Published:Updated:

'விளையாடப் போனா... சுடுவாங்களாம்மா? '

'விளையாடப் போனா... சுடுவாங்களாம்மா? '

பிரீமியம் ஸ்டோரி

 தூக்கத்தில் அலறும் குழந்தைகள்!

ம.மோகன்

 என்றைக்கோ சமைத்த பாத்திரங்கள் தூசிகள் படிந்து அன்றும் அந்த வீட்டின் ஓரத்தில் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. உயிர் கரைய கிடக்கிறார் கலைவாணி... ராணுவக் குடியிருப்பில் இருந்து பாய்ந்து வந்த துப்பாக்கி குண்டுக்கு, 13 வயது மகன் தில்ஷனை இரையாகக் கொடுத்து ஒரு மாதம் நெருங்கும் நிலையிலும் மரண வலி துளியும் குறையாமல் மறுகும் ஏழைத் தாய்!

ஏகப்பட்ட சஸ்பென்ஸுக்கு நடுவே... ஓய்வுபெற்ற ராணுவ அதிகாரி ராமராஜை, குற்றவாளி என கைது செய்திருப்பது ஒரு பக்கம் இருந்தாலும்... சென்னை, தீவுத்திடல் அருகில் உள்ள இந்திரா  நகர் மக்களின் மனங்களில் இன்னும் அச்ச அதிர்வுகள் அடங்கவில்லை. அந்த ஏரியா பெண்கள் சிலரைச் சந்தித்தபோது அதை நன்றாகவே உணர முடிந்தது!

'விளையாடப் போனா... சுடுவாங்களாம்மா? '
##~##

''எங்க பிள்ளைகளை சரியா படிக்க வைக்கக்கூட வசதி இல்லாம, சின்ன வயசுலயே வேலைக்கு அனுப்பற அளவுக்கு வறுமைதான் நிரந்தரமா குடியிருக்கு. தில்ஷன்கூட அப்படித்தான் சின்ன வயசுலயே படிப்பை நிறுத்திட்டு வேலைக்கு போனான். அன்னிக்கு ஞாயித்துக்கிழமைங்கறதால பசங்களோட சேர்ந்து பக்கத்துல இருக்கற ராணுவ குடியிருப்புல வாதாங்காய் பறிச்சிருக்கான். அதுக்கு அந்தப் பச்சப் புள்ளய சுட்டு கொன்னுருக்காரு அந்த ஆர்மிக்காரரு. ஏழை உசுரு அவ்வளவு இளக்காரமா போச்சா..?'' என்று ஆவேசக் கண்ணீர்விட்ட மீனாட்சி,

'விளையாடப் போனா... சுடுவாங்களாம்மா? '

'' 'ஆர்மிக்காரங்க நம்ம பக்கத்துலயே இருக்காங்க... பயமில்ல’னு நாங்க நெனைக்கற அளவுக்கு எங்ககிட்ட அவங்க எப்பவுமே கரிசனமா நடந்துக்கிட்டதில்ல. அவங்ககிட்ட இருந்து எங்கள எப்படி பாதுகாத்துக்கிறதுங்கற பயம்தான் எப்பவும் எங்க எல்லாருக்கும் இருக்கும். அந்தளவுக்கு எங்க சனங்களை பார்த்தாலே ஆகாது அவங்களுக்கு. அவங்க ஏரியாவுல பெரிய கிரவுண்ட் இருக்கு. அவங்க குழந்தையெல்லாம் அதுல விளையாடும். ஆனா, எங்க பிள்ளைங்க பரிதாபமா வேடிக்கைதான் பார்க்க முடியும். எங்க பகுதியைச் சேர்ந்த பிள்ளைங்கள்ல சிலரும் அங்க இருக்கற கேந்திரிய வித்யாலயா ஸ்கூல்ல படிக்கறாங்க. ஆனாலும், ராணுவத்துக்காரங்களோட பிள்ளைங்ககிட்ட எங்க பிள்ளைங்க நெருங்க முடியாது. விளையாட்டுலகூட சேர்த்துக்க மாட்டாங்க. அதனால எங்க குழந்தைகளுக்கு ஒரு தாழ்வு மனப்பான்மை உண்டாகியிருக்கு.

எங்க புள்ளைங்ககிட்ட 'அந்தப் பக்கம் போயிடாதீங்க... ஆபீஸுருங்க அடிச்சுடுவாங்க’னு நாங்கள்லாம் சொல்லிட்டேதான் இருப்போம். ஆனாலும் குழந்தைங்க மனசுக்கு வேலி போட முடியுமா? அப்படித்தான் அன்னிக்கு உயிரையே பலி கொடுத்திருக்கான் தில்ஷன். இவ்ளோ நாளா அவங்ககிட்ட நாங்க அனுபவிச்சுட்டு வந்த அராஜ கத்தை எல்லாம் இப்போ தில்ஷனோட சாவு ஊருக்கே வெளிச்சம் போட்டிருக்கு'' என்று குமுறினார்.

