அலசல்
Published:Updated:

காக்காமல் விட்ட ரகசியம், என்னால் பிரிந்த தம்பதி, தீர்வு என்ன?!

பெண் டைரி
பிரீமியம் ஸ்டோரி
News
பெண் டைரி

பெண் டைரி - ஒரு வாசகியின் கடிதம்

பள்ளிக்காலத்தில் இருந்தே என் பெஸ்ட் ஃப்ரெண்ட் அவள். அவளுக்கு அப்போது ஒரு ஃபர்ஸ்ட் லவ். ஆனால், பள்ளி முடிக்கும்போது அது பிரேக் அப் ஆகிவிட்டது. ப்ளஸ் டூவுக்குப் பிறகு, நானும் தோழியும் உள்ளூரிலேயே ஒரே காலேஜில், ஒரே கோர்ஸில் சேர்ந்தோம். கல்லூரியில், எங்கள் இருவரோடு மூவராக வந்து இணைந்தான் எங்கள் நண்பன். நான், என் தோழி, நண்பன் என மூவரும் க்ளோஸ் ஃப்ரெண்ட்ஸ் ஆனோம். எங்களுக்குள் எதிலுமே ஒளிவு, மறைவு இல்லை. ஒன்றாகப் படிப்பது, அவுட்டிங் செல்வது, எதிர்காலத்தை திட்டமிடுவது என அனைத்திலும் மூவரும் சேர்ந்தே இருப்போம்.

எனினும், தோழியின் முதல் காதல் பற்றி, என் நண்பனுக்கு எதுவும் தெரியாது. தன் ஃபர்ஸ்ட் லவ் பற்றி பேசினால் என் தோழி அசௌகர்யமாக உணர்வாள், சமயத்தில் கோபமாகிவிடுவாள் என்பதால் நான் அதைப்பற்றி எதுவும் பேசுவதில்லை. அதனால், அதைப் பற்றி கல்லூரிக் காலத்தில் எங்கள் மூவருக்கும் இடையில் எந்தப் பேச்சும் வந்ததில்லை.

காக்காமல் விட்ட ரகசியம், என்னால் பிரிந்த தம்பதி, தீர்வு என்ன?!

இந்நிலையில், இறுதியாண்டு படித்தபோது, என் தோழி, நண்பன் இருவரும் ஒருவரை ஒருவர் காதலிக்க ஆரம்பித்தனர். அதில் எனக்கும் மிக்க மகிழ்ச்சி. படிப்பை முடித்து வேலையில் சேர்ந்தபோது திருமணம் செய்துகொண்டனர். எனக்கும் திருமணம் முடிந்துவிட்டது.

திருமணத்துக்குப் பிறகு, நண்பன் வேலை காரணமாக வெளிநாடு சென்றான். தோழி ஒரு ஊரில், நான் ஒரு ஊரில், நண்பன் வெளிநாட்டில் என்று ஆன வாழ்க்கையில், எப்போதாவது போனில் பேசிக்கொள்வோம்.

இந்நிலையில், சமீபத்தில் என் தோழியை சந்தித்தேன். அப்போது அவள், பள்ளிக் காலத்தில் தான் விரும்பியவன், இப்போது தான் பணிபுரியும் அதே அலுவலகத்தில் வேலைக்குச் சேர்ந்திருப்பதாகக் கூறினாள். பழைய நினைவுகளுடன் அவன் மீண்டும் வந்து பேசியதாகவும், இவள் கண்டித்ததாகவும், ‘சரி ஃப்ரெண்ட்ஸா இருப்போம்’ என்று அவன் கேட்டுக்கொள்ள, இப்போது இருவரும் நல்ல ஃப்ரெண்ட்ஸாக இருப்பதாகக் கூறினாள். கூடவே மறக்காமல், ‘என் ஃபர்ஸ்ட் லவ் பற்றி அவனுக்கு (அவள் கணவனுக்கு) இதுவரைக்கும் எதுவும் தெரியாது. அதனால, இப்பவும் நான் சொல்லல. நீயும் சொல்லிடாத’ என்றாள்.

