Published:Updated:

`இது என்ன ஜுவல்னு தெரிய மாட்டேங்குது!' - பண்டைக்கால அணிகலன்கள் கண்காட்சியில் திகைத்த பெண்கள்

அணிகலன்கள் கண்காட்சியில் ராஜராஜன்
அணிகலன்கள் கண்காட்சியில் ராஜராஜன்

விருதுநகர் அரசு அருங்காட்சியகத்தில், சங்ககாலப் பெண்களின் அணிகலன்கள் கண்காட்சி நடைபெற்றது. இதில், 200-க்கும் மேற்பட்ட சங்க கால அணிகலன்கள் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன.

விருதுநகர் அரசு அருங்காட்சியகத்தில், ``கீழடி முதல் கி.பி வரை” என்ற தலைப்பில், பண்டைய மகளிர் அணிகலன்களின் சிறப்புக் கண்காட்சி நடைபெற்றது. சிவகாசியைச் சேர்ந்த பழம்பொருள் சேகரிப்பாளர் ராஜராஜன் சேகரித்துவைத்திருந்த பண்டைய மகளிர் காலத்தைச் சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட அணிகலன்கள் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன.

சுருதபாதனி
சுருதபாதனி

இதுகுறித்து ராஜராஜனிடம் பேசினோம், ``எங்க அப்பா, தாத்தா காலத்திலிருந்து இதுபோன்ற பழைமையான பொருள்களை சேகரித்துவருகிறோம். அப்பா, தாத்தா காலத்தில் பிண்ணாக்கு வியாபாரம்தான் செய்துட்டுவந்தாங்க. மாட்டுவண்டியில் பிண்ணாக்கை ஏற்றிக்கொண்டு கிராம் கிராமமாகப் போயி பிண்ணாக்கு விற்றார்கள். அப்போது, கண்ணில்படும் பழைமையான பொருள்களுக்கு, உரிய விலை கொடுத்து வாங்கி சேகரித்துவந்துள்ளனர்.

மண், மரம், இரும்பு, பித்தளை, வெள்ளி, தங்கத்தினாலான பொருள்களையும், கி.மு சந்திரகுப்தர் காலம் முதல் தற்போது வரை 60,000 நாணயங்கள் சேகரித்துவைத்துள்ளோம். நான் பட்டாசு ஏஜென்ட்டாக இருந்தாலும், எனக்குக் கிடைக்கும் பொருள்களையும் தற்போது வரை சேகரித்துவருவதுடன், 2000-க்கும் மேற்பட்ட பழைமையான பொருள்களைப் பாதுகாத்தும்வருகிறேன்.

அணிகலன்கள்
அணிகலன்கள்

தற்போது, சங்ககாலப் பெண்களின் பாரம்பர்ய அணிகலன்களைக் காட்சிப்படுத்தியுள்ளோம். நெத்திச்சூடி, செயின், அடுக்கு மாலை, கை ஆரம், கழுத்து ஆரம், காசு மாலை, மோதிர வகைகள், வளையல்கள், ஒட்டியானம், கால் கொலுசு, கால் சலங்கை, மெட்டி ஆகிய ஆபரணங்களைக் காட்சிப்படுத்தியுள்ளோம்.

மன்னர் காலத்துப் பெண்கள், தங்களின் கைகளில் அணிந்த வளையல்களில் சிறிய மடிப்புகள், நெழிவுகளுக்கு இடையிலோ, அடியிலோ ரகசிய இடைவெளிப் பகுதி இருக்கும். இதற்குள், சயனைடு போன்றவற்றை வைத்திருப்பார்களாம். ஆபத்துக் காலத்தில், ரகசியப் பகுதியிலுள்ள சயனைடை எடுத்து வாயில் போட்டு தங்களின் உயிரை மாய்த்துக்கொள்வார்களாம்.

அணிகலன்கள்
அணிகலன்கள்

அதேபோல, அவர்கள் உடுத்தும் சேலைகளுக்கு, பொருத்தமான நிறங்களில் மூலிகைகளால் பொட்டு வைப்பார்கள். இதற்காக, விசேஷக் குடுவையைப் பயன்படுத்தியுள்ளார்கள். கண் மை வைப்பதற்காகக் கண் மை குடுவையும், நெற்றியில் வைக்கும் விதவிதமான வடிவங்களின் பொட்டுகளின் அச்சுகளும் உள்ளன.

பெண்கள் தலைமுடியிலுள்ள சிக்குகளை எடுப்பதற்காகத் தற்போது பயன்படுத்திவரும் கம்பியை சினுக்கோலி என்கிறார்கள். ஆனால் முற்காலத்தில், சிக்குவாரி, மயிர்கோதி என்றுதான் சொல்வார்கள். கண்காட்சிக்கு வந்த பெண்களிடம் சிக்குவாரி எனப்படும் சினுக்கோலியைக் காண்பித்து, இது என்ன எனக் கேட்டாலே, `இடுக்கியா?' எனக் கேட்கிறார்கள். அதேபோல, சில அணிகலன்களை என்னவென்றே தெரியவில்லை என்கிறார்கள்.

சிக்குவாரி
சிக்குவாரி

மூக்கில் அணியும் அணிகலனான மூக்குத்தியை, முனைப்பத்தட்டு, புல்லாக்கு என்றுதான் அழைத்துள்ளார்கள். இந்த மூக்குத்தி, 25 முதல் 30 கிராம் வரை எடையுள்ளது. இவற்றை தற்போதைய பெண்கள் மூக்கில் அணிந்தால், பாட்டிமார்கள் பாம்படம் அணிந்த காது போல, மூக்கும் தொங்கிவிடும் போலிருக்கிறது.

இதேபோல, நகைகளை வைப்பதற்கு பாதுகாப்பான நகைப்பெட்டியும் உள்ளது. இந்த நகைப்பெட்டியை எப்படித் திறப்பது என்பதே சூட்சுமமாக உள்ளது. மருதாணிக் கிண்ணம், பலவித அடையாளங்களுடனான மோதிர வகைகள், மெட்டி வகைகள், குங்குமச் சிமிழ் வகைகள் உள்ளன. அந்தக் காலத்தில் தங்கத்திற்கு மதிப்பே கிடையாது. காரணம், தங்கம் தாராளமாகக் கிடைக்கும். ஆனால், தங்கத்தைவிட வெள்ளிக்குதான் விலைமதிப்பு அதிகம்.

கழுத்து ஆரம்
கழுத்து ஆரம்

ஒரு பெண் வெள்ளி ஆபரணங்கள் அணிந்திருந்தாலோ வெள்ளிப் பொருள்கள் வைத்திருந்தாலோ, செல்வந்த வீட்டுப் பெண்ணாக நினைப்பார்கள். ஆனால் இன்றோ, வெள்ளிக்கு மதிப்பில்லை. தங்கத்தின் விலை பல மடங்கு கூடிச்செல்கிறது. மண், சங்கு, தங்க ஆபரணங்களுக்கு அடுத்தபடியாக வெள்ளி ஆபரணங்களைத்தான் விரும்பி அணிந்துள்ளார்களாம்” என்று முடித்தார்.

அடுத்த கட்டுரைக்கு