நாங்கள் ஒரு சிறு நகரத்தில் வசிக்கும் குடும்பம். தொழில் செய்துகொண்டிருந்தார் அப்பா. அம்மா இல்லத்தரசி. அக்காவும் நானும் என இரட்டை பெண் பிள்ளைகள். பிறந்ததில் இருந்தே ஒரே மாதிரி ஆடை, ஒரே பள்ளி, ஒரே கல்லூரி, ஒரே கோர்ஸ் வரை அனைத்திலும் அக்காவும் நானும் ஒன்று போல வளர்ந்தோம், வாழ்ந்தோம். அப்படித்தான் எங்களை வளர்த்தார்கள் எங்கள் பெற்றோர்.
நாங்கள் பி.ஏ முடித்தபோது, கல்யாணப் பேச்சு ஆரம்பித்தது. அப்போது, அக்கா என்னைவிட சில நிமிட நொடிகள் முன்னர் பிறந்ததால், அவளுக்கு முதலாவது திருமணத்தை முடிக்க மாப்பிள்ளை பார்த்தோம். மிகவும் வசதியான குடும்பம், இன்ஜீனியர் மாப்பிள்ளை என்று அமைந்தது. 100 பவுன் நகை, சீர் எல்லாம் கொடுத்து திருமணம் முடித்து வைத்தார் அப்பா. அக்கா நல்லபடியாக வாழ்க்கையை ஆரம்பித்தார்.

ஒரு வருடம் கழித்து, எனக்கு மாப்பிள்ளை பார்க்க ஆரம்பித்தனர். ஆனால், அப்போது எதிர்பாரா விதமாக அப்பாவுக்குத் தொழிலில் பெருத்த நஷ்டம் ஏற்பட, குடும்பப் பொருளாதாரம் தலைகீழானது. எனவே, எனக்கு மாப்பிள்ளை பார்ப்பதையும் தள்ளிவைத்தனர். ஆனால், இரண்டு வருடங்களாகியும் அப்பாவால் நஷ்டத்திலிருந்து எழ முடியவில்லை. எனவே, இனியும் என் திருமணத்தை தள்ளிப்போட வேண்டாம், இருப்பதை வைத்து முடித்துவிடுவோம் என மாப்பிள்ளை பார்த்து மணம் முடித்தனர்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க
VIKATAN DEALS30 பவுன் நகை, சீர் வரிசை என எல்லாமே அக்காவுக்குச் செய்ததில் எனக்கு 50% கூட செய்யவில்லை. மாப்பிள்ளை, ஐடிஐ முடித்துவிட்டு எலக்ட்ரானிக் கடை வைத்திருந்தார். வீட்டுக்கு ஒரே பையன். வசிக்கும் சின்ன வீட்டை தவிர சொத்து என்று எதுவும் இல்லை. திருமணத்துக்கு முன் என் பெற்றோர், `அக்கா மாதிரி நமக்கு நல்ல இடத்துல மாப்பிள்ளை பார்க்கலை, நிறைவா சீர் செய்யலையேனு நினைக்காத, அப்பாவுக்கு மறுபடியும் தொழில் சரியானதும் உனக்கும் அக்காவுக்கு சமமா எல்லாத்தையும் பண்ணிடுவோம்' என்றனர். பெண் பிள்ளைகளுக்குத் திருமணம் முடிக்கும் நெருக்கடியில் உழலும் பெற்றோரின் நிலை பற்றி புரிந்துகொள்ளும் அளவுக்கு எனக்கு பக்குவம் இருந்ததால், `அதெல்லாம் எனக்கு எந்த வருத்தமும் இல்ல...' என்று நான் அவர்களைத் தேற்றினேன். `இருப்பது போதும்...' என்ற நிறைவுடன் வாழ்வை ஆரம்பித்தேன்.

நாள்கள் செல்லச் செல்ல, என் கணவரின் தொழிலில் தடுமாற்றம் ஏற்பட்டது. என்றாலும், என் நகைகளை அடமானம் வைத்து, கொஞ்சம் இழுத்துப் பிடித்து எனச் சமாளித்தோம். எங்கள் இரண்டு பிள்ளைகளும் வளர வளர, ஒவ்வொரு மாதமும் வரவுக்கும் செலவுக்கும் இருந்த தூரம் எங்களை வாட்டி எடுத்தது. குறிப்பாக, இந்தக் கொரோனா சூழலில் மிகவும் நெருக்கடிக்கு ஆளானோம். சாப்பாட்டுக்குக் குறைவில்லாமல் வாழ்கிறோம் அவ்வளவுதான். நான் வேலைக்குப் போகலாம் என்றால், பிள்ளைகளை விட்டுச் செல்ல முடியவில்லை. என் கணவர் குணத்தில் நல்லவர் என்பதுதான் ஒரே ஆறுதல். என்றாலும், இந்தப் பொருளாதார நெருக்கடி தரும் அழுத்தத்தில் வீட்டில் சந்தோஷத்தை உயிர்ப்பிக்கவே முடியவில்லை.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
இன்னொரு பக்கம், என் அக்காவின் வாழ்க்கை மிகவும் சொகுசாகவும் சந்தோஷமாகவும் இருப்பதைப் பார்க்கும்போது, விதியின் இந்தப் பாரபட்சத்தை ஏற்றுக்கொள்ள முடியாமல் சமயங்களில் என் மனது தவிக்கிறது. குறிப்பாக, என் பிள்ளைகள், என் அக்கா பிள்ளைகளின் ஆடை, விளையாட்டுப் பொருள்கள் உள்ளிட்டவற்றையெல்லாம் ஏக்கத்தோடு குறிப்பிட்டு, `நமக்கு ஏன்ம்மா இதெல்லாம் இல்லை...' என்று கேட்கும்போது, மனஉளைச்சலுக்கு ஆளாகிறேன். இருவரும் ஒன்றாகவே பிறந்தோம், ஒன்றாகவே வளர்ந்தோம்... விதியின் விளையாட்டால் அவள் கோபுரத்தில் இருக்கிறாள், நான் கீழே கிடக்கிறேன். என் அப்பாவின் தொழில் இன்னும் தள்ளாடிக்கொண்டுதான் இருக்கிறது. எனவே என் பெற்றோர், `ஒண்ணா பிறந்தவங்கள்ல ஒரு புள்ள அப்படியும், ஒரு புள்ள இப்படியும் ஆகிடுச்சே.... எல்லாத்துக்கும் நாங்கதான் காரணம்...' என்று மருகுகின்றனர்.
இன்னொரு பக்கம், என் நிலையால் என் அக்காவுக்கு ஏற்படும் குற்றஉணர்வால், அவள் என்னிடமிருந்து விலகிச் செல்கிறாள். அது எனக்கு இன்னும் காயத்தை ஏற்படுத்துகிறது. எனக்கு அவள் பண உதவி செய்யவில்லை என்றாலும், `சரி விடு சரியாகிடும்...' என்று அனுசரணையாக இருந்தால்கூட என் மனம் ஆறிவிடும். ஆனால் அவளோ, ஏதோ அவளுடைய வசதியான வாழ்க்கையை பார்த்து நான் பொறாமைப்பட்டுவிடுவேன், `அப்பா உனக்குக் கொடுத்ததை எனக்குக் கொடுக்காததால்தான் என் நிலைமை இப்படி ஆகிடுச்சு...' என்று சண்டை போட்டுவிடுவேன் என்று எண்ணிக்கொண்டு, அவளாகவே என்னிடமிருந்து விலகிச் செல்கிறாள்.
இதுபோன்ற செய்கைகளால் நான் அதிகம் காயப்பட, இப்போது எனக்கு அடிக்கடி, `விதி ஏன் எனக்கு இப்படி சதி செஞ்சிடுச்சு...' என்ற எண்ணம் தலைதூக்குகிறது, மன உளைச்சல் தருகிறது.
என் மனச்சலனத்துக்கு மருந்தென்ன?
வாசகியின் பிரச்னைக்கு உங்கள் ஆலோசனைகளை கமென்ட்டில் பதிவு செய்யலாமே..!
தோழிகளே... இதுபோல நீங்கள் சந்திக்கும் பிரச்னைகள், உறவுச் சிக்கல்களை அவள் விகடனுடன் பகிர்ந்துகொள்ள விருப்பமா? உங்கள் அனுபவங்களை எங்களுக்கு அனுப்பலாம். avalvikatan@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கு Penn Diary என Subject-ல் குறிப்பிட்டு உங்கள் அனுபவங்களை அனுப்பி வையுங்கள். தேர்ந்தெடுக்கப்படும் அனுபவங்கள் விகடன் தளத்தில் வெளியாகும்.