Published:Updated:

ரத்தக் கண்ணீர் !

சிறுமியின் வாழ்க்கையை சிதைத்த ஆபரேஷன்....

கே.கே.மகேஷ்

 ''உங்கள் மகளுக்கு எய்ட்ஸ்!''

ரத்தக் கண்ணீர் !

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

- டாக்டர் சொன்ன இந்த வார்த்தைகளைக் கேட்டு... அதிர்ச்சி, துக்கம், அளவற்ற குழப்பம் என்று நிலைகுலைந்து போயிருக்கிறது செல்லக்கண்ணுவின் குடும்பம்! பதினைந்தே வயதாகும் சங்கீதா (பெயர் மாற்றப்பட்டுள்ளது), தற்போதுதான் 10-ம் வகுப்பு முடித்திருக்கிறாள். எய்ட்ஸ் என்கிற வார்த்தைக்கே முழுமையாக அர்த்தம் தெரியாத பருவத்திலிருக்கும் அவளுக்கு இப்படியரு நிலை என்றால்... யாரால்தான் தாங்கிக் கொள்ள முடியும்?

இந்தக் கொடுமை சூழ்ந்த விதம் பற்றி பெற்   றோர் சொல்வதைக் கேள்விப்படுபவர்கள்    அனைவரும்... 'இப்படியும் கூட நடக்குமா?' என்று நடுங்குகின்றனர்.

சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த சாதாரண கட்டடத் தொழிலாளியான செல்லக்கண்ணுவின் மூன்று குழந்தைகளில், இளையவள்தான் சங்கீதா. என்ன நடந்தது அவளுக்கு?!

'நான் கொத்தனாருங்க. சம்சாரம் வீட்டுலயே இருந்து குடும்பத்தை கவனிச்சிக்கிடுறா. என் ஒருத்தன் சம்பாத்தியத்துலதான் குடும்பம் ஓடுது. ரெண்டு வருஷத்துக்கு முன்ன என் மகளுக்கு திடீர்னு மூக்குல ரத்தம் வர ஆரம்பிச்சுது. 'மதுரைக்குப் போய் காது, மூக்கு, தொண்டை டாக்டர் கிட்ட காட்டுங்க’னு உள்ளூர் டாக்டர் சொன்னாரு. ஒன்றரை வருஷத்துக்கு முன்ன மதுரை, புதூர்ல இருக்கிற கண்ணப்பன் டாக்டர்கிட்ட சங்கீதாவை கூட்டிட்டு போனேன். மூக்குல

##~##

ஆபரேஷன் பண்ணணும்னு சொன்னவர், தன்னோட 'ஓம் சக்தி’ ஆஸ்பத்திரியிலயே சங்கீதாவுக்கு ஆபரேஷன் பண்ணினதோட, ரத்தமும் ஏத்தினார்.

நாலு மாசம் கழிச்சு திடீர்னு அரிப்பு, உடம்பு முழுக்க கொப்பளம், புண்ணுனு வந்துச்சு. மூக்குல இருந்து திரும்பவும் ரத்தம் வர ஆரம்பிச்சுது. மறுபடியும் அதே டாக்டர்கிட்ட போனப்ப... மதுரை, மீனாட்சி மிஷன் மருத்துவமனைக்கு அனுப்பி வெச்சாரு. அங்கதான் 'ஹெச்.ஐ.வி. இருக்கு'னு சொல்லிட் டாங்க!'' என்ற செல்லக்கண்ணு, துக்கத்தில் தொண்டை அடைத்துக் கொள்ள பேச்சு வராமல் விம்முகிறார்.

அப்பா, அம்மா இருவரும் நம்மிடம் பேசிக் கொண்டிருப்பதை எல்லாம் சட்டை செய்யாமல்... வேப்பமரத்தில் வந்தமர்ந்த ஒரு குயிலை, காகக் கூட்டம் துரத்திக் கொண்டிருப்பதை வெள்ளந்தியாக வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த சங்கீதாவிடம் பேச்சுக் கொடுத்தபோது.... தன் பிரச்னையின் வீரியம் தெரியாதவளாக புன்னகையோடு பேசினாள்...

'மதுரை ஜி.ஹெச்-ல... 'உனக்கு எப்படி இது வந்துச்சு... எப்ப வயசுக்கு வந்தே... அப்படினெல்லாம் கேட்டாங்க. எல்லாத்தையும் சொன்னேன். கடைசியா, எப்பவாவது உனக்கு ரத்தம் ஏத்துனாங்களானு கேட்டாங்க. ஆமான்னு சொன்னேன். 'அங்கதான் தப்பு நடந்திருக்கணும். பச்சப்புள்ளையோட வாழ்க்கையைக் கெடுத்தவங்கள சும்மா விடக்கூடாது’னு சொல்லி, இலவச சட்ட உதவி மையத்துக்கு அனுப்பினாங்க. அடிக்கடி ஆஸ்பத்திரிக்கு வர வேண்டி இருக்கறதால சரியா பள்ளிக்கூடம் போக முடியல. கூட படிக்கிற புள்ளைங்க, 'ஏன் லீவு?’னு கேட்டா, காரணம் சொல்ல முடியல. உண்மையைச் சொன்னா என் ஃப்ரெண்ட்ஸ்ல இருந்து எல்லாரும் என்னை ஒதுக்கி வெச்சுடுவாங்கனு எங்கப்பா சொல்றாரு. அப்படியாண்ணே?!'

