Published:Updated:

ஐ.ஐ.டி.எய்ம்ஸ்...

அழகாக அஸ்திவாரம் போடும் சமச்சீர் கல்வி !

நாச்சியாள்

'சமச்சீர் கல்வியை இந்தக் கல்வியாண்டில் இருந்தே அமல்படுத்த வேண்டும். இன்னும் 10 நாட்களுக்குள் புத்தகங்களை அனைத்து பள்ளிகளுக்கும் வழங்க வேண்டும்’ என்று ஆகஸ்டு 9-ம் தேதியன்று வெளியாகியிருக்கும் உச்ச நீதிமன்றத் தீர்ப்பு, கிட்டத்தட்ட இரண்டு மாதங்களுக்கும் மேலாக தொடர்ந்து வந்த பாடத்திட்ட குழப்பத்தில் இருந்து, தமிழ்நாட்டை மீட்டிருக்கிறது!

ஐ.ஐ.டி.எய்ம்ஸ்...

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
##~##

அதேசமயத்தில், 'சமச்சீர்க் கல்வி புத்தகம் எனில் அவை மெட்ரிக் பாடங்களைவிடக் குறைவாக, தரம் மலிவாக இருக்குமோ? இதைப் படித்தால் 'ஐ.ஐ.டி’, 'எய்ம்ஸ்’ மாதிரி தேசிய அளவிலான நுழைவுத் தேர்வுகளை எழுத முடியாதோ?’ என்கிற சந்தேகக் கேள்விகள் வரிசை கட்டி நிற்க ஆரம்பித்துவிட்டன பெற்றோர்கள் பலரிடமும்.

இதைப் பற்றிக் கேட்டதுமே... ''நம்பிக்கையுடன் ஆரம்பிக்கப்படும் திட்டங்கள், பாதி வெற்றியடைந்ததற்குச் சமம். எனவே, சமச்சீர் கல்வி தரமானது, அது மாணவர்களை சிறந்த பண்பாளர்களாகவும் சுயசிந்தனை உள்ளவர்களாகவும் உருவாக்கும் என்கிற நம்பிக்கை, அதை படிக்கப் போகும் மாணவர்களுக்கும், சொல்லித் தரும் ஆசிரியர்களுக்கும் முதலில் வேண்டும்'' என்று சந்தோஷத்துடன் ஆரம்பித்தார் 'பொதுப் பள்ளிக்கான மாநில மேடை' எனும் அமைப்பின் செயலாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு.

''சமச்சீர் கல்வி தரமற்றது என்கிற பிரசாரம், அதை விரும்பாதவர்கள் திட்டமிட்டு செய்யும் கருத்துருவாக்கம். அப்படிச் சொல்கிற யாரும், இன்று நடைமுறையில் இருக்கும் மெட்ரிக் பாடத் திட்டங்களையும், சமச்சீர் பாடத் திட்டங்களையும் ஒப்பீடு செய்து பார்த்தவர்கள் இல்லை. கண் இல்லாதவர், யானையைப் பார்த்த கதையாக இப்படி ஒரு கருத்தைச் சொல்லிக் கொண்டு இருக்கிறார்கள்.

ஐ.ஐ.டி.எய்ம்ஸ்...

ஏற்கெனவே, உயர் நீதிமன்ற ஆணையின்படி அமைக்கப்பட்ட குழுவில் இடம்பெற்ற 'லேடி ஆண்டாள் பள்ளி'யின் முன்னாள் முதல்வர் விஜயலட்சுமி ஸ்ரீநிவாஸன், 'தமிழ்நாட்டில் இருக்கும் மெட்ரிக், ஓரியன்டல், ஆங்கிலோ இந்தியன், மாநிலக் கல்வி என நான்கு வகை கல்வி திட்டங்களைக் காட்டிலும்... சமச்சீர் பாடத் திட்டம் எல்லா வகைகளிலும் மேன்மையாக உள்ளது’ என்று குறிப்பிட்டிருக்கிறார். இதையும் கணக்கில் எடுத்துக் கொண்டுதான் தீர்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது.