ஆறு வயது பெண் குழந்தைக்கு தாயான கலையரசி, ''எம்பொண்ணு தினமும் தூக்கத்துல பயத்துல உளர்றா. ஒரு நாளைக்கு ஒரு தடவையாச்சும், 'அம்மா என்னையும் சுட்டுடுவாங்களாம்மா?’னு கேட்கறா. எங்க ஏரியா குழந்தைங்க எல்லாம் காலையில பள்ளிக்கூடத்துக்கு போறதுலயிருந்து ராத்திரி பாத்ரூம் போயிட்டு படுக்கற வரைக்கும் நடுக்கமும், பதற்றமு   மாவே இருக்குதுங்க. 'விளையாடப் போனா சுடுவாங்களாம்மா..?’னு கேட்டு தெருவுல இறங்கி விளையாடக்கூட பயப்படுதுங்க. நாங்க இந்த அதிர்ச்சியில இருந்து எப்படி மீளப் போறோம்னு தெரியல'' என்றார் சோகமாக.

'விளையாடப் போனா... சுடுவாங்களாம்மா? '

இந்தப் பகுதியில் வசிக்கும் மக்களின் கல்விக்காகவும், அவர்களின் சுகாதாரத்துக்காகவும் இங்கு செயல்படும் 'ஸ்பீடு' (ஷிறிணிணிஞி) டிரஸ்ட்டின் நிறுவனர் டெனிஸ், ''குடும்ப கஷ்டம் காரணமாக பிள்ளைகளை வேலைக்கு அனுப்புகிறார்கள், குறிப்பாக... ராணுவ குடியிருப்பில் இருக்கும் வீடுகளில் வேலை பார்க்கத்தான் அனுப்புகிறார்கள். அங்கே, தாங்கள் துன்புறுத்தப்படுவதாக அந்தக் குழந்தைகள் அடிக்கடி வந்து பெற்றோரிடம் முறையிடுவதும் இங்கு வாடிக்கைதான். 'பிள்ளைகளை வேலைக்கு அனுப்பாதீங்க...’ என்று நாங்கள் சொன்னால், அதைக் கேட்கும் நிலையில் அவர்களின் பொருளாதாரம் இல்லை. 'ஸ்கூல்ல சேர்த்து விடறோம் வர்றீங்களா...’ என்று கேட்டால், 'அப்பா விடமாட்டாரே...’ என்பார்கள் பரிதாபமாக...'' என்றவர்,

''இந்த ராணுவக் குடியிருப்பைச் சுற்றி வசித்து வரும் மக்களைப் போல... நாடு முழுக்க பல்வேறு இடங்களில் உள்ள ராணுவ குடியிருப்புகளை சுற்றியும் மக்கள் வசிக்கத்தான் செய்கிறார்கள். அங்கெல்லாம்கூட இதேபோன்ற இன்னல்கள் நேர்ந்து கொண்டிருக்கலாம் இல்லையா..? தில்ஷனின் கொலை எல்லோருக்கும் இன்று தெரிய வந்திருக்கிறது. தெரியாத குற்றங்கள் இந்தியா முழுவதும் எத்தனையோ?'' என்று கனத்த கேள்வியை முன் வைத்தார் டெனிஸ்!

'மனநலனில் அக்கறை காட்டுங்கள்!'

'விளையாடப் போனா... சுடுவாங்களாம்மா? '

சென்னையைச் சேர்ந்த மனநல மருத்துவர் எம்.திருநாவுக்கரசு, ''தில்ஷன் வாதாங்காய் பறித்தது ஒரு சிறுவனின் இயல்பான சேட்டையே தவிர, அது அத்துமீறல் அல்ல. ஆனால், அதற்கு அநியாயமாக அவன் உயிரை எடுத்திருக்கிறார் ராமராஜ். அவருக்கு தக்க தண்டனை கிடைக்க வேண்டும். மேலும், ஆயுதங்களை எப்போதும் கைவசம் வைத்திருக்கும் காவலர்கள், ராணுவத்தினரெல்லாம் தங்கள் கோபத்துக்கு வடிகாலாக அதைப் பயன்படுத்தும் ஆபத்து இனியும் நேராமலிருக்க, சம்பந்தப்பட்ட டிபார்ட்மென்ட்டுகள், அவர்களின் மனநலனில் அக்கறை எடுக்க வேண்டியது அவசியம்!'' என்று அறிவுறுத்தினார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு