Published:Updated:

புத்துயிர்ப்பு: முன்பொருகாலத்தில்...

MARUDHAN G
கார்த்திகேயன் மேடி

ஆண்ட்ரியா ட்வோர்கின்

பிரீமியம் ஸ்டோரி
`முன்பொரு காலத்தில்... இப்படித் தொடங்கும் தேவதைக் கதைகள் பலவற்றைப் படித்துத்தான் நாமெல்லாம் வளர்ந்திருப்போம்.

இந்தக் கதைகளைத்தான் நம் குழந்தை களுக்கும் சொல்லி வளர்த்திருப்போம். தயவுசெய்து மயக்கம் தெளிந்த பிறகு நிதானமாக அனைத்தையும் இன்னொருமுறை வாசியுங்கள்' என்கிறார் ஆண்ட்ரியா ட்வோர்கின். ஏன்?

` ‘வெறும் கதை’ என்று எதுவும் இல்லை இந்த உலகில். குருவியும் காகமும் தோன்றும் மழலைக் கதைகள் தொடங்கி, நுண்ணுணர்வோடு கட்டமைக்கப்படும் மாபெரும் இலக்கியங்கள்வரை எல்லாமே பல்வேறு கருத்துகளைச் சுமந்துவரும் வாகனங்கள். வாகனம் அழகாக இருக்கிறதா என்று மட்டும் பார்த்தால் போதாது. அது யாருடையது, அதில் என்ன ஏற்றி வைக்கப்பட்டிருக்கிறது, எதற்காக நம்மிடம் அனுப்பி வைக்கப்பட்டிருக்கிறது என்பதையும் கவனிக்க வேண்டும்' என்கிறார் ஆண்ட்ரியா.

`எல்லோருக்கும் தெரிந்த ஒரு கதையை எடுத்துக்கொள்வோம். முன்னொருகாலத்தில் ஒரு மகாராணி இருந்தார். ஒருநாள் ஜன்னலுக்கு அருகில் அமர்ந்து துணிவேலைப்பாடு செய்துகொண்டே தனக்குப் பிறக்கப்போகும் குழந்தையைப் பற்றிக் கனவு கண்டுகொண்டிருந்தபோது, சட்டென்று ஊசி, அவர் விரலைக் குத்திவிட்டது. மூன்று துளி ரத்தம் வெளியில் பனியில் தெறித்து விழுந்தது. அந்த மூன்று துளிகளை நினைவுபடுத்தும் வகையில், பனி போல வெளுத்த உடலும், ரத்தம் போல சிவந்த உதடுகளும் துணியைத் தாங்கிப்பிடித்திருந்த மரச் சட்டகம் போல் கறுத்த தலைமுடியும்கொண்ட ஒரு பெண் குழந்தை பிறக்கிறது. மகாராணி இறந்துபோனார்.

புத்துயிர்ப்பு: என் பாடல் உன்னை வீழ்த்தும்

மன்னர் மறுமணம் செய்துகொள்கிறார். இரண்டாவது ராணி, முதல் ராணியைப் போலவே அழகாக இருந்தார் என்றாலும் ஒரு வேறுபாடு இருந்தது. முதல் ராணி, தான் ஓர் அழகி என்பதையே உணராதவராக, உணர்ந்திருந்தாலும் வெளிப்படுத்திக்கொள்ளாதவராக, இருந்த இடம் தெரியாமல் இருந்துவிட்டு நல்லபடியாகப் போய்விட்டார். புதியவரோ செருக்குமிக்கவராகவும், தன் அழகைக் கொண்டு அதிகாரம் செலுத்துபவராகவும் இருந்தார். தன்னைவிடச் சிறந்த வீரன் இருந்துவிடக் கூடாது என்று ஒரு மன்னர் கருதுவதுபோல, தன்னைவிடச் சிறந்த அழகி இருந்துவிடக் கூடாது என்று புதிய ராணி கருதினார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

ஒரு நல்ல பெண்ணாக இருக்கமுடியவில்லை என்பது முதல் தவறு என்றால், ஓர் ஆணைப் போல இருக்க நினைத்தது இரண்டாவது தவறு. ஒரு தாய் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு முதல் ராணியை உதாரணம் சொல்லலாம் என்றால், ஒரு சித்தி எப்படி இருக்க வேண்டும் என்பதற்கான இலக்கணம் இரண்டாவது ராணி. ஒரு நல்ல பெண்ணின் அழகு உங்களை மயக்கும் என்றால், ஒரு மோசமான பெண்ணின் அழகு உங்களைத் திடுக்கிடச் செய்யும். `அழகு' என்பதற்குப் பதில் `அறிவு' என்றும் போட்டுக்கொள்ளலாம். ஜன்னலோரம் அமர்ந்து, பாந்தமாகத் துணி தைக்கும்வரை நீ நல்லவள். நல்ல ராணி. நல்ல அம்மா. ஏன், தியாகியும்கூட. மாறாக, உன் அழகை, அறிவை, பலத்தைப் பேச்சிலோ செயலிலோ வெளிப்படுத்தினால் நீ செருக்கு மிக்கவள். மோசமானவள். சித்தி.

