Published:Updated:

அந்நிய மண்ணில் நடந்த சோகம்... அயராமல் பர்வீன் எடுத்த வேகம் !

அந்நிய மண்ணில் நடந்த சோகம்... அயராமல் பர்வீன் எடுத்த வேகம் !

ம.மோகன்

 ''விதி எனக்குக் கொடுத்த தண்டனை பெரிசு. ஆனா, அதையே நினைச்சு முடங்காம... வாழ்க்கையைப் பழிக்காம... என் பிள்ளைக்காக மீண்டு வந்தேன். இப்போ வெற்றிகரமான சுயதொழில் பெண்மணியா உங்க முன்ன உசந்து நிக்கறேன்!''

- இளம்வயதிலேயே கணவரையும், அதன் சங்கிலித் துன்பமாக வளமான வாழ்க்கையையும் இழந்து துயரங்களுக்கு அறிமுகமான பர்வீன் சிக்கந்தர், தனக்குள் இருந்த கலை ஆர்வத்தை தொழில் ஆர்வமாக்கி, சோதனைகளைக் கடந்து இன்று சாதனை கண்டிருக்கிறார்... 'தாமினி ஆர்டிசன்ஸ்’ என்ற பெயரில் தான் நடத்திவரும் பரிசுப் பொருட்கள் மற்றும் ஃபேஷன் நகைகள் வடிவமைப்பகம் மூலமாக!

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
அந்நிய மண்ணில் நடந்த சோகம்... அயராமல் பர்வீன் எடுத்த வேகம் !
##~##

''சொந்த ஊர் மதுரை. வளர்ந்ததெல்லாம் சென்னை. என் கணவர் சிக்கந்தர், ஃபர்னிச்சர் வியாபாரத்துல இருந்தார். இரவு, பகல் பாராம கடிகாரத்தோட போட்டி போட்டு உழைக்கற கடின உழைப்பாளி. ரொம்ப அன்பானவர். தொழில் சம்பந்தமா பல நாடுகளுக்கும் போய் வருவார். ஒரு கட்டத்துல மலேசியாவுல அவரோட தொழிலுக்கு நல்ல வருமானம் கிடைக்க... அவர், நான், எங்க பையன் சல்மான்னு குடும்பத்தோட அங்கயே செட்டில் ஆயிட்டோம். சந்தோஷமா வாழ்ந்தோம்.

அன்னிக்கு வழக்கம்போல வேலை சம்பந்தமா கிளம்பினவருக்கு திடீர்னு ஹார்ட் அட்டாக். பதறித் துடிச்சு அவரை பக்கத்துல இருந்த ஆஸ்பிட்டலுக்கு கூட்டிட்டுப் போனேன். அதுக்குள்ள அவர் எங்களை விட்டுட்டுப் போயிட்டார்...''

- ஈரத்தில் நனைந்த பர்வீன் விழிகளில் சலனமில்லை. ஆசுவாசப்படுத்திக் கொண்டார்.

''ஒரு அந்நிய நாட்டுல வாழ்க்கையைத் தொலைச்சு நின்ன நேரத்துலதான்... அவரோட நண்பர்கள், உறவினர்கள், பிஸினஸ் பார்ட்னர் கள்னு சிலரோட நிஜ முகங்கள் கொஞ்சம் கொஞ்சமா எனக்குத் தெரிஞ்சுது. அவர்கிட்ட லட்சங்களில் பணம் வாங்கியிருந்த ஒருத்தர், 'அவர் இறப்பதற்கு சில நாட்களுக்கு முன்னால தானே திரும்பக் கொடுத்தேன்’னு சொல்லிட்டார். நெருக்கமான நண்பர் ஒருத்தர், என் கணவரோட பேங்க் அக்கவுன்ட்ல இருந்து அஞ்சு லட்ச ரூபாயை கள்ளத்தனமா எடுத்துட்டார். பழகிய தோழி ஒருத்தவங்களே 'இனி எங்க வீட்டுக்கு போன் செய்ய வேண்டாம்’னு சொல்லிட்டாங்க. உறவினர்கள் என்னை சந்திக்கறதையே தவிர்த்தாங்க. கணவரை இழந்து தவிச்ச வேளையில, இதெல்லாம் என்னை ரொம்பவே வதைச்சுது...''

- இந்த துரோகங்களும், புறக்கணிப்புகளும் தந்த பாடம் ஒரு தனி மனித சாதனைக்கு வேர்விடத் தூண்டாதா, என்ன?

''எந்தப் பொருளாதார பிடிமானமும் இல்லாம என் பையனோட சென்னைக்கு திரும்பினேன். அப்பா, அம்மா, மாமனார் வீடுனு எல்லாரும் என்னை அரவணைக்க தயாரா இருந்தாலும், 'நம்ம வாழ்க்கையை நாமதான் பார்த்துக்கணும்’னு முடிவெடுத்தேன்.

அந்நிய மண்ணில் நடந்த சோகம்... அயராமல் பர்வீன் எடுத்த வேகம் !

சின்ன வயசுல இருந்தே ஆர்ட் மற்றும் கிராப்ஃட் வேலைகள்ல எனக்கு ஆர்வம் அதிகம். லெதர் பேக், ஃபேஷன் ஜுவல்ஸ், கிரீட்டிங் கார்ட், கிஃப்ட் பொருட்கள்னு செய்யத் தெரியும். 'இதையே தொழிலாக்க முடியுமா?’னு மனசுக் குள்ள ஒரு யோசனை ஓடிட்டே இருக்க, அந்த நேரத்துல 'எகனாமிக் டைம்ஸ்’ல இருந்து 'பவர் ஆஃப் ஐடியாஸ்’னு ஒரு தொழில் முனைவோருக் கான போட்டி வெச்சாங்க. ஒரு சுய பரிசோதனையா அதுல கலந்துக்கிட்டேன். இறுதியா வங்கிக் கடனுக்காக தேர்ந்தெடுக்கப்பட்ட எழுபத்தஞ்சு பேர்ல ஒருத்தியா நானும் தேர்வானேன். ரொம்ப நம்பிக்கையோட அந்த இருபத்தஞ்சு லட்சம் லோன் தொகையை வாங்கி, 'ஆர்டிசன்ஸ்’ தொழிலைத் தொடங்கினேன். ஆரம்பிச்ச இந்த ரெண்டு வருஷத்துலயே வாங்கின கடன்ல பாதி தொகையை அடைக்கற அளவுக்கு வளர்ந்திருக்கேன்''

- ஆரம்பத்தில் தொழிலில் நிலைக்க பர்வீன் பின்பற்றிய சூட்சமம், தெளிவு...

''விற்பனைக்காக ஒரு இடத்தைப் பிடிச்சு, அதுக்கு அட்வான்ஸ், வாடகை, அதை கடையாக்க இன்டீரியர் வேலைகள், மின்சாரம், பணியாட்கள்னு அகலக்கால் வைக்கல. அவ்வளவு தொகையையும் அதுல முடக்கறதுக்குப் பதிலா... பெரிய ஸ்டோர்களை அணுகி, நான் தயாரிக்கற பொருட்களை அங்க விற்பனைக்கு வைக்க அனுமதி கேட்டேன். அவங்களுக்கும் லாபம், நமக்கும் லாபங்கறதால இது சூப்பரா வொர்க் அவுட் ஆச்சு. நல்ல பெயரை எப்பவும் தக்க வெச்சுக்க என்னோட தயாரிப்பு பொருட்கள்ல தரத்தையும் தனித்துவத்தையும் எப்பவும் விட்டுக் கொடுத்ததே இல்ல.

தொடக்கத்துல ரெண்டு, மூணு ஸ்டோர்கள்ல ஆரம்பிச்ச எங்களோட விற்பனை... இன்னிக்கு இருபது ஸ்டோர்களுக்கு விரிஞ்சிருக்கு. 'தாமினி ஆர்டிசன்ஸ்’ பொருட்களை பொதுமக்கள்ல இருந்து பெரிய நிறுவனங்கள் வரை கேட்டு வாங்கறதால, ஆர்டர்கள் தடையில்லாம குவிஞ்சுட்டே இருக்கு. இப்போதைய இளம் தலைமுறைக்குப் பிடிச்சமான பொருட்களை அப்டேட் பண்ணி தயாரிக்கறதும் எங்க வெற்றிக் கான முக்கிய காரணம். தேவையான முதலீடு கையில வந்துட்ட தெம்புல இப்போ சின்னதா 'ஷாப்’ ஒண்ணும் ஆரம்பிச்சிருக்கேன். என் கண வரைப் போல என் நாட்களும் இப்போ கடிகார முள்கூட போட்டி போட்டு ஓடிட்டு இருக்கு!''

- வார்த்தைகளில் வழிந்தது வெற்றியின் மகிழ்ச்சி.

''இருபத்தி எட்டு வயசுல கணவரை இழந்த நான், அந்த சோகத்துலயே மூழ்கியிருந்தா என் வாழ்க்கை மட்டுமில்ல... என் பையனோட எதிர்காலமும் கேள்விக் குறியாகி இருக்கும். நான் துணிச்சலோட எதிர்கொண்டதால... இப்ப அவன் ப்ளஸ் ஒன் படிக்கிறான்.அவனை குறையில்லாம வளர்த்து, அவன் விரும்பின கல்வியை அவனுக்கு கிடைக்கச் செய்யற அளவுக்கு ஒரு நல்ல அம்மாவா நான் நிக்கறேன். 'இதுவும் கடந்து போகும்’ங்கற உண்மைதான் எப்பவும் நம்மகூட வரும்!''

- கணவரின் புகைப்படம் பார்த்து முடித்தார் பர்வீன்!

படங்கள்: சொ.பாலசுப்ரமணியன்