என் மாமனார், மாமியாருக்கு இரண்டு ஆண்கள், இரண்டு பெண்கள் என நான்கு பிள்ளைகள். என் கணவர் இரண்டாவது ஆண் பிள்ளை. மகள்களுக்கு திருமணம் முடித்துவிட்டனர். கணவரின் அண்ணன் குடும்பமும், எங்கள் குடும்பமும் கூட்டுக் குடும்பமாக மாமனார், மாமியாருடன் வசித்தோம். என் புகுந்த வீட்டில் அனைவருக்குமே மிகுந்த ஆன்மிக நம்பிக்கை உண்டு. கூடவே, ஜோசிய, ஜாதக நம்பிக்கையும்.


ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
என் மாமனார் ஒரு பெரிய கான்ட்ராக்டர். இந்த 65 வயதிலும் மாதம் லட்சங்களில் சம்பாதிக்கும் பெரும்புள்ளி. எனவே என் புகுந்த வீட்டில் சொத்து, பணம் என வசதிக்குக் குறைவில்லை. என் கணவரின் அண்ணனுக்கு ஒரு பெண் பிள்ளை, எங்களுக்கு ஓர் ஆண் பிள்ளை என யாருக்கும் மகிழ்ச்சிக்கு எந்தக் குறையும் இல்லை என வாழ்ந்தோம்... இரண்டு மாதங்களுக்கு முன்வரை.
இரண்டு மாதங்களுக்கு முன் திடீரென என் மாமனாருக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டது. எல்லா பரிசோதனைகளும் எடுத்துப் பார்த்தும், இதுதான் பிரச்னை என்பது பிடிபடவில்லை. நான்கு மருத்துவர்களை பார்த்த பின்னர், ஒருவழியாக அவருக்குப் பிரச்னை குடலில் என்பது தெரியவந்தது. அறுவை சிகிச்சை பரிந்துரைக்கப்பட்டது. நோயின் தீவிரம், அவர் வயது ஆகியற்றின் காரணமாக அறுவை சிகிச்சையின் வெற்றி சதவிகிதம் குறித்து மருத்துவர்கள் முழுமையாக நம்பிக்கை கொடுக்கவில்லை.

இதற்கிடையே இன்னொரு பக்கம், எங்கள் வீட்டில் மாமனாரின் ஜாதகத்தை ஒரு பெரிய ஜோசியக்காரரிடம் எடுத்துச் சென்றார்கள். அவர் பார்த்துவிட்டு, ‘உங்கள் இளைய மகனின் ஜாதகம் இப்போது சரியில்லை. அதுதான் அவர் அப்பாவை இப்படி படுத்துகிறது. எனவே, இவருக்கு சரியாகும் வரை இளைய மகனை வீட்டில் இருந்து விலகியிருக்கச் சொல்லுங்கள்’ என்று சொல்லிவிட்டார்.
என் மாமனார், மாமியார், மற்றும் கணவரின் அண்ணன் குடும்பம் எங்களிடம், ’உங்கள் ஜாதகத்தால்தான் இந்தப் பிரச்னைகள் எல்லாம் என்கிறார்கள். எனவே, அறுவை சிகிச்சை செய்யும் முன்பாக நீங்கள் வீட்டில் இருந்து வெளியேறிவிடுங்கள். சிறிது காலம் கழித்து திரும்பலாம்’ என்று கூறிவிட்டார்கள். எங்களால் அதை தாங்கிக்கொள்ளவே முடியவில்லை. நானும் என் கணவரும் ஆன்மிக நம்பிக்கை உடையவர்கள்தான். ஆனால், ஜாதகக் காரணங்களால் குடும்பமே பெற்ற பிள்ளையை வீட்டைவிட்டு வெளியேற்றியதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. என் கணவர், தன் அப்பா, அம்மா, அண்ணனுடன் சண்டை போட்டுவிட்டு தனிக்குடித்தனம் வந்தார்.

அதைவிடக் கொடுமையாக, அறுவை சிகிச்சை நடந்ததில் இருந்து இந்த இரண்டு மாதங்களாக, என் கணவரை என் மாமனாரை பார்க்கக்கூட அனுமதிக்கவில்லை. ‘நீ ஹாஸ்பிட்டலுக்கு, வீட்டுக்கு எல்லாம் வா, போ. ஆனா அப்பாவை நேருக்கு நேரா இன்னும் கொஞ்சம் நாளைக்குப் பார்க்க வேணாம்ப்பா...’ என்று என் மாமியாரே சொல்கிறார். என்னதான் கணவர் மீதான அக்கறையிலும், உயிர்பயத்திலும் அவர் அப்படி சொன்னாலும், எங்கள் நிலைமையில் இருந்து எப்படி எங்களால் அதை ஏற்றுக்கொள்ள முடியும்? மனக்கொதிப்பாக இருக்கிறது.
இன்னொரு பக்கம், என் கணவரின் அண்ணன் குடும்பம், இதுதான் சாக்கு என்று எங்களை விலக்கி வைக்கப் பார்க்கிறது. மாமனாரின் தொழில் கணக்குகள் எல்லாம் இப்போது கணவர் அண்ணனின் மேற்பார்வைக்கு மட்டுமே செல்கிறது; என் கணவரிடம் அவர் எந்த விவரங்களும் பகிர்ந்துகொள்வதில்லை. ஆனால், என் பிரச்னை அதைப் பற்றியல்ல. உடைந்துபோயிருக்கும் என் கணவரின் மனநிலைதான்.

என் கணவர் இயல்பிலேயே பெற்றோர் மேல் மிகவும் அன்புள்ள பிள்ளை. அவர்களின் தேவைகளை, கட்டளைகளை, விருப்பங்களை நிறைவேற்றிக் கொடுப்பதில் எந்தக் குறையும் வைக்காதவர். ஆனால், இவர் அண்ணனும், தங்கைகளும் அப்படி இல்லை. கொஞ்சம் சுயநலவாதிகள். அம்மா, அப்பாவுக்கு என எந்தப் பொறுப்பும் எடுத்துக்கொள்ளாதவர்கள். வெளியே, விசேஷம் என்று சென்றால் அவர்களை அழைத்துச் செல்வதில் இருந்து, மருத்துவமனைக்கு ரெகுலர் செக்கப்க்கு அழைத்துச் செல்வது, மருந்து, மாத்திரை ஃபாலோ அப் வரை என அனைத்தையும் இத்தனை வருடங்களாக என் மாமனார், மாமியாருக்குச் செய்து வந்தது என் கணவர்தான். ’ஒரு ஜாதகத்தை காரணம்காட்டி என்னை எப்படி அவர்களால் விலக்கிவைக்க முடிந்தது? என்னால் அப்பாவுக்கு ஆபத்து என்பதை அவர்கள் நம்பலாமா?’ என்று மனம் நொந்து, புலம்பியபடியே இருக்கிறார். அவரது மனஉளைச்சலைப் பார்க்கும்போது, என்ன உறவுகள் இவர்கள் எல்லாம் என எனக்குக் குமுறலாக உள்ளது.
எப்படி தேற்றுவது என் கணவரை?