- கிளிப்பிள்ளை போல் நடந்ததை ஒப்பித்துவிட்டுக் கேட்கும் சிறுமியின் கேள்வியில் நம் கண்களும் கலங்கிவிட்டன.

சிறுமியின் அம்மா-அப்பா இருவருக்கும் ரத்த பரிசோதனை செய்ததில் யாருக்குமே ஹெச்.ஐ.வி. தொற்று இல்லை என்று தெரிந் திருக்கிறது. 'அப்படியென்றால் இந்தச் சிறுமிக்கு எப்படி வந்து ஹெச்.ஐ.வி.?'

ரத்தக் கண்ணீர் !

'ஓம் சக்தி கிளினிக்’ டாக்டர் கண்ணப்பனிடம் கேட்டபோது... 'ஹெச்.ஐ.வி. உள்ளிட்ட எந்த நோய்த் தொற்றும் இல்லை என்று சான்று அளிக்கப்பட்ட ரத்தத்தைத்தான் தனியார் ரத்த வங்கியில் இருந்து பெற்று அந்தச் சிறுமிக்கு ஏற்றினோம். அந்தச் சிறுமிக்கு ஹெச்.ஐ.வி. தொற்று ஏற்பட பல காரணங்கள் இருக்கலாம். ஆனால், சிகிச்சை முடிந்து ஒன்றரை ஆண்டுகள் கழித்து எங்கள் மீது குற்றம் சாட்டுவது, நியாயமல்ல. இங்கே தவறு நடக்கவில்லை என்பதற்கான அனைத்து ஆதாரங்களும் எங்களிடம் இருக்கின்றன' என்று சொன்னார்.

சிறுமி சங்கீதாவுக்காக சட்டப் போராட்டத்தில் ஈடுபட்டிருக்கிறார் இலவச சட்ட உதவி மைய வழக்கறிஞர் முத்துக்குமார். அவர் நம்மிடம், 'அரசு மருத்துவமனை ரத்த வங்கியிலும், கார்ப்பரேட் மருத்துவமனைகளின் ரத்த வங்கிகளிலும் பின்பற்றப்படக் கூடிய அளவுக்கு சில தனியார் ரத்த வங்கிகளில் பாதுகாப்பு வழிமுறைகள் பின்பற்றப்படுவதில்லை. அவர்கள் மட்டுமின்றி அவர்களுக்கு ரத்தம் வழங்குபவர்களும் பணம் ஒன்றே குறிக்கோளாக இருக்கிறார்கள். ரத்தத்தை வாங்கி விற்கிற இந்த வியாபாரத்தில், டோனருக்கு கொடுக்க வேண்டிய பணம் அல்லது பரிசுப் பொருளுக்கே அதிகம் செலவாகிவிடுவதால், ஹெச்.ஐ.வி. உள்ளிட்ட சில முக்கிய பரிசோதனைகளை சில தனியார் ரத்த வங்கிகள் முறையாகச் செய்வதில்லை என்று சொல்லப்படுகிறது.

இதுபற்றி மதுரை போலீஸ் கமிஷனரிடம் மனு கொடுத்த பிறகு, சென்னையில் இருந்து மருந்து கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள், குறிப்பிட்ட ரத்த வங்கியில் சோதனை நடத்திஇருக்கிறார்கள். அந்தச் சோதனையும்கூட நியாயமாக நடந்ததா என்பதே சந்தேகமாக இருக்கிறது. சிறுமிக்கு வழங்கிய ரத்தத்தை தானம் செய்த நபரைக் கண்டுபிடித்து அவருக்கும் ஹெச்.ஐ.வி. பரிசோதனை செய்ய உத்தரவிடாதது ஆச்சர்யமளிக்கிறது. இதுபற்றி மாவட்ட கலெக்டர் விரிவான அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்றும், பாதிக்கப்பட்ட சிறுமியின் நல்வாழ்வுக்கு உரிய ஏற்பாடும், நிவாரணமும் வழங்கக் கோரியும் மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் வழக்குத் தொடர இருக்கிறோம்'' என்று அக்கறையோடு சொன்னார்.

''இப்போ இந்தப் புள்ளைக்கு என்ன பதில்?'' என்று கண்கள் கசியும் சங்கீதாவின் பெற்றோருக்கு யாரிடம் இருக்கிறது ஆறுதல்?

சங்கீதாவின் வாழ்க்கையில் நடந்த இந்த கொடூரம் மருத்துவ பணியாளர்களுக்கு மட்டுமல்ல, அனைவருக்குமே ஓர் எச்சரிக்கைதான்!

