Published:Updated:

பிரசவ அறையில் கணவரை அனுமதித்தால் பெண்கள் மீதான மதிப்பு உயரும்! - ஸ்ருதி நகுல்

நகுல் - ஸ்ருதி நகுல்
பிரீமியம் ஸ்டோரி
நகுல் - ஸ்ருதி நகுல்

டூயட்

பிரசவ அறையில் கணவரை அனுமதித்தால் பெண்கள் மீதான மதிப்பு உயரும்! - ஸ்ருதி நகுல்

டூயட்

Published:Updated:
நகுல் - ஸ்ருதி நகுல்
பிரீமியம் ஸ்டோரி
நகுல் - ஸ்ருதி நகுல்
``பிரசவம் என்பது பெண்களுக்கு மறுபிறவி. உடல் மாற்றங்கள், ஹார்மோன் மாற்றங்கள், மனநிலை மாற்றங்கள்னு ஏகப்பட்ட பிரச்னைகளை ஒவ்வொரு பெண்ணும் தன் மகப்பேறு காலத்தில் சந்திச்சிருப்பாங்க. அவற்றையெல்லாம் தாண்டி 10 மாசம் வயித்துல சுமந்த குழந்தையின் முதல் அழுகைச் சத்தத்தைக் கேட்கும்போது எல்லாக் கஷ்டங்களும் காணாமல் போய்விடும். அதுதான் தாய்மை”

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

- உணர்ச்சி பொங்கப் பேசுகிறார் நடிகர் நகுலின் மனைவி ஸ்ருதி. சமீபத்தில் தாய்மை அடைந்திருக்கும் ஸ்ருதி, தன்னுடைய சமூக வலைதளங்களில் தாய்மை, குழந்தை வளர்ப்பில் ஆண்களுக்கு இருக்க வேண்டிய பொறுப்புகள் குறித்து நிறைய விஷயங்களைப் பகிர்ந்துவருகிறார். அந்தப் பதிவுகள் பலராலும் பாராட்டப்படுகின்றன. இது குறித்து ஸ்ருதியிடம் பேசினோம்...

“இந்த நிமிஷத்தை நானும் நகுலும் எங்க குட்டி தேவதைகூட சேர்ந்து கொண்டாடிக்கிட்டு இருக்கோம். எங்க பொண்ணு அகீரா வந்ததுக்கு அப்புறம் எனக்கும் நகுலுக்குமான காதல் இன்னும் பல மடங்கு அதிகரிச்சுருக்கு. கர்ப்பம் உறுதியான நாளிலிருந்து இப்பவரை நகுல் என்னை ஒரு குழந்தை மாதிரி கவனிச்சுக்கிறார். குழந்தை பிறந்தா பெண்களுக்கு ஒரு விதமான ஸ்ட்ரெஸ் வரும். ஆனா, அப்படியான ஒரு மன அழுத்தத்தை இந்த நிமிஷம்வரை நான் உணரல. பாப்பாவைக் கவனிச்சுக்கிறது, குடும்ப வேலைகள்னு எல்லாத்தையும் நாங்க ரெண்டு பேரும் பகிர்ந்து செய்றதுனால நான் ரிலாக்ஸ்டா, ஹேப்பியா இருக்கேன்.

ஸ்ருதி நகுல்
ஸ்ருதி நகுல்

ஆம்பளைங்களுக்குக் குழந்தையைத் தூக்கத் தெரியாது, குளிப்பாட்டத் தெரியாது, பார்த்துக்கத் தெரியாதுன்னு எல்லா வேலைகளையும் பொண்ணுங்களே இழுத்துப்போட்டுக்கிட்டு பண்றதுதான் சோர்வுக்கும் மன அழுத்தத்துக்கும் காரணம்.

குழந்தைகளைப் பார்த்துக்கிற பொறுப்பை கணவனுக்கும் கத்துக்கொடுங்க. மனைவிக்கு கணவன் எல்லா நேரத்திலும் துணை நிக்கணுங்கிறதைத்தான் சமூக வலைதளங்கள் மூலமா சொல்லிக்கிட்டே இருக்கேன். குழந்தைக்கு, தாத்தா பாட்டி இருக்கலாம். ஆனா, அம்மா அப்பா செய்ய வேண்டியதை பெத்தவங்கதான் செய்யணும்.

