Published:Updated:

``இனி பிளாக் அண்ட் லவ்லினு சொல்லுவோம்!'' #BlackIsBeautiful

Black And Beautiful
Black And Beautiful ( pixabay )

பல நூற்றாண்டுகளாக இருந்து வந்த நிறம் குறித்த பாகுபாடு, ’முடிவுக்கு வந்து விடலாம்’ என்ற நம்பிக்கையை நமக்குள் ஏற்படுத்தியிருக்கின்றன சமீபத்திய சில சம்பவங்கள். #BlackIsBeautiful

'கறுப்பே அழகு, காந்தலே ருசி' பழமொழியில் ஆரம்பித்து 'கறுப்புதான் எனக்குப் பிடிச்ச கலரு' டான்ஸ்வரை மேலோட்டமாகப் பார்த்தால் கறுப்பு நிறத்தைக் கொண்டாடுவதுபோலத்தான் இருக்கும். உண்மையில், சமூகத்தின் நிற அளவீட்டில் கறுப்பு நிறம் இரண்டாம்பட்சமாக இருப்பதால்தான் 'கறுப்பே அழகு' , 'கறுப்புதான் அழகு' என்று அழுத்தம் கொடுத்து ஒரு பழமொழியையும் பாடலையும் உருவாக்க வேண்டியிருக்கிறது. நிறத்தை வைத்துப் பணம் சம்பாதிக்கிற உலகளாவிய மார்க்கெட்டிங்தான் ஃபேர்னெஸ் க்ரீம் விற்பனைகள். இந்த க்ரீம்களில் இருக்கிற ஃபேர் என்கிற வார்த்தையை நீக்க வேண்டும் என்று பலரும் பல வருடங்களாகப் போராடியதன் விளைவு ஃபேர் அண்ட் லவ்லி க்ரீம் தயாரிப்பு நிறுவனம், ’கூடிய விரைவில் தன்னுடைய க்ரீம்களில் ஃபேர் என்ற வார்த்தை இடம் பெறாது’ என்றிருக்கிறது.

fairness cream
fairness cream

இதனைத் தொடர்ந்து ஷாதி மேட்ரிமோனியல் டாட் காம் பெண்களின் நிறம் தொடர்பாக வைத்திருந்த ஃபில்டரை தங்கள் வெப் சைட்டிலிருந்தே நீக்கியிருக்கிறது. அதாவது, இனிமேல் இந்த டாட் காமில் பெண்ணின் நிறம் என்னவென்று கேட்கிற ஆப்ஷனே இருக்காது. பாரத் மேட்ரிமோனியல் டாட் காமும் ’இனிமேல் எங்கள் சைட்டில் மணப்பெண்ணின் நிறம் பற்றித் தெரிந்துகொள்கிற கேள்வி இருக்காது’ என்றிருக்கிறது. கூடுதல் நல்ல செய்தியாக, ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனம், இந்தியாவில் மட்டுமே தாங்கள் விற்பனை செய்துவந்த தங்கள் தயாரிப்பான ஸ்கின் லைட்டனிங் க்ரீம்களை இனி விற்பனை செய்ய மாட்டோம் என்று அறிவித்திருக்கிறது. பல நூற்றாண்டுகளாக இருந்து வந்த நிறம் குறித்த பாகுபாடு, ’முடிவுக்கு வந்து விடலாம்’ என்ற நம்பிக்கையை நமக்குள் ஏற்படுத்தியிருக்கின்றன மேலே குறிப்பிட்டுள்ள சம்பவங்கள் எல்லாம்... இந்த அழகான ஆரம்பம் குறித்து உங்கள் கருத்து என்னவென்று 'சில்லுக்கருப்பட்டி' டர்ட்டிள் வாக்கில் லட்சணமான முகத்துடன் நம்மை வசீகரித்த செம்மலர் அன்னத்திடம் கேட்டோம். அதேபோல சரும மருத்துவர் வானதியிடம் ‘ஸ்கின் லைட்டனிங் க்ரீம்’களின் நெகட்டிவ் பக்கம் குறித்தும் பேசினோம்.

"எங்கம்மா கறுப்பா, ரொம்ப அழகா இருப்பாங்க. அதனால, சின்ன வயசுல இருந்தே எனக்கு அழகுன்னா அது கறுப்புன்னு மனசுல பதிவாகிடுச்சு. இதை வெளில சொன்னா இந்த உலகம் என்னைக் கேலி பண்ணும். ஆனா, அந்தத் தன்னம்பிக்கையிலதான் நான் ஆக்ட்டிங்கை என் புரொஃபஷனாகத் தேர்ந்தெடுத்தேன். இதுக்காக நான் அங்கவை, சங்கவை உட்பட பல கேலிகளைச் சந்திச்சிருக்கேன். ஆனா வருத்தப்பட்டதில்ல.

சில்லுக்கருப்பட்டி செம்மலர் அன்னம்
சில்லுக்கருப்பட்டி செம்மலர் அன்னம்

கறுப்புன்னா அசிங்கம். அது அழகு கிடையாதுன்னு சினிமா உலகமும் விளம்பரங்களும் நம்மை நம்ப வெச்சிருக்கு. அபூர்வமா கறுப்பு நிறக் கதாநாயகிகள் ஃபீல்டுக்குள்ள வர்றப்போ ரொம்ப நம்பிக்கையா இருக்கும். அடுத்தடுத்த படங்கள்ல அவங்களும் வெள்ளையா வர்றப்போ ஏமாற்றமா ஆயிடும்.

அப்படியே எங்களை மாதிரி கறுப்பு நிறப் பெண்கள் தங்களோட அழகை நம்பி நடிக்க வந்தாலும், கிடைக்கிற கேரக்டர் என்னவோ ஏழைப் பெண்ணும் வேலைக்காரப் பெண்ணும்தான். பெரிய டைரக்டர்ஸ்தான் இதுக்கொரு நல்ல முடிவு எடுக்கணும்" என்றவர் தொடர்ந்தார்.

சில்லுக்கருப்பட்டி செம்மலர் அன்னம்
சில்லுக்கருப்பட்டி செம்மலர் அன்னம்

"ஃபேர்னெஸ் க்ரீம் விளம்பரங்களைப் பார்க்கப் பார்க்க, பெத்த அம்மாவும், கூடப் பிறந்த அக்கா, தங்கச்சியும் கறுப்பா இருந்தாலும் வரப்போற மனைவி வெள்ளையா இருக்கணும்னு ஆம்பளைங்க ஆசைப்படறாங்க. இதைவிட மனசுக்கு நெருடலான விஷயம், பேரன், பேத்தி வெள்ளையா பிறக்கணும்கிறதுக்காக கறுப்பான மகனுக்கு வெள்ளையா பொண்ணு தேடுறாங்க அம்மாக்கள். இந்த எண்ணம் மாறணும். அதுக்கு வெள்ளை அழகுன்னா கறுப்பும் அழகு என்ற தெளிவு சமூகத்துக்கு வரணும். இனி பிளாக் அண்ட் லவ்லினு சொல்வோம்" என்கிறார் அழுத்தம் திருத்தமாக செம்மலர் அன்னம்.

வெள்ளை நிறத்துக்காகப் பெண்கள் மருந்துகளை நாடுவது பற்றியும், மருந்துகளைத் தொடர்ந்து எடுத்துக்கொள்ளும்போது வருகிற பக்க விளைவுகள் பற்றியும் சொல்கிறார் சரும மருத்துவர் வானதி.

சரும மருத்துவர் வானதி
சரும மருத்துவர் வானதி

"குரங்கிலிருந்து நாம் மாறி வந்தபோது நம் உடலில் இருந்த ரோமங்கள் உதிர்ந்தன. பரிணாம வளர்ச்சியில் முடி உதிர்ந்த சருமத்தை சூரிய ஒளியிலிருந்து காப்பாற்றவே மெலனின் உருவாக ஆரம்பித்தது. அதிலும் இந்தியா போன்று பூமத்திய ரேகைக்கு மிக அருகில் உள்ள நாடுகள் சூரிய ஒளியை நேரடியாகப் பெறக் கூடியவை. இதனால் சருமப் புற்றுநோய் போன்ற பிரச்னைகள் வராமல் இருப்பதற்காக இயற்கையே நம் சருமத்தில் அடர்ந்த பிரவுன் நிறத்தில் மெலனினை உருவாக்கியது. மனிதன் இதைக் குறைக்கிறேன், வெள்ளை நிறம் ஆக்குகிறேன் என்று உலகின் மிகப்பெரிய லாபகரமான வியாபார வலைக்குள் சிக்கி விட்டான்.

