Published:Updated:

என்னோட கிட்னி அண்ணனுக்கு... கண்ணு ரெண்டும் அப்பாவுக்கு !

என்னோட கிட்னி அண்ணனுக்கு... கண்ணு ரெண்டும் அப்பாவுக்கு !

பிரீமியம் ஸ்டோரி

 பதினோரு வயது பிஞ்சின் பரிதாப முடிவு

ஆர்.ஷஃபி முன்னா

'அப்பா, அம்மாவுக்கு... இருவரும் என்னை மன்னிக்க வேண்டுகிறேன். என்னுடைய கிட்னியை அண்ணனுக்குக் கொடுத்து சரிசெய்தால் நான் மகிழ்ச்சி அடைவேன். அப்பாவுக்கு எனது கண்களைக் கொடுத்து பார்வையை சரிசெய்யுங்கள். என்னை மன்னித்து விடுங்கள்!’

என்னோட கிட்னி அண்ணனுக்கு... கண்ணு ரெண்டும் அப்பாவுக்கு !
##~##

- இப்படி ஒரு கடிதத்தை எழுதி வைத்துவிட்டு, பதினோரு வயது பிஞ்சு தற்கொலை செய்துகொண்டிருக்கும் செய்தி... பலரையும் உலுக்கிப் போட்டிருக்கிறது.

பங்களாதேஷ் நாட்டின் எல்லையில் இருக்கும் மேற்கு வங்க மாநில கிராமம் ஜோர்பாடா. தலைநகர் கொல்கத்தாவிலிருந்து சுமார் 130 கி.மீ தொலைவிலிருக்கிறது. இங்கே வசிக்கும் கூலித் தொழிலாளி மிருதுல் சர்க்கார். இவருக்கு 15 வயதில் மனோஜித் சர்க்கார் எனும் மகன், 13 வயதில் மோனிகா சர்க்கார் மற்றும் 11 வயதில் மம்ப்பி சர்க்கார் என இரண்டு மகள்கள். 9-ம் வகுப்பு பயிலும் மனோஜித், ஒரு சிறுநீரகம் செயல் இழந்து, மற்றொன்றும் பழுதடைந்துவிட... சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைதான் ஒரே வழி என்ற நிலையில், படுத்த படுக்கையாகி விட்டான். கண்களில் வந்த நோயின் காரணமாக மெள்ள பார்வையை இழந்து வந்திருக்கிறார் மிருதுல்.

அடுத்தநாள் உணவுக்கே முன்தினக் கூலியை நம்பி இருக்கும் மிருதுலிடம்... தன் மகனுக்கோ, தனக்கோ சிகிச்சைக்கு செலவு செய்யும் அளவுக்கு பணம் இல்லை. அவரும் மனைவி ரீத்தாவும்

என்னோட கிட்னி அண்ணனுக்கு... கண்ணு ரெண்டும் அப்பாவுக்கு !

இதைப் பற்றியே அடிக்கடி பேசி வருத்தப்பட்டிருக்கின்றனர். ஆறாம் வகுப்பு பயிலும் மம்ப்பியின் காதுகளில் இது அடிக்கடி விழ... அவளுக்குள் ஏக வருத்தம் குடிகொள்ள ஆரம்பித்திருக்கிறது. ஏதோதோ யோசனைகள் உருண்டிருக்கிறது!

ஜூன் 27 அன்று காலை மகனை அழைத்துக் கொண்டு அருகிலுள்ள வைத்தியரிடம் அப்பா சென்றுவிட, சகோதரிகள் இருவரும் பள்ளிக்குக் கிளம்பிக் கொண்டிருக்க... அரிசி வாங்க கடைக்குக் கிளம்பியிருக்கிறார் தாய் ரீத்தா. அப்போது... ''சிறுநீரகம் இழந்து நம் அண்ணன் எவ்வளவு கஷ்டப்படுகிறான். அப்பாவுக்கும் குறைந்து வரும் பார்வை ஒரு நாள் நிரந்தரமாக போய்விட்டால், குடும்பத்தை எப்படிக் காப்பாற்றுவார்? நாம் இருவரும் செத்துவிட்டால்... நம் உடல் உறுப்புகளை எடுத்து அண்ணனுக்கும், அப்பாவுக்கும் கொடுத்து டாக்டர்கள் காப்பாற்றி விடுவார்கள்தானே அக்கா?’' என்று மம்ப்பி கேட்க...

''அடி போடி பைத்தியக்காரி!'’ எனச் செல்லமாக கன்னத்தில் தட்டி விட்டு, ''ஸ்கூலுக்கு நேரமாச்சு... நீ இன்னும் கிளம்பாம பேசிக்கிட்டே நிக்கறே. நான் முதல்ல போறேன். சீக்கிரம் கிளம்பி வா'' என்று சொல்லிச் சென்றுவிட்டாள் மோனிகா.

