Published:Updated:

கைகொடுத்தார்... கரையேறுகிறார்கள்....

கடலன்னையின் பிரதிநிதி பரமேஸ்வரி !

என்.சுவாமிநாதன்

 ''பெண் சக்தி, பெரிய சக்தி. ஆனா... அவங்களுக்கான வழிகாட்டல்கள் எதுவும் இல்லாததால, கூட்டுக்குள்ள நத்தையா சுருண்டு போயிடறாங்க. அப்படி சுருண்டு கிடந்த மீனவப் பெண்களை ஒன்றிணைச்சு, அவங்க கைகள்ல சுயதொழில்களைக் கொடுத்தோம். மீன் ஊறுகாய், ஐஸ் மீன் பதப்படுத்துறது, கார்மென்ட்ஸ், மளிகைனு இப்போ அவங்க எல்லாம் கண்ணுக்குக் குளிர்ச்சியா வளர்ந்திருக்காங்க!''

- மனது குளிரச் சொல்கிறார் பரமேஸ்வரி.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
கைகொடுத்தார்... கரையேறுகிறார்கள்....
##~##

மீனவப் பெண்களுக்கு மகளிர் சுய உதவிக் குழுக்களை அமைத்துக் கொடுப்பது, வங்கிக் கடனுக்கு ஏற்பாடுகள் செய்வது, அவர்களின் சமூக, பொருளாதார பிரச்னைகளைத் தீர்ப்பது, குழந்தைகளின் கல்வியை மேம்படுத்துவது என கன்னியாகுமரி மாவட்டம், குளச்சல் சுற்றுவட்டார மீனவ கிராமங்களில் கடலன்னையின் பிரதிநிதியாகவே வலம் வரும் பரமேஸ்வரி... 'சிகரம்’ தொண்டு நிறுவனத்தின் நிறுவனர். ''என்னோட சொந்த ஊர்... இரணியல். சோஷியல் வொர்க்குல இருந்த இன்ட்ரஸ்ட் காரணமா... பி.ஏ சோஷியாலஜி எடுத்துப் படிச்சேன். எங்க ஊரை சேர்ந்த நகுலனே எனக்குக் கணவரா கிடைச்சார். 'நகுலன் கேப்ஸ்’ங்கிற பேர்ல டிராவல்ஸ் நடத்தறார். அவர் வேலைக்குப் போனதும், வீட்டுல சும்மா இருக்காம... தெருவுல உள்ள குழந்தைங்களுக்கு ஃப்ரீயா டியூஷன் சொல்லி கொடுத்துட்டு இருந்தேன். எங்க பதினேழு வருஷ அன்புக்கு சாட்சியா... ரெண்டு பெண் குழந்தைங்க இருக்காங்க. மூத்தப் பொண்ணு பிரியா ப்ளஸ் டூ-வும், ரெண்டாவது பொண்ணு தேவி டென்த்தும் படிக்கறாங்க'' என்ற பரமேஸ்வரி, சமூகசேவையின் பக்கம் தன்னைத் திரும்ப வைத்த அந்த நிகழ்வைத் தொடர்ந்தார்...

''டிசம்பர் 26, 2004... ஊர், உலகத்தையே சுருட்டின சுனாமி வந்த நாள். மண்டைக்காடு பகவதி அம்மன் கோயில்ல சாமி கும்பிட்டுட்டு இருந்தேன். பொங்கி வந்த ஆழிப்பேரலைக்குப் பயந்து, கடலோரப் பகுதி மீனவப் பெண்கள் உயிரைக் கையில பிடிச்சுக்கிட்டு கோயிலுக்குள்ள ஓடி வந்தாங்க. வீடு, வாசல், சொந்தபந்தம் எல்லாம் இழந்து, அடுத்தவேளை சாப்பாட்டுக்குகூட வழி இல்லாம இருந்தவங்கள பார்த்தப்போ, மனசுல தாங்க முடியாத பாரம். அடுத்தடுத்த நாட்களும் அவங்ககூடவே இருந்தேன். அரசாங்கம், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் உதவி செய்றதைப் பார்த்து, நாமளும் ஏதாச்சும் செய்யணும்னு தோணுச்சு. தோழிகள், என் வீட்டுக்காரரோட நண்பர்கள்கிட்ட எல்லாம் பேசி துணி, அரிசி எல்லாம் வாங்கிக் கொடுத்தேன்'' என்பவருக்கு மீனவப் பெண்களின் நிச்சயமற்ற வாழ்க்கைமுறை குறித்த கவலை, அக்கறை ஏற்பட்டதும் அப்போதுதான்.

''அந்த மக்கள்கிட்ட சேமிக்கற பழக்கமே இல்லை. புயல், வெள்ளம்னு இயற்கை சீற்றங்கள் வாட்டி எடுக்கும்போது, பசிச்ச வயித்தோட நிக்கறதைத் தவிர வேற எதுவும் தெரியல. அவங்கள பொருளாதார ரீதியா பலப்படுத்த ஏதாவது பண்ணணும்னு நினைச்சேன். தனி ஆளா செய்ய முடியாதுங்கறதால, 'சிகரம்’ தொண்டு நிறுவனத்தை ஆரம்பிச்சேன்'' என்றவரின் அடுத்தடுத்த முயற்சிகள், அக்கறை.

''பள்ளியில என்கூடப் படிச்ச மீனவப் பெண்கள், மத்த குப்பத்துப் பெண்கள்னு எல்லாரையும் சந்திச்சு, சுய உதவிக்குழு, வங்கி, வட்டினு எல்லாம் சொல்லிக் கொடுத்து 'சிகரம்’ தொண்டு நிறுவனத்தின் பலத்தோட அவங்களை களத்துல இறக்கினோம். விஷயம் தெரிஞ்சு நிறையப் பெண்கள் தேடி வர ஆரம்பிச்சாங்க. இப்போ குளச்சலை சுற்றியுள்ள மீனவக் கிராமங்கள்ல 750-க்கும் அதிகமான மகளிர் சுய உதவிக் குழுக்களை ஆரம்பிச்சிருக்கோம். பேங்க் அக்கவுன்ட், இன்ஷூரன்ஸ் இதெல்லாத்தையும் கட்டாயமாக்கி... அவங்க வாழ்க்கைக்கு பொருளாதார பாதுகாப்பு கிடைச்சுருக்கு.

சுயதொழில் வாய்ப்பையும் ஏற்படுத்திஇருக்கோம். மீனவப் பெண்கள் மட்டுமே உள்ள குழுக்கள்ல உள்ளவங்க, மீன் ஊறுகாய், ஐஸ் மீன் பதப்படுத்துதல்னு குடிசைத் தொழில் பண்றாங்க. தாழ்த்தப்பட்ட மக்கள் மட்டும் உள்ள குழுவுக்கு 'தாட்கோ’ உதவியோட பசுமாடு வாங்கிக் கொடுத்துஇருக்கோம். முழுக்க முழுக்க பெண்களாலேயே நடத்தப்படுற 'கார்மென்ட்ஸ்’ ஒண்ணும் இயங்கிட்டு இருக்கு. இளம் விதவைகளுக்கும், சுனாமியால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கும் வேலை வாய்ப்பை உருவாக்கி கொடுத்துருக்கோம். ரெடியாகற ஆடைகளை மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு சப்ளை செய்வோம். அவுங்க அதை அந்தந்த உள்ளூரில் வித்து லாபம் பார்த்துக்குவாங்க'' என்ற பரமேஸ்வரி...

கைகொடுத்தார்... கரையேறுகிறார்கள்....

''இத்தனை பெரிய முயற்சிக்காக என் கணவர் நகுலனுக்கு நன்றி சொல்லணும். நடுராத்திரியில இதுக்காக நான் கிளம்பறப்ப... என்கூடவே அவரும் அலைவார். அவர் கொடுத்த சுதந்திரம், தன்னம்பிக்கை, புரிதல் இது இல்லைன்னா நான் வெளி உலகத்துக்கு தெரிஞ்சிருக்கவே மாட்டேன். அடுத்தது... மீனவ இனத்தைச் சேர்ந்த சுசீலா! நான் வேறு இனத்தைச் சேர்ந்த பெண்ங்கறதால... மீனவப் பெண்கள சந்திக்கிறப்ப எல்லாம் அவங்களோட பேச, புரிஞ்சுக்க, உதவனு எனக்கு வலதுகரமா இருந்தது சுசீலாதான். இப்ப அவங்கதான் 'சிகர'த்தோட செயலாளர்'' என்று பெருமையோடு கை சுட்டினார்.

தொடர்ந்த சுசீலா, ''சுனாமியால நிலைகுலைஞ்சு இருந்த எங்களை வந்து பார்த்த பரமேஸ்வரி, எங்களுக்கு நல்லது செய்யப்போறதா சொன்னப்போ முழுசா நம்பிக்கை இல்லைன்னாலும், ஏதாச்சும் விடிஞ்சுடாதானு பல கிராமத்து பெண்களும் அவங்ககூட சேர்ந்தோம். அவங்க சொன்னபடியே... இப்போ நிமிர்ந்து நிக்கறோம்'' என்றார் பெருமையுடன்.

எதிர்கால மீனவ சமுதாயத்தையும் நேர்படுத்திஇருக்கிறார் பரமேஸ்வரி. ''பள்ளி விடுமுறை நாட்கள்ல அப்பாக்கள்கூட கடலுக்குப் போறது, படிப்பையே நிப்பாட்டிட்டு கடலுக்குப் போறதுனு மீனவக் குழந்தைகள் பெரும்பாலானவங்களும் கடல் உப்புலயே வாழ்க்கையை கரைக்க ஆரம்பிச்சுடுவாங்க. இதை மாத்த, எங்க குழுவில் உள்ள பெண்களோட குழந்தைகளை வேலைக்கு அனுப்பக்கூடாது, பள்ளிக்கு அனுப்பணும்கறதை கட்டாயமாவே கடைப்பிடிக்கிறோம். இப்போ இந்தப் பகுதிகள்ல பள்ளிக்கு வர்ற குழந்தைகளோட சதவிகிதம் அதிகரிச்சுருக்குனு ஆசிரியர்களே பாராட்டுறாங்க!''

- சந்தோஷம் கண்களில் தெறிக்கும் பரமேஸ்வரி, 'சேவாரத்தினம்,’ 'கோல்ட் ஸ்டார் மில்லினியம்’, 'உழைப்பால் உயர்ந்தவர்’ என தன் சேவைகளுக்காக பெற்றுள்ள விருதுகளின் பட்டியல், நீளம்.

படங்கள்: ரா.ராம்குமார்