Published:Updated:

இது ஹோட்டல் இல்ல, விருந்தோம்பல் நடக்கும் வீடு! - சாதித்த கிராமத்துப் பெண்

அன்பு
பிரீமியம் ஸ்டோரி
அன்பு ( நா.ராஜமுருகன் )

#Motivation

இது ஹோட்டல் இல்ல, விருந்தோம்பல் நடக்கும் வீடு! - சாதித்த கிராமத்துப் பெண்

#Motivation

Published:Updated:
அன்பு
பிரீமியம் ஸ்டோரி
அன்பு ( நா.ராஜமுருகன் )

“அஞ்சு வருஷத்துக்கு முன்னாடி நான் கிராமத்துப் பெண். இன்னிக்கு நான் ‘சாதித்த கிராமத்துப் பெண்’. நமக்கான அடையாளங்களை நாமதான் உருவாக்கிக்கணும்’’ - பளிச் எனப் பேசுகிறார் அன்பு.

கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் ஒன்றியத்தில் உள்ள முனையனூரைச் சேர்ந்த அன்பு, திருமணமாகி 20 வருடங்கள்வரை இல்லத்தரசி. ஐந்து வருடங்களுக்கு முன் ஹோட்டல் தொழிலில் களம் இறங்கியவர், இப்போது மாதம் 2 லட்சம் ரூபாய் சம்பாதிக்கும் தொழில்முனைவோர். மேலும் தன் ஹோட்டலில், சுற்றியுள்ள கிராமங்களைச் சேர்ந்த, வறுமை நிலையில் உள்ள 25 பெண் களுக்கு வேலைவாய்ப்பு வழங்கியுள்ளார். கரூர் டு திருச்சி நெடுஞ்சாலையில் உள்ள திருக்காம்புலியூரில் இருக்கிறது இவரது ‘ஸ்ரீ சூர்யா கபே’ ஹோட்டல். தன் தொழிலில், ‘நல்ல சாப்பாடு ஒரு ப்ளஸ்னா, இந்த ஹோட்டல்ல விருந்தோம்பல் இன்னொரு ப்ளஸ்ங்க’ என்று சொல்லும் வாடிக்கையாளர்களைப் பெற்றிருக்கும் அன்புவிடம் பேசினோம்.

இது ஹோட்டல் இல்ல, விருந்தோம்பல் நடக்கும் வீடு! - 
சாதித்த கிராமத்துப் பெண்

“நான் பி.காம் பட்டதாரி. 25 வருஷத் துக்கு முன்னாடி எங்களுக்குக் கல்யாணம் முடிஞ்சது. கணவர் பேருந்துகள் வெச்சு போக்குவரத்துத் தொழில் பண்ண, நான் ரெண்டு குழந்தைகளைப் பார்த்துக்கிட்டு வீட்டுல இருந்தேன். எங்க வயல்ல வேலைக்கு வர்றவங்களுக்கு சாப்பாடு சமைக்கிறது, டீ கொடுக்குறதுனு எனக்குப் பொழுது ஓடும். என் கணவருக்குத் திடீர்னு பஸ் தொழில்ல பிரச்னைகள் வர, ஒப்பந்தப் பணிகளை எடுத்துச் செய்ய ஆரம்பிச்சார். மேலும் 10 வருஷத்துக்கு முன்னாடி இயற்கை விவசாயம் செய்ய ஆரம்பிச்சார். இதுக்கிடையில பசங்க ரெண்டு பேரும் கல்லூரியில படிக்கும் அளவுக்கு வளர்ந்துட்டாங்க’’ என்பவருக்கு, அந்தக் காலகட்டத்தில்தான் தான் ஏதாவது ஒரு தொழில் செய்ய வேண்டும் என்ற எண்ணம் வலுப்பெற்றிருக்கிறது.

‘‘அஞ்சு வருஷங்களுக்கு முன்னாடி கணவர் மோகன்தாஸ்கிட்ட, ‘கரூர் டு திருச்சி நெடுஞ்சாலை மார்க்கத்துல நல்ல ஹோட்டல்கள் ரொம்ப குறைவு. நாம களமிறங்கலாம்’னு சொன்னப்போ, அவர் ஓ.கேனு சொல்லிட்டார். ஆனா சொந்தக்காரங்க, ‘இதெல் லாம் தேவையில்லாத வேலை, கிராமத்துல ஹோட்டல் ஆரம்பிச்சா ஒரே மாசத்துல இழுத்து மூட வேண்டியதுதான்’னு அவநம்பிக்கையா பேசினாங்க. நான் எதையும் காதுல வாங்கிக்கல. ஹோட்டல் ஆரம்பிக்கிறதுக்கான வேலைகளை நானே பண்ண ஆரம்பிச்சேன்’’ என்பவர், முழு தைரியத் துடன் முதல் அடி எடுத்து வைத்திருக்கிறார்.

‘‘நாமக்கல் மாவட் டத்துல மத்திய அரசின் ‘ப்ரைம் மினிஸ்டர் எம்ப்ளாய்மென்ட் ஜெனரேஷன்’ங்கிற திட்டத்தின் கீழ் நடந்த 15 நாள்கள் பயிற்சியில கலந்துகிட்டு, அங்கு கிடைச்ச பாடத்தோடு தனியார் வங்கியில கணவர் உதவியோடு லோன் வாங்கினேன். முதல்ல ஸ்நாக்ஸ், ராகி முறுக்கு, இனிப்புகளை மட்டும் செஞ்சு விற்பனை பண்ணினோம். பிறகு, தேங்காய் பர்ஃபி, அதிரசம், பால்கோவானு விற்க ஆரம்பிச்சோம். ஆறு மாசம்வரை வியாபாரம் மந்தம்தான். வெறும் ஸ்நாக்ஸ்களை மட்டும் வித்தா போதாதுனு, அதை ஹோட்டலா விரிவுபடுத்த முடிவெடுத்தேன். ஷெட் போட்டு, ஹோட்டலுக்குத் தேவையான பொருள்கள், எந்திரங்கள்னு வாங்கினேன்.

 ஊழியர்களுடன்...
ஊழியர்களுடன்...

விறகு அடுப்பில்தான் சமையல். ஆண் மாஸ்டர் ஒருத்தர், பெண் ஊழியர் ஒருத்தர், நான்னு மூணுபேருதான் அப்போ இருந்தோம். எங்க வயல்ல விளைஞ்ச ஆர்கானிக் அரிசியை சாப்பாட்டுக்குப் பயன்படுத்தி னோம். டீ, காபிக்கு எங்க பண்ணை நாட்டுமாட்டுப் பால்தான். சுத்தமான கடலை எண்ணெயில்தான் சமையல். இந்த ருசி, மணமெல்லாம் கூட்டத்தை கூட்டிவந்தது. ஒவ்வொரு கஸ்டமருக்கும், வீட்டுக்கு வந்த உறவினர்போல விருந்தோம்பல் செய்வோம். எட்டு மாசத்திலிருந்து லாபம் பார்க்க ஆரம்பிச்சுட்டோம்’’ என்பவர், அடுத்ததாக பெண் களை வேலையில் அமர்த்தும் முடிவெடுத்திருக்கிறார்.

‘‘பெண்களை மட்டுமே வேலையில் அமர்த்தணும்னு முடிவெடுத்து சுத்தியுள்ள கிராமங்களில் ஏழ்மை நிலையிலிருந்த 25 பெண்களை வேலைக்கு எடுத்தோம். அவங்க வீட்டுக் கஷ்டமெல்லாம் சொல்லி மாளாது. வீட்டுக்கு சாயங்காலம் ஆறு மணிக்குள்ள போகலைன்னா, ஒரு பெண் ணோட கணவர் கதவை சாத்திடுவார். அதனால அவங்களை மட்டும் அஞ்சு மணிக்கே அனுப்பிடுவோம். பெண் ஊழியர்களை அழைச்சுட்டு வர வேன் வெச்சிருக்கோம். அவங்க எல்லாரையும் எங்க குடும்பமா நினைச்சு அக்கறையோட நடத்துறோம்’’ என்று பெருமையுடன் சொன்னவர், பிசினஸ் லாபக் கணக்கையும் பகிர்ந்துகொண்டார்.

‘‘இப்போ எல்லா செலவுகளும் போக மாசம் 2 லட்சம் ரூபாய் லாபம் கிடைக்குது. ரெண்டு வருஷத்துக்கு முன்னாடியே தனியார் வங்கியில வாங்கிய 25 ரூபாய் லட்சம் கடனை அடைச்சுட்டேன். இப்போ அதே சொந்தங்கள், ‘நீ சாதிப் பேன்னு முன்னாடியே தெரியும்’னு சொல்றாங்க. ஆமா... இங்க ஜெயிச்சுட்டு பேசுறவங்களைத்தான் கவனிப்பாங்க” என்றவாறே வாடிக்கையாளர்களை கவனிக்கச் செல்கிறார் அன்பு.

இது ஹோட்டல் இல்ல, விருந்தோம்பல் நடக்கும் வீடு! - 
சாதித்த கிராமத்துப் பெண்

குடும்ப பாரம் குறைஞ்சிருக்கு!

‘ஸ்ரீ சூர்யா கபே’வில் கேஷியராகப் பணியாற்றும் பிரியாவிடம் பேசினோம்.

“பி.சி.ஏ படிச்சிருந்தாலும் திருமணத்துக்குப் பிறகு வேலைக்குப் போக முடியலை. இப்போ சொந்த கிராமத்துலேயே மாசம் 12,000 ரூபாய் சம்பளத்துல வேலைபாக்குறேன். குடும்ப பாரம் குறைஞ்சுருக்கு. கேஷியர்னாலும் டீ போடுறது, ஸ்நாக்ஸ் செய்யுறதுனு எல்லா வேலைகளும் தெரியும். இங்கே முதலாளி, தொழிலாளி, கேஷியர், சமையல் மாஸ்டர், சப்ளையர், டேபுள் துடைப்பவர் எல்லாரும் ஒண்ணுதான் அன்பு அக்காவை பார்த்துக் கத்துக்கிட்டோம். அந்தளவுக்கு இலை போடுறது, தண்ணி வைக்கிறதுன்னு அக்கா எல்லா வேலைகளையுமே செய்வாங்க’’ என்றார் மகிழ்ச்சியாக.