Published:Updated:

கரையும் பெண்ணடிமை... உயரும் பெண்ணுரிமை !

கரையும் பெண்ணடிமை... உயரும் பெண்ணுரிமை !

நாச்சியாள்
ஓவியம்: ஏ.வாசுதேவ்

கரையும் பெண்ணடிமை... உயரும் பெண்ணுரிமை !

'குடும்பம்னா ஆயிரம் இருக்கும், அதை எல்லாம் வெளியில சொல்லலாமா?’, 'புருஷன்னா அடிக்கத்தான் செய்வான். இதுல என்ன இருக்கு?’ என்கிற 'பெண் அடிமை’ எண்ணங்கள் கொஞ்சம் கொஞ்சமாகக் கரைந்து... 'நீ என்னை அடிச்சா, நான் பொறுத்துக்கிட்டு இருக்கணும்னு அவசியம் இல்ல. போலீஸ் ஸ்டேஷன்கூடப் போவேன்’ என்கிற 'பெண் உரிமை’ சிந்தனை மாற்றம் நடந்து கொண்டு இருக்கிறது என்பதை மறுப்பதற்கில்லை.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

ஆனால், தினம் தினம் வருகின்ற செய்திகள், இன்றும் ஒரு குடும்பத்துக்குள் பெண்ணை வார்த்தைகளாலும் செய்கைகளாலும் துன்புறுத்துகிற ஆதிக்கப் போக்கு குறையவில்லை என்பதைத்தான் நிரூபிக்கின்றன.

##~##

''குடும்பத்துக்குள் பெண்ணுக்கு நடக்கிற வன்முறை என்பது, வெறும் உடல்ரீதியாக அடித்துத் துன்புறுத்துவது மட்டுமல்ல. அவளுடைய தேவைகளை நிறைவேற்றாமல் இருப்பதும், வன்முறைதான்'' என்று குடும்ப வன்முறையின் எல்லா பக்கங்களை யும் முன் வைக்கிறார் சமூக ஆர்வலர் ஷீலு.

''ஒரு கணவன், தன் மனைவியை அடிப்பது, அறைவது, தலைமுடியைப் பிடித்து முறுக்குவது, உதைப்பது போன்ற உடல்ரீதியான துன்பங்களை மட்டும்தான் வன்முறை என்று நெடுங்காலமாக சொல்லிக் கொண்டும் நம்பிக் கொண்டும் இருக்கிறோம். ஆனால், ஒரு மனைவியாக, அம்மாவாக, சகோதரியாக ஒரு பெண்ணின் மேல் தொடுக்கப்படும் வன்முறைகள் பல ரூபங்களில் உள்ளன. ஒரு பெண்ணுக்கு குடும்பம் நடத்தத் தேவையான பொருளாதாரத்தை தர மறுப்பது, அவளுடைய மருத்துவச் செலவுகளை கவனிக்க மறுப்பது போன்ற பொருளாதார துன்புறுத்தலும், அவளுடைய விருப்பத்துக்கு எதிராக தாம்பத்யத்துக்கு கட்டாயப்படுத்துவதும், மனதை ரணப்படுத்தும் வார்த்தைகளால் துன்புறுத்துவதும் வன்முறைகள்தான் என்கிறது, 'குடும்ப வன்முறை தடுப்பு சட் டம் - 2005’!'' என்று தெளிவுபடுத்தியவர்,

