நான் ஒரு சிறு நகரத்தில் வசிக்கிறேன். என் கணவர் வெளிநாட்டில் கட்டுமானக் கம்பெனியில் வேலை பார்க்கிறார். திருமணமாகி 15 வருடங்கள் ஆகின்றன. 13 வயதில் ஓர் ஆண் குழந்தை இருக்கிறான். வாழ்க்கை நன்றாகத்தான் சென்று கொண்டிருந்தது, ஐந்து வருடங்களுக்கு முன் வரை. வட்டிக் காசுக்கு அலைபாய்ந்த என் பேராசையால் இன்று என் குடும்பமே சிதறிப்போயுள்ளது.
கணவர் பத்தாம் வகுப்புப் படித்தவர். கம்பெனி கான்ட்ராக்டில் வெளிநாடு சென்றவர், ஒரு கட்டுமான நிறுவனத்தில் மேஸ்திரி வேலைபார்க்கிறார். மாதம் 30,000 பணம் அனுப்புவார். எங்கள் ஊரில் வாழ்வாதார செலவுகள் பெரிதாக இல்லை என்பதால், பொருளாதார ரீதியாக நிறைவான வாழ்க்கை, செலவு போக சேமிப்பு என்று சீராகச் சென்றுகொண்டிருந்தது.

இந்நிலையில், மூன்று வருடங்களுக்கு முன் எங்கள் சேமிப்பு 8 லட்சம் சேர்ந்திருந்த நிலையில், கணவர் அதை ஓர் இடம் வாங்கவோ, லாபம் தரக்கூடிய ஏதாவது ஒரு நிதி முதலீட்டுத் திட்டத்திலோ மாற்றச் சொன்னார். அந்த நேரத்தில், நான் மாதாந்தர சீட்டு போடும் சீட்டுக் கம்பெனிக்காரரிடம், அது குறித்த ஆலோசனையைக் கேட்டேன். `வட்டிக்குக் கொடுங்க மேடம். அஞ்சு வட்டி. அதைவிட பெரிய லாபம் உங்களுக்கு வேற எந்த முதலீட்டிலும் கிடைக்காது' என்றார். நானும் அவர் சொன்னதை பற்றி என் கணவரிடம் சொல்ல, `அதெல்லாம் ரிஸ்க். ரிட்டர்ன் குறைவா இருந்தாலும் பரவாயில்ல. பாதுகாப்பான முதலீடாவே பண்ணிடு' என்றார்.
ஆனால், ஐந்து வட்டி ஆசை என்னைப் பிடித்துக்கொண்டதால், கணவரிடம் அந்தத் தொகையை என் பெயரில் ஃபிக்ஸட் டெபாசிட்டில் போடுவதாகச் சொல்லிவிட்டு, எட்டு லட்சத்தையும் அந்த சீட்டு கம்பெனிக்காரரிடமே வட்டிக்கு கொடுத்துவிட்டேன். மாதம் மாதம் 40,000 ரூபாய் வட்டி வங்கியபோது, என் ஆசை இன்னும் அதிகமானது. எனவே, சேர்ந்த வட்டிப் பணத்தையும் மீண்டும் அந்த சீட்டு கம்பெனிக்காரரிடமே வட்டிக்குக் கொடுத்தேன்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க
VIKATAN DEALSவட்டிக்குக் கொடுப்பது உழைக்கவே தேவையில்லாத, மாதம் மாதம் கணிசமான தொகை வரக்கூடிய தொழில் என்ற கவர்ச்சி, என்னை இன்னும் அதில் உள்ளிழுத்துக்கொண்டது. ஆனால், நான் அத்தோடு நிறுத்தியிருந்தாலாவது பரவாயில்லை. அதற்குப் பிறகு செய்ததுதான் இன்னும் கொடூரம்.
உள்ளூரில் எனக்குத் தெரிந்த 50 வயதுப் பெண் ஒருவரிடம், நான் இப்படி வட்டிக்குக் கொடுத்து வாங்குவதைப் பற்றிப் பெருமையாகக் கூற, அவரும் ஆசைப்பட்டு, தன்னிடமுள்ள பணத்தையும் சீட்டுக் கம்பெனிக்காரரிடம் கொடுத்து வட்டிக்கு வாங்கிக் கொடுக்க முடியுமா என்று கேட்டார். அவர் கணவரை இழந்தவர். தன் ஒரே மகன் தன் பெயரில் வங்கியில் போட்டிருந்த 10 லட்சம் ரூபாய் பணத்தை எடுத்துக் கொடுப்பதாகக் கூறினார். ஐந்து வட்டியில் அவருக்கு மூன்று வட்டி, எனக்கு இரண்டு வட்டி கமிஷன் என்று பேசி, அவரது 10 லட்சம் ரூபாயையும் சீட்டுக் கம்பெனிக்காரரிடம் கொண்டுபோய்க் கொடுத்தோம். மாதமானால் அவர் தவறாமல் வட்டி கொடுத்துவிடுவார் என்பதால், ஒரு வருடமாக நானும் அந்தப் பெண்மணியும் உற்சாகமாக வட்டி வாங்கி வந்தோம். மேலும், சேர்ந்த வட்டிப் பணத்தையும் மீண்டும் அவரிடமே சென்று கொடுத்தோம்.

ஆனால் ஒன்றரை வருடங்களுக்கு முன், சீட்டுக் கம்பெனிக்காரர் தொழிலில் ஏற்பட்ட நஷ்டத்தால் குடும்பத்துடன் ஊரை விட்டே ஓடிவிட்டார். அதன் பிறகு என் வாழ்க்கையே சூனியமானது. என் கணவர், `நான் மழையிலும், வெயிலிலும் உழைத்து அனுப்பிய காசை, என் 10 வருட உழைப்பின் சேமிப்பை, உன் பேராசையால் இப்படி ஒன்றுமில்லாமல் ஆக்கிவிட்டாயே' என்று என்னுடம் பயங்கரமாக சண்டை போட்டு, என்னுடன் பேசுவதையே நிறுத்திவிட்டார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
என்னிடம் 10 லட்சம் ரூபாய் பணம் கொடுத்திருந்த பெண்மணியின் மகன், `என் அம்மாவை இந்த வட்டி வலையில் வீழவைத்த நீங்கள்தான் எங்கள் பணத்துக்குப் பொறுப்பு' என்று கூறி, பணத்தை திருப்பிக் கேட்டு என்னிடம் தகராறு செய்தார். நானே பணத்தை இழந்தை நிலையில் இருப்பதை சொல்ல, `யாரைக் கேட்டு என் அம்மாவை, இவ்வளவு பெரிய தொகையை இந்தச் ஆபத்தில் இழுத்துவிட்டீர்கள்?' என்று சண்டை போட்டதுடன், காவல்நிலையத்தில் புகாரும் கொடுத்துவிட்டார். என் கணவரும், அவர் உறவினர்களும், `யாரிடமும் சொல்லாமல், ஆலோசிக்காமல் உன் இஷ்டப்படி செய்தாய்தானே? நீயே உன் பிரச்னைகளைப் பார்த்துக்கொள்' என்று கூறிவிட்டனர். இப்போது, கணவரின் ஊரிலிருந்து 400 கிலோ மீட்டர் தூரத்தில் இருக்கும் என் பிறந்தவீட்டில் வந்து தஞ்சமடைந்திருக்கிறேன். என்னுடன் சேர்ந்து பணத்தை இழந்த அந்தப் பெண்மணியின் மகனிடமிருந்து தலைமறைவாக இருக்கிறேன் என்றும் சொல்லலாம்.

என் குழந்தையைப் பள்ளியில் படிக்கவைக்கவோ, அவனுக்கு நல்ல பொருளாதார சூழலை கொடுக்கவோ என் கையில் வருமானம் எதுவும் இல்லை. என் பிறந்த வீட்டினரிடமும் அதற்கான சூழல் இல்லை. எனவே, என் கணவர் மகனை ஹாஸ்டலில் சேர்க்கும் முடிவை எடுத்தபோது, வேறு வழியில்லாமல் சம்மதித்தேன். இப்போது கணவர் வெளிநாட்டில், நான் பிறந்த வீட்டில், என் பையன் ஹாஸ்டலில் எனக் குடும்பமே சிதறிக்கிடக்கிறது.
என் வாழ்வின் இந்தப் பெரும் பிழையை எப்படி சரிசெய்வது நான்?
வாசகியின் பிரச்னைக்கு உங்கள் ஆலோசனைகளை கமென்ட்டில் பதிவு செய்யலாமே..!
தோழிகளே... இதுபோல நீங்கள் சந்திக்கும் பிரச்னைகள், உறவுச் சிக்கல்களை அவள் விகடனுடன் பகிர்ந்துகொள்ள விருப்பமா? உங்கள் அனுபவங்களை எங்களுக்கு அனுப்பலாம். avalvikatan@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கு Penn Diary என Subject-ல் குறிப்பிட்டு உங்கள் அனுபவங்களை அனுப்பி வையுங்கள். தேர்ந்தெடுக்கப்படும் அனுபவங்கள் விகடன் தளத்தில் வெளியாகும்.