 ஆண்ட்ரியா ட்வோர்கின்
ஆண்ட்ரியா ட்வோர்கின்

புதிய ராணியிடம் ஒரு மாயக்கண்ணாடி இருந்தது. அதன் முன்னால் தோன்றி, இந்த உலகில் யார் சிறந்த அழகி என்று அடிக்கடி கேட்பது அவர் வழக்கம். `சந்தேகம் இல்லாமல் நீங்கள்தான் ராணி' என்று கண்ணாடியும் ஒவ்வொருமுறையும் சொல்லும். ஒருநாள் அது மாற்றிச் சொன்னது. `நீங்கள் அழகிதான். ஆனால், உங்களைவிட ஸ்நோவொயிட் அழகு!'

அப்போது ஸ்நோவொயிட் ஏழு வயது சிறுமி. அம்மாவின் குழந்தை. `நூலைப் போல சேலை' வகை. தன்னுடைய அழகை மிக இயல்பாக எடுத்துக்கொள்ளும் பக்குவம் பெற்றவள். இந்தப் பக்குவம் ராணியை மேலும் பதற்றம் கொள்ளச்செய்கிறது. ஸ்நோவொயிட்டைக் கொல்லுமாறு கட்டளையிடுகிறார். ஸ்நோ வொயிட்டின் கள்ளம் கபடமற்ற முகத்தைக் கண்ட வீரன், அவளைக் கொல்ல மனமின்றி காட்டில் விட்டுவிடுகிறான்.

ஸ்நோவொயிட் காட்டில் உள்ள ஏழு குள்ளர்களின் வீட்டை அடைகிறாள். `நீ இங்கே தங்கியிருக்க வேண்டுமானால், எங்கள் வீட்டு வேலைகள் எல்லாவற்றையும் செய்ய வேண்டும்' என்று குள்ளர்கள் சொல்கிறார்கள். சொன்னதைக் கேட்கும் நல்ல குழந்தையான ஸ்நோவொயிட் இன்முகத்தோடு எல்லாப் பணி விடைகளையும் செய்கிறாள். குள்ளர்களுக்கும் மகிழ்ச்சி.

புத்துயிர்ப்பு: இருளுக்குள் ஒளி

ஸ்நோவொயிட் விதிகளை மதிப்பவள் என்றால், ராணியோ மீறுபவள். ஸ்நோவொயிட் தூய்மை என்றால், ராணியோ தீமை. எந்த அளவுக்கு? ஸ்நோவொயிட்டைக் கொன்றால் மட்டும் போதாது. அவள் இதயமும் அவளுக்கு வேண்டும். இதுதான் இதயம் என்று வீரன் அளித்த வேட்டையாடப்பட்ட விலங்கின் இதயத்தை உப்பு தூவி சமைத்துப் புசித்துத் திருப்தியடைகிறாள் ராணி. `என் அருமை மாயக்கண்ணாடியே, உலகின் சிறந்த அழகியை இப்போது காட்டு பார்ப்போம்' என்று அவள் சொன்னதும், குள்ளர்கள் வீட்டில் மகிழ்ச்சியோடு வாழும் ஸ்நோவொயிட்டை அது காட்டுகிறது. ராணி அதிர்ச்சியடைகிறாள்.

ஸ்நோவொயிட்டைக் கொல்ல அடுத்தடுத்து அவள் போடும் திட்டங்களெல்லாம் தோல்வி யடைகின்றன. இறுதியில், நஞ்சு செலுத்திய ஆப்பிள் ஒன்றை எடுத்துக்கொண்டு தானே கிளம்புகிறாள். சித்தி பொல்லாதவள் என்று தெரிந்தும் ஆப்பிளைச் சுவைக்கும் ஸ்நோ வொயிட் இறந்துபோகிறாள்.

குள்ளர்கள் ஒரு கண்ணாடிப் பெட்டிக்குள் ஸ்நோவொயிட்டின் உடலைச் சுமந்து செல்கிறார்கள். அந்த வழியாகச் செல்லும் இளவரசன் தற்செயலாக ஸ்நோவொயிட்டைக் கண்டு அவள் அழகில் மயங்கி, குள்ளர்களுக்கு வெகுமதி அளித்து உடலை வாங்கிக்கொள்கிறான். உயிரற்ற உடல்தான். ஆனால், அழகிய உடல். பேசாது, அசையாது, கண் சிமிட்டாது என்றாலும் பொம்மை அழகுதான் இல்லையா... அல்லது இவற்றையெல்லாம் செய்யாமல் இருப்பதால்தான் பொம்மையை எல்லோரும் விரும்புகிறார்களா?

குதிரையில் வைத்துச் சுமந்துசெல்லும்போது குலுங்கிய குலுக்கலில் வயிற்றுக்குள்ளிலிருந்த ஆப்பிள் வாய் வழியே வெளியில் வந்து விழ, ஸ்நோவொயிட் உயிர்த்தெழுகிறார். உயிர்பெற்ற பொம்மையைக் கண்டதும் காதல் மேலிட, ‘உலகின் வேறு எந்த மதிப்புமிக்க செல்வமும் வேண்டாம், நீ மட்டும் போதும்’ என்று அவளை மணந்துகொள்கிறான் இளவரசன். அதன்பின் எல்லோரும் மகிழ்ச்சியாக வாழ்கின்றனர்.

`விலையுயர்ந்த எந்தப் பொருளும் வேண்டாம், நீ போதும் என்கிறாயே, அப்படியானால் நானும் உனக்குப் பொருளா' என்று ஸ்நோவொயிட் இளவரசனிடம் ஒருபோதும் கேட்கப்போவதில்லை.

இனி, மாளிகையில் தனக்கென்று ஒதுக்கப்பட்ட அறையில் அமர்ந்து மரச் சட்டகத்தை எடுத்து மடியில் வைத்துக்கொண்டு, அம்மா விட்ட இடத்திலிருந்து ஸ்நோவொயிட் வேலைப்பாடுகளைச் செய்ய ஆரம்பிக்கலாம். வாழ்நாள் முழுக்க செய்துகொண்டே இருக்கலாம். `விலையுயர்ந்த எந்தப் பொருளும் வேண்டாம், நீ போதும் என்கிறாயே, அப்படி யானால் நானும் உனக்குப் பொருளா' என்று ஸ்நோவொயிட் இளவரசனிடம் ஒருபோதும் கேட்கப்போவதில்லை.

பிறந்த வீட்டிலும் புகுந்த வீட்டிலும் மட்டுமல்ல, இடையில் குள்ளர்கள் வீட்டிலிருந்தபோதும்கூட பொம்மை அமைதி யாகத் தன் பணியை மட்டும் செய்கிறது.

விசையை இயக்கினால் மட்டுமே திரும்பும், கண்களைச் சிமிட்டும், மகிழ்விக்கும். கோபம், ஏக்கம், சோகம், அன்பு, நேசம், காதல் எதையும் பொம்மை வெளிப்படுத்துவதில்லை. உயிரற்றுக் கிடந்தபோது மட்டுமல்ல... உயிரோடு இருந்தபோதும் ஸ்நோவொயிட் ஒரு பொம்மையாக, ஓர் உடலாக மட்டுமே இருக்கிறாள். அந்த உடல் கொண்டாடப்படுகிறது, வெறுக்கப்படுகிறது, வஞ்சிக்கப்படுகிறது, காதலிக்கப்படுகிறது... எதுவும் உணரப்படுவதில்லை.

சமூகத்துக்குப் பொம்மை பிடிக்கும். இழுத்த இழுப்புக்கெல்லாம் அது ஓடிவரும். அதை நீங்கள் அணைத்துக்கொள்ளலாம். துன்புறுத்தலாம். தூக்கி எறியலாம். கையை, காலை உடைக்கலாம். ஒன்று இல்லையென்றால் இன்னொன்று வாங்கிக்கொள்ளலாம். ஒரு ராணி போனால் இன்னொரு ராணி.

இந்த மரபை யார் மீறுகிறாரோ அவர் புதிய ராணியாக மாறுகிறார். `என் அழகை, என் அறிவை, என் உணர்வை மதிப்பேன், அச்சமின்றி வெளிப்படுத்துவேன்' என்று சொல்லும்போது, நீங்கள் ஒரு கொடுமைக்கார சித்தியாகவும் இதயமற்றவளாகவும் இதயத்தைப் புசிப்பவளாகவும் மாறுகிறீர்கள்.

ஓர் எளிய கதையை இப்படியெல்லாம் அர்த்தப்படுத்திக்கொள்ளவேண்டுமா என்று நீங்கள் திகைப்பீர்கள் என்றால் உங்களுக்கொன்று சொல்கிறேன். ஸ்நோ வொயிட் ஒரு விதிவிலக்கல்ல' என்கிறார் ஆண்ட்ரியா ட்வோர்கின்.

புத்துயிர்ப்பு: ஒரு பெண் எழுத்தாளரின் சுயபரிசோதனை

சிண்ட்ரெல்லாவின் கதையும் இதுதான். அவளுக்கொரு நல்ல அம்மாவும் மோசமான சித்தியும் வாய்க்கிறார்கள். இருவரும் எதிரெதிர். ஸ்நோவொயிட் போல சிண்ட்ரெல்லா உணர்வுகள் ஏதுமற்ற ஓர் அழகிய பொம்மை. நல்ல அம்மா ஆராதிக்கப்படுகிறார். சித்தி தண்டிக்கப்படுகிறாள்.

ரப்புன்ஸெல் கதை மட்டும் என்னவாம்? பக்கத்துத் தோட்டத்தில் விளையும் காய்கறிக்கு ஆசைப்பட்டு தன் குழந்தையை ஒரு மோசமான சூனியக்காரிக்கு விற்றுவிடுகிறாள் ஒரு பெண். அந்தச் சூனியக்காரி ரப்புன்ஸெலை ஒரு கோட்டையில் சிறைப்படுத்துகிறாள். நீதி? ஆசையை அடக்கிக்கொள்ளத் தெரியாத பெண் தன் குழந்தையை இழக்கிறாள். கையைக் காலை நீட்டமுடியாத பொம்மைபோல ரப்புன்ஸெல் கோட்டையில் சுருண்டுகிடக்கிறாள். இருந்தும் ஸ்நோவொயிட்டைப் போல, சிண்ட்ரெல்லா போல அவள் ஒரு நல்ல குழந்தை என்பதால் துயரங்களையெல்லாம் பொறுத்துக்கொள்கிறாள். இப்படி இருக்கும் வரை உங்களுக்குப் பிரச்னையில்லை. ஸ்நோவொயிட்டையும் சிண்ட்ரெல்லாவையும் மீட்ட அதே இளவரசன் கோட்டையில் ஏறிச்சென்று ரப்புன்ஸெலை மீட்கிறான்.

எனவே குழந்தை, இப்போதே முடிவு செய்துகொள். நீ ஸ்நோவொயிட்டாக இருக்கப் போகிறாயா அல்லது புதிய ராணியாகவா? அழகிய சிண்ட்ரெல்லாவா, கொடுமைக்கார சித்தியா? நீண்ட தலைமுடி கொண்ட ரப்புன்ஸெல்லா, சூனியக்காரியா? மரபா, மரபு மீறலா? அளவற்ற அமைதியா, அளவற்ற வேட்கையா? உன் அழகையும் அறிவையும் ஆற்றலையும் கொண்டு நல்லதோர் இளவரசனை வென்றெடுக்கப்போகிறாயா அல்லது அவற்றை ‘மோசமான முறையில்’ கையாண்டு உன்னையே தண்டித்துக் கொள்ளப் போகிறாயா? சமூகத்தோடு ஒட்டி வாழப்போகிறாயா அல்லது அதே சமூகத்தால் தூக்கி எறியப்படப் போகிறாயா?

ஸ்நோவொயிட் உயிர்பெற்று எழுந்தது ராணிக்குத் தெரியாது என்பதால், கடைசி கடைசியாக ஒருமுறை மாயக்கண்ணாடி முன்பு பெருமிதத்தோடு தோன்றினாள் ராணி. அதுவோ, திருமணக் கோலத்திலிருந்த ஓர் இளவரசியைக் காண்பித்து 'இவளே அழகி' என்றது. என்னது, இன்னொரு போட்டியா என்று வெகுண்டெழுந்து கிளம்புகிறாள் ராணி.

தடபுடலாக விழா நடந்துகொண்டிருந்தது. ராணி வருவாள் என்று ஏற்கெனவே தெரிந் திருந்ததால் பழுக்கக் காய்ச்சப்பட்ட இரும்புக் காலணிகளை அவளுக்காகத் தயாராக வைத்திருந்தார்கள் மாளிகையிலிருந்தவர்கள். இரவு முழுக்க இதை அணிந்து நீ ஆட வேண்டும் என்று கட்டளையிடப்பட்டது. ராணி அணிந்துகொள்கிறாள். உயிரை இழந்ததோடு உயிருக்கும் மேலாகப் போற்றிவந்த அழகையும் இழக்கிறாள். பளபளப்பான கண்ணாடிக் காலணிகள் சிண்ட்ரெல்லாக்களுக்கு மட்டுமே கிடைக்கின்றன. உங்களுக்கு என்ன வேண்டும்?

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு