எனக்குத் திருமணம் முடிந்து 10 வருடங்கள் ஆகின்றன. என் கணவர் ஒரு தனியார் நிறுவனத்தில் பணிபுரிகிறார். எங்களுக்கு 8 வயதில் ஓர் ஆண் குழந்தை இருக்கிறான். என் புகுந்த வீட்டினர் என் கணவரை தேவைக்குப் பயன்படுத்திக்கொள்வதும், அவர்களின் குணம் பற்றி இவருக்குப் புரியாமல் இருப்பதும்தான் என் பிரச்னை.
என் கணவர் வீட்டில் அவர்தான் மூத்தவர். இரண்டு தம்பி, இரண்டு தங்கைகள் இருக்கிறார்கள். அனைவரிலும் வசதியில் குறைவாக இருப்பது நாங்கள்தான். ஆனால், பாசத்தில் என் கணவரை விஞ்ச யாரும் இல்லை. அப்பா, அம்மா, தம்பி, தங்கைகளுக்கு ஒரு தேவை என்றால் அன்பால் கிடந்து உழைப்பார். ஆனால், அந்த அன்பையே அவர்கள் அனைவரும் தங்கள் காரியங்களுக்காகப் பயன்படுத்திக்கொள்வது வேதனை.

உதாரணமாக, தங்கைகளுக்கு மொத்தக் கடையில் மளிகை வாங்கிக் கொடுப்பது முதல் உடன் பிறந்தவர்கள் யார் வீட்டிலாவது காதுகுத்து, கிரகப்பிரவேசம் என விசேஷம் வந்தால் பந்தக்கால் முதல் பந்தி வரை எல்லா வேலைகளையும் தன் தலைமேல் போட்டுக்கொள்வது வரை ஓடோடி செய்வார் என் கணவர். ஆனால், அதற்கான பதில் அன்பையோ, மூத்தவர் என்ற சபை மரியாதையையோ அவர்கள் யாரும் தருவதே இல்லை.
தங்கைகளின் விசேஷங்களில் தாய்மாமன் முறை செய்ய இவரை தேடும்போது, வாட்டர் கேன்களை லோடு எடுத்து வரவோ, சமையற்கட்டில் சமையலை மேற்பார்வை பார்த்துக்கொண்டோ இருப்பார். `அந்த வேலையை எல்லாம் விட்டுட்டு முறை செய்ய அண்ணனை முதல்ல சபைக்கு வரச் சொல்லுங்க' என்று இவர் தங்கைகள் தன் அண்ணனைத் தேடினால், எனக்கும் மனசு நிறைந்துபோகும். ஆனால், `அண்ணன் ஏதாச்சும் வேலையில இருக்கும்' என்று சொல்லிவிட்டு, இவருக்கு இளையவரை அழைத்து அந்த முறையை செய்ய வைக்கும்போது, என் மனசு உடைந்துபோகும்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க
VIKATAN DEALSஇவர் தம்பிகளுக்கும், அண்ணன் மூத்தவர் என்ற அன்போ, மரியாதையோ இருக்காது. நம்மிடம் பணம் இருக்கிறது, கெத்து இருக்கிறது. அண்ணன் நம்மைவிட வசதிக் குறைவாக இருக்கிறார். எனவே, வீட்டு, வெளி வேலைகளை அவரிடம் சொல்லலாம், செய்துவிடுவார் என்றே இவரை நினைக்கிறார்கள். மேலும், தேவை முடிந்ததும் இவரை கண்டுகொள்ளாமல் விடுவது, அல்லது தவிர்த்துவிடவும் செய்கிறார்கள். உதாரணமாக, அவர்கள் ஏதேனும் ஒரு புதுத் தொழிலைத் தொடங்குகிறார்கள் என்றால், அந்த பூஜைக்கு அண்ணனை அழைப்பதில்லை. ஆனால், அந்தத் தொழிலுக்கான சான்றிதழ்கள், ஆவணங்களுக்கு அரசு அலுவலகத்துக்கு அலையும் வேலைகளை அண்ணனிடம் கொடுக்கிறார்கள். அதேபோல, ஐந்து பிள்ளைகள் இருந்தாலும், அவர்களின் அப்பா, அம்மாவை மருத்துவமனை அழைத்துச் செல்வது முதல் மாமனார் வீட்டில் மோட்டார் ரிப்பேர் என்றால் சரிசெய்வது வரை இவர்தான், இவர் மட்டும்தான் ஓட வேண்டும். மற்றவர்கள் கண்டுகொள்ள மாட்டார்கள்.

இவ்வளவுக்கும், இவர் எங்கள் வீட்டுப் பொருளாதாரத் தேவைகளுக்கு உடன் பிறந்தவர்கள் யாரிடமும், இதுவரை எந்த உதவியும் கேட்டதில்லை. எவ்வளவு கஷ்டமாக இருந்தாலும் நாங்களேதான் சமாளித்துக்கொள்வோம். நானும் வேலைக்குச் செல்வதால் என்னால் முடிந்த அளவுக்கு அவருக்குப் பொருளாதார சப்போர்ட் கொடுக்கிறேன்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
நான் இவரிடம் கேட்பதெல்லாம் ஒன்றுதான். `உங்கள் உடன் பிறந்தவர்களுக்கு உங்கள் மேல் அண்ணன் என்ற முதல் மரியாதையோ, உளப்பூர்வமான அன்போ இல்லை. தங்கள் வேலைகளுக்குத்தான் உங்களைப் பயன்படுத்திக்கொள்ளப் பார்க்கிறார்கள். ஒரு மனிதனிடம் இருப்பதிலேயே விலை மதிக்க முடியாதது, நேரம்தான். வேலை போக உங்களுக்குக் கிடைக்கும் நேரத்தை, என்னுடனும் மகனுடனும் செலவழியுங்கள் அல்லது ஓய்வெடுங்கள் அல்லது, சைடில் சின்னதாக ஏதாவது ஒரு தொழில்கூட தொடங்கி அந்த வேலையைப் பாருங்கள். இப்படி உங்கள் நேரம் அனைத்தையும் உங்கள் வீட்டு ஆள்களுக்கே விரயமாக்காதீர்கள்' என்று பக்குவமாக, கோபமாக, அழுது, கெஞ்சி என்று சொல்லிப் பார்த்துவிட்டேன்.
`என் தம்பி, தங்கைகளுக்கு என் மேல் பாசம் உள்ளது, அது உனக்குத்தான் புரியவில்லை. அப்படியே இல்லை என்றாலும் அவர்கள் இளையவர்கள், அப்படித்தான் இருப்பார்கள். மூத்தவனான நான்தான் அனைவரையும் அனுசரித்துச் செல்ல வேண்டும். மேலும், இப்படி இருப்பதுதான் எனக்கு சந்தோஷமாக, நிறைவாக இருக்கிறது. என்னை இப்படியே விட்டுவிடு. மூத்த மருமகளாக, அண்ணியாக நீயும் மெச்சூரிட்டியுடன் நடந்துகொள்ளப் பார்' என்கிறார்.
இவருக்கு எப்படி புரியவைப்பது நான்?
வாசகியின் பிரச்னைக்கு உங்கள் ஆலோசனைகளை கமென்ட்டில் பதிவு செய்யலாமே..!
தோழிகளே... இதுபோல நீங்கள் சந்திக்கும் பிரச்னைகள், உறவுச் சிக்கல்களை அவள் விகடனுடன் பகிர்ந்துகொள்ள விருப்பமா? உங்கள் அனுபவங்களை எங்களுக்கு அனுப்பலாம். avalvikatan@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கு Penn Diary என Subject-ல் குறிப்பிட்டு உங்கள் அனுபவங்களை அனுப்பி வையுங்கள். தேர்ந்தெடுக்கப்படும் அனுபவங்கள் விகடன் தளத்தில் வெளியாகும்.