Published:Updated:

"இப்பவும் அப்பா - அம்மா இடையே அன்பு குறையலை!" - அருணா ராமராஜன் ஷேரிங்ஸ்

ராமராஜன், அருணா ராமராஜன்
ராமராஜன், அருணா ராமராஜன்

என்னை அம்மா ஒரு மினி ராமராஜனாதான் வளர்த்திருக்காங்க. அப்பாவின் குணங்கள் என்கிட்ட நிறைய இருக்கு. அம்மாவுக்கு அப்பா மேல வெறித்தனமான அன்பு உண்டு.

ராமராஜனின் படங்களிலும் பாடல்களிலும் தாய்ப்பாசம் தூக்கலாக இருக்கும். அவரின் மகள் அருணாவின் வாழ்க்கைப் பதிவுகளில் தந்தைப் பாசமே நிறைந்திருக்கிறது. அந்த அளவுக்கு அவருக்கு எல்லாமே அப்பா... அப்பா... அப்பப்பா!

பிரபல தனியார் வங்கியில் வழக்கறிஞராகப் பணிபுரிகிறார் அருணா. அவரோடு பேசிக்கொண்டிருந்தால் நளினி உருவத்தில் ராமராஜன் பேசுவது போன்று இருக்கிறது

'`அம்மா, அப்பா ரெண்டு பேருமே அதிகம் படிக்கலை. அதனால பிள்ளைங்களோட படிப்பு ரொம்ப முக்கியம்னு அம்மா நினைச்சாங்க. அந்த விஷயத்துல அப்பா நேரெதிர். படிப்பு ரெண்டாம்பட்சம்தான், மரியாதை, பழக்க வழக்கங்கள்தான் முக்கியம்னு சொல்வார்.

அப்பாகிட்ட கிராமத்தார்களுக்கே உரிய அந்த மரியாதையைப் பார்க்கலாம். வீட்டுக்கு யார் வந்தாலும் எழுந்து, வணக்கம் சொல்லி, தண்ணீர்கொடுத்து உபசரிக்கணும்னு சொல்வார். 'நீ எவ்வளவு பெரிய செலிபிரிட்டி குழந்தையா இருந்தாலும் அடுத்தவங்களுக்குக் கொடுக்க வேண்டிய மரியாதை முக்கியம்'னு சொல்வார். வீட்டுக்குள்ளே பிரளயமே நடந்திட்டிருந்தாலும், அந்த நேரம் யாராவது வீட்டுக்கு வந்தா, எல்லாத்தையும் நிறுத்திட்டு அவங்களை உபசரிக்கணும் அப்பாவுக்கு. `வணக்கம்'னுதான் சொல்லணும். ஹாய், குட் மார்னிங்கெல்லாம் கூடாது.

ராமராஜன், அருணா ராமராஜன்
ராமராஜன், அருணா ராமராஜன்

அம்மாவும் அப்பாவும் பிரியும்போது நானும் தம்பியும் ஏழாவது படிச்சிட்டிருந்தோம். எங்க முன்னாடி அவங்க சண்டையே போட்டதில்லை. பிரிவுங்கிறது அவங்க ரெண்டு பேரும் பேசி எடுத்த முடிவு. அதை எங்களுக்குப் புரியவெச்சாங்க. அம்மாவைப் பத்தி அப்பாவோ, அப்பாவைப் பத்தி அம்மாவோ எங்ககிட்ட ஒரு வார்த்தைகூட தப்பா பேசினதில்லை.

டைவர்ஸ் அன்னிக்கு கோர்ட்டுல அம்மா மயங்கிவிழுந்துட்டாங்க. அப்பா தான் அம்மாவைத் தூக்கினார். 'நீங்க நிஜமாவே டைவர்ஸுக்குத்தான் வந்திருக்கீங்களா'னு ஜட்ஜே ஆச்சர்யமா கேட்டார். அந்தச் சூழல்லயும் அவங்களுடைய அன்பு குறையலை. இன்னிக்கும் அப்படித்தான்.

அவங்க டைவர்ஸுக்குப் பிறகு தம்பியும் நானும் அம்மாகூடதான் இருந்தோம். எங்களுக்குத் தோணும் போதெல்லாம் அப்பாவைப் பார்க்கிற சுதந்திரம் இருந்தது. ஆனாலும், அப்பாவை தினம் தினம் மிஸ் பண்ணியிருக்கோம்'' - அந்த வயதில் உறவில் வெற்றிடத்தை எதிர்கொண்ட வலி இன்றும் மிச்சமிருக்கிறது அருணாவிடம்.

''என்னை அம்மா ஒரு மினி ராமராஜனாதான் வளர்த்திருக்காங்க. அப்பாவின் குணங்கள் என்கிட்ட நிறைய இருக்கு. அம்மாவுக்கு அப்பா மேல வெறித்தனமான அன்பு உண்டு. ஒருவேளை அது வெறுப்பா மாறிடக்கூடாதுன்னே பிரிஞ்சாங்களோனு நினைப்பேன். அப்பாவும் அப்படித்தான். அவரைப் பார்க்கப் போனா முதல்ல 'அம்மா எப்படி இருக்காங்க'னுதான் கேட்பார். இதையெல்லாம் நான் சொன்னா பலரும் நம்ப மாட்டாங்க, நடிக்கிறோம்னு சொல்வாங்க. ஆனா, அதுதான் நிஜம்.

...நான் லவ் பண்ணிட்டிருந்தபோது அவரை அப்பாகிட்ட கூட்டிட்டுப் போய், 'இவரைத்தான் கல்யாணம் பண்ணிக்கப் போறேன்'னு என்னால தைரியமா சொல்ல முடிஞ்சது. ஆசீர்வாதம் பண்ணி எங்க கல்யாணத்தை முன்னால நின்னு நடத்தி வெச்சார். என் கணவர் எனக்கு இன்னோர் அப்பான்னே சொல்லலாம். அதனாலதான் அவரை எனக்குப் பிடிச்சதோனுகூட நினைப்பேன்'' - அகம் மகிழும் அருணாவுக்கு அப்பாவுக்கு நடந்த அந்த விபத்தை இப்போது நினைத்தாலும் பதைபதைக்கிறது.

- அருணா ராமராஜனின் ஷேரிங்கை அவள் விகடன் இதழில் முழுமையாக வாசிக்க க்ளிக் செய்க... > நான் ராமராஜன் மகள் என்பதில் பெருமை! - அருணா ராமராஜன் https://bit.ly/3gtiYuu

* Vikatan App-ல் முழுமையான கட்டுரையை வாசிக்க, கீழேயுள்ள Also Read-ன் தலைப்பை க்ளிக் செய்க.

நான் ராமராஜன் மகள் என்பதில் பெருமை! - அருணா ராமராஜன்

சிறப்புச் சலுகை: விகடன் App-ஐ டவுன்லோடு செய்து ரெஜிஸ்டர் செய்தால், ஆனந்த விகடன் தொடங்கி அவள் கிச்சன் வரை அனைத்து இதழ்களையும் 30 நாள்களுக்கு கட்டணமின்றி வாசிக்கலாம். குறிப்பாக, கடந்த 2006-ல் இருந்து வெளியான அனைத்து ப்ரைம் கன்டென்ட்டுகள், பொக்கிஷக் கட்டுரைகளிலும் வலம்வர முடியும். விகடன் ஆப் டவுன்லோடு லிங்க் இதோ https://bit.ly/2VRp3JV

அடுத்த கட்டுரைக்கு