Published:Updated:

படுத்த படுக்கையான மாமனார், வீட்டில் காணாமல்போன 20 பவுன் நகை, என் சந்தேகம் சரியா?! #PennDiary-72

Penn Diary

மற்ற சொத்து, பணம் பற்றியெல்லாம் பேசும் என் கணவரின் அண்ணன் குடும்பம், இந்த நகைகள் பற்றி மட்டும் பேசுவதே இல்லை. நான் அவர்களை சோதிப்பதற்காகவே ஒருமுறை கேட்டபோதும், ‘ஒரு அஞ்சு பவுன் இருக்கும், ஆனா அப்பா அதை என்ன பண்ணினார்னுதான் தெரியலை’ என்றார்கள்.

படுத்த படுக்கையான மாமனார், வீட்டில் காணாமல்போன 20 பவுன் நகை, என் சந்தேகம் சரியா?! #PennDiary-72

மற்ற சொத்து, பணம் பற்றியெல்லாம் பேசும் என் கணவரின் அண்ணன் குடும்பம், இந்த நகைகள் பற்றி மட்டும் பேசுவதே இல்லை. நான் அவர்களை சோதிப்பதற்காகவே ஒருமுறை கேட்டபோதும், ‘ஒரு அஞ்சு பவுன் இருக்கும், ஆனா அப்பா அதை என்ன பண்ணினார்னுதான் தெரியலை’ என்றார்கள்.

Published:Updated:
Penn Diary

என் மாமியார் வீட்டில் என் கணவர், அவர் அண்ணன் என இரண்டு பிள்ளைகள். 15 வருடங்களுக்கு முன் வரை கூட்டுக்குடும்பமாக ஒரே வீட்டில் வசித்தோம். பின்னர், என் கணவர் புதிதாக ஒரு தொழில் தொடங்க எங்கள் குடும்பம் அருகில் இருந்த நகரத்துக்குக் குடிபெயர்ந்தோம். என் மாமனார், தன் மூத்த மகனுடன் கிராமத்தில் வாழ்ந்து வந்தார்.

Old age (Representational image)
Old age (Representational image)
Pixabay

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

நலமாக இருந்த என் மாமனாருக்கு திடீரென பக்கவாதம் ஏற்பட்டதால், உடல்நிலை குன்றினார். இரண்டு மாதங்களாக படுத்த படுக்கையாக இருந்தார். பேச்சு எதுவும் இல்லை. ஒரு மாதமாக நான் கிராமத்தில்தான் தங்கியிருந்தேன். என் கணவரும், என் மகளும் வார இறுதி நாள்களில் வந்து என் மாமனாரை பார்த்துச் சென்றார்கள். ஒரு கட்டத்தில் சிகிச்சை எதுவும் கைகொடுக்காமல் போக, இரண்டு மாதங்களுக்கு முன், என் மாமனார் இறந்துவிட்டார்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இந்நிலையில், என் மாமனார் வெளியே கைமாத்தாக, கடனாகக் கொடுத்திருக்கும் பணம் பற்றியெல்லாம் எந்த விவரமும் தெரியவில்லை என, என் கணவரின் அண்ணனும், அவர் மனைவியும் புலம்பியபடியே இருக்கிறார்கள். கடந்த பொங்கலுக்கு நான் ஊருக்குச் சென்றிருந்தபோது, என் மாமனார், அவரிடமிருந்த என் மாமியாரின் நகைகள் (மாமியார் ஏற்கெனவே இறந்துவிட்டார்), மற்றும் அவர் வசமிருந்த அவரது செயின், மோதிரம் என எல்லாவற்றையும் என்னிடம் கொடுத்து, ‘இதை நீ எடுத்துட்டுப்போய் வெச்சுக்கிறியாம்மா? இதுல மொத்தம் 20 பவுன் இருக்கும். எனக்கு அப்புறம், இதை என் ரெண்டு பசங்களும் 10, 10 பவுனா பிரிச்சுக்கோங்க’ என்றார்.

Jewels
Jewels

பெரியவர் குடும்பம் அவருடன் இருக்கும்போது, அந்த நகைகளை நான் எங்கள் பாதுகாப்பில் எடுத்து வருவது சரியில்லை என்பதால், ‘இங்கேயே இருக்கட்டும் மாமா. அதெல்லாம் பின்னாடி பார்த்துக்கலாம்’ என்று சொல்லிவிட்டேன். என் மாமனார் இப்படி என்னிடம் கேட்டது, என் கணவரின் அண்ணன் மனைவிக்குத் தெரியவந்தால், ‘எங்ககிட்ட கொடுக்காம ஏன் உங்ககிட்ட கொடுத்து வெச்சிருக்க சொல்லணும்?’ என்று எண்ணி ஒருவேளை சங்கடப்படலாம் என்பதால், அவரிடம் சொல்லாமல் தவிர்த்துவிட்டேன்.

