நானும் என் கணவரும் கிராமத்தில் வசிக்கிறோம். இருவருக்கும் 60 வயதுக்கு மேல் ஆகிவிட்டது. வீடு, நிலம், பணம் எல்லாம் இருக்கிறது. ஆனால், வாழ்க்கையில் எங்களுக்குப் பிடிப்பே இல்லை. சொல்லப்போனால் வாழவே பிடிக்கவில்லை. ஒரே மகளையும் இழந்துவிட்ட பிறகு, பாரமாகவே காலத்தை வாழ்ந்துவருகிறோம்.
அப்போது எங்கள் மகள் கல்லூரி இறுதியாண்டு படித்துக்கொண்டிருந்தாள். கேம்பஸ் இன்டர்வியூவில் தேர்வாகி இருந்தாள். இன்னொரு பக்கம், திருமண வரன்களும் வந்துகொண்டிருந்தன. `ஒரு வருஷம் வேலைக்குப் போயிட்டு, அப்புறமா கல்யாணம் பண்ணிக்கிறேன். இப்போ நான் டூருக்குப் போக பெர்மிஷன் கொடுங்க' என்றாள். கல்லூரி இறுதியாண்டு டூர் சென்றவள், சென்ற இடத்தில் ஏற்பட்ட படகு விபத்தில் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்துவிட்டாள்.


ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
எத்தனை ஆழுதாலும் ஆறாது, தேறாது. பெண்ணை இழந்த பின்னர் எதற்கு வாழ்கிறோம் என்றிருந்ததுதான். ஆனால், அவள் நினைவுகளைச் சொல்லிச் சொல்லி உருகவும் மருமகுமாவது நாம் வாழத்தான் வேண்டும் என்று நானும் கணவரும் எங்களை நாங்களே சமாதானப்படுத்திக்கொண்டோம். விதி அழைக்கும் வரை வாழ்வோம் என்று நாள்களைக் கடத்திக்கொண்டிருக்கிறோம்.
உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க
VIKATAN DEALSசொந்த ஊரில் இருக்கும் எங்களுக்குச் சொந்தங்களுக்குக் குறைவில்லை. அனைவரும் எங்களை நல்லவிதமாகக் கவனித்துக்கொண்டார்கள். ஆனால், நாள்கள் ஆக ஆக, அவர்களில் பலருக்கும் எங்கள் மீது இருக்கும் அன்பை விட அதிகமாக, எங்கள் சொத்து மீது கண் இருப்பது புரிய ஆரம்பித்தது. பிள்ளை இல்லாத சொத்து, இவர்களும் சென்றுவிட்டால் அதை நாம் எடுத்துக்கொள்ளலாம் என்ற அவர்களின் எண்ணத்தை நாங்கள் அறியவந்தபோது, முதலில் அதிர்ந்தோம். ஆனால், எங்கள் மகளையே இழந்துவிட்ட பின்னர் இந்தச் சொத்தை எல்லாம் யார் எடுத்துக்கொண்டால் என்ன என்று விட்டுவிட்டோம்.

ஆனால், அதிலும் இப்போது ஒரு பிரச்னை. என் கணவர் வீட்டு உறவுகள், என் வீட்டு உறவுகள் என, எங்கள் சொத்து யாருக்கு என்பதில் அவர்களுக்குள் ஒரு மறைமுகப் போட்டி, மோதல் இருந்து வருவதை எங்களால் அறிய முடிகிறது. எங்களுக்குப் பின் இரு தரப்புக்கும் இதுவே ஒரு பிரச்னையாகிவிடாமல் இருக்க வேண்டும் என்ற கவலை இப்போது எங்களைப் பிடித்துக்கொண்டுள்ளது. சொல்லப்போனால், எங்களை உள்ளன்போடு பார்த்துக்கொள்ளும் யாரும், எவரும் எங்கள் இரு வீட்டு உறவுகளிலுமே இல்லை. ``நாளைக்கே நீங்க படுக்கையில விழுந்தா பார்க்க நாங்கதானே வரணும்... எங்ககிட்ட சொத்தைக் கொடுக்குறதுல உங்களுக்கு என்ன தயக்கம்" என்ற எண்ணமே இப்போது அவர்களிடம் உள்ளதாகத் தெரிகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
என் கணவர், ஊரில் உள்ள சொத்துகளை எல்லாம் விற்றுவிட்டு ஏதாவது ஒரு தொண்டு அமைப்புக்குக் கொடுத்துவிட்டு, ஒரு முதியோர் இல்லத்தில் நாம் சேர்ந்துவிடலாம் என்கிறார். நானோ, கடைசிக் காலத்தில் ஊரிலேயே கிடந்துவிடுவோம், இருக்கும் சொத்தை இப்போதே இரு வீட்டு உறவுகளுக்குமாகப் பிரிந்து உயில் எழுதி வைத்துவிடுவோம் என்கிறேன். நாங்கள் என்ன முடிவெடுக்கப் போகிறோம் என்பதில், எங்களைவிட எங்கள் உறவினர்கள் அனைவரும் மிகவும் காத்திருப்புடன் இருக்கிறார்கள்.
வாழ்க்கைதான் சந்தோஷமில்லாமல் போய்விட்டது. அந்திமமாவது அமைதியுடன் முடிய வழி என்ன?
வாசகியின் பிரச்னைக்கு உங்கள் ஆலோசனைகளை கமென்ட்டில் பதிவு செய்யலாமே..!
தோழிகளே... இதுபோல நீங்கள் சந்திக்கும் பிரச்னைகள், உறவுச் சிக்கல்களை அவள் விகடனுடன் பகிர்ந்துகொள்ள விருப்பமா? உங்கள் அனுபவங்களை எங்களுக்கு அனுப்பலாம். avalvikatan@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கு Penn Diary என Subject-ல் குறிப்பிட்டு உங்கள் அனுபவங்களை அனுப்பி வையுங்கள். தேர்ந்தெடுக்கப்படும் அனுபவங்கள் விகடன் தளத்தில் வெளியாகும்.