைகூடி வர்றது மட்டுமில்லாம, மற்ற தொழில்கள்ல இல்லாத மிக முக்கியமான சில சௌகரியங்கள அள்ளித் தந்து, வெற்றிக்கு உத்தரவாதம் கொடுக்கும்!''

- வளமான வாழ்க்கைக்கு எளிமையான வார்த்தைகளால் சூத்திரம் சொல்லித் தருகிறார் செல்வி.
 

பூஜ்யத்திலிருந்து ராஜ்ஜியத்துக்கு...
##~##

வறுமை தந்த நெருக்கடியால் நிலை குலைந்து போகாமல், தன்னை ஒரு கடும் உழைப்பாளியாகவும், திறமையான நிர்வாகி யாகவும் உருவாக்கிக் கொண்டு, எந்த தொழிலிலும் தன்னால் சாதிக்க முடியும் என நிரூபித்துக் காட்டும் விதமாக இயந்திரங்களுக்கான உதிரி பாகங்கள் தயாரிக்கக் கூடிய 'மெஷின் ஜாப்’ தொழிலில் ஆழமாக காலுன்றி, வேகமாக வளரத் தொடங்கியிருக்கும் செல்வி, அது சாத்தியமான விதத்தை சாந்தமாகப் பேசினார்...

''திருச்சி, ஸ்ரீரங்கம்தான் எனக்குச் சொந்த ஊர். வாட்ச்மேன் வேலை பார்த்த எங்கப்பா கஷ்டப்பட்டு, ப்ளஸ் டூ வரைக்கும் படிக்க வெச்சாரு. 'பி.காம்., எம்.காம்., வங்கி அதிகாரி’னு என்னோட கனவுகளையெல்லாம் பரண்ல கட்டிப் போட்டுட்டு, குடும்பட நிலைமையைப் புரிஞ்சு பிரைவேட் ஆஸ்பிட்டல்ல ஊழியரா வேலைக்குச் சேர்ந்தேன். என் திறமையான செயல்பாடுகளைப் பார்த்துட்டு, நிர்வாக அதிகாரியா உட்கார வெச்சாங்க. ஒரளவுக்கு நிறைவான சம்பளமும் வாங்கினேன். வீட்டுக்குத் திட்டுமிட்டு செலவு பண்ணி, மீதி பணத்தை சேமிச்சேன். என் சேமிப்பு பணத்துலயே என் திருமணத்தையும் முடிச்சாங்க!'' என்பவருக்கு திருச்சி, தாராநல்லூர் பகுதியைச் சேர்ந்த சரவணனோடு திருமணம் முடிந்திருக்கிறது.

பூஜ்யத்திலிருந்து ராஜ்ஜியத்துக்கு...

''கணவர் ரொம்ப சின்ன அளவுல ஒரு வெல்டிங் வொர்க்ஷாப் வெச்சிருந்தார். திருமணத்துக்கு அப்புறம் ஒரு நாலஞ்சு வருஷம் வீட்ல சும்மாவே இருந்தேன். 'வெட்டியா பொழுதைக் கழிக்கிறோமே'னு புலம்பலோடதான் பொழுது நகர்ந்துச்சு. அப்போதான் 'தமிழ்நாடு மகளிர் தொழில் முனைவோர் சங்கம்’ சார்பா திருச்சி ஆர்.இ.சி. காலேஜுல தொழிற்பயிற்சி நடக்கறதா கேள்விப்பட்டு, அங்க போனேன். பி.ஹெச்.எல் மாதிரியான பெரிய பெரிய தொழிற்சாலைகள்ல உதிரிபாகங்கள் தயாரிக்க பயிற்சி கொடுத்தாங்க. பெரிய பெரிய இயந்திரங்களையும், ஏகப்பட்ட இரும்புத் துண்டுகளையும் பார்த்து மிரண்டே போனேன். பயிற்சிக்கு வந்திருந்த மற்ற பெண்களோட மனநிலையும் இதேதான். ஆனாலும் எனக்கு திடீர்னு ஏதோ ஒரு பொறி தட்டுன மாதிரி இருந்துச்சு'' என்பவர் இத்தொழில் தொடர்பான அனைத்து அம்சங்களையும் அலசி ஆராய்ந்து, அதில் உறுதியோடு அடியெடுக்க ஆயத்தமாகிஇருக்கிறார்.

