Published:Updated:

இரண்டாவதாக பிறந்தது... இம்சை அரசனாக இருப்பது ஏன் ?

உங்கள் குழந்தையும் இனி நம்பர் 1

குழந்தை மனநல மருத்துவர்  ஜெயந்தினி
சிகரத்தை நோக்கி சிறகடிக்க வைக்கும் தொடர்

பிரசவ அறையில் தாயின் அலறலுக்கு மத்தியில் பூப்போல வெளியே வரும் அழகுக் குழந்தையை செவிலி வந்து நம் கைகளில் கொடுப்பார். 'ஒண்ணும் தெரியாத பச்ச மண்ணு...’ என்பதுபோல கண்கள் மூடி இருக்கும் அந்த குட்டிப் பாப்பா. ஆனால், வெறும் சதையும் எலும்புமாக மட்டுமே குழந்தை பிறப்பதில்லை. உணர்வு, அறிவு அனைத்தும் கலந்தே பிறக்கிறது என்கிறது அறிவியல். அப்படி பிறக்கும் குழந்தையின் வளர்ச்சி எளிமையானது அல்ல... பல புதிர்களும் சிக்கல்களும் நிறைந்த அற்புதம்!

இரண்டாவதாக பிறந்தது... இம்சை அரசனாக இருப்பது ஏன் ?

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
##~##

ஒரே பெற்றோர்க்கு பிறக்கும் குழந்தைகள் ஆயினும், அவை இரட்டையர்களே ஆயினும் ஒவ்வொரு குழந்தையும் அதன் அறிவிலும், திறமையிலும், குணத்திலும், பண்பிலும் மாறுபடுகிறது. நிறைய அம்மாக்களின் புலம்பல் இது... ''என் மூத்த பையன் அத்தனை சமர்த்து. அருமையா படிப்பான். என்னை எந்த தொந்தரவும் செய்ய மாட்டான். எதைக் கொடுத்தாலும் சாப்பிட்டுக்குவான். ஆனா, ரெண்டாவது பையனை சாப்பிட வைக்கிறது, எழுத வைக்கிறதுனு ஒவ்வொரு விஷயத்துக்கும் படாத பாடுபட வேண்டியிருக்குது. 'இம்சை அரசன் 23-ம் புலிகேசி' தோத்தான்னுதான் சொல்லணும். என் வயித்துல பிறந்தவங்கதானே ரெண்டு பேரும். அப்புறம் ஏன் இப்படி?!'' என்று புலம்பாத அம்மாக்கள் புண்ணியவதிகள்.

இந்த அம்மாக்கள் எல்லாம், 'ஒவ்வொரு குழந்தையையும் பிறக்கும்போதே தனித்தன்மையுடன்தான் பிறக்கின்றன’ என்ற உண்மையைப் புரிந்து கொள்ள வேண்டும்!

ஒரே பெற்றோர்க்கு பிறக்கும் குழந்தைகள் ஆயினும், ஒவ்வொரு குழந்தைக்கும் பெற்றோர் வழியாக கிடைக்கும் ஜீன்கள் வேறுபடும். குழந்தை வயிற்றில் இருக்கும்போது ஒவ்வொரு குழந்தைக்கும் தாயின் கருப்பை சூழ்நிலை மாறுபடும். என்னதான் அம்மாக்கள் தன் தலைப்பிள்ளைக்கு பயன்படுத்திய தூளி, சங்கு, நடை வண்டி, கைமருந்து என்று அடுத்த பிள்ளைக்கும் அதேமுறைகளைப் பழக்கினாலும், அந்தக் குழந்தை சுற்றுப்புற சூழ்நிலையில் உள் வாங்குகிற, கற்றுக் கொள்கிற விஷயங்கள் மாறுபடும். இதுதான் ஒரு குழந்தையை அமைதியானவனாகவும், இன்னொரு குழந்தையை கொஞ்சம் கோபம் நிறைந்தவனாகவும் வளர்க்கிறது.

