Published:Updated:

அன்று அபலை...இன்று வி.ஐ.பி!

லகலக ரௌலிங்!

பிரீமியம் ஸ்டோரி

பி.ஆரோக்கியவேல்

அன்று அபலை...இன்று வி.ஐ.பி!

'ஹாரிபாட்டர்' வரிசையில் இது கடைசி படம் என்ற மிகப் பெரிய விளம்பரத்தோடு ரிலீஸாகிஇருக்கிறது 'ஹாரி பாட்டர் அண்ட் டெத்லி ஹாலோஸ் - 2’. ஏற்கெனவே வெளிவந்த ஏழு ஹாரிபாட்டர் படங்களை பார்த்து மந்திரம் போட்டதை போல மயங்கிப் போன சிறுவர், சிறுமியர்... 'ஐயோ... இனி, ஹாரிபாட்டர் வரவே மாட்டாரா?' என்கிற ஏக்கத்தோடு.. உலகம் முழுக்க தியேட்டர்களில் மொய்க்கிறார்கள்.

மந்திர, தந்திரங்கள் நிறைந்த ஹாரிபாட்டர் கதையைவிட, அதை எழுதிய ஜெ.கே.ரௌலிங்கின் வாழ்க்கைக் கதை... சிலிர்ப்பூட்டக் கூடியது.

இங்கிலாந்து நாட்டில் மிகச் சாதாரண குடும்ப பின்னணியில், அப்பாவுக்கு பயந்த மகளாக வளர்ந்தவர் ஜோன். பத்திரிகையாளரை காதலித்து மணந்தார். அது நிலைக்காத நிலையில், கைக்குழந்தையோடு வீடு இல்லாமல், வேலை இல்லாமல், நடுத்தெருவில் நின்றவர்... அபலைப் பெண்களுக்கான அரசாங்க உதவிகளைப் பெற்று காலம் தள்ள ஆரம்பித்தார்.

##~##

'ஒரு பெண் குழந்தையை வைத்துக் கொண்டு தன்னந்தனியாக எப்படிச் சமாளிக்கப் போகிறோம்?' என்ற பயம் ஜோனை துரத்தியது. குழந்தைப் பருவத்துக்குரிய எந்த சந்தோஷத்தையும் அனுபவிக்காமல் தான் வளர்ந்த நிலை, குழந்தைக்கும் வந்துவிடுமோ என்று பயந்தார். இழந்த சந்தோஷங்களை அனுபவிப்பதற்காகவோ... என்னவோ, குழந்தைகளைக் கவரும் தேவதைக் கதைகளையும், மந்திர தந்திர கதைகளையும் எழுதினார்.

அதையெல்லாம் எடுத்துக் கொண்டு பல படிகள் ஏறி இறங்கிய ரௌலிங்குக்கு, 'ப்ளூம்ஸ்பெரி’ என்ற பதிப்பகத்தில் ஓரளவுக்கு வரவேற்பு கிடைத்தது. ஆனால், ''ஒரு பெண் மாய மந்திர கதைகளை எழுதினால் சிறுவர்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். 'ஜோன்’ என்ற உன்னுடைய பெயரில் எழுதாதே... உன் குடும்பப் பெயரான 'ரௌலிங்’ என்பதை பயன்படுத்தி எழுது!'' என்று சொல்லப்பட, 'ஜெ.கே.ரௌலிங்' என்று மாறினார். அதற்கு பிறகு நடந்தது எல்லாமே சரித்திரம்.

2007-ம் ஆண்டு கணக்குபடியே நாற்பது கோடி புத்தகங்கள் விற்று தீர்த்துவிட்டன. 'இங்கிலாந்து நாட்டின் செல்வாக்குள்ள வி.ஐ.பி' எனுமளவுக்கு உயர்ந்த ரௌலிங்கின் இன்றைய சொத்து மதிப்பு, ஐந்தாயிரம் கோடி ரூபாய்.

மறுமணம் செய்துகொண்டு, மீண்டும் இரண்டு குழந்தைகளுக்கு தாயகியுள்ள ரௌலிங்குக்கு, வாழ்க்கை சந்தோஷமான தாக மாறியிருக்கிறது இப்போது !

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு