Published:Updated:

உங்கள் வீட்டு சிங்கப்பெண்ணை எப்படித் தேர்ந்தெடுப்பீர்கள்? #MyVikatan

Representational Image
Representational Image

பெண் பார்க்கும் படலத்தில் நூற்றுக்கு நூறு மதிப்பெண் எடுத்தபோதும் அதிகபட்சம் குடும்ப வாழ்க்கையில் அவளது சமைக்கும் திறனுக்கே முன்னுரிமை கொடுக்கப்படுகிறது.

பெண்களுக்கு ஆண்களால் மட்டும்தான் இடையூறு என்று தவறான ஒரு கோட்பாட்டை விதைத்து வைத்துள்ளோம். உண்மை என்னவெனில் ஆண், பெண், ஜாதி, மதம், ஏழை, பணக்காரன் என்று ஒட்டு மொத்த சமுதாயமாகச் சேர்ந்துதான் பெண் முன்னேற்றத்தின் முட்டுக்கட்டைக்கான கோட்பாடுகளை விதைத்து வைத்துள்ளோம். இதை அவ்வளவு எளிதாக ஓரிரவில் மாற்றி விட முடியாது. மாற்றம் எவ்வாறு எங்கிருந்து தொடங்க வேண்டும். மிக கடினமான, ஆனால் செயல்படுத்த முடிந்து விடும் ஒரு யோசனையைத் தொகுத்துள்ளேன். இந்தப் பதிவு சமீபத்திய படத்தின் தாக்கமாக உள்ளதாக நினைக்கின்றேன். கள்ளிப்பால், சிசு கொலை குறைந்திருக்கும் இன்றைய காலக்கட்டத்திலும் கூட ஒரு பெண் பிறந்த உடனேயே கணநேரமாவது பெற்றோரின் முன் தோன்றி மறையும் ஒன்று திருமணம்.

Representational Image
Representational Image

திருமணச்சந்தை இன்றளவும் ஒரு மிகப்பெரிய வியாபாரமாகவே வரையறுக்கப்பட்டு சமுதாய நிலையோடு பிணையப்பட்டு வாழ்க்கையின் அதிகபட்ச இலக்கே இந்த ஒரு நாள் கூத்துக்காகத்தான் என்று யோசிக்க வைக்கிறது. இது ஆண் பெண் என்று இரு பாலரையும் சேர்ந்திருந்த போதும் ஒரு பெண் இதில் சற்றே அதிகமாக பாதிக்கப்படுகிறாள். ஆடத்தெரியுமா, பாடத்தெரியுமா என்று கேட்கத் தொடங்கிய காலம் முதல், 50 பவுனா 100 பவுனா என்று வியாபார டீல் பேசி, நீளக் கூந்தல் அகன்ற கண்கள் என்று வர்ணனை வைத்து, படித்த பெண்ணா, வேலைக்குச் செல்லாத பெண்ணா என்று பல நேர்காணல் வைத்துதான் ஒவ்வொரு ஆண் சிங்கத்திற்கும் சிங்கப்பெண்ணைத் தேர்வு செய்கிறோம்.

நேர்காணலில் நூற்றுக்கு நூறு மதிப்பெண் எடுத்தபோதும் அதிகபட்சம் குடும்ப வாழ்க்கையில் அவளது சமைக்கும் திறனுக்கே முன்னுரிமை கொடுக்கப்படுகிறது. மாறாக ஒவ்வொரு பெண் பார்க்கும் படலத்திலும் பெண் எந்தத் துறையில் வல்லவள், எதில் சாதனை படைத்துள்ளாள், படைக்க இருக்கிறாள் என்றெல்லாம் கேட்டுப்பாருங்கள். தானாகவே ஒரு மாற்றம் சூழ ஆரம்பித்துவிடும். எப்படி? சின்னக்குழந்தை ஒன்று ஓவியம் வரைந்து கொண்டிருந்தாலும், பருவ மங்கை ஒருத்தி நாட்டியத்துறையில் ஜொலித்துக்கொண்டிருந்தாலும் அந்தக் கூட்டத்தில் இருக்கும் ஒருவரேனும் இவ்வாறான வசனத்தைக் கூறுவார்கள்.

Representational Image
Representational Image

``ஏன்ப்பா இதெல்லாம்... டைம் வேஸ்ட்... காசு வீணா செலவழிச்சு இதெல்லாம்... எப்டின்னாலும் இன்னொருத்தன் கைல புடிச்சு கொடுத்து கரை சேர்க்கப்போறோம்... வீட்டு வேலை சமையலை கத்துக்கொடு அதுதான் சோறு போடும் நல்ல பேரும் வாங்கித் தரும்". இந்த ஒற்றை வரியை அந்தக் குடும்பம் திரும்பத் திரும்ப கேட்க நாள்போக்கில் திறமைகளை தூக்கி வீசி கனவைத் தொலைத்து ஒரு சராசரி நிலைக்குத் தள்ளப்படும். படித்த பெண்கள் IT துறையிலோ, போட்டித் தேர்வு எழுதி அரசாங்கத் துறையிலோ, சற்று படிப்பில், வசதியில் பின்தங்கியவர்கள் கார்மென்ட் போன்ற துறையிலோ வேலைக்குச் சேர்ந்து ஒரு சராசரி ஓட்டத்தில் இணைந்துவிடுவர் குடும்பம், குழந்தை என்று.

முதலில் இந்த ஆபத்தான ஒற்றை வரியை அடிக்கடி முன்மொழிவதை நிறுத்துங்கள். கடந்த 2000 ஆண்டுகளாக பெண்கள் அடுப்பங்கரையைக் கெட்டியாகப் பிடித்து வைத்துள்ளார்கள். அவர்கள் விரும்பாவிட்டாலும் மரபியல் ரீதியாக, பரம்பரையாக இந்தத் திறன் நிச்சயம் ஒவ்வொரு பெண்ணினுள்ளும் கடத்தப்பட்டிருக்கும். அது முடியாவிட்டாலும் 1000 சேனல்கள் இன்று அடுப்பு பத்த வைப்பதிலிருந்து பரிமாறும் வரை 10 நிமிடங்களில் கற்றுத்தருகிறது. கைதேர்ந்த சமையலாக இல்லையெனினும் ஓரளவேனும் சமாளித்துவிட நிச்சயம் அவளால் முடியும். இதை வைத்து பெற்றோர் இனி அதிகப்படியான கவலை கொள்ள தேவை இல்லை. மாறாக அவள் நேரத்தை, வலிமையை அவளுக்கு ஏற்ற திறமையின் பக்கம் சிறு குழந்தையிலிருந்தே திசை திருப்ப முயற்சி செய்யுங்கள். தங்கத்தில் முதலீடு செய்வதைப் பெரிதாக நினைக்காமல் உங்கள் வீட்டு இரும்புமங்கைக்கு முதலீடு செய்யுங்கள். நிச்சயம் அவள் உங்கள் கனவுகளை பல மடங்குகளாக உயர்த்திக்காட்டுவாள்.

Representational Image
Representational Image

அடுத்து புகுந்த வீடு. மருமகள் எவ்வளவு நகை சொத்தோடு வருகிறாள் என்பதை விடுத்து, நேஷனல் டீமில் இருக்கிறாளா, தமிழ்ச் சங்கத்தின் முன்னணி பேச்சாளரா, அமெரிக்கக் கலை நிகழ்ச்சியில் பரத அரங்கேற்றம் நடத்தியிருக்கிறாளா, ஓவியக் கண்காட்சியில் அவளது படைப்பு சமர்ப்பிக்கப்பட்டிருக்கிறதா என்று சவாலான கேள்விகளை முன் வையுங்கள். ஒட்டுமொத்த பெண் பிள்ளை வீட்டாரின் தற்போதைய பண, நகை சேர்க்கும் சிந்தனை காணாமல் போய்விடும். தங்கள் பெண் பிள்ளைகளை அவர்கள் திறமையின் பக்கம் தூக்கிவிட முயற்சி செய்வார்கள். ஒவ்வொரு பெண்ணும் போட்டி போட்டு இடையூறு இன்றி தங்கள் திறமையை வெளிப்படுத்த முன் வருவார்கள். ஓரிரவில் மதிப்பற்று போகும் பணத்தைவிட பல இரவு உழைத்து திறமையினால் முன்னேறி நற்பெயரோடு உங்கள் வீட்டுக்கு வரும் மருமகள்தான் உங்கள் குலத்திற்கே பெருமை என்ற நிதர்சன உண்மையைப் புரிந்து கொள்ளுங்கள்.

அடுத்து கணவன். சில ஆண்கள், பெண் அழகாக இருக்க வேண்டும் என்பதை தாண்டி, மாமனார் வசதி ஆனவரா, சொத்து பத்து தேறுமா, பெண் வீட்டிற்கு ஒரே பிள்ளையா என்றெல்லாம் வியாபாரக்கணக்கு போடுவதில் மன்னர்கள் ஆகிவிட்டார்கள். இவர்கள் ஒன்றை நன்றாகப் புரிந்துகொள்ள வேண்டும். மாமனாரின் சொத்து மிஞ்சிபோனால் ஒரு பத்து வருடம் வைத்து தேய்த்து வாழ்ந்து விடலாம். மாறாக ஒரு திறமையான பெண் அவளோடு சேர்த்து உங்கள் வாழ்க்கையையும் அடுத்த 60 வருடம் மேம்படுத்திக்கொண்டே இருப்பாள். இதுவே காலத்திற்கு அழியாமல் நிலைத்திருக்கும். அவள் பெயரோடு சேர்ந்து உங்கள் பெயரும் ஓங்கி ஒலித்துக்கொண்டே இருக்கும்.

Representational Image
Representational Image

உங்கள் வீட்டு சிங்கப்பெண்ணை தங்கம், பணம், குடும்பப் பின்னணி என்று அற்ப விஷயங்களை வைத்து தேடாமல் படிப்பு, தனித்திறன் என்று மேம்பட்ட பொருள்களை வைத்தே தேடுங்கள். இதுவே உங்களை மேன்மக்களாக உயர்த்தும்.

ஒட்டு மொத்த சமுதாயமாக பரிதாபம் காட்டும் வர்க்கமாக இல்லாமல் சிங்கப்பெண்களின் அக்னிச்சிறகை விரிக்கச்செய்வோம் !!!

-நாகசரஸ்வதி

My Vikatan
My Vikatan

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காக களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். மீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க... https://www.vikatan.com/special/myvikatan/

அடுத்த கட்டுரைக்கு