எனக்கும் என் கணவருக்கும் 10 வருடங்களுக்கு முன் திருமணம் நடந்தது. பெற்றோர் பார்த்து நடத்தி வைத்த திருமணம். எட்டு வயதில் ஒரு மகளும், ஐந்து வயதில் ஒரு மகளும் இருக்கிறார்கள். சந்தோஷமான வாழ்க்கை. ஆனால், அனைத்தும் ஒரே நாளில் நாசமாகும் என்று நாங்கள் யாருமே எதிர்பார்க்கவில்லை.
ஒரு வருடத்திற்கு முன்னர், என் கணவர் கோவிட் தொற்றால் மரணமடைந்துவிட்டார். நானும் என் பிள்ளைகளும் நிலைகுலைந்து நின்றோம். என் கணவரின் இழப்பில் இருந்து ஆறித் தேறி வருவதற்குள், என் புகுந்த வீட்டிலும் பிறந்த வீட்டிலும் எழுந்துள்ள பிரச்னைகள் எங்கள் துயரத்தை இன்னும் இரட்டிப்பாக்குகின்றன.


ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
கேரளாவில் தொழில் செய்துவந்த என் கணவர், சொந்த ஊரில் என் மாமனாரின் பெயரிலும், தன் தம்பிகளின் பெயரிலும் பல சொத்துகளை வாங்கினார். பத்திரப் பதிவின் போது அவரால் சொந்த ஊருக்கு அடிக்கடி வந்து செல்ல முடியாது என்பதால் தன் அப்பா, தம்பிகளின் பெயரில் சொத்துகளை வாங்குவதை என் கணவர் வழக்கமாகக் கொண்டிருந்தார்.
உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க
VIKATAN DEALSஇந்நிலையில், என் கணவரின் எதிர்பாராத மறைவுக்குப் பின்னர், அவர் வாங்கிய சொத்துகளை என் பெயரில் மாற்றி எழுதச் சொல்லி என் பிறந்த வீட்டினர், மாமனாரிடம் வலியுறுத்தினர். ஆனால், ``அந்தச் சொத்துல ஒண்ணுதான் உன் புருஷன் வாங்கினது, மீதியெல்லாம் நாங்க வாங்கினது'' என்றனர் என் கணவரின் தம்பிகள். மனிதர்கள் பணத்துக்காக எப்படியெல்லாம் மாறிப்போகிறார்கள் என்று உறைந்துபோனேன் நான். இருந்தாலும், பெருந்துயரமாக இருந்த என் கணவரின் இழப்புக்கு முன்னால் வேறு எந்தப் பிரச்னையும் எனக்குப் பெரிதாகத் தெரியவில்லை என்பதால், ``தயவுசெஞ்சு சொத்துப் பிரச்னையை இப்போ கிளப்பாதீங்க... அதெல்லாம் அப்புறம் பாத்துக்கலாம்'' என்று என் பிறந்த வீட்டில் கூறிவிட்டேன்.

என் பிறந்த வீட்டில் என் அண்ணன், நான் என இரண்டு பேர். அப்பா இறந்துவிட்டார், அம்மா மட்டும்தான் இருக்கிறார். இந்நிலையில், நான் எதிர்பார்க்காத அடுத்த இடி என்னைத் தாக்கியது. என் அம்மாவும், அண்ணனும், ``உன் கணவரோட ரெண்டாவது தம்பியையே உன்னை கல்யாணம் பண்ணிக்கச் சொல்லிக் கேட்போம். சொத்தும் உனக்குத் திரும்பக் கிடைச்சிடும், உனக்கும் பிள்ளைகளுக்கும் பாதுகாப்பும் கிடைக்கும்'' என்றனர். அதிர்ந்துவிட்டேன் நான். கணவர் இறந்த ஒரு வருடத்தில் நானும் என் பிள்ளைகளும் அந்தத் துயரில் இருந்தே முழுவதும் வெளியே வராமல் இருக்கும்போது, திருமணப் பேச்சு, அதிலும் என் கணவரின் தம்பி என்று பிறந்தவீட்டினரே பேசியது, தீயள்ளி என் மீது வீசியது போல இருந்தது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
எனக்கும், என் அம்மா, அண்ணனுக்கும் இது குறித்து மிகப் பெரிய சண்டை, விவாதம் எழுந்தது. அப்போது என் அண்ணன் சொன்ன வார்த்தைகள், என்னை மிகவும் காயத்துக்கு உள்ளாக்கின. ``உன்னையும், உன் பிள்ளைகளையும் காலத்துக்கும் என்னால வெச்சுப் பார்க்க முடியாது. உனக்கு இன்னொரு மாப்பிள்ளை பார்த்துக் கல்யாணம் பண்ணி வைக்கவெல்லாம் முடியாது. நீ உன் கணவரோட தம்பியையே கல்யாணம் பண்ணிக்கிட்டா, சொத்தும் உன்கிட்ட வந்துடும், உன் பிள்ளைகளையும் நல்லா பார்த்துப்பாரு'' என்றார்.
``எனக்கு இந்த உலகத்துல யாரும் வேணாம், நான் படிச்ச டிகிரிக்கு ஏதாச்சும் ஒரு வேலை பார்த்து என் பிள்ளைகளை காப்பாத்திக்குவேன்'' என்று சொல்லிவிட்டேன்.

மறுமணம் என் சொந்த முடிவு. இப்போது நான் அதற்கான மனநிலையில் இல்லை. எதிர்காலத்தில், நான் சிங்கிள் மதராகவே இருக்கலாம்; அல்லது மறுமணமும் செய்துகொள்ளலாம். அது காலத்தின் கையில் இருக்கும் முடிவு. ஆனால், சொத்தை ஏமாற்றும் புகுந்த வீடு, சொத்துக்காக மறுமணம் செய்ய வலியுறுத்தும் பிறந்த வீடு என... இவர்கள் என் மீது செலுத்தும் வன்முறைகளில் இருந்து நான் விலக வழி என்ன?
வாசகியின் பிரச்னைக்கு உங்கள் ஆலோசனைகளை கமென்ட்டில் பதிவு செய்யலாமே..!
தோழிகளே... இதுபோல நீங்கள் சந்திக்கும் பிரச்னைகள், உறவுச் சிக்கல்களை அவள் விகடனுடன் பகிர்ந்துகொள்ள விருப்பமா? உங்கள் அனுபவங்களை எங்களுக்கு அனுப்பலாம். avalvikatan@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கு Penn Diary என Subject-ல் குறிப்பிட்டு உங்கள் அனுபவங்களை அனுப்பி வையுங்கள். தேர்ந்தெடுக்கப்படும் அனுபவங்கள் விகடன் தளத்தில் வெளியாகும்.