Published:Updated:

அந்த வலி எப்படியிருக்கும்னு எனக்கும் தெரியும் - ஐஸ்வர்யா

ஐஸ்வர்யா
பிரீமியம் ஸ்டோரி
ஐஸ்வர்யா

போராளி

அந்த வலி எப்படியிருக்கும்னு எனக்கும் தெரியும் - ஐஸ்வர்யா

போராளி

Published:Updated:
ஐஸ்வர்யா
பிரீமியம் ஸ்டோரி
ஐஸ்வர்யா

நல்லதைச் செய்தால் நல்லதே நடக்கும் என்பதே சிறுவயதிலிருந்து எல்லோருக்குமான பாலபாடம், போதனை எல்லாம்! நல்லதை மட்டுமே செய்து பழகிய ஒருவருக்கு அதற்கு நேர்மாறானதொரு பயங்கரம் நிகழ்ந்தால்... கர்மாவின் மீதே நம்பிக்கையில்லாமல் போகாதா? போகாதது ஆச்சர்யம் என்றால், தனக்கு நிகழ்ந்த அனைத்தையும் தனக்கான நல்லனவற்றின் நீட்சியாகப் பார்ப்பது அதைவிடப் பெரிய ஆச்சர்யம். விதி வலியது. அதை யாராலும் வெல்ல முடியாது என்பார்கள். வென்றிருக்கிறார் ஓர் இளம்பெண். அவர் ஐஸ்வர்யா. வயது 24. இந்தப் பேட்டியின் முடிவில் கண்ணீர் வடிப்பதைவிடவும் ஐஸ்வர்யாவுடன் கைகோப்பதுதான் மனிதம் உணர்த்தும் மாண்பாக இருக்கும்.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

‘`அண்ணா பல்கலைக்கழக வளாகத்துக்குள்ளே இருக்கும் அண்ணா ஜெம் ஸ்கூலில் படிச்சிட்டிருந்தேன். தினமும் அடையாறு கேன்சர் இன்ஸ்டிட்யூட்டைக் கடந்துதான் வீட்டுலேருந்து ஸ்கூலுக்குப் போகணும். கேன்சர் பத்தின பெரிய விழிப்புணர்வு எனக்கு அப்போ இல்லை. ‘யாருக்குமே இந்த நோய் வந்துடக் கூடாது’ன்னு அம்மா சொல்லிட்டே இருப்பாங்க. அடையாறு கேன்சர் இன்ஸ்டிட்யூட்டில் நோயாளிகளோடு உதவிக்கு ஒருத்தரும் அங்கேயே தங்குவாங்க. ஆனா, நாளுக்கு நாள் அதிகரிச்சிட்டே போகும் நோயாளிகள் அத்தனை பேருக்கும் அங்கே இடவசதி போதாது. அதனால சிகிச்சை முடிஞ்ச சில நாள்களுக்குப் பிறகு அவங்களை வீட்டுக்கு அனுப்பிடுவாங்க. வெளியில தங்க இடவசதி இல்லாதவங்க, ஆஸ்பத்திரி வாசலிலும் அங்கே உள்ள கால்வாய் ஓரத்திலும் தங்கியிருக்கிற காட்சிகளை நான் பார்த்திருக்கேன். கால்வாய் பக்கத்திலிருப்பதால் கொசுத்தொல்லை ரொம்ப அதிகமா இருக்கும். அந்தக் காட்சி என்னை ரொம்ப பாதிச்சது. அவங்களுக்கு வாடகைக்கு ஒரு வீடு எடுத்துக்கொடுக்கலாம்னு நானும் என் தோழிகளும் முடிவு பண்ணினோம். அப்போ நான் ஒன்பதாவது படிச்சிட்டிருந்தேன். அந்த ஏரியாவில் ஒரு வீடு காலியா இருப்பது தெரிஞ்சு அந்த ஓனர்கிட்ட கேட்டோம். ‘இவ்ளோ சின்ன பசங்களா இருக்கீங்க... உங்களுக்கெல்லாம் வீடு கொடுக்க முடியாது’ன்னு சொன்னாங்க. பிறகு எங்க நோக்கத்தைச் சொன்னோம். ‘நிரந்தரமா தங்கப் போறவங்கன்னா பரவாயில்லை. ரொட்டேஷன்ல யார் யாரோ வந்து தங்கறதுக்கு எப்படி வீடு கொடுக்க முடியும்’னு சொல்லி மறுத்துட்டாங்க. அந்த வயசுல அதுக்கு மேல தேடிப் போக எங்களுக்கும் தெரியலை. அந்த முயற்சியை அப்படியே விட்டுட்டோம். கொஞ்ச நாள் கழிச்சு அதே ஹவுஸ் ஓனர் எங்களைக் கூப்பிட்டாங்க. ‘ஒன்பதாவது படிக்கிற உங்களுக்கே இவ்வளவு நல்ல எண்ணம் இருக்கிறதைப் பார்த்து நானும் மனசை மாத்திக்கிட்டேன். நீங்க வாடகை கொடுக்க வேண்டாம். அவங்க இலவசமாவே இருக்கட்டும்’னு சொன்னாங்க. அப்படி வாடகையே கொடுக்காம இருந்தாங்கன்னா, ஒவ்வொரு விஷயத்துக்கும் கேள்வி கேட்பாங்க. அது நோயாளிகளுக்கும் அவங்ககூட தங்கியிருக்கிறவங்களுக்கும் மன வருத்தத்தைக் கொடுக்கும்னு நாங்க பாதி வாடகை கொடுக்கறதா சொன்னோம். அந்த வயசுல எங்களுக்கெல்லாம் பெருசா பாக்கெட் மணியெல்லாம் கிடையாது. ஆனாலும், எங்களுக்குக் கிடைக்கிற ஒவ்வொரு ரூபாயையும் சேர்த்துவெச்சு வாடகை கொடுத்தோம்’’ - உண்டியல் வைத்து விளையாடும் வயதிலேயே உதவும் கரங்களை நீட்டிய ஐஸ்வர்யாவின் இலக்கு புற்றுநோயால் பாதிக்கப்பட்ட பிஞ்சுகளின் துயர் துடைப்பது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

 டுமீல்குப்பம் குழந்தைகளுடன்...
டுமீல்குப்பம் குழந்தைகளுடன்...

‘`கேன்சரால் பாதிக்கப்பட்ட குழந்தைங்களுக்கு கீமோதெரபி சிகிச்சை கொடுப்பாங்க. அது கேன்சர் செல்களை மட்டுமல்லாம, உடம்புல உள்ள மொத்த செல்களையும் அழிச்சிடும். அதனால அவங்களுடைய நோய் எதிர்ப்புத் திறன் பூஜ்ஜியமாகிடும். அதை ஈடுகட்ட அந்த ஆஸ்பத்திரியில பருப்பு, காய்கறிகள், ஒரே வேளைக்கு பால் கொடுப்பாங்க. இதைத் தாண்டின ஊட்டம் அவங்களுக்குத் தேவை. அதுக்கு என்ன செய்யலாம்னு யோசிச்சோம். நாங்க பத்து ஃபிரெண்ட்ஸ் இருந்தோம். ஆளுக்கு ரெண்டு குழந்தைகள்னு பிரிச்சுக்கிட்டோம். ஒவ்வொரு குழந்தைககும் ஒரு மாசத்துக்கான பால், காய்கறி மற்றும் பழங்களுக்கான செலவை நாங்க ஏத்துக்கிறதுன்னு முடிவெடுத்தோம். இதுக்காக கேன்சர் இன்ஸ்டிட்யூட்ல அனுமதி கேட்டு அணுகினபோது, அங்கே சிலர், ‘நீங்க செலவழிக்கிற தொகையை எங்கக்கிட்ட கொடுத்துடுங்க. நாங்களே பார்த்துக்கறோம்’னு சொன்னாங்க. ஆனா, ‘எதைப் பண்ணினாலும் நேரடியா பண்ணுங்க’ன்னு அதே இன்ஸ்டிட்யூட்டில் இன்னொருத்தங்க சில காரணங்களோடு அட்வைஸ் பண்ணினாங்க. அதனால நாங்க நேரடியா களமிறங்கினோம். அப்படிப் பண்ண ஆரம்பிச்ச பிறகு எங்களுக்கும் அந்தக் குழந்தைங்களுக்கும் இடையில் ஒரு பிணைப்பு உருவானது. கீமோதெரபி முடிச்ச ஒவ்வொரு முறையும் ஸ்கேன் எடுப்பாங்க. சில நேரம் இலவசமாகவும் சில நேரம் காசு வாங்கிட்டும் ஸ்கேன் எடுப்பாங்க. அதுக்கு வசதியில்லாத குழந்தைகளின் நிலையைப் பார்த்த பிறகுதான் கேன்சரால் பாதிக்கப்பட்ட ஒரு குழந்தைக்கான முழுச் செலவையும் நாங்களே ஏத்துக்கணும்னு முடிவெடுத்தோம்.

