Published:Updated:

பூஜ்யத்திலிருந்து ராஜ்ஜியத்துக்கு...

விளம்பரம் இல்லாமலே வெற்றி !

 கு.ராமகிருஷ்ணன்

சாமான்ய பெண்களின் சாதனை கதை

ரெஸ்டாரன்ட் தொழிலில் அசத்தும் ஆலின்

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

''இது விளம்பர யுகம்தான். ஆனாலும், தெரியாத தொழில்ல இறங்குறப்போ, ஆரம்பத்துலேயே பிரமாண்ட விளம்பரங்கள் பண்ணி, பெரிய அளவுல கூட்டத்தை வரவழைச்சுட்டோம்னா... பிறகு, சிறு குறைனாலும், அது பெரிதாக பேசப்பட்டுடும். அப்புறம் காலத்துக்கும் பேர் எடுக்க முடியாது. அதனால, கொஞ்சம் நிதானிச்சதுக்கு அப்புறம் விளம்பரம் பண்றதுதான் பாதுகாப்பு!''

- இதுமட்டுமல்ல, இன்னும் பல மாற்றுச் சிந்தனைகளால் ஆச்சர்யப்படுத்துகிறார் ஆலின் சகாயம் !

பூஜ்யத்திலிருந்து ராஜ்ஜியத்துக்கு...
##~##

திருச்சியில் இவர் நடத்திவரும் ரெஸ்டாரன்ட், விளம்பரங்கள் இல்லாமலேயே படுவேகமாக பெயர் எடுத்து வருகிறது. நுட்பமான பார்வை, புதிய வியூகம், கடும் உழைப்பு இவை மூன்றையும் இணைத்து அடித்தளம் அமைத்த தால், உறுதியான வெற்றிப் பாலத்தில் பயணித்துக் கொண்டு இருக்கும் ஆலினின் வருமானம், மாதம் அரை லட்சம்!

''பிறந்து, வளர்ந்து, படிச்சதெல்லாம் சேலத்துல இருக்கற அரிசிபாளையம். அப்பா, அக்கா ரெண்டுபேருமே டீச்சர்ஸ். என்னையும் அந்த லைன்லயே அனுப்ப ஆசைப்பட்டாங்க. நானோ... 'சவால்களையும் சாதனைகளையும் சந்திச்சு, பேர் எடுக்கக் கூடிய பாதையைத்தான் தேர்ந்தெடுக்கணும்'னு உறுதியா இருந்தேன். அதுக்கான முதல் துவக்கமா ப்ளஸ் டூ முடிச்சிட்டு, 'டிப்ளமா இன் ஆபீஸ் மேனேஜ்மென்ட்’ படிச்சு முடிச்சேன். உடனடியா பிரபல தனியார் நிறுவனத்துல வேலையும் கிடைச்சுது. என்னோட திறமைகளை வெளிப்படுத்தவோ, வளர்த்துக்கவோ வாய்ப்பே அங்க கிடைக்காததால, சம்பளம் நிறைவா இருந்தும் வேலையை உதறினேன்'' என்பவருக்கு... அடுத்த சில மாதங்களிலேயே திருச்சி, தென்னூர் பகுதியில் பிளாஸ்டிக் தொழிற்சாலை நடத்தி வந்த பால்ராஜுடன் திருமணம் நிகழ்ந்திருக்கிறது.

பூஜ்யத்திலிருந்து ராஜ்ஜியத்துக்கு...

''அவருக்குத் துணையா நானும் பிளாஸ்டிக் தொழிற்சாலையை நிர்வாகம் பண்ணினேன். ஆனாலும், சொந்த முயற்சியில ஏதாவது செய்யணும்ங்கிற எண்ணம் எனக்குள்ள உறுத்திக்கிட்டே இருந்துச்சு. பல யோசனைகளுக்குப் பிறகு, தென்னூர்லயே வாடகை இடத்துல ஜூஸ், ஐஸ்கிரீம் பார்லர் தொடங்கினேன். ஆரம்பத்துல பல சிரமங்கள் இருந்தாலும்கூட, ஒரு வருஷத்துல லாபகரமா இயங்க ஆரம்பிச்சுது'' என்பவர், நான்கு ஆண்டுகள் மின்னல் வேகத்தில் கடந்து போக... 'நம் வேகத்துக்கும், உழைப்புத் தாகத்துக்கும் ஈடுகொடுக்கக்கூடிய பெரிய அளவிலான ஒரு தொழிலைத் தொடங்க வேண்டும்' என ஆசைப்பட்டிருக்கிறார்.

''ஜூஸ் கடைக்கு எதிர்லயே பிரபல தனியார் மருத்துவ மனை இருந்தது. சட்டுனு பொறிதட்ட, 'ஜூஸ் கடையையட்டி இருக்கற இடத்துலயே தரமான உணவை வழங்கக்கூடிய உயர்ரக ரெஸ்டாரன்ட் ஆரம்பிக்கலாமே!'னு யோசனை வந்துச்சு. 5 லட்சம் ரூபாய் முதலீடு தேவைப்படவே, ஒரு சந்தேகத்தோடதான் தில்லைநகர், இந்தியன் வங்கி கிளையை அணுகினேன். மேலாளர் கிருஷ்ணராஜ், முழு நம்பிக்கையோட கடன் கொடுக்க... உடனடியா வேலைகளைத் தொடங்கி, திறப்பு விழாவுக்கு நாள் குறிச்சுட்டோம்.

முன்னதா... குடும்ப நண்பர்கள், உறவினர்களை எல்லாம் வரச் சொல்லி, பத்து நாட்கள் சோதனை ஓட்டம் நடத்தினோம். கஸ்டமர்ஸ் கேக்குற ஆர்டர்களை எவ்வளவு நேரத்துல தயார் பண்ணலாம், எப்படி சர்வீஸ் பண்ணலாம், என்ன மாதிரியான பிரச்னைகள் வரும்னு செயல்படுத்திப் பார்த்தோம். அந்த அனுபவங்கள்ல கற்ற பாடங்கள், திறப்பு விழாவைத் தொடர்ந்த நாட்கள்ல பதற்றம் இல்லாம எங்களை வேலை பார்க்க வெச்சது'' என்று சொல்லும் ஆலின், மக்களைக் கவர தனது ரெஸ்டாரன்ட்டுக்கான தனித்துவம் குறித்து சிந்திக்கத் தொடங்கி இருக்கிறார்.

'' 'எந்தத் தண்ணியில சமைச்சிருப்பாங்களோ... இங்க குடிக்க வைக்கற தண்ணி சுத்தமா இருக்குமா?’ங்கறது மாதிரியான பல தயக்கங்களோடதான் ஹோட்டல்கள்ல மக்கள் சாப்பிடறாங்க. அதையெல்லாம் மன சுல வெச்சு, 70 ஆயிரம் ரூபாய் செலவுல தண்ணீர் சுத்திகரிக்கும் யூனிட் அமைச்சேன். சமையல், குடிநீர் எல்லாத்துக்குமே இந்தத் தண்ணீர்தான். இதை ஒரு சிறப்பம்சமா குறிப்பிட்டு, நுழைவாயில்ல போர்டு வெச்சோம். மக்கள்கிட்ட நல்ல வரவேற்பு!''

பூஜ்யத்திலிருந்து ராஜ்ஜியத்துக்கு...

- ஆனாலும் ஆலினின் மனது நிறைவடைந்துவிடவில்லை.

''மாஸ்டர்ஸ் அடிக்கடி லீவு எடுக்கறது, திடீர்னு வேலையை விட்டுப் போறதுனு பல சங்கடங்களைத் தந்தாங்க. இதனால சுவையை நிரந்தரமா மெயின்டெயின் பண்ண முடியலை. இதைச் சமாளிக்க, ஒவ்வொரு உணவு வகைக் கும் தேவையான பொருட்கள், அதோட அளவு, பக்குவம்னு எல்லாத்தையும் நானே முடிவெடுத்தேன். திடீர்னு மாஸ்டர்ஸ் லீவு போட்டாகூட, கிச்சன்ல நின்னு நானே ரெடி பண்ணிடுவேன். தமிழ்நாட்டு உணவுகள்ல இருந்து சைனீஸ் உணவுகள் வரைக்கும் எல்லாமே ரெடி பண்ணக்கூடிய அளவுக்கு என்னை தயார்படுத்திக்கிட்டேன்.

தாமதம் இல்லாம கஸ்டமர் கேக்கறத தரணும்கிறதுலயும் சிறப்பான கவனம் செலுத்த ஆரம்பிச்சேன். 'குறை இருந்தா சொல்லுங்க'னு நேரடியாவே கேக்க ஆரம்பிச்சேன். இதுமாதிரி எல்லாத்தையும் சரி பண்ணி, கஸ்டமர்ஸை முழு நிறைவடைய வைக்கக் கிட்டத்தட்ட ஒரு வருஷத்துக்கு மேல ஆச்சு. இனிதான் பெரிய அளவுல விளம்பரங்கள் பண்ணலாம்னு இருக்கோம்'' என்று சொல்லி அசத்தியவர்,

''இப்போ எங்க ரெஸ்டாரன்ட்ல 17 பேர் வேலை பார்க்குறாங்க. எல்லா செலவும் போக, மாசம் 50 ஆயிரம் ரூபாய் கிடைக்குது. அடுத்த முயற்சியா ஸ்வீட் ஸ்டாலும் பேக்கரியும் ஆரம்பிக்கலாம்னு இருக்கேன்''

- வெற்றிக்கு வாழ்த்துக்கள் ஆலின்!

அடுத்த இதழுடன் தொடர் நிறைவடைகிறது...

படம்: 'ப்ரீத்தி’ கார்த்திக்