Published:Updated:

சாதனை சிகரத்தில் ஒரு சாதாரண மனுஷி !

டியூஷன் தொடங்கி... டிரெயினிங் சென்டர் வரை...

கணவரின் உயிரை மீட்டு, புராணத்தில் தன் பெயரை அழுந்தப் பதித்தாள் அந்தக் கால சாவித்திரி. விபத்தால் முடங்கிய தன் கணவரை உடல் மற்றும் மனதளவில் மீட்டு, அவரின் தொழிலுக்குத் தூணாக நின்று, இன்று கணவரையும், குடும்பத்தையும் கரையேற்றியிருக்கிறார் நிகழ்கால சாவித்திரி!

திருச்சி மாநகரில், 'திருச்சி ப்ளஸ்’ என்ற பேனரின் கீழ் ஆறு சகோதர நிறுவனங்கள் மூலம் கல்லூரி மாணவர்களிலிருந்து கார்ப்பரேட் ஊழியர்கள் வரை சகலருக்கும் தேவையான கல்வி மற்றும் வேலை தொடர்பான பயிற்சிகளை அளித்து வருகிறார்கள் சாவித்திரியும் அவருடைய கணவர் சிவகுமாரும்.

சாதனை சிகரத்தில் ஒரு சாதாரண மனுஷி !

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
##~##

கணவர் அவ்வப்போது எடுத்துக் கொடுக்க, தான் கடந்து வந்த பாதை பற்றி சுவாரஸ்யமாக ஆரம்பித்தார் சாவித்திரி. அத்தனையும்... வாழ்க்கையில் சோர்ந்தவர்களுக்கு குளூக்கோஸ்தான்!

'பூர்விகம் திருச்சிதான். ஆனா, தாத்தா காலத்திலேயே டெல்லியில செட்டிலாயிட்டோம். இவரோட குடும்பத்திலும் மூணு தலைமுறைக்கு முன்னாடியே மேற்குவங்காள மாநிலத்துல குடியேறிட்டாங்க. நான் டெல்லி பல்கலைக்கழகத்துல சைக்காலஜி சேர்ந் திருந்த நேரம், அங்க இவரு எம்.பி.ஏ. ரெண்டு பேருக்கும் காதல் மலர, 'பொருத்தமான ஜோடி'னு ரெண்டு வீட்டுலயும் துளி எதிர்ப்பில்லாம ஏத்துகிட்டது... சந்தோஷ சர்ப்ரைஸ்!

படிப்பு முடிஞ்சதும் நாக்பூர்ல அவருக்கு வேலை கிடைக்க, புது வாழ்க்கையை அங்க ஆரம்பிச்சோம். காதல் கதையில இதுவரைக்கும் எந்த வில்லங்கமும் இல்லையேனு பார்த்தா, அங்கதான் தெரிஞ்சது... நான் இவருக்கு ரெண்டாவது மனைவிங்கிற சேதி...'

- என்று குறும்புப் பார்வையோடு சாவித்திரி நிறுத்த,  சிரிப்போடு ஆமோதித்தார் சிவகுமார்!

'அவரோட வேலைதான் அந்த முதல் மனைவி! ஒரு பிரபல சூட்கேஸ் கம்பெனியில சீனியர் சேல்ஸ் மேனேஜர் உத்யோகம். அநியாயத்துக்கு ஆபீஸையே கட்டிட்டு கிடப்பார். ஆபீஸ் டூர் கிளம்பினார்னா... திரும்பி வர்றதுக்கு வாரக் கணக்காகும். தனிமைக்கு துணை தேடி அவரோட அலமாரி புத்தகங்களை வாசிக்க ஆரம்பிச்சேன். எல்லாம் பிஸினஸ், சுய முன்னேற்றம், வாழ்க்கை சூட்சமம் பத்தின அருமையான புத்தகங்கள். எடுத்துக்கிட்ட வேலை எதுவானாலும் சின்ஸியரா செய்யணுங்கிற அவரோட சிரத்தையும் பக்தியும், என்னையும் பத்திகிச்சு. பாதியில் விட்டிருந்த டிகிரியை முடிச்சேன். ஃபிரெஞ்ச் மொழி, கிராஃப்ட் வொர்க், இசை, இலக்கியம்னு தேடித்தேடி கத்துகிட்டேன். அப்போதான் றெக்கைக்கட்டி பறந்திட்டிருந்தவரை முடக்கிப்போட்ட கொடூர விபத்து'

சாதனை சிகரத்தில் ஒரு சாதாரண மனுஷி !