'' 'அடப்போங்க, எங்க வீட்டுல மீனாட்சி ஆட்சிதான்!’ என்று சொல்கிற குடும்பங்களில்கூட, அக்குடும்பப் பெண்கள் இந்த மாதிரியான வன்முறைகளில் ஏதேனும் ஒன்றை அனுபவித்துக் கொண்டு இருப்பார்கள் என்பதுதான் நிதர்சனம். அதேபோல், படித்த பெண்கள் குடும்ப வன்முறைக்கு ஆளாவது இல்லை என்று ஒரு மாயை இருக்கிறது. இதற்காகவே நடத்தப்பட்ட ஒரு ஆய்வில், கல்லூரிப் படிப்பை முடித்த குடும்பத் தலைவிகளில் இம்மாதிரியான வன்முறைக்கு உள்ளானவர்கள், 15 சதவிகிதத்துக்கும் மேல் என்று தெரிய வந்துள்ளது. மனைவியைவிட கணவன் அதிகம் படித்திருந்தாலும் அங்கு வன்முறை அதிகமாக இருக்கிறது. ஆனால், இருவரும் ஒரே அளவு படித்திருந்தால் அந்தக் குடும்பத்தில் வன்முறை மிகவும் குறைந்து இருக்கிறது என்று சொல்கிறது அந்த ஆய்வு. இது அதிகம் படித்த மாப்பிள்ளை, குறைவாகப் படித்த பெண் எனும் நம் திருமணப் பொருத்தங்களின் வரைமுறைகளை மறுபரிசீலனை செய்யச் சொல்கிறது'' என்று மாற்றுச் சிந்தனையின் திசை காட்டினார் ஷீலு.

கரையும் பெண்ணடிமை... உயரும் பெண்ணுரிமை !

தொடர்ந்து பேசியவர், ''நம் கலாசாரத்தில் மிகப் பெரிய கொடுமை என்னவென்றால், அப்பாவிடம் ஒரு மடங்கு அடி வாங்கி வளரும் பெண் குழந்தை, மனைவியான பின் கணவனிடம் அதைவிட இரு மடங்கு அதிகம் அடி வாங்குகிறாள் என்பதுதான். குடிகார கணவனிடம் சித்ரவதைப்படும் பெண்கள்தான் குடும்ப வன்முறையின் எல்லா வகை வன்முறைகளையும் அனுபவிக்கிறார்கள் என்பது, வேதனையான உண்மை. ஏழை, நடுத்தர வர்க்கம், பணக்கார வர்க்கம் என்கிற பாகுபாடு இல்லாமல் எல்லா வர்க்க பெண்களுக்கும் இதே நிலைதான்.

தமிழ்நாட்டில் பெண்களை உள்ளங்கையில் வைத்துத் தாங்கு கிறார்கள்... குடும்ப வன்முறை எல்லாம் அங்கொன்றும் இங்கொன்றும்தான் நடக்கிறது என்று நினைத்தால், அது மகா தவறு. குடும்ப வன்முறை அதிகம் நிகழும் மாநிலத்தின் வரிசையில் திரிபுரா, மணிப்பூர், உத்திரப்பிரதேசத்துக்கு அடுத்து தமிழ்நாடு இருக்கிறது என்பது வெட்கக்கேடான விஷயம்'' என்ற ஷீலு,

''குடும்ப வன்முறை குறைய வேண்டுமானால்... பெண்கள், 'என் கணவர் என்னை அடிப்பதில், துன்புறுத்துவதில் ஒன்றும் தவறு இல்லை’ என்ற அழுகிப் போன சிந்தனையை மாற்றிக் கொள்ள வேண்டும். 'ஒரு பெண்ணை அடித்துத் துன்புறுத்துவது கேவலமான செயல்’ என்கிற தார்மீகச் சிந்தனையை ஒவ்வொரு ஆணுக்கும் அவனுடைய கல்வியும், சமூகமும், குடும்பமும் கற்றுத் தர வேண்டும்!'' என்று எளிமையான அதேசமயம் வலிமையான வழி சொன்னார்!

கல்லூரி செல்லும் பெண்கள், வேலைக்கு செல்லும் பெண்கள் மற்றும் இல்லத்தரசிகள் சந்திக்கும் பிரச்னைகள் பற்றி முந்தைய இதழ்களில் பார்த்தோம். இவர்களுக்கான பாதுகாப்பு மற்றும் சட்டங்கள் பற்றி அடுத்த இதழில்..!

படம்: வீ.நாகமணி