
சென்னை நகரின் முதல் பட்டியலினப் பெண் துணை மேயர்; மதராஸ் பல்கலைக்கழகத்தின் முதல் பட்டியலினப் பெண் செனட் உறுப்பினர்; தந்தை பெரியாருக்கு `பெரியார்' பட்டம் சூட்டியவர்
ஹம்சத்வனி - ஓவியம்: பாரதிராஜா
“நம்நாடு தாய் நாடென்றும், நாம் பேசும் பாஷை தாய் பாஷையென்றும் கல்விக்குத் தலைவி சரஸ்வதி என்றும் செல்வத்துக்குத் தலைவி லட்சுமியென்றும் சிறப்பாகப் பெண்களைக் குறித்தே சொல்லப்படுவதால், மாதர்களை கேவலம் மிருகமாக மதித்து நடத்தாமற்படிக்கு அவர்கள் முன்னேற்றமே நமது விடுதலை, நம் தேச முன்னேற்றம் என்பதை மனதிலிருத்தி; ஸ்த்ரீகள் முன்னேற்ற விஷயத்தில் ஏகமனதாகப் பாடுபட்டு அவர்களுக்கும் தக்க கல்வியை அளிக்குமாறு மிகுந்த வந்தனத்தோடு கேட்டுக் கொள்கிறேன்”- திருநெல்வேலி ஜில்லா ஆதிதிராவிடர் மாநாட்டில் கௌரவ நீதிபதி மீனாம்பாள் சிவராஜ் தலைமை உரை, 1937 ஜனவரி 31.
பர்மாவின் தலைநகர் ரங்கூனில் 1904-ம் ஆண்டு, டிசம்பர் 26 அன்று வி.ஜி.வாசுதேவப் பிள்ளை, மீனாட்சி தம்பதியின் மகளாகப் பிறந்தார் மீனாம்பாள். இவரது தந்தை பர்மாவில் வணிகம் செய்துவந்தார். இவர் மூன்று முறை சென்னை மாநகராட்சியின் உறுப்பினராகவும் 1923-ம் ஆண்டு முதல் 1926-ம் ஆண்டு வரை மதராஸ் மாகாண சட்டமன்ற உறுப்பினராகவும் இருந்தார். மாகாணத்தின் முதல் பட்டியலின சட்டமன்ற உறுப்பினர் இவரே. 1900-ம் ஆண்டு ரங்கூனில் மதுரைப்பிள்ளை உயர்நிலைப் பள்ளியைத் தொடங்கி நடத்திவந்தார் வாசுதேவன். தந்தை தோற்றுவித்த பள்ளியிலேயே படித்துத் தேறினார் மீனாம்பாள். ஆங்கிலம், தமிழ், தெலுங்கு, இந்தி எனப் பல மொழிகள் பேசவும் எழுதவும் கற்றுத் தேர்ந்தார். 1917-ம் ஆண்டு, ரங்கூன் கல்லூரியில் நுண்கலைக் கற்றுத் தேர்ந்தார் மீனாம்பாள்.

1918 ஜூலை 10 அன்று மீனாம்பாளின் திருமணம், சென்னையைச் சேர்ந்த சட்டக்கல்லூரி மாணவரான சிவ ராஜுடன் நடைபெற்றது. 16 வயதான சுட்டிப்பெண் நாடுவிட்டு நாடு என்று பெரும் மாற்றம். வாழ்க்கை முறையில் எதுவும் மாற்றமில்லை. சிவராஜ் பெரும் புரட்சியாளர். ஒடுக்கப்பட்ட மக்களுக்காகத் தொடர்ச்சியாகக் குரல்கொடுத்து வந்தார். தந்தை வீட்டில் இருந்த அதே விடுதலை உணர்வும் சூழலும் கிடைக்க, மீனாம்பாளுக்குக் குடும்ப வாழ்க்கை மகிழ்வாகவே இருந்தது. தம்பதிக்கு கல்யாணி, தயாசங்கர், பத்மினி, போதிசந்தர் என நான்கு குழந்தைகள் பிறந்தனர். 1925-ம் ஆண்டு, சட்டக்கல்லூரியில் விரிவுரையாளராகப் பணியைத் தொடங்கிய சிவராஜ், பேராசிரியராகப் பதவி உயர்வு பெற்றார். 1926-ம் ஆண்டு தேர்தலில் நீதிக்கட்சியின் சார்பாகப் போட்டியிட்டு ஜெயித்து மதராஸ் மாகாண சட்ட மேலவை உறுப்பினரானார் சிவராஜ். 10 ஆண்டுகள் அந்தப் பதவியில் நீடித்தார்.