எங்க குழந்தையைக் குளிப்பாட்டுறது லேயிருந்து, டயாப்பர் மாத்துறதுவரை நாங்க ரெண்டு பேரும்தான் செய்றோம். வருமானம் ஆண்கள் சார்ந்தது, குடும்பப் பொறுப்பு பெண்கள் சார்ந்தது என்ற வட்டத்தில் இருந்து பெண்கள் முதலில் வெளியே வரணும். தங்களோட எல்லா கஷ்டங்களையும் வீட்டு ஆண்கள்கிட்ட வெளிப்படையா பேசிப் புரியவெச்சாலே பாதி பிரச்னை முடிவுக்கு வந்துரும்'' என்று ஆயிரமாண்டு பிரச்னைக்கு தீர்வு சொன்ன ஸ்ருதி, தொடர்ந்தார்.

''என்னுடைய குழந்தையை சுகப் பிரசவத்துலதான் பெற்றெடுக்கணும்னு நான் ரொம்ப உறுதியா இருந்தேன். அதுக்காக நிறைய ஆன்லைன் கோர்ஸ்ல கலந்துக்கிட்டேன். அப்போதான், ‘வாட்டர் பர்த்’ பற்றி தெரிஞ்சுது. நேச்சர் பர்த் சென்டர்கள் தொடர்பா தேடினப்போ, ஹைதராபாத்தில் ஒரு சென்டரை நான் தேர்ந்தெடுத்தேன்.

‘எட்டாவது மாசம், அவ்வளவு தூரம் டிராவல் பண்ணணுமா... குழந்தையை நீயும் நகுலும் எப்படித் தனியா பார்த்துப்பீங்க’ன்னு என் அம்மா உட்பட எல்லாரும் பயந்தாங்க. சிலர் என் மேல கோபப்பட்டாங்க. ஆனா, நான் ரொம்ப தைரியமா இருந்தேன். நகுலும் சப்போர்ட் பண்ணார். நானும் நகுலும் எங்களோட சில பூனைக்குட்டிகளும் காரில் ஹைதராபாத் கிளம்பிப்போனோம். பிரசவ நாள் நெருங்க நெருங்க என்னால் எந்த வேலையையும் செய்ய முடியல. சமைக்கிறது, ஊட்டி விடுறதுன்னு நகுல்தான் எல்லாமே பண்ணாரு” என்ற ஸ்ருதி நகுலின் கைகளை இறுகப் பற்றிக்கொண்டு, தன்னுடைய பிரசவ நிமிடங்களுக்குள் நம்மை அழைத்துச்செல்கிறார்.

“மிதமான வெந்நீர் நிரப்பப்பட்ட தண்ணீர் தொட்டியில் உட்கார்ந்து குழந்தையைப் பெற்றெடுத்தேன். என்னோட பிரசவ அறையில் நகுலும் இருந்தார். வலியில் நான் சிந்தின ஒவ்வொரு துளி கண்ணீரும் நகுலுக்கு என் மீதான மதிப்பை பல மடங்கு உயர்த்தியிருக்கு. இன்னும் சொல்லணும்னா பிரசவ அறையில் கணவர் இருப்பது கட்டாயமாக்கப்பட்டால், பெண்கள் மீதான மதிப்பு நிச்சயமா உயரும்'' பெருமிதம்பொங்க நகுலைப் பார்க்கிறார்.

''எங்களுக்குள்ள சண்டைகள் வரும். ஆனா, ஒரு மணிநேரத்துக்குள்ள யார் மேல தப்பு இருக்கோ, அவங்க சாரி கேட்டு சமாதானம் ஆகிருவோம். என்னைக் கவனிச்சுக்கிட்ட மாதிரியே இப்போ குழந்தையையும் கவனிச்சுக் கிறார்.

நகுல்
நகுல்

‘என் பொண்ணு பயங்கர போல்டா இருப்பா பாரு’ன்னு நகுல் சொல்லிக்கிட்டே இருக்காரு. ‘அகீரா’ங்கிற பெயருக்கு `கிரேஸ் அண்டு ஸ்ட்ராங்'னு அர்த்தம். அப்பா - பொண்ணுக்குள்ள இப்பவே ஆழமான பந்தம் உருவாகியிருக்கிறதைப் பார்க்கும்போது ரொம்ப சந்தோஷமா இருக்கு. இந்த மாதிரியான சந்தோஷம் எல்லாப் பெண்களுக்கும் கிடைக்கணும்னுதான் கடவுளை வேண்டிக்கிறேன். அது கடவுள் கையில் மட்டுமல்ல கணவர்களின் கையிலும் இருக்கு.’’

- அக்கறையோடு சொல்லும் ஸ்ருதியை அணைத்துக்கொள்கிறார் நகுல்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism