Published:Updated:

‘இனி மற்றவர்களுக்காகவும் உழைப்பேன்!’- முதல் திருநங்கை எஸ்.ஐ.ஆனார் பிரித்திகா யாஷினி

‘இனி மற்றவர்களுக்காகவும் உழைப்பேன்!’- முதல் திருநங்கை எஸ்.ஐ.ஆனார் பிரித்திகா யாஷினி
News
‘இனி மற்றவர்களுக்காகவும் உழைப்பேன்!’- முதல் திருநங்கை எஸ்.ஐ.ஆனார் பிரித்திகா யாஷினி

‘இனி மற்றவர்களுக்காகவும் உழைப்பேன்!’- முதல் திருநங்கை எஸ்.ஐ.ஆனார் பிரித்திகா யாஷினி

சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த பிரித்திகா யாஷினி, சப்-இன்ஸ்பெக்டர் தேர்வுக்காக விண்ணப்பித்த முதல் திருநங்கை. ஆணாகப் பிறந்தாலும் பின்னர் உடலில் ஏற்பட்ட பெண்மை உணர்வு காரணமாக, அறுவை சிகிச்சை செய்துகொண்டு பெண்ணாக மாறியவர். பிரித்திகா யாஷினி என்று தன் பெயரையும் மாற்றிக்கொண்டார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன், தமிழக காவல்துறையில் சப்–இன்ஸ்பெக்டர் பணிக்கு அறிவிப்பு வெளியானபோது விண்ணப்பித்தார். திருநங்கை என்ற காரணத்துக்காக அவருடைய விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து சென்னை உயர்நீதிமன்றத்தில், ரிட் மனு தாக்கல்செய்தார் பிரித்திகா. மனுவை விசாரித்த நீதிமன்றம், எழுத்துத் தேர்வில் பிரித்திகாவை அனுமதிக்க உத்தரவிட்டது. அந்தத் தேர்வில் பிரத்திகா யாஷினி  கலந்துகொண்டு தேர்ச்சி பெற்றார். அடுத்து நடந்த உடல் தகுதி தேர்வில், ஓட்டப்பந்தயத்தில் ஒரு நொடி காலதாமதமாக வந்ததாகக் கூறி, பிரித்திகாவை தகுதி நீக்கம்செய்தது சீருடைப் பணியாளர் தேர்வாணையம். இதையும் எதிர்த்து, மீண்டும் நீதிமன்றத்திடம் மனு செய்தார். வழக்கு, விசாரணைக்கு வந்தபோது, மனுதாரரை நேர்காணலில் அனுமதிக்க வேண்டும் என கறார் காட்டியது நீதிமன்றம்.

இதன் பின்னர் அவர் அனுமதிக்கப்பட்டு, எழுத்துத் தேர்வில் தேர்ச்சி பெற்றார். தொடர்ந்து, 400 மீ. நீளம் தாண்டுதல், எறி பந்து ஆகிய போட்டிகளில் தேர்ச்சிபெற்றார். இறுதியாக, 100 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில், 17.5 நொடிகளில் கடக்கவேண்டிய தூரத்தை 18.5 நொடிகளில் கடந்து தோல்வியுற்றதாக அறிவிக்கப்பட்டார். இந்தத் தேர்வு முடிவின் வீடியோ ஆதாரங்களைவைத்து, மறுபரிசோதனை செய்யுமாறு நீதிமன்றத்தில் கோரிய மனுவின் காரணமாக, மனிதாபிமான அடிப்படையில் மீண்டும் நடத்தப்பட்ட 100 மீ ஓட்டத்தில் வெற்றிபெற்றார். இதை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சய் கிஷன்கவுல் மற்றும் நீதிபதி புஷ்பா சத்தியநாராயணா, ''தமிழக காவல்துறையில் பணியாற்றத் திருநங்கை பிரித்திகா யாசினி முழுத்தகுதி உடையவர். அவருக்கு எஸ்ஐ. பணி வழங்க வேண்டும். அவர் அர்ப்பணிப்போடும், மற்ற திருநங்கைகளுக்கு உற்சாகம் அளிக்கும் வகையில் இருப்பார். எதிர்காலத்தில் மூன்றாம் பாலினத்தவர் கலந்து கொள்ளும் வகையில் தேர்வு முறையை மேற்கொள்ள வேண்டும்'' என்றும் உத்தரவிட்டனர். உயர் நீதிமன்றத்தின் இந்த உத்தரவின்படி, இந்தியாவில் எஸ்ஐ ஆகப்போகும் முதல் திருநங்கை பிரித்திகா யாஷினி என்ற பெருமையைப் பெற்றார். இந்திய அளவில்  இரண்டு திருநங்கைகள் கான்ஸ்டபிளாக பணியாற்றிவருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

சென்னை, வண்டலுாரை அடுத்த ஊனமாஞ்சேரியில், காவல் உயர் பயிற்சி மையத்தில் பயிற்சிபெற்ற உதவி ஆய்வாளர்களுக்கான நிறைவு விழா நேற்று நடந்தது. இதில், நாட்டிலேயே முதல்முறையாகத் திருநங்கை பிரித்திகா யாஷினி உள்பட, 1,028 உதவி ஆய்வாளர்கள் பயிற்சியை நிறைவுசெய்துள்ளனர். தமிழக காவல்துறையில் உதவி ஆய்வாளருக்கான போட்டித் தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு, ஓராண்டு பயிற்சி அளிக்கப்பட்டது. இதன் நிறைவு விழா நேற்று நடந்தது.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

திருநங்கை பிரித்திகா யாஷினி நம்மிடம் கூறும் போது, ‘இந்தியாவிலேயே முதல்முறையாக சப்-இன்ஸ்பெக்டராகத் தேர்வுசெய்யப்பட்ட திருநங்கையாக, தமிழ்நாடு காவல் உயர் பயிற்சியகத்தில் கடந்த ஒரு ஆண்டாகப் பயிற்சி பெற்றேன். எனக்குப் பயிற்சி அளித்த உயர் அதிகாரிகள், சக பயிற்சியாளர்கள் முழு ஒத்துழைப்பு அளித்து பயிற்சி அளித்தனர். எனக்கு தருமபுரியில் பணி வழங்கப்பட்டுள்ளது. எனக்குப் பணி கிடைத்திருப்பது, மற்ற திருநங்கைகளுக்கு ஒரு முன்னுதாரணமாக இருக்கும். நேர்மையான முறையில் வாழத்துடிக்கும் என்னைப் போன்ற திருநங்கைகளுக்கு, எனக்குக் கிடைத்த வாய்ப்பு வழிகாட்டியாக அமையும் என்பதில் ஐயமில்லை. இனி சமுதாயத்துக்காக பணிசெய்ய இருக்கிறேன். மகிழ்ச்சியாக உள்ளது’ என்றார்.

-ஆர். ஜெயலெட்சுமி