Published:Updated:

தேவை ... மனமாற்றம் !

தேவை ... மனமாற்றம் !

நாச்சியாள்

 பெண் இனம் பாதுகாக்கப்பட்டால்தான், உலக உருண்டை இயங்கும்; பூமிப் பந்து மூச்சுவிடும். அதற்கு எங்கும், எப்போதும் பெண்ணின் இருப்பும் இயக்கமும் மிக இயல்பானதாக, வன்முறைகள் இன்றி இருக்க வேண்டும். ஆனால், நடைமுறையில் ஒரு பெண் குழந்தை... மழலையாக பூமியில் வந்து பிறப்பதே பெரும் போராட்டமாக உள்ளது. அல்ட்ராசானிக் அலைக் கதிர்வீச்சால் தாயின் கருவில் இருக்கும் குழந்தை 'ஆணா, பெண்ணா' என்று கண்டறிந்து, பெண்ணாக இருந்தால் கருக்கலைப்பு மூலம் உடனே சமாதி கட்டப்படும் கொடுமை, இன்னும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது.

தேவை ... மனமாற்றம் !

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
##~##

2001-ம் ஆண்டில் 1000:927 என்று இருந்த, ஆறு வயதுக்கு உட்பட்ட ஆண்-பெண் குழந்தைகளின் விகிதாச்சாரம், இப்போது 1000:914 என்று குறைந்துள்ளது. தமிழகத்தில்... குறிப்பாக பெரம்பலூர், அரியலூர், கடலூர், தர்மபுரி, திருவண்ணாமலை போன்ற மாவட்டங்களில் அந்த விகிதாச்சாரம் 1000:892 என்கிற அளவுக்கு அபாயகரமாகக் குறைந்துள்ளது. இதற்கு முக்கியக் காரணம், கருக்கலைப்பு, சிசுக் கொலை போன்ற சமூக அராஜக செயல்கள்தான். 'இதைத் தடுக்கவே முடியாதா?' என்கிற ஆதங்க கேள்விக்கு... ''சட்டரீதியாக முடியும்!'' என ஆறுதல் சொல்கிறார் சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர் அஜிதா.

''கருவில் இருக்கும் குழந்தையை அழிப்பதை எதிர்க்கும் சட்டம் 1994-ல் (Pre-Conception & Pre-Natal Diagnostic Techniques Act, 1994) கொண்டு வரப்பட்டது. கருவில் இருக்கும் குழந்தை ஆணா, பெண்ணா என்று கண்டறிந்து சொல்லும் மருத்துவமனைகள், ஸ்கேன் சென்டர்கள், மருத்துவர்கள் தண்டனைக்குரியவர்கள் என்கிறது இச்சட்டம். குற்றம் நிரூபிக்கப் பட்டால், அவற்றின் அங்கீகாரம் ரத்து செய்யப்படும். இதற்காக, மாவட்ட அளவில் தனி கண்காணிப்பு குழு அமைக்கப்பட்டு, அந்தக் குழு எல்லா மருத்துவமனை, ஸ்கேன் சென்டர்களுக்கும் திடீர் விசிட் செய்யும். இக்குற்றத்தைச் செய்யும் மருத்துவர்களும் பெற்றோர்களும் குற்றவாளிகளாகக் கருதப்பட்டு,  மூன்று ஆண்டுகள் சிறைத் தண்டனை உண்டு என்கிறது இந்த சட்டம்'' என்றவர்,

''இது அமலுக்கு வந்து 17 வருடங்கள் ஆன பின்பும், இந்தக் கொடுமை நீடிக்கிறது என்றால்... எங்கே தவறு என்றுதான் ஆராய வேண்டும். பெற்றோர்கள், மருத்துவர்கள், ஸ்கேன் சென்டர்கள் என்று எல்லோருக்குமே 'இது தார்மிகரீதியாகத் தவறு... இக்குற்றத்தை நாம் செய்யக் கூடாது’ என்கிற மனமாற்றமும், பெண்கள் குறித்த நேர்மறையான மனோபாவமும் வளர வேண்டும்'' என்று வலியுறுத்தி யதோடு, கருவில் சிசுவாக மட்டு மல்ல... பொதுவெளியிலும் பெண் என்பதாலேயே அவள் சந்திக்க நேரும் சித்திரவதைகளுக்கான சட்டத் தீர்வையும் பேசினார்.

தேவை ... மனமாற்றம் !

''பஸ், மருத்துவமனை, ஷாப்பிங், கல்லூரி, பள்ளி, சாலை என எல்லாப் பொது இடங்களுமே பெண்களுக்கு பாதுகாப்பற்ற இடங்கள்தான் என்பதை நிரூபிகின்றன, 'பெண் மீது ஆசிட் வீச்சு’, 'துப்பட்டாவை இழுத்து பெண் மானபங்கம்’ என்று தினசரி வருகின்ற ஆயிரமாயிரம் செய்திகள். 1998-ல், சென்னை, எத்திராஜ் கல்லூரி மாணவி சரிகாஷா, ஈவ் டீசிங் கொடுமையால் இறந்தபோது, பல தரப்பில் இருந்தும் கடுமையான கண்டனங்கள் எழுந்தன. ஈவ் டீசிங் தடுப்புச் சட்டமும் கொண்டுவரப்பட்டது. அது, 'பெண்களுக்கு எதிராக நடக்கும் வன்கொடுமைகளை தடுக்கும் சட்டம்’ என்று தற்போது அழைக்கப்படுகிறது.

வீடு அல்லாமல் பொது இடங்களில் பெண்களுக்கு எதிராக நடக்கும் எல்லாக் கொடுமைகளும் தண்டிக்கப்படக்கூடிய குற்றம்தான். அப்படியான வன்முறை காரணமாக ஒரு பெண் இறந்தால், அதற்குக் காரணமானவர் ஆயுள் தண்டனை பெறக்கூடிய பெரும் குற்றம் இழைத்தவராக கருதப்படுவார் என்கிறது இந்தச் சட்டம். பெண்ணுக்கு எதிரான குற்றம் நடக்கும்போது, அச்சூழலில் அவரைக் காக்க வேண்டிய பொறுப்பில் இருப்பவர், அதில் இருந்து தவறினால், அவரும் குற்றவாளியாகவே கருதப்படுவார். உதாரணமாக, ஒரு பெண்ணை பஸ்ஸில் ஒருவன் பாலியல் ரீதியாக துன்புறுத்துகிறான். அந்தப் பெண் கண்டக்டரிடம் முறையிடுகிறார். அவர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றால்... அவரும் இந்தச் சட்டத்தின்படி இக்குற்றத்துக்குப் பொறுப்பானவர்தான்'' என்று எடுத்துச் சொன்னார் அஜிதா.

பெண்களின் பாதுகாப்பை சாத்தியப்படுத்துவதில் சட்டத்தைவிட வலிமைமிக்கது... சமூகத்தின் மனசாட்சியும், மனமாற்றமும்தான்!

படம்: விஜய்மணி