''என் ஃப்ரெண்டோட குழந்தை ஃபோர்த் ஸ்டாண்டர்டுதான் படிக்கறா. ஆனா, அபாகஸ்ல லெவல் சிக்ஸ் வரைக்கும் வந்துட்டா. நீயும் இருக்கியே... சிக்ஸ்த் ஸ்டாண்டர்டு படிக்கற... இன்னும் டேபிள்ஸ்கூட சரியா தெரியல...'' என்று ஒரு குழந்தையை இன்னொரு குழந்தையோடு ஒப்புமைப்படுத்தி பேசுவது, பெற்றோருக்கு வேண்டுமானால் அந்த நிமிட ஆற்றாமையின் வெளிப்பாடாகத் தோன்றலாம். ஆனால், அந்த வார்த்தைகள் குழந்தையின் பர்சனாலிட்டியை,  அந்த விநாடி முதல் பாதிக்கத் தொடங்கும். அதன் விளைவுகள் எதிர்பாராததாக, குழந்தையின் எதிர்காலத்தையே பாதிக்கும்விதமாக இருக்கும் என்கிற நடைமுறை உண்மையை பெற்றோர்கள் உணர்ந்து கொள்வது, குழந்தை வளர்ப்பின் முக்கிய மந்திரம்.

பொதுவாக, ஒரு நார்மலான குழந்தையின் வளர்ச்சி, அது வாழ்கின்ற சூழ்நிலையான பள்ளி, வீடு, உறவுகள், நண்பர்கள், அக்கம்பக்கத்தினர் என அனைத்து காரணிகளிலும் ஒன்றுக்கு ஒன்று தொடர்புடையவை. குழந்தையின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கான கூறுகளை, மூன்று விதமாகப் பிரிக்கலாம்.

முதல் கூறு... நிறம், உயரம், பருமன், தலைமுடி ஆகியவற்றை உள்ளடக்கிய 'உடல் வளர்ச்சி   (Physical Development)’’. இரண்டாவது, 'இது நல்லது... நெருப்புல கைய வெச்சா சுடும், உயரமான இடத்துல ஏறி எட்டிப் பார்த்தா... கீழே விழுந்து அடிபடும்’ என்று குழந்தை ஒரு விஷயத்தை பகுத்தறியும் வளர்ச்சி (Cognitive Development)’.  மூன்றாவது கூறு... 'எங்க யாழினி யாரைப் பார்த்தாலும் ஒடிப் போயி ஒட்டிக்குவா. ஆனா, எங்க மங்கை புது ஆட்களப் பார்த்தா பயப்படுவா’ என்பதான குழந்தையின் பழகும் தன்மையை குறிக்கும் 'சமூகம் சார்ந்த வளர்ச்சி (Social Development)’’.

இந்த மூன்று கூறுகளிலும் குழந்தையின் வளர்ச்சி நிலையை சோதித்துக் கொள்வது பெற்றோர்களின் கடமை. உங்கள் குழந்தையின் பலம், பலவீனங்களை பட்டியலிடுங்கள். குழந்தையிடமுள்ள நல்ல விஷயங்களுக்கு இன்னும் மெருகேற்றும் கலையைக் கற்றுக் கொடுங்கள். பலவீனமான விஷயங்களுக்காக கவலையுடன் உட்காராமல், அந்த பலவீனங்களை வெற்றிகரமாக மாற்றுவது எப்படி என்கிற வித்தையைக் கற்றுக் கொடுங்கள். உங்கள் குழந்தையின் வளர்ச்சி... ஒரு தொடர் நிகழ்வு. ஆக்கபூர்வமான மாற்றங்களை எப்போது வேண்டுமானாலும் குழந்தையிடம் கொண்டு வர முடியும். அதுதான் அது குழந்தையாக இருப்பதன் சிறப்பு!

இன்னொரு விஷயம் தெரியுமோ... குழந்தைகளின் குணநலன்களிலும் வகைகள் இருக்கின்றன. உங்கள் குழந்தை எந்த வகை?

- வளர்ப்போம்...