Published:Updated:

'5 கோடி ரூபாய் பணம்.... குடியிருக்க வீடு !'

ஆணாதிக்கத்துக்கு எதிராக அதிரடி தீர்ப்பு !

பிரீமியம் ஸ்டோரி

 நாச்சியாள்

'5 கோடி ரூபாய் பணம்.... குடியிருக்க வீடு !'

காதலித்து, திருமணம் செய்து, அந்த இனிய வாழ்வுக்கான அடையாளமாக ஒரு குழந்தையையும் பெற்றது அந்த ஜோடி. ஆனால், அருவியாகக் காதலைப் பொழிந்த காதலன், கணவனானபின் பணம், மனம் என எல்லா வழிகளிலும் மனைவியைத் துன்பப்படுத்தினார். இவ்வளவுக்கும் சமூகத்தில் பெரிய அந்தஸ்திலும் தனி அடையாளத்துடனும் இருக்கும் பெண் அவர். அவருக்கு அத்தனை சித்ரவதைகளையும் செய்த கணவர், தமிழகத்தின் முன்னாள் போலீஸ் ஐ.ஜி-யின் மகன் மைக்கேல் அருள்.

பதினைந்து வருடங்களுக்கும் மேலாக தொடர்ந்த தன் கணவனின் சித்திரவதைகளைப் பொறுக்க முடியாமல், 'குடும்ப வன்முறை சட்டம் 2005’-ன் கீழ் வழக்கு தொடுத்து, 5 கோடி ரூபாய் நஷ்ட ஈடு, குடியிருக்க வீடு என இப்போது சாதகமான தீர்ப்பைப் பெற்றிருக்கிறார்... புகழ்பெற்ற பத்திரிகையாளர் ஜெனிஃபர் அருள்! இது, பெண்களுக்கு இழைக்கப்படும் கொடுமைகளுக்கு எதிரான சரித்திர தீர்ப்பும்கூட!

என்.டி.டி.வி - ஹிண்டு சேனலின் அட்வைஸராக உயரிய பொறுப்பில் இருக்கும் ஜெனிஃபர், '' 'சமூகத்தில் கவனிக்கத்தக்க பொறுப்பில் இருக்கும் நமக்கே ஒரு ஆணின் கொடுமைகளை எதிர்த்து வெளி வர இத்தனை ஆண்டுகள் என்றால்... நம்மைப் போல எத்தனை பெண்கள், இந்த ஆணாதிக்க சமூகத்தின் சுயநலத்தால் இன்னும் அடுக்களைக்குள்ளேயே அழுது ஆயுளைக் கழிக்கிறார்களோ...' என்பதை நினைத்தாலே, மனது வலிக்கிறது...'' என்று தன் இனத்துக்கான அனுதாபத்துடன் பேச்சைத் தொடங்கினார்.

##~##

''டெல்லியில பிரிட்டிஷ் ஏர் வேஸ்ல நான் வேலை பார்த்துட்டு இருந்தப்போ, அங்கே ஐ.பி.எம். கம்பெனியில அவர் வேலை பார்த்தார். எங்க ரெண்டு பேருக்கும் ஒரு அண்டர்ஸ்டேண்டிங் வந்துச்சு. எங்கப்பா கஸ்டம்ஸ்ல ஆபீஸர். அவங்க அப்பா தமிழ்நாட்டின் போலீஸ் ஐ.ஜி-யா இருந்த எஃப்.வி.அருள். ரெண்டு பேரு வீட்லயும் கல்யாணத்துக்கு ஒப்புக்கல. டெல்லி கதீட்ரல் சர்ச்ல நடந்தது எங்க காதல் திருமணம். எங்களுக்கு ஒரு ஆண் குழந்தை. டேவிட் அருள் அவன் பெயர்'' என்று இல்லற வாழ்வின் ஆரம்ப அத்தியாயங்களைச் சொன்னவர்,

''கல்யாணத்துக்குப் பிறகு வேலையை விட்டுட்டேன். அவரும் வேலையை விட்டுட்டு சென்னையில சொந்தமா பிஸினஸ் ஆரம்பிக்கவே, இங்கயே குடிவந்துட்டோம். அதுக்கு அப்புறம்தான் தெரிஞ்சுது... அவருக்கு நிறைய பெண்களோட தொடர்பு இருக்குங்கற விஷயம். பெண்கள், குடினு அதுதான் அவருக்கு வாழ்க்கையோட சந்தோஷமா இருந்தது. இருந்தாலும் அவர் மேல எனக்கிருந்த அன்பு அவரோட குறைகளைத் தாங்கி, பொறுமையா இருக்க வெச்சது.

என் மாமனார், மாமியார் ரெண்டு பேரோட அரவணைப்பு எனக்கு இருந்ததால கணவரோட அராஜகங்களை தாங்கிக்கிட்டேன். வளர்ந்திட்டிருந்த என் புள்ளையைப் பார்த்தே வாழ்க்கையை நகர்த்தினேன். காரணங்கள் எதுவும் சொல்லாமலேயே ஒரு கட்டத்துல வீட்டுக்கு வர்றதை குறைச்சுட்டார்...''

- மனைவி ஸ்தானத்துக்கு கொடுக்கப்பட்ட அவமானங்கள் அவர் மனதுக்குள் மீண்டும் அலையடித்தன.

''திடீர்னு அவர் நடத்திட்டிருந்த கம்பெனியில என்னையும் ஒரு டைரக்டரா நியமிச்சார். 'கடன் கொடுத்தவங்களுக்கு பதில் சொல்றதுக்குதான் இந்த போஸ்ட்’ங்கற காரணம் பிறகுதான் தெரிஞ்சுது. கடன்காரங்களுக்கு பயந்து அவர் எங்கேயோ ஓடிட, தினமும் கதவைத் திறந்தா... கடன் பத்திரங்களோடு வந்தவங்களுக்கு முன்ன கூனிக் குறுகி நிக்கற நிலைக்கு ஆளாக்கினார். என் தாலிக்கொடியைக்கூட அடகு வெச்சார். வயதான என் அப்பாகிட்ட சொல்லி பர்சனல் 'லோன்’ போட்டு கொஞ்சம் கடனை அடைச்சேன்.

சட்டச் சிக்கல்கள்ல இருந்து தப்பிக்க, என்னை எம்.டி. ஆக்கிட்டு அவர் எங்கயோ போயிட்டார். ஆஸ்திரேலியாவுல செட்டிலாயிட்டார்ங்கறதே ரொம்ப லேட்டாதான் தெரிய வந்தது. கடன் தொல்லையையும், என் கையில இருந்த புள்ளையையும் மனசுல நினைச்சு என்.டி.டி.வி-யில வேலைக்கு சேர்ந்தேன்.

நிறைய கஷ்டங்களைக் கடந்து வாழ்க்கை நகர்ந்துட்டு இருக்க, சில வருடங்கள் கழிச்சு ஒரு வெளிநாட்டுப் பெண்கூட அவர் சென்னையிலயே வாழ்ந்திட்டு இருக்கறது தெரிஞ்சுது. என் மாமனார் இறந்தப்போ அந்தப் பொண்ணுகூடதான் இறுதிச் சடங்குக்கு வந்தார். எனக்கு அந்த நிமிஷம் ஏற்பட்ட அவமானம்... இன்னும் ரணமா வலிச்சுட்டே இருக்கு'' என்ற ஜெனிஃபரின் கண்களில் கசிந்தது நீர்!

''என் மாமியார், 'நான் உயிரோட இருக்கற வரைக்கும் நீ அவனை விவாகரத்து செய்யக் கூடாது’னு சத்தியம் வாங்கிட்டாங்க. அந்த வார்த்தையைக் காப்பாத்தறதுக்காக, அவர் அந்தப் பொண்ணுகூட வாழ்ந்ததை பொறுத்துக்கிட்டேன். ஆனா, நம்ம 'ஜென்டில்னஸ்’ஸே சில சமயங்களில் ’வீக்னஸ்’ ஆயிடும். நான் போற பல இடங்கள்ல அவங்க ரெண்டு பேரும் ஜோடியா வருவாங்க. என் மாமியாரோட சொத்துக்கள எல்லாம் என் கணவர் மூலமா அந்தப் பொண்ணு அபகரிக்க முயற்சி பண்ணினாங்க. 'இவளால என்ன பண்ணிட முடியும்?’ங்கற எண்ணத்துல இந்த 35 வருஷமா எனக்கு அத்தனை துரோகங்களும் பண்ணினவருக்கு... என்னால என்ன பண்ண முடியும்னு சட்டத்தின் மூலமா காட்ட நினைச்சேன்.

மாமியார் இறந்த பிறகு குடும்ப வன்முறை சட்டத்தின் கீழ் அவர் மேல வழக்குப் போட்டேன். தன் மனைவியோட அன்பை அலட்சியப்படுத்தி அதை அவமதிக்கறவங்களுக்கு எல்லாம் சாட்டையடி கொடுத்து, எச்சரிக்கை மணி அடிச்சிருக்கு இப்போ இந்த தீர்ப்பு!'' என்றார் கம்பீரமான குரலில்!

''சமூகத்துக்கு பயந்து, அக்கம்பக்கத்துக்கு பயந்து, நமக்கு எதிரா நடக்கற கொடுமைகள வெளிய சொல்லாம, நமக்குள்ள மட்டும் வச்சு நாம அழுதுட்டு இருக்கிறதை, தங்களுக்கு சாதகமா பயன்படுத்திக்குது ஆண் வர்க்கம். என் வாழ்க்கையை வெளிப்படையா சொல்றதுக்குக் காரணம், எனக்கு நடந்த மாதிரி யாருக்கும் நடக்கக்கூடாது. அப்படி நடந்தா சட்டரீதியா போராடி வெற்றி பெறணும்ங்கறதுக்காகத்தான்.

சில அவமானங்களை சந்திக்க வேண்டி வரும். அதையும் கடந்து போகணும். அந்த வலிகளை நான் தாங்கினதுனாலதான், எனக்கு மனக் கஷ்டத்தை தந்து என்னையும் என் குழந்தையையும் அநாதரவா விட்டுட்டுப் போனதுக்கு 5 கோடி ரூபாய் நஷ்டஈடு கொடுக்கவும், என் மாமியார் வாழ்ந்த வீட்ல நான் குடியிருக்கறதுக்கான உரிமையை வழங்கியும் தீர்ப்பு தந்திருக்கு கோர்ட். இது வெறும் பணம் சம்பந்தப்பட்ட விஷயம் இல்ல. மனம், அங்கீகாரம், வாழ்க்கை, வலி என சகலமும் சம்பந்தப் பட்டது.''

- அறுபது வயதைக் கடந்த அந்த பத்திரிகையாளார், ஒரு போராளியாகவே தெரிந்தார் நமக்கு!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு