எனக்கும் என் கணவருக்கும் பெற்றோர் முடித்து வைத்த திருமணம். ஆரம்பம் முதலே அன்பில்லாத, அடிமைத்தன இல்லறம்தான். ஒரு மகன், ஒரு மகள் என என் பிள்ளை களுக்காகத்தான் வாழ்ந்தேன். இப்போது இருவரும் திருமணம் முடிந்து வெளிநாட்டில் செட்டில் ஆகிவிட்டார்கள். இருவருக்குமே குழந்தைகள் இருக்கிறார்கள். நானும் கணவரும் சொந்த ஊரில் வசிக்கிறோம். அவருடன் இனியும் வாழ முடியாத என்ற முடிவுக்கு வரும் அளவுக்கு, இந்த வயோதிகத்திலும் என்னைப் பாடாய்ப்படுத்துகிறார் அந்த ஆணாதிக்கவாதி.
எங்களுக்குத் திருமணம் முடிந்தபோது, என் கணவரையும் என்னையும் தனிக்குடித்தனம் வைத்தார்கள் அவர்கள் வீட்டில். அவர் ஒரு தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்தார். பள்ளிப் படிப்பை முடித்திருந்த நான், வேலைக்கு எதுவும் செல்லவில்லை. என்றாலும் எனக்கு வாசிப்புப் பழக்கம் இருந்ததால், உலக நடப்புகள், விவரங்கள் தெரியும். அப்படி எனக்குத் தெரிந்த விஷயங்களை நான் பேசினால், அவருக்குப் பிடிக்காது. அவர் ஈகோ என்னைப் பேச விடாது. சமையல், வீட்டு வேலைகள் என இதற்குள்ளேயே நான் அடங்கியிருக்க வேண்டும் அவருக்கு.

சரி இல்லறத்திலாவது எனக்கான அன்பு கிடைக்குமா என்றால், அதுவும் இல்லை. இதோ... எனக்கு ஒரு மனைவி இருக்கிறாள், பிள்ளைகள் இருக்கிறார்கள், நான் ஓர் ஆண் என்ற சமூக பிம்பத்துக்காகவே நானும் குழந்தைகளும் அவருக்குத் தேவையாக இருந்தோம்.
பிள்ளைகள் மீது அன்பு இருந்தாலும், `நான்தான் இந்தக் குடும்பத்தில் எல்லாம். நீங்கள் எனக்கு அடங்கியவர்கள்' என்ற ஆதிக்கம் பிள்ளைகளிடமும் அவருக்கு உண்டு.
எனக்கு என்று செலவுக்குக் கையில் எந்தக் காசும் தராமல், 10 ரூபாய்க்குக் கூட அவரிடம் கெஞ்சிக் கேட்க வைப்பது, உறவினர்கள் மத்தியில் எப்போதும் என்னை மட்டம்தட்டியே பேசுவது, எனக்கு உடம்பு சரியில்லாத நாள்களில்கூட வீட்டு வேலைகளில் ஓய்வெடுக்க முடியாத அளவுக்குக் சாப்பாட்டில் கண்டிப்புடன் இருப்பது, வீட்டில் எந்த முடிவையும் ஒரு பேச்சுக்குக் கூட என்னை ஆலோசிக்காமல் அவரே எடுத்துவிட்டு தகவலை மட்டும் எனக்குத் தெரிவிப்பது என... அவருடன் வாழ்ந்த வாழ்க்கையில் எனக்கு அன்பு, மரியாதை, அங்கீகாரம், சந்தோஷம், கருணை என எதுவுமே இல்லை. கடமைக்குத்தான் வாழ்ந்து கடந்தேன்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க
VIKATAN DEALSஎன் பிள்ளைகள், எனக்காக எத்தனையோ முறை என் கணவரிடம் சண்டை போட்டிருக்கிறார்கள். அவர் எதற்கும் அசைவதாக இல்லை. `நான் இப்படித்தான், அவளை நான் இப்படித்தான் நடத்துவேன்' என்றே நிற்பார். `நாங்க சம்பாதிச்சதும், அம்மாவை எங்ககூட அழைச்சுட்டுப் போயிடுவோம்' என்று என் பிள்ளைகள் சொல்லும்போதெல்லாம், அந்த விடுதலை நாளை எதிர்பார்த்துக் காத்திருக்கத் தொடங்கியே காலத்தைக் கடத்தினேன்.

