நான் பிறந்தது மிகவும் ஏழ்மையான குடும்பம். அம்மா இரண்டு, மூன்று வீடுகளில் வீட்டு வேலை பார்த்துக்கொண்டிருந்தார். அப்பா கட்டட வேலைக்குச் சென்றுகொண்டிருந்தார். எனக்கு ஓர் அக்கா, ஒரு தம்பி. என் எட்டு வயதில் என் அப்பாவும் அம்மாவும் ஒரு விபத்தில் இறந்துவிட்டார்கள். நான், அக்கா, தம்பி அநாதரவானோம். கிராமத்தில் இருந்த தாத்தா, பாட்டி எங்களை வளர்ப்பதாகச் சொன்னார்கள்.


ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
அப்போது, என் அம்மா வீட்டு வேலை பார்த்துக்கொண்டிருந்த உரிமையாளர் தம்பதிக்கு, 15 வருடங்களாகக் குழந்தை இல்லை. அம்மா வேலை செய்யச் செல்லும்போது அவருடம் நானும் செல்லும்போதெல்லாம், என்னிடம் ஆசையாகப் பேசுவார்கள், கொஞ்சுவார்கள், என்னிடம் மிகவும் அன்பாக இருப்பார்கள். என் அம்மா, அப்பா இறந்தபோது, எங்கள் தாத்தா, பாட்டியிடம் வந்த அவர்கள், ‘உங்க ரெண்டாவது பேத்தியை நாங்க தத்தெடுத்துக்குறோம். ஆனா ஒரு கண்டிஷன். நீங்க யாரும் வந்து பார்க்குறது, பேசுறதுனு அவகிட்ட உறவு கொண்டாடக் கூடாது. இதுக்கு சம்மதம்னா சொல்லுங்க’ என்று கேட்டார்கள்.
என் தாத்தா, பாட்டி மூன்று பேரக்குழந்தைகளுடன் திக்கற்று நின்ற அந்த சூழலில், அதில் ஒரு பேத்திக்காவது நல்ல வழி கிடைக்கிறது என்பது மிகப்பெரிய நிம்மதியாக, மகிழ்ச்சியாக இருந்தது அவர்களுக்கு. என்னை தத்துக்கொடுத்துவிட்டார்கள். ஆரம்பத்தில், என் அக்கா, தம்பியை பிரிந்த சோகத்தில் இருந்த என்னை, என்னைத் தத்தெடுத்த அம்மா, அப்பாவின் பாசம் கொஞ்சம் கொஞ்சமாக அதிலிருந்து மீட்டெடுத்தது. படிப்பு, ஆடைகள், விருப்பங்கள் என ராஜ வாழ்க்கை கிடைத்தது. அதுவரை நான் வாழ்ந்த வறுமை வாழ்வுக்கு முற்றிலும் எதிரான செழிப்பான வாழ்வு. என்றாலும், மனதின் ஓர் ஓரத்தில், அங்கு என் அக்காவும், தம்பியும் என்ன செய்வார்கள் என்ற எண்ணம் ஓடிக்கொண்டே இருக்கும்.

