Published:Updated:

நான் உயிரோட இருக்கிறதுக்கு காரணம் ஓவியம்தான்!

கமலா
பிரீமியம் ஸ்டோரி
கமலா

கலங்க வைக்கும் கமலா

நான் உயிரோட இருக்கிறதுக்கு காரணம் ஓவியம்தான்!

கலங்க வைக்கும் கமலா

Published:Updated:
கமலா
பிரீமியம் ஸ்டோரி
கமலா

மூன்றாவது முறையாக மாரடைப்பு ஏற்பட்டு சில வாரங்களுக்கு முன்புதான் ஆஞ்சியோகிராம் சிகிச்சை முடித்து வந்திருக்கிறார் கமலா. ஆனால், அவரது பேச்சிலோ உடல்மொழியிலோ அதற்கான எந்தச் சுவடும் இல்லை. சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள அவரது வீட்டில் உற்சாகத்துடன் வரவேற்கிறார்.

‘`என்னைப் பொறுத்தவரை ஹாஸ் பிட்டல் ட்ரீட்மென்ட் ஒரு பகுதிதான். ஓவியம்தான் எனக்குப் பெரிய ட்ரீட் மென்ட்” எனச் சிரிக்கிறார்.

67 வயதிலும் அவரை உற்சாகமாக வைத்திருக்கும் ஒரே விஷயம் ஓவியம். வேண்டாம் என நாம் தூக்கிப்போடும் பொருள்களையெல்லாம் அழகிய ஓவியங் களாக மாற்றுவதில் நிபுணி. காலி டப்பா ஒன்றை அழகான வெங்கடாசலபதியாக மாற்றியிருந்தார்.

“அது ஒரு லிக்விட் டிடர்ஜென்ட் டப்பா... அதன் கூம்பு வடிவத்திலான மேல் பகுதியைப் பார்த்தபோது, வெங்கடாசலபதியா மாத்தலாமேன்னு தோணுச்சு. பெயின்ட் பண்ணி கல் பதிச்சேன். ரொம்ப நல்லா வந்திருக்கு” எனச் சொல்லும் கமலா, காபித்தூள், முகம் பார்க்கும் கண்ணாடி, அரச இலை, சணல், முட்டை ஓடு, காய்கறிக் கழிவுகள் என 75 வகையான பொருள்களில் ஓவியங்களைச் செய்து அசத்துகிறார். “நீங்க என் கையில எந்தப் பொருளைக் கொடுத்தாலும் அதை என்னால ஓவியமா மாத்த முடியும்” என்கிறார்.

நான் உயிரோட இருக்கிறதுக்கு காரணம் ஓவியம்தான்!

``சென்னையிலதான் பிறந்து வளர்ந் தேன். அப்பா வருவாய்த்துறையில் உதவி ஆணையரா இருந்தார். ரெண்டு தம்பி, ரெண்டு தங்கைன்னு என்கூடப் பொறந்தவங்க மொத்தம் நாலு பேர். அப்பா படிச்சு அரசு வேலையில இருந் தாலும் பொண்ணுங்களைப் படிக்க அனுப்பக் கூடாதுங்கிற எண்ணம் உள்ளவரா இருந்தார். எட்டாவது முடிச் சதும் என்னை என் தாய்மாமாவுக்கே கல்யாணம் பண்ணிக் கொடுத்துட்டாங்க.

என் வீட்டுக்காரர் எஸ்.எஸ்.எல்.சி படிச்சிட்டு, மில் வெச்சு பிசினஸ் பண்ணி கிட்டிருந்தார். புகுந்த வீட்டுல எனக்கு சமைக்கிறதைத் தவிர வேற வேலை இல்லை. வாழ்க்கை ரொம்ப போரடிச்சது. நான் படிக்கணும்னு சொன்னேன்.

‘நீ எவ்வளவு வேணும்னாலும் படி, நான் உன்னைப் படிக்க வைக்கிறேன்’னு என் கணவர் சம்மதிச்சார். வீட்ல இருந்தே பி.காம் முடிச்சேன். காலையில எழுந்ததும் நான் போடுற கோலத்தைப் பார்த்துட்டு அக்கம்பக்கத்துல உள்ளவங்க எல்லாம் பாராட்டுவாங்க. அதுக்காகவே ஒவ்வொரு நாளும் மெனக்கெட்டு விதம்விதமா கோலம் போடுவேன். அதுதான் என் ஓவியத்துக்கான முதல் புள்ளி” என்ற கமலாவின் குரல் சட்டென உடைகிறது.

“வாழ்க்கை நல்லா போயிட்டிருந்தபோ திடீர்னு ஒரே நாள்ல எல்லாம் மாறிடுச்சு... என் வீட்டுக்காரர் மாரடைப்பால இறந்துட்டார். அடுத்து என்ன பண்றதுன்னு தெரியலை. ஆனா, அப்பாகிட்ட உதவி கேட்கக் கூடாது’ன்னு ஒரு வைராக்கியம். என் வீட்டுக்காரர் கொடுத்த படிப்பு கை கொடுத்துச்சு. சின்னச் சின்ன வேலைகளுக்குப் போனேன். அப்படிப் போன இடத்துல ஒருத்தர், `நீங்க ஏன் குரூப்-4 தேர்வுக்கு முயற்சி பண்ணக் கூடாது’ன்னார். முயற்சி பண்ணி தேர்வெழுதினதுக்குப் பலன் கிடைச்சது. பாஸாகி வேளாண்மைத் துறையில வேலையிலும் சேர்ந்தேன். ஒரு பெரும் துயரத்தைக் கடந்து வாழ்க்கை யோட அடுத்த அத்தியாயத்தை ஆரம்பிச்ச நேரத்துல அடுத்த அடி...

பஸ் ஏறி இறங்க முடியாத அளவுக்கு சிரமம்... உயிர் போற வலி... பரிசோதிச்சுப் பார்த்தா முடக்குவாத பாதிப்புன்னு சொன்னாங்க. சிகிச்சையில ஓரளவுக்கு சரி பண்ண முடிஞ்சதே தவிர முழுமையா குணப்படுத்த முடியலை.

பேனாவைத் தொட்டாக்கூட உடம்புல உள்ள அத்தனை பாகங்களும் வலிக்கும். அந்த வலியை மறக்கறதுக்காகத்தான் நான் ஓவியம் வரைய ஆரம்பிச்சேன். கோலம் போடுறதுல இருந்த நேர்த்தி கொஞ்சம் கொஞ்சமா ஓவியத்துலயும் வர ஆரம்பிச்சது. ஒரு குழந்தையைக் குளிப்பாட்டி, பவுடர் அடிச்சு, டிரஸ் போட்டு அழகு பாக்குறது மாதிரி, அது அவ்வளவு சந்தோஷத்தைத் தரும்.

நான் உயிரோட இருக்கிறதுக்கு காரணம் ஓவியம்தான்!

எனக்கு ரொம்ப வலிச்சதுன்னா உடனே வரைய ஆரம்பிச்சுருவேன். வரைஞ்சு முடிச்சு நிமிர்ற வரைக்கும் என் உடம்புல வலி இருக்கிறதே தெரியாது. 2017-ல வேலையிலிருந்து ரிட்டையர்டு ஆனேன். அதுக்கு அப்புறம், முழு நேரமா வரைய ஆரம்பிச்சேன். ஓவியம் வரையறதுக்கான பொருள்களெல்லாம் ரொம்ப காஸ்ட்லியா இருந்துச்சு. இதுக்கு ஏன் நாம இவ்வளவு செலவு பண்ணணும். வீட்ல இருக்கிற பொருள்களை வெச்சே வரையலாமேன்னு யோசிச்சேன். வீணாகுற பொருள்களையெல்லாம் அழகான ஓவியங்களா மாத்தினேன். நண்பர்கள் தெரிஞ்சவங்கன்னு பலரும் ரொம்ப நல்லா இருக்குன்னு பாராட்டினது மட்டுமல்லாம எங்களுக்கும் வரைஞ்சு கொடுங்க... பணம் கொடுத்திடறோம்னு இதை ஒரு பிசினஸா மாத்துறதுக்கு தடம் போட்டுக் கொடுத்தாங்க.

பூம்புகார் கைவினைப் பொருள் விற்பனை மற்றும் கண்காட்சியகம் சார்பா நடக்கும் கண்காட்சிகளில் என்னுடைய ஓவியங்களைக் காட்சிப்படுத்துறதுக்கு அனுமதி கொடுத்திருக்காங்க. இந்தியாவில் எந்த மாநிலத்தில் கண்காட்சி நடந்தாலும் அங்கே என்னுடைய ஓவியங்களைக் காட்சிப்படுத்துறதுக்கான அனுமதி எனக்கு உண்டு. அதேபோல, மகளிர் சுய உதவிக்குழுக்கள் நடத்தும் பிரத்யேக காட்சிகள்லயும் நான் கலந்துகிட்டு வர்றேன். இதுவரை ஒரு லட்ச ரூபாய்க்கு ஓவியங்களை விற்பனை பண்ணியிருக்கேன். என்னைப் பொறுத்தவரை வருமானமெல்லாம் ரெண்டாம் பட்சம்தான். அந்தக் கண்காட்சிக்கு வந்து என்னுடைய ஓவியங்களைப் பார்த்துட்டு பலரும் பாராட்டுறதுக்கு ஈடு இணை எதுவுமே கிடையாது.

நான் உயிரோட இருக்கிறதுக்கு காரணம் ஓவியம்தான்!

இந்த நிலையில இதுவரை மூணு முறை ஹார்ட் அட்டாக் வந்திருக்கு. வெளிப்படையா சொல்லணும்னா இப்போ என் உடம்பு படுற அவஸ்தைக்கு தற்கொலை பண்ணிக்கலா

மான்னு இருக்கு. அந்த நிலைக்கு நான் போகாம இருக்கிறதுக்கு ஒரே காரணம் ஓவியம்தான்” என்று முடிக்கிறார். அவரைச் சுற்றி இருக்கும் ஓவியங்கள் அந்த நிமிடம் வேறோர் உன்னத நிலையில் காட்சி யளிக்கின்றன.