கேன்சர் பாதிப்புக்குள்ளான குழந்தைகளுடன்...
கேன்சர் பாதிப்புக்குள்ளான குழந்தைகளுடன்...

கீமோதெரபி கொடுக்கும்போது அன்னிக்கு ஒருநாள் மட்டும் அந்தக் குழந்தைங்க வலியால துடிப்பாங்க. அடுத்தநாள் அதை மறந்துட்டு இயல்பாயிடுவாங்க. ஏன்னா, தனக்கு வந்திருப்பது பயங்கரமான நோய், தன்னால ரொம்ப நாள் வாழ முடியாதுங்கிறதையெல்லாம் குழந்தைங்க யோசிக்க மாட்டாங்க. அதனால அவங்க வாழ்நாளும் கொஞ்சம் அதிகரிக்குது. பண உதவியைவிடவும் எமோஷனல் சப்போர்ட் அவங்களுக்கு அதிகம் தேவைன்னு உணர்ந்தோம். பண உதவி செய்யத் தயாரா இருக்கிறவங்களை சந்தோஷமா வரவேற்கிறோம். அதே நேரம் வாய்ப்பு கிடைச்சா அந்தக் குழந்தைகளை நேரில் சந்திச்சு அவங்களோடு கொஞ்ச நேரம் செலவிடுங் கன்னும் கேட்டுக்கறோம். அதுக்காக இயங்கும் ஓர் என்ஜிஓவில் நானும் இணைந்தேன். நேரம் கிடைக்கும்போதெல்லாம் கேன்சர் பாதிச்ச குழந்தைகளோடு நேரம் செலவழிக்க ஆரம்பிச்சேன். குழந்தைங்களுக்கு மட்டுமே செய்திட்டிருந்த இந்தச் சேவை ஒரு கட்டத்துல பெரியவங்களுக்கும் தொடர்ந்தது’’ - கடந்தகாலம் பகிரும் ஐஸ்வர்யாவின் வாழ்வில் அந்த அத்தியாயம் வராமலேயே போயிருக்கலாம். அந்த சில நாள்களைப் பற்றி அவர் சொல்லக் கேட்கும் நமக்கு இதயம் கனக்கிறது. ஐஸ்வர்யாவோ அதை இன்முகத்துடன் எதிர்கொண்டிருக்கிறார்.

‘`நான் ஏசிசிஏ கோர்ஸ் படிச்சிட்டிருந்தேன். ஏசிசிஏ என்பது லண்டனின் சிஏ. எப்போதும் நார்மலா இருந்த என் பீரியட்ஸ் சுழற்சியில திடீர்னு மாற்றங்களை உணர்ந்தேன். ஒரு மாசம் பீரியட்ஸே வராது. அடுத்த சில மாசங்களுக்கு அதிக ப்ளீடிங் இருக்கும். டாக்டரைப் பார்த்தபோது பிசிஓடி பாதிப்பா இருக்கும்னு

சொன்னாங்க. அதுக்காக சிகிச்சை எடுத்திட் டிருந்தேன். எக்ஸாம்ஸ் நெருங்கிட்டிருந்ததால சாப்பாடு, தூக்கம் இல்லாம படிச்சிட்டிருந்தேன். என் உடம்பு காட்டின அறிகுறிகளும் அதிகமாயின. ஸ்ட்ரெஸ்ஸும் ரெஸ்ட் இல்லாததும்தான் காரணமா இருக்கும்னு எல்லாரும் நினைச்சோம். ஒரு கட்டத்துல அந்த அவதிகளைத் தாங்க முடியாத நிலையில மறுபடி ஸ்கேன் எடுத்தோம். அப்பதான் அது எண்டோமெட்ரியல் கேன்சர், ரெண்டாவது ஸ்டேஜ்னு தெரியவந்தது.