பள்ளிக் காலத்தில், என் அப்பா, அம்மாவுக்குத் தெரியாமல் என் அக்கா, தம்பியை என் பள்ளி வளாகத்துக்கு அருகே சந்தித்துப் பேசுவது என் வழக்கம். அப்படி நான் அவர்களைச் சந்தித்ததை எப்போதாவது அறிய நேரிடும்போதெல்லாம், என் அம்மாவும், அப்பாவும் என்னிடம் மிகவும் மனம் காயப்பட்டு பேசுவார்கள். ‘எங்களுக்கு நீதான் உலகம். ஆனா, உனக்கு என்ன இருந்தாலும் நாங்க தத்தெடுத்த அப்பா, அம்மாதானே?’ என்று சொல்லி அழுவார்கள். அவர்கள் அன்பு நிஜம். எனவே, அதை நான் காயப்படுத்தக் கூடாது என்று எண்ணினேன். மேலும் எனக்கு ஒரு நல்ல வாழ்க்கையைக் கொடுத்த அவர்களுக்கு நான் பதிலுக்குச் செய்ய வேண்டிய நன்றி இதுதான் என்ற முடிவுடன், என் மனதை கல்லாக்கிக்கொண்டு அக்கா, தம்பியை சந்திப்பதை நிறுத்திவிட்டேன்.
என் கல்லூரிக் காலம் முழுக்க அவர்களை நான் சந்திக்கவில்லை. என் சூழலைப் புரிந்துகொண்ட அவர்களும், எனக்கு எதுவும் பிரச்னை வந்துவிடக் கூடாது என்ற எண்ணத்தால், என்னைச் சந்திப்பதை தவிர்த்துக்கொண்டார்கள். இப்போது நான் படிப்பை முடித்துவிட்டேன். வீட்டில் எனக்கு மாப்பிள்ளை பார்த்துக்கொண்டிருக்கிறார்கள். சமீபத்தில் யதேச்சையாக, மார்க்கெட்டில் என் அக்காவையும், தம்பியையும் பார்த்தேன். அங்கே கொய்யாப்பழக் கடை போட்டிருந்தார்கள். இருவரும் பள்ளிப்படிப்புடன் படிப்பை நிறுத்திவிட்டு, இப்படி சீஸனுக்கு கிடைக்கும் வேலைகளைப் பார்த்து வருவதாகச் சொன்னார்கள். என்னால் கண்ணீரை கட்டுப்படுத்த முடியவில்லை. அவர்களும் அழுதார்கள். மூவரும் அழுது, எங்களைப் பிரித்த விதியை எங்கள் கண்ணீரால் கழுவினோம்.

அவர்களிடம் அலைபேசி எண்கள் பரிமாறிக்கொண்டேன். அவ்வப்போது பேச ஆரம்பித்தேன். இப்போது நான் சம்பாதிப்பதால், என்னால் அவர்களுக்கு என் சுயசம்பாத்தியத்தில் இருந்து உதவ முடியும் என்று கூறினேன். இருவரும் மறுத்துவிட்டார்கள். ‘உன் இடத்துல இருந்து பார்க்கும்போது நாங்க ஏழைகளாதான் தெரிவோம். ஆனா, தினசரி செலவுகளுக்கு காசு கிடைச்சிடுது. குறையெல்லாம் ஒண்ணும் இல்ல, நல்லாதான் இருக்கோம். காசெல்லாம் வேணாம். அதை வாங்கினாதான், நாளைக்கு உன் தத்து அப்பா, அம்மாகிட்ட நாங்க குறுகி நிற்கணும்’ என்றார்கள்.
இப்போது, என் அப்பா, அம்மாவிடம், நடந்தது அனைத்தையும் சொல்லி, அவர்களுக்குத் தெரியாமல் நான் என் உடன் பிறந்தவர்களுடன் பேசுவது தவறு என்று எனக்குப் படுகிறது என்று கூறினேன். எனவே, அவர்களிடம் பேச எனக்கு அனுமதி அளிக்குமாறு கேட்டேன். இதனால், நான் அவர்கள் மேல் கொண்டுள்ள அன்பில் எள் அளவும் குறையாது என்று மனதிலிருந்து கூறினேன். ஆனால், இம்முறையும் அவர்கள் மிகவும் காயப்பட்டுப் போனார்கள். என் மீது அவர்களுக்கு இருக்கும் பொசசிவ்னெஸ், ஓர் அச்சமாக இப்போது அவர்களிடம் உருமாறி வருவதை பார்க்கிறேன். இவர்களுக்குத் தெரியாமலேயே நான் என் உடன் பிறந்தவர்களுடன் தொடர்பில் இருந்திருக்கலாம். அவர்களுக்கு உண்மையாக இருப்பதாக நினைத்து, சூழலை நான் சிக்கலாக்கிவிட்டோனோ என்று கஷ்டமாக இருக்கிறது.

இன்னொரு பக்கம் என் அக்காவும், தம்பியும், ‘இதுக்குத்தான் நாங்க உன்கிட்ட இருந்து விலகியே இருந்தோம். இப்பவும் ஒண்ணும் பிரச்னையில்ல. அப்படியே இருப்போம். நீ நல்லா இருந்தா எங்களுக்குப் போதும்’ என்கிறார்கள்.
தத்தெடுத்த அப்பா, அம்மாவின் பொசசிவ்னெஸ், தத்தளிக்கும் பிறந்த வீடு... இந்த ஊசலாட்டத்தில் என்ன செய்வது நான்?