இப்போது என் பிள்ளைகள் குடும்பத்துடன் வெளிநாட்டில் செட்டில் ஆகிவிட்டார்கள். என் விடுதலைக் கனவு நிறைவேறாமல் போய்விட்டது. அவர்களிடம் நான் சென்று நிரந்தரமாகத் தங்க முடியாத சூழல். இப்போது நானும் என் கணவரும்தான் வசிக்கிறோம். இன்றுவரை அவர் அதே ஆதிக்கத்துடன்தான் நடந்துகொள்கிறார். அப்போது காயங்களை எல்லாம் தாங்கிக்கொள்ளும் வயதிருந்தது, மனதிருந்தது, என்ன ஆனாலும் பிள்ளைகளை நல்லபடியாக வளர்த்து ஆளாக்கவாவாது இவருடன்தான் வாழ்ந்தாக வேண்டும் என்ற கட்டாயம் இருந்தது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
இன்று, என் கணவரை சகித்துப்போகும் வயதும் மனதும் எனக்கில்லை. நல்லபடியாக செட்டில் ஆகிவிட்ட பிள்ளைகளின் வாழ்க்கை பற்றிய கவலையும் இல்லை. என் பிள்ளைகள் எங்களுக்கு மாதம் மாதம் பணம் அனுப்புகிறார்கள். குறிப்பாக, எனக்கு எனத் தனியாக என் அக்கவுன்ட்டுக்கே அனுப்பிவிடுகிறார்கள். இனியும் ஏன் நான் இவரிடம் இப்படி அனுதினமும் கசப்புடன், காயங்களுடன் வாழ வேண்டும் என்று தோணுகிறது. `சரி பிடிக்கவில்லை என்றால் தனியாக ஒரு வீட்டில் வசிக்க வேண்டியதுதானே' என்கிறார்கள் என் பிள்ளைகள். இத்தனை ஆண்டுகளாக, `உன்னால் என்னை என்ன செய்துவிட முடியும்' என்ற நினைப்பில்தானே என் கணவர் என்னை இந்தளவுக்கு ஆட்டிப்படைத்தார்? அத்தனை வருட மனப்போராட்டங்களுக்கும் காயங்களுக்கும் மருந்தாக, உங்களை இப்போது என்னால் விவாகரத்து செய்ய முடியும் என்று அவருக்கு காட்ட வேண்டும் என்று மனம் குமுறுகிறது.
அவருக்கும் எனக்கும் மூன்று வருடங்கள்தான் வித்தியாசம். இன்றும், காலை காபியில் இருந்து இரவு அம்மியில் அரைக்கும் துவையல்வரை எல்லாம் நான்தான் செய்ய வேண்டும் அவருக்கு. வசதியிருந்தாலும் வீட்டு வேலைகளுக்கு ஆள் வைத்துக்கொள்ளக் கூடாது. ஒரு வாரம் நான் நோய்வாய்ப்பட்டுப் படுத்தாலும், அப்போது ஹோட்டலில் வாங்கிச் சாப்பிட வேண்டுமே என்பது மட்டுமே அவரது கவலையாக இருக்குமே தவிர, `உடம்புக்குப் பரவாயில்லையா' என்ற ஒரு வார்த்தைகூட இருக்காது. கோயில், திருவிழா, தோழிகள், உறவுகள் என எங்கும் செல்லக் கூடாது, யாரையும் பார்க்கக் கூடாது. விசேஷ வீடுகளுக்குச் செல்லும்போது, அவர் கிளம்பிவிட்டால் பின்னாலேயே நானும் கிளம்பிவிட வேண்டும். நீண்ட நாள் கழித்துப் பார்ப்பவர்கள், நமக்குப் பிடித்தவர்கள் உடனெல்லாம் பேசிவிட்டு வரக்கூட அனுமதிக்காத அவசரம். இப்படி... இன்னும் நூறு அடிமைத்தனங்களை சொல்லிக்கொண்டே போகலாம்.
இப்போது சொல்லுங்கள்... இப்போதாவது இவரை நான் விவாகரத்து செய்தால் என்ன?
வாசகியின் பிரச்னைக்கு உங்கள் ஆலோசனைகளை கமென்ட்டில் பதிவு செய்யலாமே..!
தோழிகளே... இதுபோல நீங்கள் சந்திக்கும் பிரச்னைகள், உறவுச் சிக்கல்களை அவள் விகடனுடன் பகிர்ந்துகொள்ள விருப்பமா? உங்கள் அனுபவங்களை எங்களுக்கு அனுப்பலாம். avalvikatan@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கு Penn Diary என Subject-ல் குறிப்பிட்டு உங்கள் அனுபவங்களை அனுப்பி வையுங்கள். தேர்ந்தெடுக்கப்படும் அனுபவங்கள் விகடன் தளத்தில் வெளியாகும்.