- பழைய பரிதவிப்பில் ஆழ்ந்தவராக கணங்களை மௌனத்தில் கரையவிட்டார் சாவித்திரி.

சாலை விபத்தொன்றில் சிவகுமாருக்கு இடுப்புக்கு கீழே எலும்பு முறிவு ஏற்பட்டு, ஆண்டுக்கணக்கில் ஆஸ்பத்திரியிலேயே முடங்கியிருக்கிறது வாழ்க்கை.

'இதுவும்கூட ஏதோ ஒரு நல்ல காரணத்துக்காக இருக்கலாம்னு ஆறுதல் படுத்திக்கற அளவுக்கு எங்க ளுக்கு பக்குவம் இருந்தது. அந்த பாஸிட்டிவ் அப்ரோச்சாலதான் படுத்த படுக்கையா இருந்தவரை நான் மீட்டேன்!'' என்ற சாவித்திரியை தொடர்ந்தார் கணவர்...

''ஒரு தாயா என்னைப் பார்த்துக்கிட்டா. கைக் குழந்தைக்கு நடை பழக்கற மாதிரி உற்சாகத்தோட கொஞ்சம் கொஞ்சமா நடக்க வெச்சா. ஒருவழியா மருத்துவமனை வாசம் முடிஞ்சு வீட்டுக்குத் திரும்பினா, அடுத்த சவால்... வேலை பறிபோயிருச்சு. சிகிச்சைக்காக சேமிப்பும் கரைஞ்சிருக்க... வாழ்க்கையே கேள்விக்குறியாயிடுச்சு!'

பொருளாதார நெருக்கடியோடு மனஅழுத்தமும் இளஞ்ஜோடியை வதைக்க, மாற்றம் தேடி நாக்பூரிலிருந்து திருச்சி வந்திருக்கிறார்கள். பூர்விக வீடு ஒன்றைத் தவிர, வேறெந்தத் தொடர்பும் இந்த மண்ணில் இல்லை.

'வாக்கர் உதவியில்லாம என்னால் நடக்கமுடியாது. வீட்டுக்குள்ளேகூட ஊர்ந்துதான் போகணும். அந்த சூழ்நிலையிலயும், 'ஏதாச்சும் தொழில் பண்ணலாம்’னு பெட்டிக்கடையில இருந்து பார்மஸி வரைக்கும் நிறைய ஐடியாக்களை கொட்டுவோம். ஆனா, உடல் நிலையும் பொருளாதாரமும் எங்கள திணறடிக்கும். அப்போதான் ஒரு பெரியவர், 'ரெண்டு பேரும் படிச்சிருக்கீங்க... டியூஷன் எடுக்கலாமே’னு சொன்னார். 'இங்கு டியூஷன் எடுக்கப்படும்’னு உடனே ஒரு சார்ட் பேப்பர்ல எழுதி வாசல்ல வெச்சுட்டா. கொஞ்ச நாள் வீட்டோர தென்னை மரங்கள்ல காய் பறிச்சு அதை வித்து பசியாறியபடியே காத்திருந்தோம்.

'என் பேரு நாராயணன்’னு முதல் ஸ்டூடன்ட் வந்தான். ரெண்டு பேருமே ஆர்வத்தோட பாடம் நடத்தினோம். கொஞ்ச நாள்ல நாராயணன் தன் தம்பியோட வந்தான். பத்து நாள் கழிச்சு வீட்டு வாசல்ல திமுதிமுனு ஸ்டூடன்ட்ஸ் நின்னாங்க. மளமளனு பிஸியாயிட்டோம்.

சாதனை சிகரத்தில் ஒரு சாதாரண மனுஷி !