ரத்த வங்கி உஷார்!

ரத்தக் கண்ணீர் !

'ரத்தவங்கி விஷயத்தில் எத்தகைய அக்கறை தேவை? என்பது குறித்து மதுரை, அரசு ராஜாஜி மருத்துவமனை ரத்த வங்கியின் மருத்துவ அதிகாரியான பிரபா சாமிராஜ் நம்மிடம் சில விஷயங்களை பகிர்ந்து கொண்டார். 'ரத்ததானம் செய்பவர்களில் எந்தப் பிரதிபலனும் எதிர்பார்க்காமல் தாமாக முன்வந்து தானம் தரும் 'வாலன்டரி பிளட் டோனர்ஸ்’, பணத்துக்காக ரத்த தானம் செய்வதை தொழிலாக வைத்திருக்கும் 'புரொஃபஷனல் பிளட் டோனர்ஸ்’ என்று இருவகையினர் இருக்கிறார்கள். புரொஃபஷனல் பிளட் டோனர்ஸ் பொய்யான தகவல்களைக் கொடுத்து, தரமற்ற ரத்தத்தை தானமாக கொடுக்கவும் வாய்ப்பிருக்கிறது என்பதால், அரசு மருத்துவமனை ரத்த வங்கியில் தன்னார்வ கொடையாளர்களிடம் இருந்து மட்டுமே ரத்த தானம் பெறுகிறோம். அவர்களின் பெயர், விலாசம் பெறுவதில் இருந்து, எடை, வயது, ஹீமோகுளோபின் அளவு, பி.பி. என அவர்களின் உடல்நிலையை சோதிப்பதுவரை அனைத்தையும் பரிசோதனைகள் மூலம் சரிபார்த்த பிறகே ரத்தம் பெறப்படும்.

அடுத்ததாக, அந்த ரத்தத்தில் நோய்க்கிருமிகள் எதுவும் உள்ளதா என்று அறிய 'ஸ்கிரீன் டெஸ்ட்’டுக்கு அனுப்பப்படும். ஹெச்.ஐ.வி-1, ஹெச்.ஐ.வி-2, மஞ்சள்காமாலை-பி, மஞ்சள் காமாலை-சி, மலேரியா, விடிஆர்எல் (பால்வினை நோய்) ஆகிய 6 வகையான சோதனைக்குப் பின்னர்தான் ரத்தத்தை ஸ்டோரேஜுக்கு கொண்டு செல்வோம். ஒருவேளை இதில் ஏதாவது தொற்று இருப்பது தெரிந்தால் அந்த ரத்தத்தை வங்கிக்கு அனுப்பமாட்டோம். ஒன்றை மட்டும் என்னால் உறுதியாகச் சொல்ல முடியும். அரசு ரத்த வங்கியில் ரத்தம் பெறுவது எல்லாவகையிலும் மிகவும் பாதுகாப்பானது' என்று சொன்னார்.

அரசாங்கத்தின் கவனத்துக்கு!

ரத்தக் கண்ணீர் !

எய்ட்ஸ் விழிப்பு உணர்வுக்காக 'செஸ்' (CHES - Community Health Education Society) எனும் அமைப்பை நடத்தி வரும் சென்னையை சேர்ந்த பிரபல டாக்டர் மனோரமாவிடம் இந்த விஷயம் குறித்து பேசியபோது, ''தற்போது தமிழகத்தில் எய்ட்ஸ் கிருமிகளைக் கண்டறியும் 'எலிசா' எனும் டெஸ்ட்தான் பரவலாக இருக்கிறது. எய்ட்ஸ் பாதித்து ஆறு வாரங்களே ஆகியிருக்கும் ஒரு நபரின் ரத்தத்தை, 'எலிசா' மூலமாக பரிசோதித்தால், 'பாதிப்பு இல்லை' என்று தவறாகவே காட்டும். ஆறு வாரங்களுக்கு மேலாகியிருந்தால்தான் 'பாதிப்பு இருக்கிறது' என்பதைக் காட்டும். 'பி.சி.ஆர்.' எனும் டெஸ்ட்தான் துல்லியமானது. ஆனால், இது கொஞ்சம் காஸ்ட்லியானது. 4,000 ரூபாய் வரை செலவாகும். அரசு மருத்துவமனை, பெரும்பாலான ரத்த வங்கிகளில் இந்த வசதி இல்லை. அதனால், ஹெச்.ஐ.வி. பாதித்த ரத்தம்கூட தவறுதலாக சேமிக்கப்பட வாய்ப்பு அதிகம். எனவே, இந்த பி.சி.ஆர். டெஸ்ட் வசதியை அனைத்து இடங்களிலும் அரசு உருவாக்கித் தரவேண்டும்'' என்றார் டாக்டர் அக்கறையோடு!

படங்கள்: ஈ.ஜெ.நந்தகுமார்