Published:Updated:

அருள் தரும் அம்மன் உலா!

கரூர் தாயே !

கரு.முத்து

அருள் தரும் அம்மன் உலா!

புராணத்தொடர்புகள் இல்லை... ஆனால், புண்ணியத் தொடர்புகள் நிறைந்திருக்கின்றன!

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

ஆயிரம் வருடப் பழமை இல்லை... ஆனால், சந்நிதியில் ஆத்தாளின் அதிர்வை உணர்கிறார்கள் பக்தர்கள்!

அப்பர், சுந்தரர், சம்பந்தர் மற்றும் மாணிக்கவாசகர் என்று நால்வர் வந்து இங்கு பாடவில்லை... ஆனால், சிதம்பரம் ஜெயராமன், சீர்காழி கோவிந்தராஜன், வீரமணி, வீரமணிதாசன், டாக்டர் சிவசிதம்பரம் என்று அத்தனை கணீர் குரல்களும் அன்னையைப் போற்றி ஒலிக்கின்றன!

##~##

பழம்பெரும் நடிகை கே.பி.சுந்தராம்பாள்... தன் இறுதிக் காலம் வரையிலும் தொடர்ந்து வந்து திருவிழாவில் அக்னிச் சட்டி எடுத்திருக்கிறார்!

இத்தனை ஆராதனைகளையும் ஏற்றபடி கரூர் நகரின் மையத்தில் கோயில்கொண்டு அருள்கிறாள்... கரூர் மாரியம்மன்! அன்னையைத் தரிசிக்க பெரிதான கட்டுப்பாடுகள் இல்லை என்பதால்... ஆயிரமாயிரம் பேர் அனுதினமும் நாடி வந்து கொண்டேயிருக்கிறார்கள். கிழக்குப் பார்த்து அமர்ந்திருக்கும் அன்னையின் தீட்சண்ய பார்வையில் தங்களை மறக்கிறார்கள் பக்தர்கள்.

காலை 6 - 11 மணி வரை அபிஷேகத்துக்காக பக்தர்கள் கொண்டு வந்து ஊற்றும் பால் 400 லிட்டர் அளவுக்குச் சேர்ந்துவிடுகிறது. வெள்ளிக் கிழமை என்றால்... 700 லிட்டரை தாண்டுகிறது. அத்தனை பாலையும் 12 மணியளவில் அபிஷேகம் செய்கிறார்கள். அதன் பிறகும் பாலுடன் வரும் பக்தர்களின் பேராவலைப் பூர்த்தி செய்ய... இன்னொரு முறையும் அபிஷேகம் நடக்கிறது. மதியத்துக்கு மேல் சர்வ அலங்கார தேவதையாக காட்சி தருகிறாள் அன்னை.

பெங்களூருவில் இருந்து அம்பாளை தரிசிக்க வந்திருந் தார்கள் பூர்ணிமா - சண்முகமூர்த்தி தம்பதி. ''இவருக்கு சொந்த ஊர் இதுதான். திருமணமாகி முதன்முதலா இங்க கூட்டிட்டு வந்தப்போவே, இந்த ஆத்தாகிட்ட முழுசா சரணடைஞ்சுட்டேன். ஆரம்பத்துல வேலை காரணமா இவர் பெங்களூருலயும், நான் இங்கயுமா பிரிஞ்சிருக்க, 'அவரோட சேர்ந்து இருக்க அருள்புரி தாயே'னு வேண்டி தினமும் இவ வாசலுக்கு வருவேன். அம்மா அருளால எனக்கும் பெங்களூருவுல வேலை கிடைச்சுது. இப்ப எல்லோரும் சந்தோஷமா பெங்களூருல இருக்கோம். அதுக்காகத்தான் நன்றி சொல்ல தேடி வந்தோம். தன்னை நம்புனவங்கள சந்தோஷமா வெச்சுக்கிறதுல இவளை மிஞ்சுன ஒரு சக்தி இல்லீங்க!'' என்று நெக்குருகிறார் பூர்ணிமா.

அருள் தரும் அம்மன் உலா!

அன்னையின் ஆலயம் தற்போது அமைந்திருப்பது அமராவதி ஆற்றின் இக்கரையில். ஆனால், இதற்கு முன்பு, அவள் குடிகொண்டிருந்தது... அக்கரையில் இருக்கும் தான்தோன்றி கிராமத்தில்தான். நூறாண்டுகளுக்கு முன்பு வரை கரூர் மக்கள் அங்கு சென்றுதான் அன்னையை வழிபட்டு வந்திருக்கிறார்கள். மழைக் காலங்களில் அமராவதியில் வெள்ளப்பெருக்கு ஏற்படும்போது, மட்டும் அந்த தரிசனத்துக்கு வழியில்லாமல் போய்விடும்.