அதற்குப் பின்தான் அந்த விபரீத முடிவெடுத்திருக்கிறாள் மம்ப்பி. வீட்டில் இருந்து பூச்சிக்கொல்லி மருந்தை கடகடவென குடித்தவளுக்கு கசப்புத் தாளாமல் போகவே... இருமல் மருந்தை எடுத்துக் குடித்திருக்கிறாள். சிறிது நேரத்தில் மம்ப்பியின் வயிற்றில் எரிச்சல் துவங்க... அலறியபடியே அப்பாவைத் தேடி ஓடியிருக்கிறாள். அவசரமாக அவளைப் பரிசோதித்த வைத்தியர், 'அளவுக்கு அதிகமாக இருமல் மருந்தை குடித்திருப்பாள். வீட்டில் போய் உறங்கினால் சரியாகிவிடும்!’ எனக் கூறியிருக்கிறார்.

மகனுடன் வைத்தியத்துக்காக காத்திருக்க வேண்டிஇருந்ததால், மம்ப்பியை தனியாக வீட்டுக்கு அனுப்பி வைத்திருக்கிறார் அப்பா. வயிற்றைப் பிடித்தபடி தள்ளாடி வந்த மகளைப் பார்த்த தாய், பதறியபடியே அருகிலுள்ள மருந்து கடையில் மருந்து வாங்கித் தந்திருக்கிறார். ஆனால், அவள் அங்கேயே மயங்கி விழ, ஏழு கி.மீ. தொலை விலுள்ள ஆரம்ப சுகாதார மருத்துவமனைக்குக் கொண்டு செல்வதற்குள் அனைத்தும் முடிந்துவிட்டது!

என்னோட கிட்னி அண்ணனுக்கு... கண்ணு ரெண்டும் அப்பாவுக்கு !

மம்ப்பியின் இறுதிச் சடங்குகளை முடித்த இரவில், தலையணையின் உள்ளிருந்து விழுந்த துண்டு சீட்டில், 'அப்பா, அம்மாவுக்கு...' என்று ஆரம்பித்து ஒன்பது வரிகளில் எழுதப்பட்டிருந்தது அந்த சின்ன உயிரின் அன்பும், அதற்காக அவள் எடுத்திருந்த பெரிய முடிவும்!

''மகனுக்கு மாற்று சிறுநீரகம் பொறுத்த எங்களிடம் பணம் இல்லாததால் 'நான் கிட்னி தருகிறேன்' என அவரும், 'இல்லை நான் தருகிறேன்!’ என நானும் அடிக்கடி வீட்டில் பேசிக் கொண்டிருப்போம். இதைக்கேட்டு அந்த பிஞ்சு இப்படி ஒரு துயரமான முடிவை எடுத்துவிட்டாளே! இப்படி ஆகும் எனத் தெரிந்திருந்தால் அவள் முன்பாக எதையுமே பேசி இருக்க மாட்டோம். இந்தக் குடும்பத்திடம் இவ்வளவு பாசம் வைத்திருந்த மம்ப்பியுடன் வாழ எங்களுக்கு கொடுத்து வைக்கவில்லையே'' என குரலெடுத்து அழும் அவள் அம்மா ரீத்தாவை தேற்ற யாரிடமும் வார்த்தைகள் இல்லை.

''வைத்தியர் வீட்டிலிருந்தபோது... 'அப்பா! யாரோ என் வாயில் ஏதோ ஒரு மருந்தை ஊற்றுவதுபோல் எனக்கு கனவு வந்தது. என்னுடைய வயிற்றில் என்னவோ பண்ணுகிறது பாரேன்!’ எனச் சாதாரணமாகச்

என்னோட கிட்னி அண்ணனுக்கு... கண்ணு ரெண்டும் அப்பாவுக்கு !

சொன்னாள். அதை நான் பெரிதாக எடுத்துக் கொள்ளாமல், தனியாகவே வீட்டுக்கு அனுப்பி விட்டேன். உடனடியாக வேறு மருத்துவமனைக்குக் கூட்டிச் சென்றிருந்தால்... உயிர் பிழைத்து இருக்கலாம். அவளுடைய முடிவுக்கு நானும் ஒரு காரணமாகிவிட்டேன்'' என்று பொங்கி வந்த அழுகைக்கு நடுவே சொன்னார் அப்பா மிருதுல்

அந்தத் தொகுயின் எம்.எல்.ஏ-வான சமீர் போதார், ''மம்ப்பி இறந்த செய்தியை டி.வி-யில் பார்த்து விட்டு, அந்தக் குடும்பத்துக்கு உடனடியாக உதவும் முயற்சியில் இறங்கியுள்ளார் மேற்கு வங்க மாநில சமூகநலத்துறை அமைச்சர் சாவித்திரி மித்ர். மம்ப்பி விரும்பியபடி அவள் மரணம்... அந்தக் குடும்பத்தை வறுமையில் இருந்து மீட்கட் டும்!'' என நம்மிடம் வருத்தம் பொங்கச் சொன்னார்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு