Published:Updated:

அனுபவங்கள் பேசுகின்றன !

அனுபவங்கள் பேசுகின்றன !

வாசகிகள் பக்கம்

பளீர்... 'பனீர் நேர்மை'!

அனுபவங்கள் பேசுகின்றன !

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

நாங்கள் வடஇந்தியாவில் குடியிருக்கிறோம். எங்கள் வீட்டில் வேலை பார்க்கும் பெண், ''தீதி... எனக்கு நூறு ரூபாய் கடனாகக் கொடுக்க முடியுமா..? என் குழந்தைகள் நீண்ட நாட்களாக பனீர் சப்ஜி செய்து தரச் சொல்லி கேட்கிறார்கள்...'' என்று கேட்க, நானும் பணத்தைக் கொடுத்தேன். கூடவே, ''இதைக் கடனாக நினைக்க வேண்டாம். உன் குழந்தைகளுக்கு நான் செய்ததாக இருக்கட்டும்!'' என்றேன். இரண்டு நாள் கழித்து அவள் பணத்தை என்னிடம் கொடுத்ததுடன், ''தீதி... நான் இந்தப் பணத்தில் பனீர் வாங்கவில்லை. நல்ல தரமான பனீர் எங்கேயும் கிடைக்கவில்லை...'' என்றாள். ''சரி, அதனால் என்ன... பணத்தை நீயே வைத்திருந்து, கிடைக்கும்போது வாங்கிக்கொள்...'' என்று எவ்வளவோ வற்புறுத்தி நான் அதை திருப்பிக் கொடுத்தும், ''எனக்கு ஏதாவது தேவையென்றால் உங்களிடம்தானே கேட்கப் போகிறேன்... அதுவரை உங்களிடமே இருக்கட்டும் தீதி!'' என்று மறுத்துவிட்டாள் அவள்.

பணத்துக்காக பொய் சொல்லும் கூட்டத்துக்கு நடுவில், அவளின் நேர்மை என்னை நெகிழ வைத்தது!

- எஸ். ஷபீனா பானு, உத்தரப்பிரதேசம்

பெண்ணென்றால் பெண்தான்!

அனுபவங்கள் பேசுகின்றன !

சமீபத்தில் நானும் என் கணவரும் அமெரிக்கா சென்றிருந்த போது, 'நயாகரா’ நீர்வீழ்ச்சியைக் காண ரயிலில் சென்றோம். அந்த ரயிலில், பாத்ரூமிலிருந்து வெளிப்பட்ட ஒரு டீன் ஏஜ் பெண், பாத்ரூம் கதவை அவசரத்தில் வேகமாகத் திறந்தார். எதிர்பாராத விதமாக கதவின் அருகில் நின்றிருந்த குழந்தையின் கண்களில் கதவு மோத, சிணுங்கியது குழந்தை. பதறிய அந்தப் பெண், அவசரமாக தன் கர்ச்சீப்பை வெந்நீரில் நனைத்துப் பிழிந்து குழந்தையின் கண்களில் மாற்றி மாற்றி ஒற்றி எடுத்து சமாதானப்படுத்தினாள். அருகில் இருந்து பார்த்துக் கொண்டிருந்த குழந்தையின் அம்மா, முகத்தில் துளி கோபமோ, எரிச்சலோ இல்லாமல் தன் குழந்தையின் முதுகை மெதுவாகத் தட்டிக் கொடுத்து சமாதானப் படுத்தினார். அந்தக் குழந்தை வலி நீங்கி சிரித்தவுடன்தான், டீஜ் ஏஜ் பெண்ணின் முகத்தில் நிம்மதி படர்ந்தது. ''நோ பிராப்ளம்! நீ இதையே நினைத்து வேதனைப்படாமல் நிம்மதியாக கல்லூரிக்குச் செல்!'' என்று அவளை அனுப்பி வைத்தார், குழந்தையின் அம்மா.

எந்த நாடாக இருந்தாலும் பெண்களுக்கே உரியவை அன்பும், பொறுமையும் என்று நடந்துகொண்ட அந்த இரண்டு பெண்களும் இன்னும் என் கண்களுக்குள்!

- உஷா நாராயணன், சென்னை-44

மம்மீஸ் கவனிக்க!

அனுபவங்கள் பேசுகின்றன !

என் தோழி வீட்டுக்குச் சென்றிருந்தபோது, தன் இரண்டு வயதுக் குழந்தைக்கு சாப்பாடு ஊட்டிக் கொண்டிருந்தாள். அந்த குட்டிப் பிஞ்சோ சாப்பாட்டை மெல்லவும் முடியாமல், விழுங்கவும் முடியாமல் திணறிக் கொண்டிருந்தது. என் தோழியோ, ''உனக்கு பிடிக்கும்னுதானே பொங்கல் செஞ்சேன். சாப்பிடாம இப்படி படுத்துறியே...'' என்று புலம்பிக்கொண்டே குழந்தையின் வாயில் சாப்பாட்டைக் கட்டாயமாகத் திணித்தாள். சில நிமிடங்களில் முதுகில் இரண்டு சாத்து வேறு. பதறிப்போன நான், ''குழந்தை, சாப்பிடாம இப்படி அழுதா... ஒண்ணு,  சாப்பாட்டுல குறையிருக்கும். இல் லேன்னா, உடம்புக்கு ஏதாவது இருக்கும்'' என் றேன். அலர்ட் ஆனவள், சட்டென குழந்தையைத் தொட்டுப் பார்த்தாள். குழந்தையின் உடம்பு நார்மலாகத்தான் இருந்தது. உடனே சாப்பாட்டை வாயில் போட்டுப் பார்த்தவளின் முகம் அஷ்ட கோணலானது. சாப்பாட்டில் உப்பு இல்லை. அசடு வழிந்தாள் தோழி!

குழந்தைக்கு ஊட்டுவதற்கு முன் அம்மாக்கள் கொஞ்சம் வாயில் போட்டு சுவைத்து உப்பு, காரம் எல்லாம் சரியாக இருக்கிறதா என்று பார்த்து ஊட்டினால், குழந்தை திருப்தியாக சாப்பிடும்... நமக்கும் டென்ஷன் இருக்காது!

- கவிதா வீராசுவாமி, சென்னை-98

 நினைவுகள் ஒவ்வொன்றுக்கும் பரிசு: 150
ஓவியங்கள் : கண்ணா