Published:Updated:

அருள் தரும் அம்மன் உலா!

தில்லையம்மா... எல்லையம்மா !

கரு.முத்து

அருள் தரும் அம்மன் உலா!

'காலை துயில் எழும் கதிரவன், இந்தக் காளியின் கடுங்கோப முகம் கண்டுதான் வெம்மையடைகிறான்; மாலையில் மறையும் சூரியன், இங்குள்ள தில்லையம்மனின் சாந்தமுகம் கண்டுதான் குளிர்கிறான்..!'

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

- இப்படி ஒரே ஆலயத்தில் கிழக்கு நோக்கி சினங்கொண்ட காளியாக ஒரு சந்நிதியிலும், மேற்கு நோக்கி சாந்தமுக அம்மனாக மற்றொரு சந்நிதியிலும் அமர்ந்திருக்கிறாள் அன்னைக் காளி... தில்லை என்று வழங்கப்படும் சிதம்பரத்தில் 'தில்லைக் காளி'யாக!

கோபமானவளாக இருப்பவளை, கோபம் குறையாமலே பார்த்துக் கொள்வதுதான் இங்கே விசேஷமே! ஏன் இத்தனை கோபம்... அதை குறையாமல் வைத்துக் கொள்வது எதற்காக?

'சிவம் பெரிதா... சக்தி பெரிதா?' என்கிற வாதம் பெரிதாகி, சக்தியைக் காளியாகச் சபித்தார் சிவன். தவறை உணர்ந்து சாப விமோசனம் கேட்டாள் அன்னை. ''வரும் யுகத்தில் மக்களும், தேவர்களும் அரக்கர்களால் பெரும் அழிவுக்கு உள்ளாகப் போகிறார்கள். நீ இப்படி இருந்தால்தான் மக்களைக் காப்பாற்ற முடியும். அது முடிந்ததும் பூவுலகில் உன்னை சிவகாமியாக நான் ஏற்றுக் கொள்கிறேன்'' என்றார் பெருமான். அதன்படி மகிஷாசுரன், பண்டகாசுரன், தாரஹாசுரன் ஆகியோர்களை வதம் செய்த காளி,  அந்தக் கோபம் கொஞ்சமும் குறையாமல் மக்களுக்கும் இன்னல் செய்ய ஆரம்பித்தாள். அது கண்ட இறைவன், ''அம்பிகையே! கோபத்தை அடக்கி தில்லையில் அமர்க... விரைவில் வருகிறேன்!'' என்று ஆணையிட்டார்.

##~##

தில்லைவனத்தில் இறைவனை பூஜித்தபடி காத்திருந்தாள் அன்னை. ஆனால், சொன்னபடி அங்கே வந்து சேரவில்லை இறைவன். அதே தில்லையில் அவருடைய ஆனந்த தாண்டவத்தைக் காண வேண்டி தாளாத ஆசையில் அவரை நோக்கி பூஜித்திருந்த வியாக்கிரபாதர், பதஞ்சலி முனிவர் ஆகியோருக்காக, தை மாத பூச நட்சத்திரத்தில் ஆனந்த தாண்டவத்தை நடத்தினார். இதைக் கேள்விப்பட்டு கோபமுற்ற அன்னை, வனத்தில் தவம் செய்த முனிவர்களுக்கு எல்லாம் தீங்கு செய்ததோடு, இறைவனை தன்னிடம் நாட்டியமாட போட்டிக்கு அழைத்தாள். ''நான் தோற்றால், ஊரைவிட்டு எல்லைக்குப் போய்விடுகிறேன்’' என்று ஆண்டவனிடம் சபதமிட்டாள். பிரம்மதேவன் ஜதி சொல்ல, மகாவிஷ்ணு மத்தளம் வாசிக்க, நந்திதேவர் தாளமிட, நாரதர் தம்பூரா மீட்ட, சரஸ்வதி வீணை வாசிக்க... கடும் நடன போட்டி துவங்கியது.

காளியை நடனத்தால் வெல்ல முடியாத இறைவன், தன் காது குண்டலத்தை தரையில் விழுமாறு செய்து அதனை காலாலேயே எடுத்து தன் காதில் மாட்டினார். பெண்ணான காளி, சபையில் அவ்வாறு செய்ய நாணமுற்று, தோல்வியை ஒப்புக்கொண்டு, கடும் கோபத்துடன் தில்லையின் எல்லைக்குச் சென்று அமர்ந்தாள். அன்னையை, நான்முகன் சென்று சாந்தப்படுத்த, பிரம்மசாமுண்டீஸ்வரியாக நான்கு முகத்தோடு காட்சி தந்தாள். அவள்தான் சாந்த முகத்தோடு 'எல்லையம்மன்' (தில்லையம்மன்) என மேற்கு நோக்கி அமர்ந்து... எல்லையற்றவர்களின் இன்னல் போக்குகிறாள் (முதலில் இவளை வணங்கிவிட்டுத்தான், காளியிடம் போகிறார்கள் பக்தர்கள்).

அருள் தரும் அம்மன் உலா!

