Published:Updated:

ரொமான்ஸ் ரகசியங்கள்!

ரொமான்ஸ் ரகசியங்கள்!

பிரீமியம் ஸ்டோரி

 அகிலன் சித்தார்த்
ஓவியங்கள்:மணியம் செல்வன்

'அமைதியான கடல், நல்ல மாலுமியை உருவாக்காது' (A smooth sea, never made a skillful sailor) என்பார்கள். அலைகள் ஆர்ப்பரிக்கும், புயல் காற்று சுழற்றியடிக்கும், இடி - மழை மிரட்டிப் பார்க்கும் கடல்தான் ஒரு மாலுமிக்கு சவால்! அவற்றை வெற்றிகரமாக கடந்துவிட்டால்... அவர் அனுபவம் மிக்க திறமையாளராக ஆகிவிடுவார்.

ரொமான்ஸ் ரகசியங்கள்!
##~##

ஆண் - பெண் மண வாழ்க்கையும் அப்படித்தான். திருமணம் முடிந்து இல்லற வாழ்க்கை ஆரம்பிக்கும்போது இன்பமும் துன்பமும் சேர்ந்துதான் வரும். அதையெல்லாம் கடந்து செல்ல வேண்டும்.

தொடக்க நிலையில் வரும் சிறுசிறு தடைகளை(Hiccup)வெற்றிகரமாக தாண்டிவிட்டால், அதன் பிறகு சுவையான வாழ்க்கை காத்திருக்கிறது. அதேநேரம் அந்த இனிய உறவை வாழ்நாள் முழுவதும் வெற்றிகரமாக தொடர்ந்து நடத்திச் செல்ல சில புரிதல்களும் தேவை. அதன் ஃபார்முலாக்களை ஒரு உதாரண தம்பதியின் மூலம் சொல்கிறேன்.

அந்தத் தம்பதி சென்னை புறநகர் பகுதியில் வசிப்பவர்கள். 'வாலன்டரி ரிட்டையர்மென்ட்’ வாங்கியவர்கள். ஒரு மகன், மகள். இருவரும் வெளிநாடுகளில் வேலை பார்க்கிறார்கள். பணம் காசுக்குக் குறைவில்லை. இவர்கள் மிக ஆச்சர்யமான தம்பதி... ஏதோ நேற்றுதான் திருமணம் ஆனவர்களைப் போல் அத்தனை அந்யோன்மாக, சந்தோஷமாக சிரித்துப் பேசியபடி இருப்பார்கள்.

சென்னையில் நடந்த ஒரு புத்தகக் கண்காட்சி விழாவில் அந்தத் தம்பதியை தற்செயலாகப் பார்த்தேன். எழுத்தாளர்கள், திரைத்துறையினர், பத்திரிகையாளர்கள், மருத்துவர்கள், பிஸினஸ்காரர்கள் என்று பலதரப்பட்டவர்களிடமும் சென்று பேசியபடி இருந்தார்கள். பலரைப் பாராட்டிக் கொண்டும் இருந்ததைப் பார்த்தேன். குறிப்பாக, ஓர் இளம் சினிமா கவிஞரிடம் அவர் எழுதிய பாடல்களில் இருந்து மேற்கோள் காட்டி அவர்கள் பாராட்டியதைக் கவனித்தேன். கவிஞரும் மிக உற்சாகமாக அவர்களிடம் பேசிக் கொண்டிருந்தார்.

ரொமான்ஸ் ரகசியங்கள்!

எனக்கு அவர்கள் மேலிருந்த ஈடுபாடு இன்னும் அடர்த்தியாக, ஒரு கட்டத்தில் தனியாக இருந்த அவர்களிடம் சென்று என்னை அறிமுகப்படுத்திக் கொண்டேன். உடனே கை கொடுத்து, 'ஃப்ரெண்ட்லி' ஆகிவிட்டார்கள்.

'கல்யாணம் ஆனதில்இருந்து இப்படித்தான் அந்யோன்யமாக இருக்கிறீர்களா? சண்டையே வருவதில்லையா?'' என்றேன்.

'அதை ஏன் கேட்கிறீர்கள்? கல்யாணம் ஆன புதிதில் தினமும் சண்டைதான். எங்கள் இருவருக்கும் ஏற்பட்ட சண்டைகளை எப்படி தீர்த்துக் கொள்வது என்று ஒரு கட்டத்தில் பேசிக்கொண்டோம். சில சிம்பிள் விதிமுறைகள், கட்டுப்பாடுகள், புரிதல்கள் என்று அட்டவணை போட்டுக் கொண்டோம். அதன்படி நடந்து கொண்டதில் நாளுக்கு நாள் எங்களுக்கு அன்பு கூடியது!' என்றார் கணவர்.

'ஆச்சர்யமாக இருக்கிறதே... இப்படி பேசி வைத்துக் கொண்டுகூட வாழ முடியுமா?' என்றேன்.