'அடுத்து...’னு ரெண்டு பேரும் உட்கார்ந்து பேசி, பிஸினஸ் மேனேஜ்மென்ட் கோர்ஸ், மனித வள மேம்பாட்டு பயிற்சி வகுப்பு சொல்லித் தர ஆரம்பிச்சோம். வெறும் கோச்சிங் வகுப்புகளா இருந்த பயிற்சி மையத்தை புதுப்புது படிப்புகளுக்கான இடமா மாத்தினா என் மனைவி.

கான்வென்ட்ல படிச்ச அனுபவத்தோட கூடுதலா பிரிட்டிஷ் கவுன்சில்ல சிறப்பு பயிற்சி எடுத்துட்டு ஸ்போக்கன் இங்கிலீஷ் வகுப்புகளையும் சாவித்திரி கவனிக்க, நல்ல ரெஸ்பான்ஸ். அமெரிக்கா, பிரிட்டனுக்கு படிக்கப்போற ஸ்டூடன்ட்ஸுக்கான நுழைவுத் தேர்வுக்கான பயிற்சி மையமா விரிவு படுத்தினோம். மாணவர்களோட அடுத்தடுத்த எதிர்பார்ப்புகளை விசாரிச்சி, அப்படியே சக்சஸ் ஸ்கில்ஸ், சாஃப்ட் ஸ்கில்ஸ், பர்சனாலிட்டி டெவலப்மென்ட்னு எல்லா அம்சங்களையும் ஒரே குடைக்கு கீழ கொண்டு வந்தோம். ஒவ்வொரு பயிற்சி வகுப்பை ஆரம்பிக்கறதுக்கு முன்னேயும், வெளிநாடுகளுக்கும்கூட போய் நாங்க பயிற்சி எடுத்துக்கிட்டதுதான் சக்சஸுக்குக் காரணம்.

'அடுத்து என்ன செய்யறது, எப்படி பிழைக்கிறது'னு மலைச்சு நின்ன கணங்கள் போய், நினைச்சா விமானங்கள்ல பறந்து பிஸினஸ் டீலிங்கை முடிக்கிற அளவுக்கு முன்னேறிட்டோம்னா அதுக்கு சாவித்திரியோட புத்திசாலித்தனம்தான் காரணம்!'

- பரவசமானார் சிவகுமார்.

இதற்கு நடுவே சிவகுமாரின் உடல் நிலையும் சீராக, அவர்கள் வாழ்க்கையை இன்னும் அழகாக்க ஒரு பெண் குழந்தையும் பிறந்திருக்கிறது.

இப்போது 'திருச்சி ப்ளஸ்’ என்ற பேனரின் கீழ் பல்வேறு பயிற்சிகளைத் தரும் ஆறு நிறுவனங்கள், அதில் பணிபுரியும் நாற்பது பணியாளர்கள் என்று இவர்களின் பிஸினஸ் டாப் கியரில் இருக்கிறது.

''வசதி உள்ளவங்க மட்டுமே பெற முடிந்த இந்தப் பயிற்சிகளை வாரத்துல ஒருநாள் இலவசமா வழங்கறோம்' என்று தங்களது சமூக அக்கறையையும் பகிர்ந்த சாவித்திரி ஒரு கணம் நிறுத்தி,

'போதும் நிறுத்திக்குவோம்னு ஒரு நாளும் சோர்வு எட்டிப் பார்த்ததே இல்ல. அசந்தா...'அடுத்தது என்ன?'னு சுத்தி இருக்கற வாய்ப்புகள்ல இருந்து ஒண்ணை தேர்ந்தெடுத்து, அதுலயும் சிக்ஸர் அடிக்கறதுக்கான தெம்பும், மனசும் எங்ககிட்ட ரொம்பவே இருக்கே!'

- சாவித்திரியின் இந்த வார்த்தைகள் வெகு நேரம் நம் காதுகளில் எதிரொலித்துக் கொண்டிருந்தது.

எஸ்.கே.நிலா
படங்கள்: 'ப்ரீத்தி’ கார்த்திக்