அந்த வலி எப்படியிருக்கும்னு எனக்கும் தெரியும் - ஐஸ்வர்யா

ஏசிசிஏ படிப்பு என் நீண்ட நாள் கனவு. அதுக்காக நான் ரொம்பக் கஷ்டப்பட் டிருக்கேன். ‘எனக்கு என்ன வேணா ஆகட்டும். ஃபைனல் எக்ஸாம் எழுதின பிறகு எனக்கு என்ன வேணாலும் நடக்கட்டும்’னு அம்மாகிட்ட சொன்னேன். எக்ஸாம் எழுத நான் லண்டன்தான் போயாகணும். இந்த நிலைமையில எக்ஸாம் எழுதணும்னு அவசியமில்லைன்னு வீட்டுல எல்லாரும் எதிர்த்தாங்க. ஆனா, அது என் பல வருஷக் கனவு, உழைப்பு. பாதியில விட மனசில்லை. எக்ஸாமுக்காக லண்டன்ல கிட்டத்தட்ட ஒன்றரை மாசம் இருக்க வேண்டியிருந்தது. ‘ஒன்றரைமாசம் பிரச்னை யில்லாம இருக்கணும்னா ஒரு கீமோ எடுத்துட்டுப்போறது நல்லது’ன்னு டாக்டர் அட்வைஸ் பண்ணினாங்க. ஆனா, கீமோ எடுத்த உடனேயே என் உடம்பு வீக் ஆயிடும். எந்த சிகிச்சையையும் என் உடம்பு ஏத்துக்கலை. எல்லாம் ரிவர்ஸ் ஆச்சு. கீமோதெரபி கொடுக்கும்போது கேன்சர் செல்கள் அழியணும். ஆனா, எனக்குத் திரும்ப வந்தன.

லண்டனுக்குப் போகும்போது ஆரோக் கியமா போனேன். ‘எக்ஸாம் முடிச்சிட்டு வா. வந்ததும் ஆபரேஷன் பண்ணலாம்’னு சொல்லி என்னை அனுப்பினாங்க. அங்கே போனதும் கிளைமேட் மாற்றத்தால் எனக்குக் காய்ச்சல் வந்தது. ஒரு கட்டத்துல காய்ச்சல் உச்சத்துக்குப் போச்சு. என் கிட்னி இயக்கம் குறைய ஆரம்பிச்சது. ஒவ்வொரு பிரச்னையா அதிகரிச்சது. கிட்டத்தட்ட மூணு மாசம் ஆஸ்பத்திரியில இருந்தேன். மரணப் படுக்கைக்கே போயிட்டுத் திரும்ப வந்தேன். லண்டன் மருத்துவமனைகளில் ஒரு வழக்கம் உண்டு. நோயாளிகளை ட்ரீட் பண்ணும்போது ஒரு செக்லிஸ்ட் வெச்சிருப்பாங்க. இதயத்துடிப்பு, நாடித்துடிப்பு, ரத்த அழுத்தமெல்லாம் செக்லிஸ்ட்டில் குறிப்பிடப்பட்டுள்ள அளவுகளுக்குக் கீழே வந்துட்டா, உங்களுக்கு ட்ரீட்மென்ட் கொடுக்க மாட்டாங்க. எனக்கும் அப்படித்தான் ஆச்சு. ‘இனிமே சிகிச்சை கொடுப்பதில் அர்த்தமில்லை’ன்னு கையை விரிச்சிட்டாங்க. என் சொந்தக்காரங்க எல்லாரும் ரொம்பவே போராடி அங்கே உள்ள டாக்டர்ஸ்கிட்ட பேசி, சிகிச்சைகளைத் தொடரவெச்சாங்க. நான் பிழைச்சு மீண்டு வந்தேன்.

அன்னிக்கு எங்க கிட்ட பணம் இல்லாமப் போயிருந்தா இன்னிக்கு நான் உயிரோடு இருந்திருக்க மாட்டேன். பணமில்லைன்னு ஒருத்தங்க நோயோடு போராடறதை என்னால ஏத்துக்க முடியலை. பணமில்லாததால பெயின் கில்லர் வாங்கக்கூட முடியாம வலியில துடிக்கிற எத்தனையோ புற்றுநோயாளிகளை நான் பார்த்திருக்கேன். அந்த வலி எப்படியிருக்கும்னு எனக்கும் தெரியும்’’ - வார்த்தைகளில் வலி மறைத்துச் சொல்லும் ஐஸ்வர்யாவுக்கு புற்றுநோயிலிருந்து மீண்டதும் போராட்ட குணம் இன்னும் அதிகரித்திருக்கிறது.

‘`லண்டன்லேருந்து வந்ததும் இன்னும் தீவிரமா இயங்க ஆரம்பிச்சேன். ரெண்டு, மூணு சேவை அமைப்புகளுடன் இணைந்து என் சேவைகளைத் தொடர்ந்திட்டிருந்தேன். ‘நீ எந்த மாதிரியான நிலைமையிலேருந்து மீண்டிருக்கேன்னு தெரியுமா? முதல்ல நீ முழுசா குணமாகணும். அப்புறம் இந்த வேலைகளைப் பார்க்கலாம்’னு டாக்டர் என்னைத் திட்டினார். நான் திரும்ப எழுந்து வருவேன்னு யாருமே நம்பலை. ஆனா, மீண்டு வந்திருக்கேன். பர்சனலா நான் பாதிக்கப்பட்ட பிறகு இந்த நோய் கொடுக்கும் உடல், மன வலிகளை என்னால உணர முடிஞ்சது. எனக்கான பொறுப்புகள் இன்னும் அதிகரிச்சிருக்கிறதா நினைக்கிறேன். இப்போ சிஏ படிச்சிட்டே, கல்யாணசுந்தரம் அண்டு அசோசியேட்ஸ் என்கிற சிஏ கம்பெனியில வேலையும் பார்க்கறேன். என்னுடைய சம்பளத்தில் 90 சதவிகிதத்தை இந்தச் சேவைக்காகத்தான் ஒதுக்கறேன். வெறும் 10 சதவிகிதம்தான் எனக்கானது. சில நேரம் அதையும் அந்தக் குழந்தை

களுக்காக ஒதுக்க வேண்டிவரும். படிப்பு, வேலை எல்லாத்தையும் விட்டுட்டு அந்தக் குழந்தைகளுக்காகவே வாழ்க்கையை அர்ப்பணிக்கணும்னு தோணுது. ஆனா... நான் படிக்கணும், வேலை பார்க்கணும், அப்போதான் என்னால பொருளாதார ரீதியா அவங்களுக்கு உதவ முடியும். இன்னும் எத்தனை நாள்களுக்கு நான் இருப்பேன்னு தெரியாது. எனக்குப் பெருசா ஆசைகள் கிடையாது. பொருள்களின் மீது நாட்டம் கிடையாது. என் மிச்ச வாழ்க்கை மொத்தமும் கேன்சரால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கான சேவைக்காக மட்டும்தான்.’’

ஐஸ்வர்யாவின் பயணத்தில் கைகோப்போம்!

ஐஸ்வர்யா ஓர் ஆச்சர்ய மனுஷி!

``ஐஸ்வர்யாவுக்கு ஆரம்ப ஸ்டேஜ்லேருந்து ட்ரீட்மென்ட் கொடுத்திட்டிருக்கேன். என் அனுபவத்துல எத்தனையோ புற்றுநோயாளிகளைப் பார்த்திருக்கேன். அவங்களோடு ஒப்பிடும்போது ஐஸ்வர்யா ஓர் ஆச்சர்ய மனுஷி. தனக்கே ஓய்வு தேவைப்பட்ட நிலையிலும் மத்தவங்க வலி குறைக்கப் போராடினவங்க. அவங்களுடைய ஆர்வத்தையும் அக்கறையையும் பார்த்து இப்போ நானும் அவங்களோடு சேவையில் என்னை இணைச்சுக்கிட்டேன். எல்லோருக்கும் அந்த அக்கறையில் கொஞ்சம் இருந்தாலே, சக மனிதர்களின் வலிகளைக் குறைக்கலாம்" என்கிறார் டாக்டர் அஷோக் ஜெயின்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism