Published:Updated:

ஐ.டி வேலை, தோட்டப் பராமரிப்பு, நட்பு வட்டாரம்! - நடிகை ஜெயஸ்ரீயின் அமெரிக்கா வாழ்க்கை

நடிகை ஜெயஸ்ரீ
பிரீமியம் ஸ்டோரி
News
நடிகை ஜெயஸ்ரீ

சினிமாவுல நடிச்சிட்டு இருந்தப்போ, சென்னை பெசன்ட் நகர்ல இருந்த எங்க வீட்டுல பெரிய தோட்டம் வெச்சிருந்தோம். அப்பவே செடி வளர்ப்புல அதிக ஆர்வம் இருந்தது

வீட்டுத்தோட்டத்தில் பூத்துக்குலுங்கும் தாவரங்கள், கலிஃபோர்னியா மாகாணத் திலுள்ள ஜெயஸ்ரீயின் வீட்டுக்கு அழகும் பசுமையும் கூட்டுகின்றன. தோட்டப் பராமரிப்பு ஆர்வத்தால் நிகழ்ந்த வாழ்வியல் மாற்றங்கள் குறித்து வீடியோகாலில் பகிரும் அவரது முகத்தில் ஆயிரம்வாட்ஸ் புன்னகை.

“சினிமாவுல நடிச்சிட்டு இருந்தப்போ, சென்னை பெசன்ட் நகர்ல இருந்த எங்க வீட்டுல பெரிய தோட்டம் வெச்சிருந்தோம். அப்பவே செடி வளர்ப்புல அதிக ஆர்வம் இருந்தது. 1988-ல் கல்யாணமானதும் அமெரிக்காவில் குடியேறினோம். அப்போ நான் வேலைக்குப் போகல. பொழுது போக்குக்காக வீட்டுத்தோட்டம் அமைச்சு, இண்டோர் மற்றும் காய்கறிச் செடிகள், திராட்சை, ஆப்பிள் உள்ளிட்ட பல்வேறு பழ மரங்களை வளர்த்தேன்.

அமெரிக்காவுல எனக்கு நிறைய தோழிகள் கிடைச்சாங்க. நாங்க எல்லோரும், அவங்கவங்க வீட்டுல சமைச்சு, வாரம்தோறும் ஒருத்தர் வீட்டுக்குக் கொண்டுபோவோம். அங்கே அரட்டையுடன், உணவுகளைப் பகிர்ந்து சாப்பிடுவோம். அவங்கவங்க வீட்டுத் தோட்ட விளைபொருள்களையும் ஷேர் பண்ணிப்போம். 30 வருஷங்களா தொடரும் இந்தச் சந்திப்பு, கொரோனாவால ஆன்லைன் முறைக்கு மாறின நிலையில, இப்போ மறுபடியும் பழையபடியே சந்திக்க ஆரம்பிச்சுட்டோம்”

ஐ.டி வேலை, தோட்டப் பராமரிப்பு, நட்பு வட்டாரம்!  - நடிகை ஜெயஸ்ரீயின் அமெரிக்கா வாழ்க்கை

- இயற்கையின் வழியே நட்பு வட்டாரத்தையும் வளர்க்கும் ஜெயஸ்ரீ, ‘தென்றலே என்னைத் தொடு’, ‘விடிஞ்சா கல்யாணம்’, ‘இரண்டு மனம்’ உள்ளிட்ட பல படங்களின் மூலமாக சம் பாதித்த ரசிகர் பட்டாளத் தையும் இன்று வரையிலும் தக்கவைத்துக் கொண்டிருக் கிறார் எண்பதுகளின் நாயகியாக!

20 ஆண்டுகளாக ஐ.டி துறையில் பணியாற்றும் ஜெயஸ்ரீக்கு, அந்தப் பணிச் சூழலும் வேளாண்மை ஆர்வத்தைக் கூட்டியிருக் கிறது. இதுகுறித்துப் பேசுபவர், “இடவசதி இல்லாட்டியும்கூட, இந்த நாட்டுல பலரும் சில தொட்டிகள்லயாவது காய்கறிகள் வளர்க்க ஆர்வம் காட்டுவாங்க. குறிப்பா, இங்குள்ள பெரும்பாலான நிறுவனங் கள்லயும் பணியாளர்கள் தங்களோட வீட்டுத் தோட்ட விளைபொருள் கள், விதைகள், ரெசிப்பி களை ஆபீஸ்ல பொதுவான இடத்துல வெச்சுட்டு, இது பத்தி சக ஊழியர்களுக்கு மெயில்ல தகவல் சொல்லிடு வோம். பலரும் அதை எடுத்துப் பயன்படுத்திட்டு, மகிழ்ச்சியுடன் தகவல் பரிமாறுவாங்க. இந்த நாட்டுல பலருக்கும், நம்ம தமிழ்நாட்டு எலுமிச்சை சாத ரெசிப்பி ரொம்பவே பிடிக்கும். என்னோட தோட்டத்து எலுமிச்சை யில இருந்து, ரெகுலரா எலுமிச்சை சாதம் செய்து ஆபீஸுக்கு கொண்டு போவேன்.

பெரிசா வீட்டுத்தோட்டம் அமைக்கணும்ங்கிற நீண்டகால கனவு, இப்போதான் சாத்திய மாகியிருக்கு. இப்ப வசிக்குற வீட்டுக்குக் கடந்த ஜனவரியில தான் குடிவந்தோம். அரை ஏக்கர் பரப்பளவுல, நாலுல ஒரு பங்கு இடத்துல வீடும், ரெண்டு பங்கு நிலத்துல தோட்டமும் இருக்கு. அழகுக்கான தாவரங்கள், காய்கறிச் செடிகள், பழ மரங்கள், நடைப்பயிற்சி, உட்கார்ந்து பேசுறத்துக்கான பகுதினு ஒவ்வொரு தேவையையும் பார்த்துப் பார்த்து வடிவமைச்சிருக்கோம்.

அமெரிக்காவுல கொரோனா பாதிப்பு அதிகம் இருந்ததால, கடந்த ஒன்றரை வருஷத்துக்குப் பிறகு, இப்போதான் வெளியில நடமாட ஆரம்பிச்சிருக்கோம். இடைப்பட்ட காலத்துல காய்கறிகள் வாங்க கடைக்குப்போக சிரமங்கள் இருந்துச்சு. அதனால, தக்காளி, கத்திரி, வெண்டை, வெற்றிலை, கீரை வகைகள் உள்ளிட்ட பல்வேறு செடி களையும் எங்க தோட்டத்துலயே வளர்க்க ஆரம்பிச்சேன்.

ஆரஞ்சு, மினி ஆரஞ்சு, எலுமிச்சை, அத்தி, ஆலிவ், பேரிக்காய், பெர்சிமன் ஃப்ரூட் உள்ளிட்ட பழ மரங்கள்ல விளைச்சல் அபாரமா இருக்கு. கிச்சன் கழிவுகளை மட்டுமே உரமா பயன்படுத்துறேன். தோட்டத்தை விரிவுபடுத்த கூடுதல் கவனம் கொடுக்கிறேன்” என்று பேசியவாறே, ஒரு கூடை நிறைய ஆரஞ்சுப் பழங் களைப் பறித்துக்காட்டி சிலாகிக் கிறார்.

ஐ.டி வேலை, தோட்டப் பராமரிப்பு, நட்பு வட்டாரம்!  - நடிகை ஜெயஸ்ரீயின் அமெரிக்கா வாழ்க்கை

“கலிஃபோர்னியாவுல ஜூலை மாசம் கடுமையான வெயில் காலம். இப்ப அதை அனுபவிக்கிறோம். அதிகாலை அஞ்சரை மணிக் கெல்லாம் சூரிய வெளிச்சம் பிரகாசிக்க ஆரம்பிச்சு, பகல் முழுக்க கடுமையான வெயில் இருந்தாலும் உஷ்ணம் குறைவா இருக்கும். ராத்திரி எட்டரை மணிக்குத்தான் சூரியன் மறையத் தொடங்கும். அடுத்த சில நிமிடங்கள்ல, கும்மிருட்டுடன் சில்லுனு குளிரடிக்கும்.

கணவர் வங்கி உயர்பொறுப்புல இருக்கார். பசங்க ரெண்டு பேரும் காலேஜ் படிக்கிறாங்க. பொருளா தாரத் தேவைக்காக அமெரிக்காவுல வசிச்சாலும், நம்மூர் வாழ்க்கை முறையை ரொம்பவே மிஸ் பண்றேன். அந்த ஏக்கத்தை, வீட்டுத்தோட்ட ஆர்வமும், நட்பு வட்டாரமும்தான் போக்குது. தோட்டப் பராமரிப்பு வேலைகளோடு, தோட்டத்துக்குள்ள நடைப்பயிற்சி செய்யுறதும், புல்வெளியில குடும்பமா அமர்ந்து ராத்திரி நேரத்துல அரட்டையடிக் கிறதும், இந்த கொரோனா காலகட்ட மன அழுத்தங்களைப் போக்க ரொம்பவே கைகொடுக்குது”

- மாலைநேர எதிர்வெயில் ஜெயஸ்ரீ யின் முகத்தில் பிரகாசம்கூட்ட, “ராத்திரி ஏழரை மணிக்குக்கூட வெளிச்சம் எப்படி இருக்குன்னு பாருங்க” என்று வியப்பைக்கூட்டி சிரித்தபடியே விடைபெற்றார்.