ஒரு சிறு நகரத்தில் பிறந்து வளர்ந்த பெண் நான். அப்பா ஊரில் கிடைத்த வேலைகளைச் செய்துவந்தார். அம்மா இல்லத்தரசி. நான்கு வருடங்களுக்கு முன் திடீரென அப்பாவுக்கு உடம்பு சரியில்லாமல் போக, உடல் இயக்கமும் குறைந்துபோனது. வீட்டிற்குள்ளேயே முடங்க வேண்டிய நிலை. நான் அப்போது கல்லூரி இறுதி வருடமும், தம்பி கல்லூரி இரண்டாம் வருடமும் படித்துவந்தோம்.
நான் நன்றாகப் படிப்பேன். அதைவிட, நன்றாக வாய்ப்புகளைப் பயன்படுத்திக்கொள்வேன். அப்படித்தான் கல்லூரி இறுதி வருடம் முடித்தவுடனேயே பணியில் சேர்ந்துவிட்டேன். இப்போது ஒரு பெரிய நகரத்தில் மூன்று வருடங்களாக வேலைபார்த்து வருகிறேன். நான் வேலையில் சேர்ந்ததில் இருந்தே குடும்பத்தை நான்தான் பார்த்துக்கொள்கிறேன். நான் கல்லூரி முடித்த அடுத்த வருடமே தம்பியும் கல்லூரிப் படிப்பை முடித்துவிட்டான் என்றாலும், அவனுக்கு இன்னும் நிரந்தர வேலை கிடைக்கவில்லை. சின்னச் சின்ன வேலைகளை ஒப்பந்த அடிப்படையில் செய்துகொடுத்து வருகிறான்.


ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
அலுவலகத்தில் என்னுடன் வேலைபார்க்கும் ஒருவர், என்னைக் காதலிப்பதாக இரண்டு வருடங்களுக்கு முன் கூறினார். எனக்கும் அவரை பிடித்திருந்தது. என் வீட்டின் சூழ்நிலையை அவரிடம் சொல்லி, என் தம்பி வேலைக்குச் செல்லும்வரை காத்திருக்கச் சொன்னேன். சம்மதித்தார். இரண்டு வருடங்கள் ஆன பின்னரும், என் வீட்டில் நிலைமை சீராகவில்லை. தம்பியின் வருமானத்தை நம்பி என்னால் பெற்றோரை ஒப்படைத்துவிட்டு திருமணம் செய்துகொள்ள முடிவெடுக்க இயலவில்லை.
இன்னொரு பக்கம், என்னை விரும்புபவரின் வீட்டில் அவர் ஒரே பிள்ளை. அவர் அம்மாவுக்கு இப்போது உடல்நிலை மிகவும் சரியில்லை என்பதால், அவருக்கு மிக விரைவில் திருமணம் முடிக்க வேண்டும் என்று வற்புறுத்துகின்றனர். எங்கள் காதலுக்கும் அவர்கள் சம்மதம் சொல்லிவிட்டார்கள். ஆனால், திருமணத்தை இன்னும் தள்ளிப்போட முடியாது என்று அவருக்கு நெருக்கடி கொடுக்க ஆரம்பித்துவிட்டார்கள். `நான் என்ன சொல்றதுனே எனக்குத் தெரியல. நாளைக்கு நம்ம கல்யாணத்தை பார்க்குறதுக்கு முன்னாடியே அம்மாவுக்கு ஏதாச்சும்னா எனக்கும் அது ரொம்ப குற்றவுணர்வா இருக்கும். எங்களுக்கு எந்த எதிர்பார்ப்பும் இல்ல, கல்யாண செலவைக்கூட நானே பார்த்துக்குறேன்...' என்று புலம்புகிறார் அவர்.

என் வீட்டில் நான் என் காதலையும், என்னைத் திருமணம் செய்துகொள்ள அவர் இரண்டு வருடங்களாகக் காத்திருப்பதையும் இப்போது கூறிவிட்டேன். அவர்கள் என் காதலுக்கு சம்மதம் தெரிவித்துவிட்டனர். ஆனால், திருமணத்தை தள்ளிப்போடச் சொல்கின்றனர். `திருமணம் ஆன பின்னரும் என் சம்பளத்தில் நான் குறிப்பிட்ட தொகையை நம் குடும்பத்துக்குத் தந்துவிடுகிறேன்' என்றேன். ஆனால், அவர்களுக்கு அதில் நம்பிக்கையில்லை. `நாளைய சூழ்நிலை எப்படியிருக்கும், உன் கணவர், கணவர் குடும்பத்தினர் அதற்கு அனுமதிப்பார்களா என்று தெரியவில்லை. மேலும், உனக்கும் தனி வீடு, வாடகை, நாளை குழந்தை என்று செலவுகள் அதிகரிக்கும். எனவே, இன்னும் கொஞ்ச காலம் தம்பி ஒரு வேலையில் சேரும்வரை திருமணத்தை தள்ளிப்போடு' என்கிறார்கள்.
ஆனால், அப்படி ஒரு அவசரகதியில் ஒரு வேலையைத் தேடிக்கொள்ளும் பொறுப்பு என் தம்பியிடம் இல்லை என்பதையும் நான் அறிவேன். இது குறித்து அவனிடம் பேசினால், `உன் இஷ்டப்படி உன் வாழ்க்கையை நீ பார்த்துக்கோ. நாங்க எப்படியோ சமாளிச்சுக்குவோம்' என்று தன் இயலாமையை என்னிடம் கோபமாக வெளிப்படுத்துகிறான். அம்மாவோ, `உன்னைப் படிக்கவைத்தது அப்பாதான், உன் வாழ்க்கைக்கான அடிப்படையைக் கொடுத்தது நாங்கதான். அதனால, ஏதோ எங்க பாரத்தை உன் மேல வைப்பது போல நடந்துக்காத. உனக்கும் எங்களைப் பார்த்துக்குற கடமை இருக்கு' என்று எமோஷனலாகப் பேசுகிறார். அப்பா எதுவும் பேசுவதே இல்லை.

இப்படி, என் கல்யாணத்தில் என் பிறந்த வீட்டில் யாருக்குமே எந்த சந்தோஷமும் இல்லாத, மேலும் மனக்கசப்புகளே சூழ்ந்திருக்கும் சூழ்நிலையில் என்னால் எப்படி மகிழ்ச்சியாக திருமணம் செய்துகொள்ள முடியும்? இன்னொரு பக்கம், தன் குடும்பத்தினரின் நெருக்கடிக்கு மத்தியில் என் பதிலுக்காகக் காத்திருக்கும் காதலருக்கு நான் என்ன சொல்வது?
வாசகியின் பிரச்னைக்கு உங்கள் ஆலோசனைகளை கமென்ட்டில் பதிவு செய்யலாமே..!
தோழிகளே... இதுபோல நீங்கள் சந்திக்கும் பிரச்னைகள், உறவுச் சிக்கல்களை அவள் விகடனுடன் பகிர்ந்துகொள்ள விருப்பமா? உங்கள் அனுபவங்களை எங்களுக்கு அனுப்பலாம். avalvikatan@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கு Penn Diary என Subject-ல் குறிப்பிட்டு உங்கள் அனுபவங்களை அனுப்பி வையுங்கள். தேர்ந்தெடுக்கப்படும் அனுபவங்கள் விகடன் தளத்தில் வெளியாகும்.