Published:Updated:

இத்துடன் நிறுத்தக் கூடாது அண்ணா !

இத்துடன் நிறுத்தக் கூடாது அண்ணா !

நாச்சியாள்

எழுபது வயதைக் கடந்த அண்ணா ஹஜாரே, ஊழலுக்கு எதிராக எடுத்திருக்கும் முயற்சிக்கு, இதுவரை சுதந்திர இந்தியா பார்த்திராத அளவுக்கு, இந்திய வரைபடத்தின் நான்கு திசைகளில் இருந்தும் மக்கள் எழுச்சி! 'பீட்ஸா', 'பர்கர்' என்றே நாட்களை நகர்த்தும் கார்ப்பரேட் இளசுகளும் அண்ணாவின் கைகோத்து நவீனமாகப் போராடுகின்றன. 'ஊழல்’ என்ற வார்த்தையை உச்சரிக்கக்கூடத் தெரியாத சிறு குழந்தைகள்கூட, தாத்தாவின் போராட்டத்துக்கு ஆதரவாகக் குரல் கொடுக்கின்றன!

இத்துடன் நிறுத்தக் கூடாது அண்ணா !

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
##~##

''ரேஷன் கார்டு வாங்குவதில் இருந்து நிவாரண உதவிகள் பெறுவதுவரை எல்லாவற்றுக்கும் லஞ்சம் கொடுத்தே ஓய்ந்து, உள்ளுக்குள் குமைந்து கொண்டிருந்த மக்கள் அனைவரும், எதிர்ப்பை மிக வலுவாக பதிவு செய்துகொண்டுள்ளார்கள் என்பதைத்தான் நிரூபிக்கிறது இந்த எழுச்சி'' என்று சொல்லும் மார்க்சிஸ்ட் கட்சியின் திண்டுக்கல் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் பாலபாரதி,

''இன்று, ஊழல் என்பது மிகப்பெரும் பிரச்னையாக நாட்டின் வளத்தை அரித்துக் கொண்டு உள்ளது என்பதில் மாற்றுக் கருத்து கிடையாது. ஆனால், இந்த ஊழல் மட்டும்தான் இன்று நாட்டின் நேரடியான பெரும் பிரச்னையா?'' என்றொரு கேள்வியை எழுப்பிவிட்டு,

இத்துடன் நிறுத்தக் கூடாது அண்ணா !

''ஊழல் என்பது... பண முதலைகள் வளர்த்துவிட்ட செல்லப் பிள்ளை. அந்தச் செல்ல பிள்ளையின் வாரிசுகளாக விலைவாசி உயர்வு, வேலை இல்லாத் திண்டாட்டம், வறுமை, பட்டினிச் சாவுகள் என்று சாதாரண மக்களின் தினசரி வாழ்க்கையை முடங்கக்கூடிய பிரச்னைகள் உருவெடுத்திருக்கின்றன. இன்று அண்ணாவின் பின்னால் திரண்டு இருக்கும் மக்கள், இந்தப் பிரச்னைகளும் நம் தேசத்தின் அதிமுக்கியமான பிரச்னைகள்தான் என்பதை உணர்ந்து... இதே எழுச்சியை இந்தப் பிரச்னைகளுக்கும் காட்ட வேண்டும். குறிப்பாக, இளைஞர்கள் இதனை உணர வேண்டும்'' என்று இந்தியாவின் மோசமான மற்ற பக்கங்களையும் இந்தத் தருணத்தில் சுட்டிக் காட்டுகிறார் பாலபாரதி.

''இந்தப் போராட்டத்தை நாங்கள் வரவேற்கிறோம். ஆனால், இது அரசியலை மையப்படுத்தியே இருக்கிறதே தவிர, மக்களின் சமூக, பொருளாதாரப் பிரச்னைகளைப் பற்றி இல்லையே?'' என்று அடுத்த கேள்வியை வைக்கிறார் 'எவிடன்ஸ்’ அமைப்பின் செயல் இயக்குநரும் சமூக ஆர்வலருமான கதிர்.

''பிறப்பு தொடங்கி இறப்பு வரை எதைத் தொட்டாலும் லஞ்சம் தலைவிரித்து ஆடுகிறது. அதனால்தான் அண்ணா ஹஜாரேயின் போராட்டத்தை எழுச்சியுடன் பார்க்கிறார்கள் மக்கள். ஆனால், அது சரியான இடத்திலிருந்து தொடங்கி, சரியான பாதையில் செல்லவில்லை என்பதுதான் எங்களின் குற்றச்சாட்டு. கையூட்டு வாங்குவது மட்டுமே ஊழல் இல்லை. கிராமப்புற வளங்களையும், நிலங்களையும் அனைவருக்கும் முறையாக பங்கிட்டுத் தராததும், இடஒதுக்கீட்டின் பலனை அனைத்து மக்களும் அடையாமல் இருப்பதும், ஆதிவாசிகளின் நிலங்களைப் பறித்து தனியார் முதலாளிகளுக்கு கொடுப்பதும், மக்களின் வாழ்வாதரங்களைப் பறிப்பதும், வளர்ச்சித் திட்டங்கள் என்று பெயரில் கடல், நிலம், நீர் போன்ற வாழ்வாதாரங்களை பயன்படுத்தவே முடியாத அளவுக்கு கார்ப்பரேட் கம்பெனிகள் மாசுபடுத்துவதும் ஊழல்தான். நாடாளுமன்றத்தில் பெண்களுக்கான 33 சதவிகித இடஒதுக்கிடு மசோதாவை பல ஆண்டுகளாக முடக்கி வைத்திருப்பதும் ஊழல்தான்.

இன்றைக்குக் கிளம்பியிருக்கும் இந்த எழுச்சி, இந்தியாவை பீடித்திருக்கும் ஒட்டுமொத்த பிரச்னைகளுக்கும் எதிராக வெடித்துக் கிளம்ப வேண்டும். அதைவிடுத்து ஊழக்கு எதிராக என்று மட்டுமே முடிந்துபோனால்... அது முழுமையான முயற்சியாக இருக்காது. இவர்கள் உருவாக்கச் சொல்லும் மசோதாவும் முழுபலன் தராது!'' என்று ஆதங்கப்படுகிறார் கதிர்.

ம்... கலகம் பிறந்திருந்திருக்கிறது. நியாயம் பிறக்கட்டும்... எல்லாப் பிரச்னைகளுக்கும்!

அண்ணா ஹஜாரே!

தன் கையில் வெறும் 1,500 ரூபாய் பணமும், பேங்க் பேலன்ஸாக 65,000 ரூபாய் பணமும் வைத்திருக்கும் முன்னாள் ராணுவ வீரர், அண்ணா ஹஜாரே. ஏழாம் வகுப்பு வரை படித்திருக்கும் இவர், தன்னுடன் பிறந்த 6 பேரை, ரோட்டோரத்தில் பூக்கள் விற்று காப்பாற்றியிருக்கிறார். 1967-ல் ராணுவத்தில் சேர்ந்தவர், 75-ல் அதிலிருந்து வெளியேறி சொந்த ஊரான மஹாராஷ்டிரா மாநிலம், ராலேகன் சித்தியில் குடியேறினார். வறுமையிலும், போதையிலும் பாதிக்கப்பட்டிருந்த கிராமத்தை, மக்கள் உதவியுடன் மாற்றியமைத்தார். உள்ளூரில் இருக்கும் நீர்வளத்தை சீரமைத்து, விவசாய உற்பத்தியைப் பெருக்கினார். இவரின் சேவையைப் பாராட்டி, மத்திய அரசு பத்மவிபூஷண் விருது அளித்து கௌரவித்தது. இடையறாத சேவைகளுக்கு நடுவே, திருமணம் பற்றி அண்ணா யோசிக்கவே இல்லை!