Published:Updated:

`10 நிமிஷத்தில் பாப்பாவைக் கொஞ்சிக்கணும்!'- ரயில் பெட்டிக் கதைகள்

ரயில் பயணம்
ரயில் பயணம் ( Representational image only )

சாமானியர்களின் வாழ்க்கை இப்படித்தானே! தினமும் ஆயிரம் அலைச்சல்கள் கொண்டது. அதிலும், பெண்ணாகப் பிறந்துவிட்டால், இன்னும் அதிகம். அதுக்காக புன்னகையை விட்டுட முடியுமா?

வாழ்க்கையில் பயணங்கள் கற்றுக்கொடுக்கும் பாடங்கள் சுவாரஸ்யங்கள் நிறைந்தவை. பணிக்காகத் தினமும் விழுப்புரம் முதல் சென்னை வரை பயணிக்கும் பெண் நான். ஒவ்வொரு நாளும் ஏதாவது ஒன்றை, சக மனிதர்களிடமிருந்து கற்றுக்கொள்கிறேன். அவற்றில் ஒன்றை உங்களுடன் பகிர்ந்துகொள்கிறேன்.

ரயில் பயணம்
ரயில் பயணம்
Representational image only
`சிட்டி' ஆக்‌ஷன், `காமெடி' வடிவேலு, `லவ் யூ' மாதவன்,  தமிழ் சினிமாவின் ரயில் சிநேகங்கள்!

திங்கள் கிழமைன்னாலே, ஆபீஸ், ஸ்கூல்லுக்குச் செல்வோருக்கு தனி சோம்பல் வந்துடும். பலருக்கும் அன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை மனநிலை முழுதாகக் கலையாதிருக்கும். ஃபேஸ்புக்கிலும் திங்களைத் திட்டி ஏராளமான பதிவுகள் உலவும். ஆனால், பெண்களின் உலகத்தில திங்கள் கிழமை இன்னும் கொஞ்சம் கவலையைச் சேர்க்கும்.

`குழந்தையை ஸ்கூலுக்கு அனுப்பணும்', `அது ஹோம் வொர்க் எழுதியாச்சானு தெரியல', `என்ன லஞ்ச் ரெடி பண்ணலாம்', `டிரஸ் அயர்ன் பண்ணாம விட்டுட்டோமே'னு எழுந்திருக்கும்போதே, அந்த வாரத்துக்கான பரபரப்புடனும் பயத்துடனும் பெண்களுக்கான திங்கள்கிழமை காலை விடியும். எனக்கும் அந்தப் பொழுது அப்படிதான் விடிஞ்சுது. போன் முழுசா சார்ஜ் ஏறல, லேசான காய்ச்சல்னு வாரத் தொடக்கமே சோர்வாகத்தான் இருந்துச்சு. இன்னைக்கு கண்டிப்பா அலுவலகத்துக்குப் போகலாமா... லீவ் போடலாமா என இரட்டை மனநிலை. ஏற்கெனவே லாஸ் ஆஃப் பே யிலதான் வண்டி ஓடிட்டிருக்கு என்று மூளையில் அலாரம் அடிக்க, பரபரப்புடன் வேலையை ஆரம்பிச்சேன்.

குக்கர் விசில் அடிக்கும் சத்தம், எப்போதுமே ஆரோவில் எக்ஸ்பிரஸின் ஹார்ன் மாதிரிதான் கேட்கும். காலை ஆறு மணியை கடிகார முள் நெருங்கும் முன்பே தயாராகி வீட்டைவிட்டு வெளியே வந்தேன். "ஏண்டி உங்க ஸ்கூலில் ஒத்தை ஜடை போட்டுட்டு வர்றதை ரூல்ஸா வைக்கக் கூடாதா? ரெட்டை ஜடை பின்ன எவ்வளவு நேரம் ஆகுது''னு எதிர் வீட்டு மாலதி அக்கா, ஏழு மணி ரயிலைப் பிடிக்கும் அவசரத்தில் மகள் திவ்யாவிடம் கடிந்து கொண்டிருந்தார்.

ரயில் பயணம்
ரயில் பயணம்
Representational image only

தெருமுனையில் ஷேர் ஆட்டோவுக்குக் காத்துக்கொண்டிருந்த பெண்களின் கூட்டத்தில் நானும் இணைந்துகொண்டேன். பின்னலிடாத லூஸ் ஹேருக்கு ரப்பர்பேண்டு மாட்டியிருந்த பிரியா, அவசரத்தில் புடவையை அள்ளி முடிந்திருந்த சுதா அக்கா, வியர்வை வடிந்த முகத்தில் திட்டுத் திட்டாக பவுடர் அடித்திருந்த தேவி அக்கானு எல்லார்கிட்டயும் அழகின் மீதான அக்கறையைப் புறந்தள்ளி சரியான நேரத்தில் பஸ் ஸ்டாப்புக்கு வந்தவிட்ட ஆசுவாசம்.

வானமும் திங்கள்கிழமை காலையை எண்ணி கண்ணீர் சிந்த ஆரம்பிச்சது. எனக்கோ விடுமுறை ஆசை மீண்டும் மனசுக்குள் வந்துபோச்சு. மனசைக் கட்டுப்படுத்திய நேரத்தில் ஷேர்ஆட்டோ வந்துநின்றது. எட்டுப் பேர் பயணிக்க வேண்டிய ஆட்டோவில் ஆண், பெண் என 13 பேர்களாவது இருப்பார்கள். இந்த ஆட்டோவை விட்டால் அடுத்த ஆட்டோ எப்போ வருமோ? சரி ஏறிடுவோம்னு உள்ளே புகுத்திக்கிட்டேன். கொஞ்ச தூரத்துல 13 பேர், 17 பேராயிட்டோம்.

ஆண் பெண் சமத்துவத்தை ஏற்படுத்துவதில் ஆட்டோக்காரர்களைவிட திறன் படைத்தவர்கள் யாருமில்லை.
ரயில் பயணம்
ரயில் பயணம்
Representational image only

அந்த நெருக்கடியான பத்து நிமிடப் பயணத்திலும் டீக்கடை, இளையராஜா பாட்டு, ஆரஞ்சு வாசனை அடிக்கும் பழச் சந்தை, என மனசுக்குப் பிடித்த விஷயங்களை மனசு வருடிக்கொண்டது. 'தினமும் 300 கி.மீ பயணம் செய்யணுங்கிறது தலையெழுத்தா இருக்கே' என மனசு ஒரு பக்கம் கழிவிரக்கத்தைக் காட்டுச்சு.

அவசர அவசரமாகச் சென்று டிக்கெட் வாங்க கவுன்டரை நெருங்கினால், எனக்கு முன்பாக நிற்பவர்கள் குறைந்தது 50 பேராவது இருப்பார்கள். சில பெண்கள், வரிசையின் முன்னால் நின்றிருந்தவர்களிடம் பணம் கொடுத்து, தங்களுக்கும் டிக்கெட் வாங்கச் சொன்னார்கள். மனைவி கட்டிக்கொடுத்த சூடான சாப்பாட்டைத் தூக்கிவந்திருந்த சில ஆண்கள், "ஏம்மா... பின்னாடி நிக்கிறவங்களைப் பார்த்தா எப்படி தெரியுது? வரிசையில் நில்லுமா''னு குரல் கொடுத்தாங்க.

சரியாக காலை 6.15 க்கு ஆரோவில் எக்ஸ்பிரஸ், விழுப்புரம் தண்டவாளத்துக்கும் தனக்கும் இடையேயான காதலை ஊருக்கே சொல்லும் விதமாக, சத்தம் போட்டுட்டு வந்துநின்னுச்சு. பல தள்ளு முள்ளுகளுக்குப் பிறகு, மஞ்சள் கலர் பெயின்டால் கோடுகள் போடப்பட்டிருந்த அன்ரிசர்வேஷன் கோச்சில் ஒரு காலை வைத்தபோது, இன்னொரு காலை வைக்க இடமில்லாமல் கீழே இறங்கிட்டேன். 'முன்னாடியிருக்கும் அன்ரிசர்வேஷன் பெட்டி கொஞ்சம் காத்தாடித்தான் இருந்துச்சு அங்க போ தாயீ"னு ஒரு குரல். அதுக்கு 14 ரிசர்வேஷன் பெட்டியைக் கடக்கணும். ஆனாலும், என்னோடு சில பெண்கள் இன்ஜீன் பக்கத்தில் வரும் அந்தப் பெட்டியை நோக்கி ஓட ஆரம்பிச்சோம். ரயில் கிளம்புவதற்கான பச்சை சிக்னல் போடவே, வேறு வழியில்லாமல் ரிசர்வேசன் கோச்சில் ஏறிட்டோம்.

ரயில் பயணம்
ரயில் பயணம்
Representational image only

பெண்கள் எல்லோரும் கழிப்பறை கதவுகளுக்கு அருகில் நிற்க, நான் கொஞ்சம் உள்ளே போய் ஒரு இருக்கைக்கு அருகில் நின்னேன். டி.டி.ஆரின் திட்டுகளுக்குள்ளாகி, நானும் நகர்ந்து கழிப்பறையின் கிட்டவந்து நின்னுக்கிட்டேன். ரயில் கிளம்பின பிறகு ஒரு பெண் வேகமாக ஓடிவந்து ஏறினாள். அவளுக்கும் பாரபட்சம் இல்லாம டி.டி.ஆரின் வசவு கிடைச்சது. அது காதிலேயே விழாத மாதிரி அந்தப் பெண், "சார், செங்கல்பட்டு வரை சீட் இருந்தா அலாட் பண்ணிக்கொடுங்க"னு சொல்ல, "ரிசர்வேஷன் யாராவது வரலைனா ரயில்வே சார்ஜ் வாங்கிட்டு பண்ணித்தர்றேன்"னு சொல்லிட்டு நகர்ந்தார் டி.டி.ஆர்.

சுண்டல், கடலைமிட்டாய் விற்பவர்கள் என நிறைய பேர் கடந்துபோக, காலியாக இருந்த ஒரு சீட்டில் அந்தப் பெண் உட்காந்துகொண்டாள். மேல்மருவத்தூர் ஸ்டேஷனில் ரயில் நின்றது. 60 வயதை கடந்த ஒருவர், அந்தப் பெண் அருகே வந்து, "எந்திரிம்மா.. அடுத்தவங்க புக் பண்ண சீட்டுல வந்து உட்கார்ந்துருக்க" என்று குரல் உயர்த்தினார். அந்தப் பெண் மீண்டும் கதவருகில் வந்து நின்றுகொண்டாள். டி.டி.ஆர் மீண்டும் வந்தார். "சார் சீட் வேகண்ட் இருக்குமா"னு அந்தப் பெண் கேட்க, "உன்னால நிற்க முடியலையா? வேலை பார்க்கவிடாம தொல்லை பண்ணிட்டிருக்கே"னு எரிஞ்சு விழுந்தார். அந்தப் பெண்ணின் கண்கள் கலங்கி, கண்ணீர் துளிகள் வடிந்தன.

'உங்க வீட்டுல என்ன சாப்பாடு', 'சனிக்கிழமை நாயகி சீரியலில் பாத்தியா'னு பல சலசலப்பில் ஒரு மணி நேர பயணம். செங்கல்பட்டு ஸ்டேஷன் வந்தது. அந்தப் பெண் போன் பேசிக்கொண்டே இறங்க ஆயத்தமானாள்.

ரயில் பயணம்
ரயில் பயணம்
Representational image only

செங்கல்பட்டு ரயில் நிலையம் வந்தது. 20 நிமிடங்கள் வரை ரயில் நிற்கும் இந்த ஸ்டேஷனில் இந்தப் பெண் மட்டும் அவசர அவசரமாக இறங்கினாள். வாசலில் சென்று எட்டிப் பார்த்தேன். ஒரு வயதான தம்பதி கைக் குழந்தையைத் தூக்கிக்கொண்டு ரயிலை நோக்கி வந்தார்கள். ரயிலிருந்து இறங்கியவளின் துப்பட்டாவைப் பிடித்து, "அம்மா" என்றது அந்தக் குழந்தை. சில நிமிட கொஞ்சல்களுக்குப் பின் ரயில் புறப்படத்தயாரானதும் வயதான அம்மா, "குழந்தையைக் கொடு பிரியா" என்று சொல்ல, குழந்தை அவளின் சுடிதாரைப் பிடித்துக்கொண்டு அழ ஆரம்பித்தது; அவளும் அழுதாள்.

அவ்வளவு நேரம் சீரியல் கதைகள் பேசியவர்கள்கூட, "என் குழந்தையும் இப்படித்தான்"னு தாய்மை உணர்வுக்கு வந்தார்கள். சிறிது நேர பாசப் போரட்டத்துக்குப் பின், "அப்பா, நானும் சென்னை வரை வரட்டுமா? ஆபீஸ்க்கு பர்மிஷன் போட்டுக்கிறேன்"னு அந்தப் பெண் கேட்க, "டிக்கெட் எடுக்கணும்ல"னு அப்பா கேட்டாரு. "பாப்பா அழலைன்னா செங்கல்பட்டுலேயே இறங்கி ஆபீஸ்க்குப் போயிடலாம். அழுதாள்னா, சென்னை வரைக்கும் போய்ட்டு திரும்பலாம்னு யோசிச்சே சென்னை வரைக்கும் டிக்கெட் எடுத்துட்டேன்" என்று அவள் சொல்லும்போது, தாய்மையின் ஏக்கமும் அவள் முகத்தில் தெரிந்தது.