'ஒரு முறை எங்கள் வீட்டுக்கு வாருங்கள்... நல்ல விருந்து சாப்பிட்டு விட்டுப் பேசலாம்' என்று அன்புடன் அழைத்தார் அப்பெண்மணி. அடுத்த ஞாயிறே அவர்களின் வீட்டில் ஆஜரான நான், அங்கிருந்த சில மணி நேரங்களிலேயே அவர்களுடைய 'சக்சஸ் ஃபார்முலா'வின் பல விதிகள் எனக்குப் புரிந்துவிட்டன.

இருவரும் ஒருவரின் மீது ஒருவர் கடுஞ்சொற்கள் வீசுவதில்லை. தவறு செய்தால் உடனே மன்னிப்பு கேட்டுக் கொள்கிறார்கள். இவர் இன்ன வேலையைத்தான் செய்ய வேண்டும் என்பதில்லை. என்னிடம் மனைவி பேசிக் கொண்டிருந்தபோது, கணவர் உள்ளே காபி தயாரித்துக் கொண்டிருந்தார். வெளிநாட்டில் இருக்கும் மகளிடம் போனில் மனைவி பேசிக் கொண்டிருந்தபோது, கணவர் வீட்டைக் கூட்டிக் கொண்டிருந்தார். சரியான நேரத்தில் கொடுக்க வேண்டிய மாத்திரைகளை மனைவி கணவனுக்குக் கொடுத்தார். கணவனுக்கு நகம் வெட்டினார். இருவரிடமும் சகஜமான 'தொடுதல்’ இருந்தது. 'இன்றைக்கு இரவு நீங்கள் படிக்க வேண்டிய புத்தகம்’ என்று ஒரு புத்தகத்தைக் கொடுத்தார் மனைவி.

இருவரும் வீட்டு வேலைக்கு ஆட்கள் வைத்துக் கொள்ளவில்லை. காலை ஐந்து மணிக்கெல்லாம் எழுந்து, அரை மணி நேரம் யோகா, நாற்பது நிமிடங்கள் வாக்கிங், அடுத்து பேப்பர். வீட்டு வேலைகள் தொடர்கின்றன. தினமும் புத்தகம் படிக்கும் பழக்கமும் இருவருக்கும் இருந்தது.

இருவருக்குமான அன்பும் ஒருவரை ஒருவர் சார்ந்திருந்ததையும், அது திட்டமிட்டு வளர்க்கப்பட்டிருந்ததையும் அதிசயமாகப் பார்த்தேன். கணவன்- மனைவி இருவரின் உறவும் மேற்பட அவர்களிடமிருந்து நான் அறிந்து கொண்ட சில ஃபார்முலாக்களை, பத்து விதிகளாகச் சுருக்கிச் சொல்கிறேன்...

ரொமான்ஸ் ரகசியங்கள்!

1. ஒருவரின் மீது ஒருவர் எப்போதும் கடுஞ்சொற்களைப் பேசக் கூடாது.

2. வீட்டு வேலைகளைச் செய்வதில் சமத்துவம் வேண்டும்.

3. சிறிய தவறு செய்தாலும் உடனே மன்னிப்பு கேட்டுக் கொள்ள வேண்டும்.

4. இருவரில் யார் எந்தத் தவறு செய்தாலும், பெரிதாக்காமல் உடனே மன்னிக்க வேண்டும்.

5. தனிப்பட்ட விஷயங்களைப் பற்றியே பேசாமல் பொது விஷயங்களைப் பற்றி தாராளமாக விவாதிக்க வேண்டும். கருத்து வேறுபாடுகள் வந்தால், சண்டையாக மாற்றிவிடக் கூடாது.

6. வீட்டுக்கு அடிக்கடி விருந்தினர்களை அழைக்க வேண்டும். அதேபோல் பிறர் வீடுகளுக்கும் அடிக்கடி செல்ல வேண்டும்.

7. யார் மீதும் யாரும் ஆதிக்கம் செலுத்தக் கூடாது. சுதந்திரம் என்பது மிக முக்கியம்.

8. ஒருவருக்கு ஒருவர் விட்டுக் கொடுத்தல் வேண்டும்.

9. வாய் விட்டு சிரிப்பது மிக முக்கியம். நகைச்சுவைக்கான ரசனையை வளர்த்துக் கொள்ள வேண்டும்.

10. 'எந்நாளும் உன்னை விட்டுப் பிரிய மாட்டேன்’ என்கிற நம்பிக்கையை ஒருவர் மனதில் இன்னொருவர் ஆழமாக விதைக்க வேண்டும்.

ஆனந்தமான ரொமான்ஸ் வாழ்க்கையின் பத்து அடிப்படை ரகசியங்களாகவே இவை எனக்குத் தோன்றுகின்றன. மனித மனம் என்பது காட்டாறு போன்றது. அதை முறையாகக் கட்டுப்படுத்தத்தான் இதைப் போன்ற பல விதிமுறைகள் நமக்குத் தேவைப்படுகின்றன.

‘To love and to be loved is the greatest happiness of human existence’எனும் பொன்மொழி... எத்தனை சத்தியம்!

         - நெருக்கம் வளரும்...

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு