Published:Updated:

இது உணவகம் அல்ல... உறவினர் வீடு !

இது உணவகம் அல்ல... உறவினர் வீடு !

ம.மோகன்

 பரபரவென இருக்கும் சென்னை - ராயப்பேட்டை பிரதான சாலை. குடுகுடுவென ஒரு குட்டிப் பாப்பா ஓடி வந்து... 'ஆன்ட்டி... அம்மா, ரெண்டு இட்லியும் கொஞ்சம் பொடியும் வெச்சு லஞ்ச் பாக்ஸை நல்லா மூடி எடுத்துக்கிட்டு ஸ்கூலுக்குப் போகச் சொன்னாங்க!’ என்கிறது.

இது உணவகம் அல்ல... உறவினர் வீடு !

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
##~##

அன்பாக அந்த சுட்டியை ஒருவர் அணைக்க, இன்னொருவர் ஸ்கூல் பேக்கில் இருக்கும்    லஞ்ச் பாக்ஸில் இட்லியை வைக்க, மற்றொருவர் வாட்டர் பாட்டிலில் சுடுதண்ணீர் நிரப்ப, அவளுடைய பள்ளி வாகனத்தை ஒருவர் நிறுத்தி ஏற்றிவிட என... கிட்டத்தட்ட நான்கு பெண்கள் அந்தக் குழந்தையை வழியனுப்புகிறார்கள்.

'அது மழலையர் காப்பகம் அல்லது ஏதோ பெண்கள் விடுதி...’ என்று சிலர் யூகிக்கலாம். இல்லை. அது... 'வி.ஐ.பி. ரெஸ்டாரன்ட்’ என்ற பெயரில் இயங்கி வரும் உணவகம்! காய்கறி நறுக்குவதில் இருந்து, சமைப்பது, உணவு பரிமாறுவது, கேஷியர் என்று... பணிபுரியும் 12 பேரும் பெண்கள்.

''அதனாலதான் எங்க ஹோட்டலுக்கு வந்து சாப்பிடறவங்களுக்கு ஏதோ உறவினர் வீட்டுல சாப்பிடற உணர்வும் திருப்தியும் ஏற்படுது!'' என்று பெருமையுடன் சொல்கிறார் அந்த உணவகத்தை பத்து ஆண்டுகளுக்கும் மேலாக நடத்தி வரும் ஐம்பத்து நான்கு வயதான உஷா ராஜகோபாலன்.

''செய்யாறுதான் என்னோட சொந்த ஊர். அப்பா, ஹைதராபாத்ல ஹோட்டல் வெச்சுருந்தார். நாலு சகோதரர்கள், ரெண்டு சகோதரிகளோட பிறந்தாலும், சின்ன வயசுல இருந்தே யாரையும் சார்ந்திருக்காம சுயமா வாழணுங்கற எண்ணம் எனக்கு. அதனாலோ... என்னவோ... திருமணத்தைப் பத்தி யோசிக்காமலேயே இருந்துட்டேன். உடன் பிறந்தவங்க எல்லாரும் கல்யாணம், குடும்பம்னு செட்டில் ஆயிட... நானும் எண்பது வயதாகும் என் அம்மாவும் மட்டும் ஒருத்தருக்கு ஒருத்தர் துணையா இருக்கோம்'' என்ற உஷா, தான் உணவகம் தொடங்க நேர்ந்த சூழலைப் பேசினார்.

''கல்லூரி படிப்பெல்லாம் ஹைதராபாத்லதான். படிச்சிட்டு இருக்கும்போதே மார்க்கெட்டிங் ஜாப்ல சேர்ந்தேன். பாம்பே, டெல்லி, கல்கத்தானு கால்ல சக்கரம் கட்டிட்டு ஓடினேன். 90-கள்ல சென்னைக்கு வந்தோம். அப்பா இறந்த பிறகு, அவர் விட்டுப்போன உணவகத் தொழில் நின்னுடக் கூடாதுனு எனக்கும் அம்மாவுக்கும் தோணுச்சு. ஒரு ரெஸ்டாரன்ட் ஆரம்பிக்கலாம்னு தீர்மானிச்சேன். ஆனா, ஏதாவது ஒரு சிறப்பம்சம் நம்ம ஹோட்டலுக்கு இருக்கணுங்கறதுல உறுதியா இருந்தேன். வீட்டுல சமைக்கற அதே சுவை, சுகாதாரத்தோட முழுக்க முழுக்க பெண்களை வைத்தே உணவகம் நடத்துணும்னு முடிவெடுத்தேன். கணவனால கைவிடப்பட்டு, விதியால அநாதரவா நின்னுனு வாழ்க்கையில பல கஷ்டங்களைக் கடந்து பொருளாதார சப்போர்ட்டுக்காக காத்திருந்த பெண்களா தேடிப்பிடிச்சு வேலைக்கு சேர்த்தேன்'' என்பவர், அதையே தன் உணவகத்தின் பலமாக நம்புகிறார் எப்போதும்.

''சாப்பிட வர்றவங்கள கஸ்டமர்களா மட்டும் எங்க பெண்கள் நினைக்கறதில்ல. வீட்டுக்கு வர்ற விருந்தாளி மாதிரிதான் கவனிப்பாங்க. தண்ணீர் கேட்டு வர்றவங்களுக்கும்... ஸ்பெஷல் மீல்ஸ் கேட்டு வர்றவங்களுக்கும் ஒரேவிதமான அணுகுமுறைதான் அவங்ககிட்ட இருக்கும். அந்த மரியாதையும், அன்பும், ருசியும்தான் அவங்கள மறுபடி மறுபடி எங்க ஹோட்டலை தேடி வர வைக்குது.

இது உணவகம் அல்ல... உறவினர் வீடு !

பண்டிகை நாட்கள்லகூட எங்க ரெகுலர் கஸ்டர்மர்களுக்காக நாங்க ஸ்பெஷலா சமைப்போம். இதுக்கெல்லாம் இந்தப் பெண்களோட தளராத உழைப்புதான் காரணம்!'' என்றவருக்கு... ஆரம்பத்தில் சிறப்பாக போய்க் கொண்டிருந்த உணவகம், ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு ஒரு தேக்கத்தை சந்தித்திருக்கிறது... ஃபாஸ்ட்ஃபுட், பேக்கரி அயிட்டம்ஸ் என்று புது புது உணவு ரகங்கள் மார்கெட்டுக்கு வந்த சமயத்தில்.

''பலர், 'இனிமே ஹோட்டல் எல்லாம் டல்லாயிடும்... மூடிடுங்க’னு சொன்னாங்க. நாங்க துளியும் பின் வாங்காம உழைச்சோம். ஏழு மணி ஆர்டரை ஆறரைக்கே கொடுக்கறது, லஞ்ச்சுக்கு எக்ஸ்ட்ரா ரெண்டு வெரைட்டீஸ் சமைக்கறதுனு முன்னவிட அதிகமா ஆர்வம் காட்டினோம். அது எங்களுக்கு இன்னும் நல்ல பெயர் வாங்கிக் கொடுத்துச்சு. இன்னொரு பக்கம், 'அதெல்லாம் நாக்குக்கு... இதுதான் வயித்துக்கு!’னு உணர்ந்து ஃபாஸ்ட்ஃபுட் அயிட்டங்கள் பக்கம் போன மக்கள், மறுபடியும் எங்க ஹோட்டலைத் தேடி வர ஆரம்பிச்சாங்க. இதோ... பத்து வருஷத்துக்கும் மேல ஏதோ உறவினர் வீட்டு விசேஷ பந்தி சாப்பாடு போல திருப்தியோட சாப்பிட்டு போயிட்டிருக்காங்க எங்க கஸ்டர்மர்ஸ். அவங்கள்ல நூறு பேர்ல ஒருத்தருக்கு திருப்தியில்லைனாலும், ஆயிரம் பேரை இழந்ததாவே நாங்க நினைக்கறோம். அந்த அர்ப்பணிப்பு எங்கள இன்னும் நெடுந்தொலைவுக்கு கைபிடிச்சி கூட்டிட்டு போய்க்கிட்டே இருக்கும்!'' என்ற உஷாவைத் தொடர்ந்தார், அந்த ரெஸ்டாரன்ட்டில் மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றி வரும் மல்லிகா...

''கணவரோட சித்ரவதையும், கொடுமையும் தாங்காம தற்கொலை முடிவுக்கு வந்த நேரத்துல அடைக்கலமா நுழைஞ்ச இடம்தான் இந்த உணவகம். ஆனா, இது வேலை பார்க்கற இடம் மாதிரி இல்லாம... எங்க வீடு மாதிரியே இருக்கறதால எந்தக் கவலையும் இல்லாம இருக்க முடியுது. கணவரை விட்டு தனியா வாழறேன்ங்கிற வருத்தம் ஒருநாளும் எட்டிப் பார்த்ததில்ல. இங்க வந்த பிறகுதான் என்னோட ஒரு பொண்ணுக்கு கல்யாணம் பண்ணி வெச்சேன். இன்னொரு பொண்ணு ஸ்கூல் போய்க்கிட்டிருக்கா'' என்று மலர்ந்த முகம் மாறாமல் சொல்ல, விடைபெற்றோம் அந்த ரெஸ்டாரன்ட்டிலிருந்து... மன்னிக்கவும்... வீட்டிலிருந்து!

படங்கள்: வி.செந்தில்குமார்