Published:Updated:

வீட்டுக்குத் தெரியாமல் பதிவுத் திருமணம், தொடர்ந்து விவாகரத்து... என்ன செய்வேன்? #PennDiary - 16

Penn Diary
Penn Diary

எனக்குப் பதிவுத் திருமணம் முடிந்து, விவாகரத்தும் ஆகிவிட்டது என்பதை எப்படிச் சொல்வேன் பெற்றோரிடம்? அதை எப்படி அவர்கள் தாங்குவார்கள்?

என் பூர்விகம் தென் மாவட்டத்தில் ஒரு இரண்டாம் தர நகரத்துக்கு அருகில் அமைந்துள்ள கிராமம். வீட்டில் இரண்டு பெண் பிள்ளைகள். மிடில் க்ளாஸ் குடும்பம். தட்டுத் தடுமாறி வீட்டில் என்னை இன்ஜினீயரிங் படிக்க வைத்தார்கள். நன்றாகப் படிப்பேன். கேம்பஸ் இன்டர்வியூவில் சென்னையில் வேலை கிடைத்தது. நல்ல சம்பளம்.

ஒரு தனியார் மில்லில் வேலைபார்க்கும் அப்பாவின் சம்பளம், மாதச் செலவுகளுக்குச் சரியாக இருந்தது. என் சம்பாத்தியத்தால் குடும்பத்தின் நீண்டகாலப் பொருளாதார தேவைகள் நிறைவேறின. சின்னச் சின்னதாக வாங்கியிருந்த கடன்கள் அடைந்தன. மொத்தமாகவே எங்கள் குடும்பத்தின் பொருளாதார நிலை சில படிகள் முன்னேறின.

Love
Love
Image by Gerd Altmann from Pixabay
வீட்டுவேலைகள் பார்க்கும் மகன், அவமானமாக நினைக்கும் மருமகள்... என்ன செய்வது நான்? #PennDiary - 14

நான் சென்னையில் வேலைக்குச் சேர்ந்து ஏழு வருடங்கள் ஆகின்றன. தங்கையும் கல்லூரிப் படிப்பை முடித்துவிட்டு, எங்கள் கிராமத்துக்கு அருகில் உள்ள நகரத்தில் அமைந்திருக்கும் மருத்துவமனையில் வேலை பார்த்துக்கொண்டிருக்கிறார்.

நான் என் அலுவலகத்தில் வேலைக்குச் சேர்ந்தபோது, உடன் பணிபுரிந்த ஒருவருடன் காதல் ஏற்பட்டது. இரண்டு வருடங்கள் காதலித்த நிலையில், அவருக்கு வெளிநாட்டில் வேலைகிடைத்தது. எனக்கும் வீட்டில் மாப்பிள்ளை பார்க்கும் பேச்சை ஆரம்பித்திருந்தனர். `வீட்ல சொல்லிடலாமா..?' என்று நான் கேட்டபோது, `நான் இப்போ உன்னைவிட குறைவா சம்பளம் வாங்குறேன். உங்க வீட்டுல யோசிப்பாங்க. என் வீட்டுலயும் சாதியை ஒரு பிரச்னையா சொல்வாங்க. இப்போ நான் வெளிநாட்டுக்குப் போக செலவுக்கு எங்க அண்ணன்தான் உதவுறாங்க. அதனால, வெளிநாட்டுல ஒரு வருஷம் வேலைபார்த்து, அவங்ககிட்ட வாங்குன பணத்தையெல்லாம் திருப்பிக் கொடுத்துட்டா, அப்புறம் எனக்கும் மரியாதையா இருக்கும். என் சம்பளமும் கூடியிருக்கும். வீட்டில் சம்மதிச்சாலும், சம்மதிக்கலைன்னாலும் நாம வாழ்க்கையை ஆரம்பிக்கலாம்' என்றார்.

இதற்கிடையில், `நீ வெளிநாட்டுக்குப் போனதுக்கு அப்புறம் எனக்கு வீட்டுல கல்யாணம் பண்ணிவெச்சுட்டா என்ன பண்ணுறது? அதனால யாருக்கும் தெரியாமல் ரெஜிஸ்டர் மேரேஜ் பண்ணிக்குவோம். அப்புறமா நீ வெளிநாட்டுக்குப் போகலாம்' என்று கேட்டேன் நான். அவனும் சம்மதிக்க, இருவருக்கும் பதிவுத் திருமணம் நடந்தது. இரண்டு மாதங்களில் அவன் வெளிநாட்டுக்குக் கிளம்பினான்.