1928-ம் ஆண்டு, சைமன் கமிஷன் இந்தியா வரப்போகிறது என்றதும் அதற்கு எதிர்ப்பு தெரிவித்துக் களமிறங்கியது காங்கிரஸ். அந்த இயக்கத்தில் சில உயர்சாதித் தலைவர்களின் போக்கு, ஒடுக்கப்பட்ட மக்களின் வளர்ச்சிக்கு எதிரானது என்று நினைத்தார் மீனாம்பாள். ஆங்கிலேயரின் சட்டங்களைத் திருத்த அமைந்த வாய்ப்பான சைமன் கமிஷனை ஏன் எதிர்க்க வேண்டும், அதனால் ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்வில் மறுமலர்ச்சி ஏற்படும் என்றால், ஏன் தடுக்க வேண்டும் என்ற எண்ணம் கொண்டு சைமன் கமிஷனை ஆதரித்து மேடைகளில் பேசத்தொடங்கினார்.
அம்பேத்கர், பெரியார், நேரு, ஜின்னா என்று இந்தியாவின் அன்றைய தலைவர்கள் அனைவருடனும் இணக்கமான நட்பு தம்பதிக்கு இருந்தது. `என் தங்கை மீனாம்பாள்' என்று பாபா சாகிப் அம்பேத்கரும், தந்தை பெரியாரும், அறிஞர் அண்ணாவும் அழைக்கும் அளவுக்கு மக்கள் பணியாற்றி வந்தார் மீனாம்பாள். இந்தி எதிர்ப்புப் போராட்டத்தை முதன்முதலில் முன்னெடுத்தப் பெண்களில் மீனாம்பாள் குறிப்பிடவேண்டியவர்.
கௌரவ நீதிபதி, சென்னை மாநகராட்சி கவுன்சிலர், திரைப்படத் தணிக்கைக்குழு உறுப்பினர், சென்னை மாகாண ஆலோசனைக்குழு உறுப்பினர், தொழிலாளர் டிரிப்யூன் உறுப்பினர், சென்னை நகர ரேஷன் ஆலோசனைக்குழு உறுப்பினர், சென்னைப் பல்கலைக்கழக செனட் உறுப்பினர், போருக்குப் பின்னான புனரமைப்புக் குழு உறுப்பினர், எஸ்.பி.சி.ஏ உறுப்பினர், நெல்லிக்குப்பம் பாரி நிறுவனத் தொழிலாளர் சங்கத் தலைவர், தாழ்த்தப்பட்டோர் கூட்டுறவு வங்கி இயக்குநர், அண்ணாமலை பல்கலைக்கழக செனட் உறுப்பினர், சென்னை கூட்டுறவு வீட்டுவசதி சங்க இயக்குநர், விடுதலைபெற்ற கைதிகள் நலச்சங்க உறுப்பினர், காந்திநகர் மகளிர் சங்கத் தலைவர், மகளிர் தொழில் கூட்டுறவுக் குழுத் தலைவர், சென்னை அரசு மருத்துவமனைகளின் ஆலோசனைக்குழு உறுப்பினர், லேடி வில்லிங்டன் கல்லூரி தேர்வுக்குழுத் தலைவர்… இத்தனை பதவிகளையும் பல்வேறு ஆண்டுகளில் திறம்பட நிர்வகித்துக்கொண்டே குடும்பத்தையும் கட்டிக்காத்தவர் மீனாம்பாள். இவரது குடும்பம் முழுக்க ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் அதிகாரிகள், மருத்துவர்கள்!
“மாமியின் வீட்டில் எப்போதும் உறவினர்களுக்குப் பஞ்சம் இருக்காது” என்று சிரித்துக்கொண்டே சொல்கிறார் மீனாம்பாளின் கடைக்குட்டி மருமகளான பிரபல சரும நோய் மருத்துவர் சுலோச்சனா போதிசந்தர். “நான் தூரத்து உறவு என்பதால் சிறுவயது முதலே மாமியைக் கவனித்திருக்கிறேன். அன்பும் அரவணைப்பும் கொண்டவர். அதேநேரம் எடுக்கும் நிலைப்பாட்டில் கொஞ்சமும் தளராதவர். வாசிப்பு அவருக்கு மிகப்பிடித்த பொழுதுபோக்கு. விகடன் இதழ்களை மொத்தமாக எடுத்து வாசித்துக்கொண்டிருப்பார். ஏறத்தாழ 10 ஆண்டுக்காலம் மண்ணடியில் கூட்டுக் குடும்பத்தில் எங்களோடு தங்கி இருந்தார்” என்று சொல்கிறார் சுலோச்சனா.
1938 நவம்பர் 13 அன்று சென்னை ஒற்றைவாடை நாடகக் கொட்டாயில் தமிழ்நாட்டுப் பெண்கள் மாநாடு கூடியது. அன்றுதான் ஈரோடு ராமசாமி சுயமரியாதை இயக்கப் பெண்களால் `பெரியார்' என்று பட்டம் சூட்டப்பட்டார். இந்த மாநாட்டுக் கொடியை உயர்த்தி தீர்மானங்களைக் கொண்டுவந்தவர், அன்னை மீனாம்பாள். இறுதிவரை பெரியாரின் சுயமரியாதைக் கொள்கையை விடாது தாங்கிப் பிடித்திருந்தார் அன்னை.
அண்ணல் அம்பேத்கர் ஒடுக்கப்பட்ட மக்களுக்காகத் தொடங்கிய அனைத்திந்திய பட்டியலினங்களின் சம்மேளனத்தின் (ஏ.ஐ.சி.எஸ்.எஃப்) முதல் தலித் பெண் தலைவர் மீனாம்பாள்தான். தம்பதியிடம் அளப்பரிய அன்புகொண்டிருந்த அண்ணல் தன் கையால் சமைத்து இவர்களுக்கு உணவு பரிமாறியிருக்கிறார்.
களப்பணியாற்ற என்றுமே தயங்கியதில்லை மீனாம்பாள். ஜே.சி.ஆதிமூலத்தின் அழைப்பை ஏற்று கோலார் தங்கவயல் பகுதியில் தொழிலாளர்களின் தேவைகளை நேரடியாகக் களத்தில் கண்டறிந்தார்கள் சிவராஜ் தம்பதியர்.
1952-ம் ஆண்டு நடைபெற்ற முதல் மதராஸ் மாநில சட்டமன்றத் தேர்தலில் பட்டியலின சம்மேளனத்தின் சார்பில் மதுராந்தகம் தொகுதியில் போட்டியிட்ட மீனாம்பாள் தோல்வியைத் தழுவினார். 1967-ம் ஆண்டு தேர்தலில் ஆயிரம் விளக்கு தொகுதியில் காங்கிரஸ் கட்சி வேட்பாளராக நிறுத்தப்பட்டார். காங்கிரஸுக்கு எதிராக எதிர்ப்பலை இருந்த அந்தத் தேர்தலில் மீனாம்பாள் உட்பட பல காங்கிரஸ் தலைவர்கள் தோல்வியைத் தழுவினர்.
1964 செப்டம்பர் 29 அன்று கணவர் சிவராஜ் இறந்துபோக, குடும்பத்தைக் கவனித்துக்கொண்டே அரசியல் மற்றும் சமூகப்பணியாற்றினார் அன்னை. மயிலாப்பூர் லஸ் சர்ச் சாலை, ராயப்பேட்டை, மண்ணடி என்று வாடகை வீடுகளில்தான் குடும்பம் குடியிருந்தது. காந்தி நகரில் சொந்த வீடொன்றை பின்னாளில் வாங்கினார்கள். தொடர்ந்து சமூகப் பணியாற்றிய அன்னை, தன் இறுதி 20 ஆண்டுகளை பார்வையற்ற நிலையில் கழித்தார் என்று சொல்கிறார் மருமகள் சுலோச்சனா. “பார்வை சுத்தமாக இல்லை என்றாலும், வாசிப்பை மாமி விடவில்லை. தினமும் காலையில் செய்தித்தாளை யாரையாவது வாசிக்கச் சொல்லிக் கேட்டுவிடுவார். பார்வையற்ற நிலையில் கூட கூலிங் கிளாஸ் அணிந்துகொண்டு கூட்டங்களுக்குப் போய் பேசிவிடுவார்” என்று சொல்கிறார் இவர்.
தன் 88-வது வயதில் 1992 நவம்பர் 30 அன்று காலமானார் அன்னை மீனாம்பாள். எங்கோ ரங்கூனில் பிறந்து வளர்ந்து, சென்னைக்கு வாழ்க்கைப்பட்டு வந்தவர், மண்ணின் மகளாக ஒடுக்கப்பட்ட சமுதாய மக்களுக்காக தன் வாழ்நாளின் இறுதிவரைக் குரல்கொடுத்து வந்தார். இவரது நினைவாக அவர் வசித்த ராயப்பேட்டை ஆண்டி தெருவுக்கு ‘மீனாம்பாள் சிவராஜ் தெரு’ என்று பெயர் சூட்டினார் மறைந்த முதல்வர் ஜெயலலிதா.
ஒடுக்கப்பட்ட இனத்தில் பிறந்து, கட்டுப்பாடுகளை உடைத்து, இன்றளவும் தமிழகம் போற்றும் ஆளுமையாக நிமிர்ந்து நிற்கும் அன்னை மீனாம்பாள், கண்டிப்பாக மாநிலத்தின் ‘அன்னை’ தான்!