இந்நிலையில், தற்போது என் மாமனார் மறைந்த பின்பு, என் கணவரின் அண்ணனும் அவர் மனைவியும் சொத்துகள், பணம் என்று பேசும்போது எனக்கு அந்த நகைகள் பற்றி ஞாபகம் வந்து, ‘மாமா கொஞ்சம் நகை வெச்சிருந்தாரே வீட்டுல...’ என்று யதார்த்தமாகத்தான் கேட்டேன். உடனே இருவரும் பதற்றமாகிப் பேச ஆரம்பித்துவிட்டார்கள். ’நகையா? வீட்டுல எந்த நகையும் இல்லையே?’ என்றார்கள். ‘மாமா பீரோவுல எல்லாம் பார்த்தீங்களா?’ என்று நான் கேட்க, என்னை அழைத்துச் சென்று, என்னுடன் சேர்ந்து தேடினார்கள். அங்கு நகை இல்லை. ‘எங்கயும் அடகுவெச்சுட்டாரோ, யாருக்காவது உதவுறேன்னு கொடுத்துட்டாரோ, இல்லை மறதியில எங்கேயும் தொலைச்சுட்டாரோ தெரியலையே’ என்றார்கள் இருவரும்.

Husband - Wife (Representational Image)
Husband - Wife (Representational Image)

எனக்கு, நகைகள் என்ன ஆனதென்று தெரியவில்லையே என்ற குழப்பம் ஒரு பக்கம் இருந்தாலும், மறுபக்கம், என் கணவரின் அண்ணன், அண்ணி மீது மெலிதாக சந்தேகமும் ஏற்பட்டது. ஒருவேளை, மாமனார் படுத்த படுக்கையானதும், நகைகளை அவர்கள் எடுத்துவைத்துக்கொண்டுவிட்டார்களோ என்று. இதை என் கணவரிடம் சொன்னபோது, ‘எங்க அண்ணன், அண்ணியையே சந்தேகப்படுறியா? சொந்த வீட்டுலயே திருடுறாங்கனு சொல்றியா? பங்காளி துரோகம் செய்றாங்கனு சொல்றியா? ஒருவேளை நீ இப்படி நினைச்சது அவங்களுக்குத் தெரிஞ்சா எவ்வளவு வருத்தப்படுவாங்க? அதுக்கு அப்புறம் நாம அவங்க முகத்துல முழிக்க முடியுமா?’ என்றெல்லாம் என்னிடம் சண்டைபோட, நான் அதன் பிறகு அதைப்பற்றி எதுவும் பேசவில்லை.

இந்நிலையில், சமீபத்தில் ஒரு விசேஷத்திற்குக் கிளம்பிய என் கணவரின் அண்ணன் மனைவி அணிந்திருந்த ஒரு செயின், என் மாமனார் என்னிடம் அன்று கொடுத்த நகைகளில் இருந்த செயின் என்பதை பார்த்தேன். அதை என் கணவரிடம் சொன்னபோது, ‘காமாலைக் கண்ணால் பார்த்தால் எல்லாம் மஞ்சளாதான் தெரியும். அதே மாதிரி அண்ணி செயின் வெச்சிருக்கமாட்டாங்களா?’ என்கிறார். ‘ஒருவேளை நீ சந்தேகப்பட்டது தப்பாகி, நாளைக்கு அப்பா அந்த நகையை வேற யார்கிட்டயும் கொடுத்துவெச்சிருந்து திரும்பிவந்து சேர்ந்தா, அப்போ உன் மூஞ்சியை எங்க தூக்கி வெச்சிக்குவ?’ என்று கோபப்படுகிறார்.

Woman in confusion (Representational Image)
Woman in confusion (Representational Image)
Photo by Nicolas Postiglioni from Pexels

ஆனால், எல்லாவற்றையும் தாண்டி, அந்த நகையை என் கணவரின் அண்ணன் குடும்பம் எடுத்துக்கொண்டுவிட்டது என்றே என் உள்மனது உறுதியாகச் சொல்கிறது. காரணம், மற்ற சொத்து, பணம் பற்றியெல்லாம் பேசுபவர்கள், இந்த நகை பற்றி மட்டும் பேசுவதே இல்லை. நான் அவர்களை சோதிப்பதற்காகவே ஒருமுறை கேட்டபோதும், ‘ஒரு அஞ்சு பவுன் இருக்கும், ஆனா அப்பா அதை என்ன பண்ணினார்னுதான் தெரியலை’ என்றார்கள். அதற்குப் பிறகும் அதைப் பற்றிய பேச்சே இல்லை. எனவேதான் என் சந்தேகம் வலுப்படுகிறது. மற்ற பணம், சொத்து பற்றியெல்லாம் பேசுபவர்கள் இதைப்பற்றி மட்டும் ஏன் பேசுவதில்லை என்று. மேலும் அதை பற்றி இப்போது கேட்காவிடால், ‘நகைகளைக் காணவில்லை’ என்றே முடித்துவிடுவார்கள். ஒருவேளை கேட்டு, என் கணவர் சொல்வதுபோல அது தவறாகிவிட்டால் என்ன செய்வது என்றும் குழப்பமாக உள்ளது.

என்ன செய்வது நான்?