ஆறு மாதங்கள் வெளிநாட்டில் இருந்தவன், அவன் வேலைபார்த்த நிறுவனத்தில் ஏற்பட்ட சிக்கலால் மீண்டும் இந்தியா திரும்பினான். இங்கு வேலை கிடைக்கவில்லை. நான் ஹாஸ்டலில் தங்கி வேலைபார்த்துக்கொண்டிருக்க, அவன் தன் அண்ணன் வீட்டிலிருந்தபடி வேலை தேடிக்கொண்டிருந்தான். இடைப்பட்ட வருடத்தில் என் சம்பளம் கணிசமாக அதிகரித்திருக்க, அவனோ, என்னைவிட அதிக சம்பளம் என்பதையே இலக்காக வைத்து வேலை தேடிக்கொண்டிருந்தான். `அப்படியெல்லாம் யோசிக்காத... கிடைக்குற சம்பளத்துல இப்போ ஒரு வேலையில் சேர்ந்துடு... அப்புறம் பார்த்துக்கலாம்....' என்றேன் நான். ஆனால், வேலையின்மையும், என்னைவிட குறைவான சம்பளத்தில் கிடைத்த வேலைகளும் அவனுக்குள் தாழ்வுமனப்பான்மையை ஏற்படுத்த, அதை என்னிடம் கோபமாக, எரிச்சலாக, சண்டைகளாக வெளிப்படுத்த ஆரம்பித்தான்.

Break up
Break up
மறுமண வாழ்க்கை, கணவரை அவமதிக்கும் பிறந்த வீட்டினர்... எப்படி புரிய வைப்பது? #PennDiary - 15

நான் அவன் நிலையை புரிந்துகொண்டு எவ்வளவோ பொறுமையாகச் சென்று, அவனுக்கு எதிர்காலம் குறித்து எவ்வளவு நம்பிக்கை அளித்தும், அவன் தன் நியாயமற்ற கோபங்களிலிருந்து தணியவே இல்லை. ஒரு வழியாக ஒரு வேலையில் சேர்ந்துவிட்டாலும், எதற்கெடுத்தாலும், `என்னைவிட அதிகமா சம்பாதிக்கிற இல்ல, அந்தத் திமிர்ல நீ அப்படித்தான் பேசுவ...' என்று இந்த அச்சிலேயே பிரச்னைகளை உருவாக்கிக்கொண்டே இருந்தான். ஒரு கட்டத்தில் பிரச்னை எல்லை மீறிப் போக, `நமக்குள் சரிவராது...' என்று இருவருமே முடிவெடுத்து, விவாகரத்துக்கு விண்ணப்பித்தோம். விவாகரத்தும் பெற்றோம்.

இந்த ஆறு வருடங்களில் என் வாழ்க்கையில் இவையெல்லாம் நடந்து முடிந்துவிட்டன. ஆனால் என் வீட்டுக்கோ இவை எதுவும் தெரியாது. திருமணம் செய்துகொள்ள என்னை இத்தனை ஆண்டுகளாக வற்புறுத்தி வந்தவர்கள், நான் தொடர்ந்து பிடிகொடுக்காததால் கோபப்பட்டு, இப்போது சோர்ந்துபோய் விட்டார்கள். `யார் மேலயாச்சும் விருப்பம் இருந்தாலும் சொல்லு... நீ கல்யாணமே பண்ணாம இருக்குறதுக்கு, உனக்குப் பிடிச்சவரை கல்யாணம் பண்ணிக்கிறதுல எங்களுக்குச் சம்மதம்தான்' என்கிறார்கள்.

ஆனால், எனக்குத் திருமணம் முடிந்து, விவாகரத்தும் ஆகிவிட்டது என்பதை எப்படி சொல்வேன் அவர்களிடம்? அதை எப்படி அவர்கள் தாங்குவார்கள்? திருமணம் நிச்சயம் செய்துகொள்ள வேண்டுமா, வேண்டாமா என்பது குறித்தும் என்னால் தெளிவான முடிவுக்கு வர முடியவில்லை. என்னால் இப்போது என் தங்கையின் திருமணமும் தள்ளிப்போய்க்கொண்டிருக்கிறது.

இந்தக் குழப்பமான கேள்விகளுக்கு விடை என்ன?

வாசகியின் பிரச்னைக்கு உங்கள் ஆலோசனைகளை கமென்ட்டில் பதிவு செய்யலாமே..!
தோழிகளே... இதுபோல நீங்கள் சந்திக்கும் பிரச்னைகள், உறவுச் சிக்கல்களை அவள் விகடனுடன் பகிர்ந்துகொள்ள விருப்பமா? உங்கள் அனுபவங்களை எங்களுக்கு அனுப்பலாம். avalvikatan@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கு Penn Diary என Subject-ல் குறிப்பிட்டு உங்கள் அனுபவங்களை அனுப்பி வையுங்கள். தேர்ந்தெடுக்கப்படும் அனுபவங்கள் விகடன் தளத்தில் வெளியாகும்.
அடுத்த கட்டுரைக்கு