கோபம் கொண்டு, 'தில்லைக்காளி'யாக கிழக்கு நோக்கி அமர்ந்தவளிடம், ''அரக்கர்களை அழித்த நீ, மனிதர்களை நாசம் செய்து கொண்டிருக்கும் அகம்பாவம், ஆணவம், சினம், பகைமை, தீவினைகள், கொடிய வியாதிகள் ஆகியவற்றையும் இதே உருவில் இருந்து அழிக்க வேண்டும்!'' என்று அன்னையிடம் கேட்டுக் கொண்டார் இறைவன். அதை ஏற்றுத்தான் அப்படியே அமர்ந்திருக்கிறாள் காளி அன்னை. அதற்காகத்தான் கோபம் குறையாமல் தினமும் எண்ணெய் விட்டு வளர்க்கிறார்கள். ஆம்... அன்னைக்கு நல்லெண்ணெய் அபிஷேகம் மட்டும்தான் செய்யப்படுகிறது (தான் முன்பு சொன்னபடியே அன்னையை சிவகாமியாக ஏற்றுக் கொண்டார் இறைவன். சிதம்பரத்தில்இருக்கும் நடராஜர் ஆலயத்துக்குள்ளேயே தனி சந்நிதி கொண்டு அமர்ந்திருக்கிறாள் அன்னை சிவகாமி என்பது தனிக்கதை).

அருள் தரும் அம்மன் உலா!

சிதம்பரம் பகுதியில் வாங்கப்படும் புதிய வாகனங்கள் அனைத்துக்கும் அன்னையின் ஆலயத்தில்தான் முதல் படையல். தலைப்பிரசவத்துக்குப் போகும் பெண்கள், பிரசவம் சுகமாக இங்கு வந்து சிவப்பு வளையல் வாங்கி அன்னைக்கு அணிவிக்கிறார்கள். மாதவிலக்கில் பிரச்னை உள்ளவர்கள் குங்கும அர்ச்சனை செய்கிறார்கள், எலுமிச்சை மாலை அணிவிப்பவர்கள் எண்ணிய எண்ணத்தை எல்லாம் நிறைவேற்றுகிறாள் அன்னை. அவள் அர்ச்சனைக் குங்குமம், நோய்களை எல்லாம் தீர்க்கிறது.

சென்னையில் இருந்து மகனுடன் அன்னையை நாடி வந்திருந்தார் வள்ளி. ''ஒரு ஆபீஸ்ல வேலை பார்த்திட்டிருந்த எம்மகன் வெங்கடேசன், திடீர்னு ஏதோ நோயால பாதிக்கப்பட, எழுதக்கூட முடியாத அளவுக்கு கையெல்லாம்கூட பாதிச்சுடுச்சு. பாண்டிச்சேரியில இருக்கிற என் மருமகனுக்கு தில்லைக்காளிதான் எல்லாமும். காளி பக்தரான அவர், இவனைப் பார்த்துட்டு, ஆத்தாகிட்ட கூட்டிட்டுப் போகச் சொன்னாரு. ரெண்டு பௌர்ணமி இங்க வந்து காளிக்கு எண்ணெய் அபிஷேகம் செஞ்சு, அந்த எண்ணெயைத் தடவினதும் இவனுக்கு உடம்பு குணமாகிட்டு வருது. இப்ப கை எல்லாம் நல்லாத் தூக்க முடியுது. இது மூணாவது பௌர்ணமி. ஆத்தாவோட கருணையைக் கண்கூடாப் பார்க்கிறேன்!'' என்றார் வள்ளி அருளில் உருகி.

கி.பி 1229-ம் ஆண்டில் ஆட்சிக்கு வந்த குலோத்துங்க சோழனின் படைத்தலைவனும், பல்லவகுல சிற்றரசனுமாகிய கோப்பெருங்சிங்கன், அன்னையிடம் தன் ஆட்சிக்கான இடையூறுகள் நீங்க வேண்டி, அது நீங்கப் பெற்றதும் தில்லைவனத்தில் அமர்ந்திருந்த காளிக்குக் கோயில் கட்டினான். அதில்தான் இப்போதும் கோபம் குறையாமல் வீற்றிருக்கிறாள் அன்னை.

அருள் தரும் அம்மன் உலா!

''கடுமையான கோபத்தில் இருந்தாலும் நாடி வருவோர்க்கு சாந்தமாகக் காட்சி தரவே வெள்ளை வஸ்திரம் அணிந்திருக்கிறாள் அன்னை. தன் பக்தைகள் விதவையாகி வெள்ளை ஆடை அணியக்கூடாது என்பதற்காகவும் இவள் வெள்ளை உடுத்திஇருக்கிறாள். வீரமும் வெற்றியும் வேண்டுவோரும் வந்து வழிபடலாம். அமைதியும் அன்பும் வேண்டுவோரும் வந்து வழிபடலாம். அப்படி அதர்மத்தை அழிப்பவளாகவும், அன்பை அள்ளித் தருபவளாகவும் இங்கு விளங்குகிறாள் அன்னை!'' என்று அன்னையின் மகிமை சொன்னார் ஆலயத்தின் அர்ச்சகரான ராஜகுமார் தீட்சிதர்.

அடுத்த இதழுடன் நிறைவடைகிறது...

படங்கள்: கே.குணசீலன்

 எப்படி செல்வது?

 ரயில் மற்றும் பஸ் வசதி நிறைந்த சிதம்பரம் நகருக்குள்ளேயே இருக்கிறது கோயில். எண்ணெய் அபிஷேகம் செய்ய விரும்புகிறவர்கள் இரண்டாயிரம் ரூபாய் கட்டி முன்பதிவு செய்துகொள்ள வேண்டும். கோயில் திறந்திருக்கும் நேரம் காலை 6 - 12. மாலையில் 4.30 - 8.30. அலுவலக தொலைபேசி எண்: 04144-230251