பிறகு பேச்சு தொடர்ந்தபோது, கல்லூரிப் பருவத்தில் இருந்ததுபோல தன் கணவனிடம் இப்போது ரிலேஷன்ஷிப்பில் தோழமை இல்லை என்றவள், ‘பேசாம நாம ஃப்ரெண்ட்ஸாவே இருந்திருக்கலாம்’ என்று வருந்தினாள்.

காக்காமல் விட்ட ரகசியம், என்னால் பிரிந்த தம்பதி, தீர்வு என்ன?!

இரண்டு மாதங்கள் கழித்து, அவள் கணவன், என் நண்பன் வெளிநாட்டில் இருந்து போனில் அழைத்திருந்தான். அப்போது, என் தோழிக்கு அவன் மீது உள்ள சின்ன சின்ன வருத்தங்கள் பற்றி நான் அவனிடம் பகிர்ந்தேன். அவற்றையெல்லாம் சரிசெய்யச் சொல்லி அவனை கேட்டுக்கொண்டேன். அதுவரை கூட பிரச்னையில்லை. ஏதோ ஓர் உணர்வின் வேகத்தில், தோழியின் ஃபர்ஸ்ட் லவ் பற்றியும், இப்போது அவன் அவள் அலுவலகத்தில் வேலை பார்ப்பது பற்றியும், இருவரும் ஆனால் நல்ல நண்பர்களாகவே பழகுவதையும் நண்பனிடம் பகிர்ந்துவிட்டேன்.

ஒரு வாரம் கழித்து என் தோழி போன் செய்தாள். தன் ஃபர்ஸ்ட் லவ் பற்றி தன் கணவன் தன்னிடம் கேட்டதாகவும், இப்போது அவன் தன் அலுவலகத்திலேயே பணிபுரிவது பற்றி எரிச்சலுடன் பேசியதாகவும் கூறியவள், என் மீது மிகவும் கோபப்பட்டாள். ‘அறிவிருக்கா உனக்கு? இதெல்லாம் நடக்கும்னுதானே நான் அவன்கிட்ட எதுவும் சொல்லாம இருந்தேன்...’ என்று திட்டினாள். எனக்கும் அப்போதுதான் நான் தவறு செய்துவிட்டேன் என்று புரிந்தது.

தொடர்ந்த நாள்களில், என் தோழிக்கும் அவள் கணவனுக்கு இடையே சண்டைகள் வளர்ந்துகொண்டே போயின. அவர்களுக்குள் இருந்த சின்ன சின்ன உரசல்கள் எல்லாம் பூதரூபம் எடுக்கத் தொடங்கின. நிம்மதியையும், சந்தோஷத்தையும் தொலைத்து, ஒருவரை ஒருவர் காயப்படுத்தினார்கள்.

இந்தச் சூழலில் எனக்கு போன் செய்தாள் தோழி. ‘எல்லாம் உன்னாலதான். எல்லா கணவன், மனைவிபோல எங்களுக்கும் சின்னச் சின்ன பிரச்னைகள் இருந்துச்சுதான். ஆனா, அவன்கிட்ட சொல்லிடாதனு நான் உங்கிட்ட சொன்ன ஒரு விஷயத்தை நீ அவன்கிட்ட சொன்னதுல இருந்து, எங்க வாழ்க்கையே புயலடிச்ச மாதிரி ஆகிக் கிடக்கு. அவன் என்கிட்ட பேசி மூணு மாசமாகுது. எங்க பிரிவும் பெருசாயிட்டே போகுது. நீ நம்பிக்கை துரோகி’ என்று என்னை வெறுத்து திட்டினாள். என்னிடம் தொடர்பையும் துண்டித்துவிட்டாள். என் நண்பனிடமும் நான் இப்போது பேசுவதில்லை.

ஒரு ரகசியத்தை காக்க வேண்டியது ஏன் அவசியம் என்று நான் பாடம் படிக்க, கொடுத்துள்ள விலை அதிகம். இப்போது என் நண்பன், தோழியின் பிரிவுக்கு நானே காரணமாகி நிற்கும் குற்றவுணர்வு, என்னை மன அழுத்தத்தில் தள்ளுகிறது. என் தோழி, நண்பன் வாழ்க்கையில் இருந்து பிரச்னைகள் விடுபட வழி என்ன?