கர்ப்பிணிகளுக்கு கொரோனா தொற்று வராமல் தடுப்பது எப்படி? மருத்துவர் கைடன்ஸ்!

சருமத்தை வெள்ளை ஆக்குகிற கெமிக்கல் பீலிங், ஸ்கின் லைட்டனிங் க்ரீம் இரண்டும் முகமெல்லாம் பருக்கள் வந்து தழும்புகளுடன் இருப்பவர்களுக்கு நல்ல சிகிச்சைகள். அவற்றை சரும மருத்துவரின் ஆலோசனை இல்லாமல் செய்யும்போது ஆபத்தாகி விடலாம். இளைய தலைமுறை மத்தியில் ஸ்கின் லைட்டனிங் மோகம் தற்போது அதிகம் இருக்கிறது. இதற்கு முறைப்படி சரும மருத்துவரைச் சந்தித்து, க்ரீம்களை வாங்கிப் பயன்படுத்தும்போது, ’அவை அவர்கள் சருமத்துக்கு ஏற்றவைதானா', ’எவ்வளவு நாள்கள்தான் பயன்படுத்த வேண்டும்’, 'சம்பந்தப்பட்ட க்ரீம்களில் இருக்கிற ஸ்டீராய்டு தன்மை' என எல்லாவற்றையும் ஆலோசித்துப் பரிந்துரைப்போம். குறிப்பிட்ட நாள்களுக்குப் பிறகு அதைப் பயன்படுத்த வேண்டாம் என்போம்.

அழகுக்காகப் பயன்படுத்துகிற ஸ்கின் லைட்டனிங் க்ரீம் அழகைக் குலைக்க ஆரம்பிக்கும்.
சரும மருத்துவர் வானதி
கொரோனா vs சாதாரண சளி, காய்ச்சல் - என்ன செய்ய வேண்டும் நாம்?

ஆனால், நம் நாட்டில் மருத்துவருடைய பிரிஸ்கிரிப்ஷன் இல்லாமலேகூட ஸ்கின் லைட்டனிங் க்ரீம்களை வாங்க முடியும் என்பதால், அவற்றை வாங்கி ஒரு நாளைக்குப் பலமுறை எனப் பல வருடங்கள் தொடர்ந்து பயன்படுத்துகிறார்கள். ஒரு கல்லூரி மாணவி இப்படிச் செய்யும்போது அவளுடைய பளிச் முகத்தைப் பார்த்த மற்ற மாணவிகளும் அந்தக் க்ரீமைப் பயன்படுத்த ஆரம்பிக்கிறார்கள். விளைவு சருமம் மெலிந்து போகும். முகத்தில் ஓடுகிற நரம்புகள் வெளித்தெரிகிற அளவுக்குச் சருமம் பலவீனமாகும். இன்னும் சிலருக்கு இந்த வகை க்ரீம்களை முகத்தில் போடுவதை நிறுத்திவிட்டால் முகம் முழுக்க பருக்கள் வந்துவிடும். அழகுக்காகப் பயன்படுத்துகிற ஸ்கின் லைட்டனிங் க்ரீம் அழகைக் குலைக்க ஆரம்பிக்கும். உங்கள் சருமத்தின் நிறம் எப்படி வேண்டுமானாலும் இருக்கட்டும், அதைச் சுத்தமாக வைத்திருங்கள். கறுப்பு வெள்ளை எல்லாம் அடுத்தவரின் கண்களுக்குத்தான்'' என்கிறார்.

அடுத்த கட்டுரைக்கு