ரயில் பயணம்
ரயில் பயணம்
Representational image only

அப்பாவின் பதிலுக்குக் காத்திருக்காமல் ரயிலில் ஏறிக்கொண்டாள். அடுத்த சில நொடிகளில் ரயில் நகர்ந்தது. கொஞ்சல்கள், சிரிப்புகள், முத்தங்கள் என அந்த அம்மா - மகள் அவர்களின் உலகத்தில் பயணம் செய்துகொண்டிருந்ததைப் பார்க்கும்போது, ஆபீஸ் பற்றிய டென்ஷன் எனக்கும் தற்காலிகமாக மறந்தது. மாம்பலம் ரயில் நிலையம் நெருங்கியது. தோளில் சாய்ந்தவாறு தூங்கிவிட்ட குழந்தையை அம்மா கைக்கு மாற்றி, முத்தம் கொடுத்துவிட்டு இறங்குவதற்காகக் கதவருகே வந்தாள் அந்தப் பெண்.

'எங்க வேலை பார்க்கிறீங்க... செங்கல்பட்டில் இறங்கிட்டு ஏன் திரும்ப சென்னை வர வந்தீங்கனு?'னு அவளிடம் கேட்டேன். கண்ணீரை அடக்க முயன்றவாறே, "நான் செங்கல்பட்டில் ஒரு கம்பெனியில் வேலை பார்க்கிறேன். விழுப்புரத்தில் மாமியார் வீட்டிலிருந்து டெய்லி வந்துட்டு போறேன். குழந்தையை மாமியாரால பார்த்துக்க முடியல. சென்னையில் அப்பா வீட்டில் வளருது. வாரம் ஒருமுறை பார்த்துட்டு வருவேன். நேத்து ஒரு விஷேசம்னு அம்மா, அப்பா குழந்தையைத் தூக்கிட்டு செங்கல்பட்டு வந்தாங்க. நீ இறங்கும் ரயிலில்தான் நாங்க சென்னைக்குப் போறோம். அப்போ குழந்தையைப் பாத்துக்கோ. D1 பெட்டிக்கு வந்துருனு சொல்லிருந்தாங்க. அதனால்தான் இந்தப் பெட்டியில் ஓடிவந்து ஏறினேன். என்னைப் பார்த்து குழந்தை அழுததும் மனசு கேட்காம சென்னை வரை வந்தாச்சு. இப்போ மறுபடியும் செங்கல்பட்டு ரயில் பிடிச்சு ஓடணும்.

ரயில் பயணம்
ரயில் பயணம்
Representational image only
டிக்கெட் எடுக்கலாம், முன்பதிவு செய்யலாம்... ரயில் பயணத்தை எளிதாக்கும் 4 ஆப்கள்!

கம்பெனியில வேலை குவிஞ்சு கிடக்கும். உடம்பு அடிச்சுப் போட்ட மாதிரிதான் இருக்கு. அதுக்காக, குழந்தையின் அழுகையைப் பார்த்துட்டு எப்படிச் சும்மா போகமுடியும். டெய்லிகூட சென்னைக்கு வருவேன். விரும்பி ஒரு செயலைச் செய்யும்போது களைப்பு மறந்துடும்"னு லேசா புன்னகை செஞ்சுக்கிட்டே இறங்கிப் போனாள்.

சாமானியர்களின் வாழ்க்கை இப்படித்தானே! தினமும் ஆயிரம் அலைச்சல்கள் கொண்டது. அதிலும், பெண்ணாகப் பிறந்துவிட்டால், இன்னும் அதிகம். அதுக்காக புன்னகையை விட்டுட முடியுமா? எழுத்தாளர் பிரபஞ்சனின் வரிகள்தான் நினைவுக்கு வருகின்றன.

'எவ்வளவு பிரச்னைகளுக்கு மத்தியிலும் ஒரு பூ பூக்கத்தானே செய்கிறது?'
அடுத்த கட்டுரைக்கு