அம்மனின் தீவிர உபாசகரான முத்துக்கருப்பப் பிள்ளை... மழை, வெள்ளம் என்று எதுவானாலும் பரிசலிலோ அல்லது நீந்தியாவது போய் அம்மனை தரிசித்துவிடுவாராம். ஒருசமயம் வெள்ளக் காலத்தின்போது உடல்நலம் வெகுவாக பாதிக்கப்பட்டிருக்க, அவரால் அம்மனைத் தரிசிக்கச் செல்ல முடியவில்லை. மனம் கலங்கி வேதனையில் வெந்து கொண்டிருந்த பிள்ளையின் கனவில் தோன்றினாள் அன்னை. 'ஆற்றைத் தாண்டி வரமுடியாததற்காக வருந்தாதே. நானே ஆற்றைத் தாண்டி வருகிறேன். நான் இருக்கும் இடத்தில் பிடி மண் எடுத்து வந்து இங்கே நீ விரும்பும் இடத்தில் கோயில் கட்டு. அங்கும் வந்து இருந்து மக்களை காப்பாற்றுகிறேன்!’ என்று உத்தரவு கொடுத்தாள்.

அடித்துத் துடித்து எழுந்தவர் ஊர் மக்களையும் உறவுகளையும் கூட்டிப் போய் பிடிமண் எடுத்துவந்து கட்டியதுதான் தற்போதைய கரூர் மாரியம்மன் கோயில். பழைய மாரியம்மன் கோயில், தான்தோன்றி கிராமத்தில் இப்போதும் இருக்கிறது. முத்துகருப்பப் பிள்ளையின் வாரிசுகள்தான் வழிவழியாக கோயிலை நிர்வகித்து வருகிறார்கள். தற்போதைய நிர்வாகியாக முத்துக்குமார் இருக்கிறார்.

அருள் தரும் அம்மன் உலா!

திருச்சியைத் தாண்டிவிட்டால்... எந்தக் கோயிலிலும் கொடி மரங்கள் இருக்காது. கம்பத்தை மட்டுமே முன்னிறுத்தி விழாக்களை நடத்துகிறார்கள். மாரியம்மன் கோயிலைப் பொறுத்தவரை ஆற்றிலிருந்து கம்பம் எடுத்து வருவதில் ஆரம்பிக்கிறது திருவிழா. 18 நாட்கள் தொடர்ந்து நடக்கும் திருவிழா... கம்பம் ஆற்றில் விடப்படும் நாளில் முடிவடையும். அந்த நாட்களில் கரூரே விழாக்கோலம் பூண்டிருக்கும். கம்பத்துக்கு மஞ்சள் நீர் அபிஷேகம் செய்ய கையில் குடங்களுடன் தினம்தோறும் ஒரு கிலோ மீட்டர் தூரத்துக்கும் அதிகமாக வரிசையில் நிற்பார்கள் பெண்கள். தான் மழைநாயகி என்பதை நிரூபிக்கும் வண்ணம், திருவிழா நடைபெறும் வைகாசி கோடை வெயிலில் ஏதாவது ஒரு நாள் மழையை பொழிவித்து ஊரைக் குளிர்ச்சியடைய வைத்துவிடுவாள் அன்னை.

அருள் தரும் அம்மன் உலா!

''கருவறை மின் விளக்குகள் தனக்கு இடைஞ்சலாக இருப்பதாக பூசாரி ஒருவரின் கனவில் வந்து அன்னை சொல்ல, அதை அகற்றி இப்போது நெய்தீப வெளிச்சத்தில் மட்டுமே அம்மன் காட்சி தருகிறாள். தங்கள் பிரார்த்தனைகள் பலித்த பக்தர்கள் உறுப்புகளின் மாதிரிகளை வாங்கி வைப்பது, மாவிளக்கு போடுவது, பால் குடம் எடுப்பது, கரும்புத் தொட்டில் கட்டுவது என்று நேர்த்திக்கடன் செலுத்துகிறார்கள். தன் பக்தப் பிள்ளைகளின் இன்னல்கள் எல்லாம் தீர்த்துத் தாயாகத் தாங்குகிறாள் அன்னை!'' என்று கண்கள் மூடி தியானித்துத் சொல்கிறார், 90 வயதிலும் சளைக்காமல் அம்மனுக்கு தொண்டூழியம் புரிந்துவரும் பூசாரி தாண்டவ பண்டாரம்!

எப்படி செல்வது?

 கரூர் நகரின் மையத்தில் இருக்கிறது கோயில். பேருந்து நிலையத்திலிருந்து ஒரு கிலோமீட்டர், புகைவண்டி நிலை யத்திலிருந்து அரை கிலோமீட்டர் தூரம். மினி பேருந்து, ஆட்டோ கிடைக்கும். கோயில் திறந்திருக்கும் நேரம் காலை 6 முதல் இரவு 8.30 மணி வரை. மதியம் நடைசாத்தும் வழக்கம் இல்லை. கோயில் தொலைபேசி எண்: 04324-264146

 - சக்தி வருவாள்...
படங்கள்: கே.குணசீலன்