Published:Updated:

ஜெயலலிதாவைப்போல தமிழிசையையும் பெருமையாகப் பார்க்கிறேன்! - விஜயதரணி, காங்கிரஸ் எம்.எல்.ஏ

அரசியல் பெண்கள் - ஆறு கேள்விகள்

பிரீமியம் ஸ்டோரி

தமிழ்நாடு சட்டமன்ற காங்கிரஸ் கட்சியின் கொறடாவான விஜயதரணி, விளவங்கோடு தொகுதியிலிருந்து இருமுறை எம்.எல்.ஏ-வாகத் தேர்ந்தெடுக்கப் பட்டவர். அகில இந்திய மகளிர் காங்கிரஸின் பொதுச்செயலாளர்களில் ஒருவரான இவர், உச்ச நீதிமன்ற வழக்கறிஞராகவும் உள்ளார். தொலைக் காட்சி விவாதங்களில் அதிரடியாக வாதங்களை எடுத்துவைக்கும் விஜய தரணியுடனான சந்திப்பில்...

ஜெயலலிதா ஆட்சி, எடப்பாடி பழனிசாமி ஆட்சி... இரண்டிலும் நீங்கள் சட்டமன்ற உறுப்பினர். இந்த இரு ஆட்சிகளுக்கும் இடையே என்ன வித்தியாசம்?

செல்வாக்கு மிகுந்த ஒரு தலைவரின் தலைமையிலான அரசு என்று நிரூபணமானது ஜெயலலிதாவின் அரசு. ஜெயலலிதா என்ன செய்தாலும் எல்லாமே பிரபலமடைந்து விடும்.

ஆனால், எடப்பாடி பழனிசாமி அரசு என்ன செய்தாலும், அது மக்களைச் சென்றடைய நீண்ட காலம் தேவைப்படுகிறது. மக்கள் செல்வாக்குமிக்க அரசு என்பதை நிரூபிக்க வேண்டிய இடத்தில் எடப்பாடி அரசு இருக்கிறது.

விஜயதரணி, காங்கிரஸ் எம்.எல்.ஏ
விஜயதரணி, காங்கிரஸ் எம்.எல்.ஏ

ப.சிதம்பரம் கைதுக்குப் பிறகு, மோடி அரசை விமர்சிக்க காங்கிரஸ் தலைவர்கள் அஞ்சுகிறார்களா?

தவறுகளைச் சுட்டிக் காட்டக்கூடாது என்று யாரும் சொல்லவில்லை. அதே நேரம் மக்களுக்கு நல்லது நடந்தால் சந்தோஷம் என்று சொல்கிறார்கள். இதை அச்சம் என்று சொல்ல முடியாது.

மத்தியில் அடுத்த ஐந்தாண்டுகளுக்கு ஆட்சி மாற்றம் வரப்போவதில்லை. எனவே, நல்ல நடவடிக்கை என்றால் அது நல்லது என்றும் சொல்லாம், தவறு நிகழ்ந்தால் அதைச் சுட்டிக்காட்டலாம் என்று மேலிடத் தலைவர்கள் நினைக்கிறார்கள். அதில் தவறு இல்லை.

மோடி அரசியலின் முன்பாக ராகுல் அரசியல் எடுபடாமல் போய்விட்டதே?

அப்படி அல்ல. பி.ஜே.பி-யின் அரசியல் வியூகம் வேறு மாதிரியாக உள்ளது. நாட்டில் தேவையற்ற ஒரு பதற்றத்தை ஏற்படுத்தி, நமக்கெல்லாம் பாதுகாப்பு தேவை என்று வட இந்திய மக்களை நம்பவைத்துள்ளார்கள். `நான்தான் உங்கள் பாதுகாவலன்' என்று சொல்லி ஒரு பிம்பத்தை உருவாக்கியுள்ளார்கள். அது வெறும் பிம்பம்தான் என்பதை மக்கள் புரிந்துகொள்வார்கள்.

காங்கிரஸ் கட்சியின் தலைவராக பிரியங்கா காந்தி வந்தால் எப்படி இருக்கும்?

பிரியங்கா காந்தி, ஒரு நல்ல தலைவராக இருக்கிறார். காங்கிரஸ் கட்சியின் தலைவராக அவர் வரலாம். ஆனால், இப்போதைக்கு காந்தி குடும்பத்திலிருந்து யாரும் தலைவர் பதவிக்கு வர வேண்டாம் என்று ராகுல் காந்தி சொல்கிறார். எதிர்காலத்தில், பிரியங்கா காந்தி காங்கிரஸ் தலைவராக வந்தால் அது நன்றாகவே இருக்கும்.

காங்கிரஸ் குடும்பத்தில் பிறந்த தமிழிசை சௌந்தரராஜன், தெலங்கானா கவர்னர் ஆகியிருக்கிறார். அவரை வாழ்த்தினீர்களா?

தமிழிசை எனக்கு ஒரு நல்ல நண்பர், சகோதரி. அவருக்குக் கிடைத்துள்ள வாய்ப்பையும் வளர்ச்சியையும் பெருமையாக நினைக்கிறேன். ஜெயலலிதாவை எப்படி பெருமையாகப் பார்த்தேனோ, அதுபோலவே தமிழிசையையும் பெருமையாகப் பார்க்கிறேன். அவர் செய்த பணிகளுக்கான அங்கீகாரத்தையும் மரியாதையையும் அந்தக் கட்சி அவருக்குக் கொடுத்துள்ளது.

காங்கிரஸ் கட்சியின் தேசிய செய்தித் தொடர் பாளரான குஷ்பு, கட்சியில் ஓரங்கட்டப்படுகிறாரா?

அப்படியெல்லாம் இல்லை. கட்சியின் சூழலைப் பொறுத்து அவரின் நடவடிக்கைகள் உள்ளன. கட்சி நிகழ்ச்சிகளில் அவர் பங்கேற்றுதான் வருகிறார். நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட அவருக்கு வாய்ப்பு வழங்கப்படாததால், பலரும் பலவற்றைச் சொல்கிறார்கள். காங்கிரஸ் கட்சி என்பது பல கோடித் துளிகள் சேர்ந்த ஒரு பெருங்கடல்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு