Published:Updated:

குட்டீஸ் குறும்பு !

குட்டீஸ் குறும்பு !

வாசகிகள் பக்கம்

ஓவியங்கள்: ஹரன்

ஒவ்வொன்றுக்கும் பரிசு:

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
குட்டீஸ் குறும்பு !

150

பெரிய தவளை... சின்ன தவளை!

குட்டீஸ் குறும்பு !

பரபரப்பான அந்தக் காலை நேரத்தில் என் மகன் ப்ரணவ்வை அவசரமாக பள்ளிக்குக் கிளப்பிக் கொண்டிருந்தேன். ஷூ போட்டு விட்டுக் கொண்டிருந்த நான், ''ப்ரணவோட லஞ்ச் பேக், தண்ணீர் பாட்டிலையெல்லாம் எடுத்துட்டு வாங்க...'' என்று அவனுடைய பாட்டியிடம் சொன்னேன். பழங்காலத்து ஆளான என் மாமியார், ''தண்ணீர் எந்தத் தவலையில் இருந்து எடுக்க?'' என்று கிச்சனில் இருந்து கேட்க, ''பெரிய தவலை'' என்று பதில் குரல் கொடுத்தேன். உடனே, ''ஐயோ... எனக்குத் தண்ணியே வேண்டாம்!'' என்று முகத்தைச் சுளித்த என் மகனை, ''ஏண்டா..?'' என்று அந்த நொடி பரபரப்பில் அதட்டினேன். ''தவளைத் தண்ணியைக் குடிச்சா நோய் வராதா..? உவ்வே!'' என்று முகத்தை அஷ்டகோணலாக்க, விஷயம் புரிந்து சிரித்துக் கொண்டிருந்தபோது கிச்சனில் இருந்து வந்த மாமியார். ''பெரிய தவலையைக் காணோம். சின்னத் தவலைதான் இருக்கு!'' என்றார். டென்ஷனான வாண்டு, ''தவளைத் தண்ணியே வேண்டாம்னு சொல்றேன். அதென்ன சின்னத் தவளை, பெரிய தவளை..?'' என்று அவரிடமும் அவன் எகிற, இப்போது என் மாமியாருக்கும் விஷயம் புரிந்து, சிரிப்போ சிரிப்புதான்!

- வி.விஜி விஜயசங்கர், கிழக்கு தாம்பரம்

நாய்க்கு எண்ணெய் காப்பு!

குட்டீஸ் குறும்பு !

தோழியைப் பார்க்க அவள் வீட்டுக்குச் சென்றிருந்தேன். அவளுடைய மூன்று வயது மகன் சைக்கிள் ஓட்டிக் கொண்டிருக்க, சைக்கிளில் இருந்து 'கிரீச் கிரீச்’ என்று சத்தம் வந்தது. ''ஆயில் போடலையா..?'' என்று அவனிடம் ஆயில் கேன் கேட்டு வாங்கி, சைக்கிளில் எண்ணெய் விட்டேன். 'கிரீச்’ சத்தம் சரியாகிவிட்டது. இதைக் கவனித்த அந்த வாண்டு, ''ஆன்ட்டி... ஆயில் போட்டா சத்தம் வராதா?'' என்றான் ஆச்சர்யத்துடன். ''ஆமாம்டா கண்ணு!'' எனச் சொல்லிவிட்டு நாங்கள் பேச்சைச் தொடர்ந்தோம். நான் கிளம்பியபோது வாசலுக்குச் சென்ற எங்களுக்கு அதிர்ச்சி! தோழி வீட்டு நாய் தலை, காது, உடம்பெல்லாம் எண்ணெய் காப்பு சார்த்திய கால பைரவர் போல எண்ணெய் வழிய நின்றிருந்தது. பக்கத்தில் ஆயில் கேனுடன் வாண்டு. ''என்னடா இது..?'' என்று தோழி பதறி அவன் கையிலிருந்த கேனைப் பறிக்க, ''நாய் ரொம்ப சத்தம் போட்டது, அதனால எண்ணெய் விட்டேன்!'' என்றான் அவன் கூலாக! நாங்கள் விழுந்து விழுந்து சிரிக்க, கதறிக் கதறிக் குரைத்த நாய்க்கு 'ஷாம்பூ பாத்’ கொடுத்தது தனிக்கதை!

- ஆர்.உஷா, சென்னை-42

சுதந்திர சோகம்!

குட்டீஸ் குறும்பு !

சுதந்திர தினத்தன்று காலை சீருடையில் சந்தோஷமாகப் பள்ளிக்குக் கிளம்பிச் சென்றாள் எல்.கே.ஜி. படிக்கும் என் மகள் நித்யகல்யாணி. வீடு திரும்பியபோது சட்டையில் கொடி, கையில் சாக்லேட் என்று வந்தாலும் முகத்தில் வாட்டம். ''என்னமா..?'' என்று காரணம் கேட்க, ''அம்மா... நேத்து எங்க மிஸ்தானே என்னை 'கொடியேத்த வா’னு கூப்பிட்டாங்க? ஆனா, இன்னிக்கு ஸ்கூல்ல யாரோ ஒரு தாத்தா (ஸ்கூல் மேனேஜர்) வந்து கொடியை ஏத்திட்டாரு. என்னை ஏத்தவிடல!'' என்றாள் சோகமாக.

கண்களில் நீர்வர ரசித்துச் சிரித்துவிட்டு, ''பெரியவங்கதான் கொடி ஏத்தணும். நீயும் பெரியவளா ஆன பிறகு கொடி ஏத்தலாம்!'' என்று சமாதானம் சொன்னேன் என் செல்லக் குட்டிக்கு!

- வே.சரஸ்வதி உமேஷ், இடைகால்