தேசியக் கல்வித்திட்டம் 2005-ன் வழிகாட்டலின்படி, சர்வதேச நாடுகளில் ஏற்பட்டுக் கொண்டிருக்கும் மாற்றங்களையும், சவால்களையும் எதிர்கொள்ளும் வகையிலும்தான் சமச்சீர் கல்வி உருவாக்கப்பட்டுள்ளது என்பதை மாணவர், ஆசிரியர், பெற்றோர் என முத்தரப்புமே புரிந்து கொள்வதுதான், இந்த முத்தான கல்வியின் முதல் வெற்றியாக இருக்கும்!'' என்ற கஜேந்திரபாபு,

''இதுவரை பாடங்களை மனப்பாடம் செய்து மார்க் வாங்கி வந்த மாணவர்கள், தங்கள் திறமையை முழுமையாகப் பயன்படுத்தும் வகையில், சமச்சீர்க் கல்வி பாடங்களில் செய்முறைக் கல்விக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படும். எனவே, ஐ.ஐ.டி, எய்ம்ஸ் கனவுகள் இந்த சமச்சீர் பாடத் திட்டத்தில் படிக்கும் அனைவருக்கும் சாத்தியமாகும்!'' என்று 'ஐ.ஐ.டி’, 'எய்ம்ஸ்’ சந்தேகங்களையும் களைந்து, பெற்றோர்களுக்கு பலமான நம்பிக்கை கொடுத்தார்.

நிறைவாக, ''இது, குறிப்பிட்ட ஒரு அரசியல் கட்சியின் வெற்றியோ, அவர்களின் மூளையில் உதித்த திட்டமோ கிடையாது. பல கல்வியாளர்கள் மற்றும் பொதுக் கல்விக்காக போராடிய சமூக ஆர்வலர்களின் இடைவிடாத போராட்டத்தால் உருவானது. இவர்களின் தொடர் அழுத்தத்தால்தான் 2007-ல் முத்துக்குமரன் கமிட்டியை தி.மு.க. அரசு உருவாக்கியது. ஆனால், அந்த கமிட்டி கொடுத்த அறிக்கையை செயல்படுத்த தி.மு.க. அரசு எதுவுமே செய்யவில்லை. இதற்காக 2009-ம் ஆண்டு மாணவர் சங்கம் நடத்திய போராட்டத்தில் பல மாணவர்கள் காயமடைந்தார்கள். அடுத்தநாள் சட்டமன்றத்தில் எதிர்க்கட்சிகள் 'கவன ஈர்ப்புத் தீர்மானம்’ கொண்டு வந்தன. வேறு வழியில்லாமல்தான் பிப்ரவரி 2010-ல் சமச்சீர் கல்விச் சட்டம் கொண்டு வரப்பட்டது. ஆகையால், இது ஒரு கட்சியின் திட்டமோ, வெற்றியோ அல்ல'' என்று தெளிவுபடுத்திய கஜேந்திரபாபு,

''ஆசிரியர்கள், பெற்றோர்கள், மாணவர்கள் என்று முத்தரப்பும் மனதார இதனை ஏற்றுச் செயல்படுத்தினால், இன்றைக்கு இருப்பது போன்ற இயந்திரத்தனமான கல்வி முறை மாறி, ஒவ்வொரு குழந்தையும் தனிப்பட்ட சிந்தனைத் திறனுடன் வளரக்கூடிய வகையிலான உண்மையான கல்வியின் மூலம்... இந்தியாவிலேயே தமிழ்நாடு மிகப்பெரிய வல்லரசாக மாறும்!'' என்று நம்பிக்கை பொங்கச் சொன்னார்.

படம்: அ.ரஞ்சித்