''பி.ஹெச்.எல். நிறுவனத்தோட துணை நிறுவனங்கள் ஏகப்பட்டது திருச்சியில இருக்கு. அவங்க தொடர்ச்சியா ஆர்டர் கொடுக்க காத்திருக்காங்க. அந்தளவுக்கு அவங்களுக்குத் தேவை இருக்கு. செஞ்சுக் கொடுக்கதான் ஆள் இல்லைனு உறுதிப்படுத்திக்கிட்டேன். அவங்க கொடுக்குற இரும்பு துண்டுகளை, நம்மகிட்ட இருக்கற இயந்திரங்கள் மூலமா உதிரி பாகங்களா உருவாக்கிக் கொடுக்கணும். அதனால, மூலப் பொருட்களுக்குனு முதலீடு தேவை இல்லை. பொருட்களை உற்பத்தி செஞ்சுட்டு, விற்பனையாயிடுமானு பயத்தோடு காத்திருக்க வேண்டியதில்லை. கடுமையான உழைப்பு மட்டும் இருந்தாலே போதும்... நிறைவான வளர்ச்சி அடைஞ்சுடலாம்ங்கற நம்பிக்கையோடு ஆரம்பக்கட்ட வேலைகள்ல இறங்க ஆரம்பிச்சேன்'' என்பவர் அரியமங்கலத்தில் சொந்த இடத்தில் புதிய நிறுவனத்தை துவக்கியிருக்கிறார்.

பூஜ்யத்திலிருந்து ராஜ்ஜியத்துக்கு...
பூஜ்யத்திலிருந்து ராஜ்ஜியத்துக்கு...

''வங்கிக் கடன் ஒன்றரை லட்சமும், சொந்தப் பணம் ஒன்றரை லட்சமும் போட்டு மொத்தம் மூணு லட்சம் ரூபாய் முதலீட்டுல தொழிலைத் தொடங்கினேன். எந்த நேரமும் நம்மோட கவனம் இதுல முழுமையா இருக்கணும்ங்கறதால, நிறுவனத்தோட மாடிக்கே குடி வந்தோம். முதல் ஒரு வருசம் வரைக்கும் லாபமே பார்க்க முடியல. அடிக்கடி ஏற்பட்ட மின்வெட்டு, ரொம்பவே பாதிப்புகள ஏற்படுத்திச்சு. தொழிலாளர்கள் கிடைக்காமலும் திணறிப் போனோம். எப்படிச் சமாளிக்கலாம்னு தீவிரமா யோசிச்சேன். திறமையான, நன்கு பயிற்சி பெற்ற தொழிலாளர்கள் இருந்தாதான் வேலை நடக்கும்ங்கற நிலை இனி இங்க இருக்கக் கூடாதுனு முடிவு எடுத்தேன். யாரை வேணும்னாலும் வெச்சு வேலை வாங்கலாம்ங்கற அளவுக்கு தொழில்நுட்பங்களை பல கட்டமா பிரிச்சு, எளிமைப்படுத்தினேன். ஏற்கெனவே எதிர்பார்த்தது போல மார்க்கெட்டிங்கும், லாபமும் சிக்கல் இல்லாம கிடைச்சுது. இதோ... மூணு வருஷமா தொழிலை எடுத்துட்டு வந்துட்டேன். இப்போ மாசம் நாப்ப தாயிரம் ரூபாய் வரைக்கும் லாபம் பார்க்கிறேன்!''

- தன் சிறப்பான நிர்வாகத் திறமையால் இதனை சாத்தியமாக்கியிருக்கும் செல்வி,

''இந்த 'மெஷின் ஜாப்’ தொழிலுக்குத் தேவை... உடல் வலிமை மட்டுமில்ல, அதைவிட அதிகமா மனவலிமை. அது ஆண்களைவிட பெண்கள்கிட்டதான் அதிகமா இருக்கு. அதனால, ஆச்சர்யம் தேவையில்ல. இது நமக்கான தொழில்!'' என்று அசத்தலாகச் சொன்னார்!

- சாதனைகள் தொடரும்...
 

படங்கள்: 'ப்ரீத்தி’ கார்த்திக்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு